செவ்வாய், 7 ஜூலை, 2015

ஆடிட்டர்களின் அதிகப் பிரசிங்கித்தனம்- பாகம் 1

                               Image result for barbed wire fence

நான் தஞ்சாவூரில் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராக 1985ல் இருந்த காலம். அந்த ஆராய்ச்சிப் பண்ணைக்கு வேலி இல்லை. சுற்றிலும் உள்ள விளை நிலங்கள் தரிசாக இருந்த போதும் எங்கள் பண்ணையில் ஆராய்ச்சிக்காக கொஞ்சம் பயிர் செய்திருப்போம். பக்கத்திலுள்ள தரிசு நிலங்களில் மாடுகள் மேய்ப்பார்கள். மாடு மேய்ப்பவர்கள் கொஞ்சம் அசந்தபோது அந்த மாடுகள் பச்சையாகத் தெரியும் எங்கள் பண்ணைக்குள் புகுந்து விடும். ஆராய்ச்சிக்காக போட்டிருக்கும் பயிர்களைத் தின்று விடும்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பண்ணையைச் சுற்றி முள்கம்பி வேலி போடுவதுதான். நான் மேலதிகாரிகளுக்கு இந்தப் பிரச்சினையைப் பற்றி விவரமாக எழுதி, முள்கம்பி வேலி போடவேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதினேன். முள்கம்பி வேலி போட்டுக்கொள்ளச் சொல்லி அனுமதி வழங்கி விட்டார்கள்

சர்க்கார் மற்றும் பொது நிறுவனங்களில் இந்த மாதிரி வேலைகளை இரண்டு வகைகளில் செய்யலாம். ஒன்று டெண்டர் விடுதல் என்ற முறை. இதுதான் பொதுவாகக் கடைப் பிடிக்கப்படும் முறை. இதில் பல சௌகரியங்கள் உண்டு. அனுபவப்பட்டவர்களுக்கு இந்த சௌகரியங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அப்படித் தெரியாதவர்கள் அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவது "டிபார்ட்மென்ட் முறை". இந்த முறையில் அந்தந்த ஆபீசில் இருப்பவர்களே எல்லாக் கட்டுமானப் பொருட்களையும் வாங்கி, அதற்குண்டான ஆள் வைத்து வேலையைச் செய்து முடிப்பது. அதில் வேலையின் தரத்தை நாம் நன்றாக கண்காணிக்க முடியும். சிமென்ட் குறைவாகப் போடுதல், சரியானபடி க்யூரிங்க் செய்யாமை போன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். சிறிய வேலைகளை இவ்வாறு செய்வதுதான் வழக்கம். ஆனால் அந்த ஆபீசில் ஒரு இஞ்சினீயர் இருப்பது அவசியம்.

இந்த முள்வேலி போடும் வேலை ஒரு சிறிய வேலை. இதற்கு டெண்டர் விட்டால் டெண்டர் விட்டால் டெண்டர் எடுப்பதற்கு யாரும் வரமாட்டார்கள். தவிர எங்கள் ஆபீசில் இத்தகைய வேலைகள் எப்போதாவதுதான் நடக்குமாதலால் எங்கள் ஆபீசுக்கென்று டெண்டர் எடுக்க யாரும் இல்லை.
ஆகையால் இந்த வேலையை டிபார்ட்மென்ட் முறையில் செய்து விடலாம் என்று முடிவு செய்து அதற்கான பிளானை மேலதிகாரிகளுக்கு அனுப்பி பர்மிஷன் வாங்கினேன்.

இதற்கு ஒரு வருடம் முன்பு எங்கள் யூனிவர்சிடியில் உள்ள வேறொரு பண்ணையில் இந்த மாதிரி கம்பிவேலி போடுவதற்காக முள்கம்பி வாங்கினதில் ஒரு முறைகேடு நடந்து விட்டது. அதனால் முள்கம்பி வேலி போட பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். அதில் முக்கியமானது முள்கம்பி வாங்குவது. இதை பல கம்பெனிகளிடமிருந்து கொட்டேஷன் வாங்கி அதில் விலை குறைவாகவும் தரம் நன்றாகவும் இருக்கும் கம்பியை வாங்கவேண்டும்.

