புதன், 11 மே, 2016

கட்டுப்பாட்டை இழந்து .....

                                     Image result for car accidents

வாகன விபத்துச் செய்திகளை பிரசுரிக்கும் தமிழ் பத்திரிக்கைகள் ஒரு வார்த்தையைத் தவறாது உபயோகிப்பதைப் படித்திருப்பீர்கள். அது என்னவென்றால் "வாகனம்,  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" விபத்து ஏற்பட்டது என்று எழுதுவார்கள்.

நானும் இந்த சொற்றொடரை பலமுறை படித்திருக்கிறேன். அது எப்படி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழக்கும் என்று யோசித்திருக்கிறேன். ஏனென்றால் நானும் ஒரு வாகனம் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

அப்படி யோசிக்கும் போது சில சிந்தனைகள் என் மனதில் உருவாகின. அவைகளை உங்களுடன் பகிர்கிறேன்.

ஒரு வாகனம், கார் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒருவர் ஓட்டும்போது அது அவருடைய எண்ணங்களுக்கு இசைந்தவாறு ஓடுகிறது. வேகமாகப்போக வேண்டுமானால் ஆக்சிலரேடரை அழுத்தினால் வேகமாகப்போகிறது. இடதுபுறம் திரும்ப ஸ்டியரிங்கை இடது புறம் திருப்