இப்படி கொட்டேஷன்களை நீங்கள் நேரில் போய் வாங்கக் கூடாது. அந்த மாதிரி முள்கம்பி விற்கும் கடைகளின் விலாசத்திற்கு உங்கள் ஆபீசிலிருந்து தபாலில் கொட்டேஷன் கேட்டு ஒரு கடிதம் போகவேண்டும். அதற்கு அந்த கம்பெனிக்காரர்கள் தங்கள் கொட்டேஷன்களைத் தபாலில் அனுப்பவேண்டும். அந்தக் கொட்டேஷன்களை எல்லாம் ஒரே சமயத்தில் பிரித்துப் பார்த்து எந்தக் கம்பெனி விலை குறைவாக கொட்டேஷன் கொடுத்திருக்கிறதோ, அந்தக் கம்பெனியில்தான் முள்கம்பி வாங்கவேண்டும்.

இந்த நடைமுறை ஏட்டில் படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது" என்றபடி இது நடைமுறையில் சாத்தியமில்லை. ஏனென்றால் கடைக்காரர்களுக்கு ஆயிரம் வேலை. கொட்டேஷன் அனுப்புவது வெட்டி வேலை என்று அவர்கள் கருதுகிறார்கள். ஒரு வகையில் அவர்கள் நினைப்பதுவும் நியாயமே. கொட்டேஷன் அனுப்பினால் ஆர்டர் வரும் என்று சொல்ல முடியாது.

எனக்கு அர்ஜென்டாக வேலி போட்டு ஆகவேண்டும். ஆபீஸ் நடைமுறையைப் பின்பற்றினால் வேலை முடிய மாதக் கணக்கில், ஏன், வருடக்கணக்கில் கூட ஆகலாம். என் மூளை எப்போதும் குறுக்காகத்தானே வேலை செய்யும்? நான் என்ன செய்தேன் என்று அடுத்த பதிவில்......

7 கருத்துகள்:

 1. //சர்க்கார் கற்றும் பொது //

  சர்க்கார் மற்றும்?

  //இதற்கு டெண்டர் விட்டால் டெண்டர் விட்டால் டெண்டர் எடுப்பதற்கு யாரும்//


  " டெண்டர் விட்டால்" இரண்டுமுறை!

  வேலையை முடித்து விட்டு அப்புறம் ம்முன் தேதியிட்டு கொட்டேஷன்கள் வாங்கி வைப்பது உண்டு.

  :)))))

  பதிலளிநீக்கு
 2. விரைவில் கூறுங்கள். இவ்வாறான நிகழ்வுகளில் என்ன நடக்கும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். நீங்களும் அச்சூழலை எதிர்கொண்டீர்களா என அறிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. ஐயா! இந்த விலைப்புள்ளியை குறைந்தது மூன்று கடைகளில் பெற்று அவைகளில் யார் குறைவான விலைக்கு தர இசைகிறார்களோ அவர்களிடமிருந்தே பெறவேண்டுமென்ற விதியைக் கடைப்பிடிப்பது கடினம். தாங்கள் எப்படி அதை சமாளித்தீர்கள் என அறிய காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. இன்றைக்கு கொட்டேஷன் முறை உள்ளதா என்று தெரியவில்லை...

  காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. எதிர்பார்த்தோம் நீங்கள் சொல்லி வருவதிலிருந்து.....நீங்கள் ஏதேனும் சமயோசிதமாகச் செய்திருப்பீர்களே..ஆவலுடன் அடுத்த பதிவிற்குக் காத்திருக்கின்றோம்..ஐயா...

  பதிலளிநீக்கு
 6. ஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்...

  பதிலளிநீக்கு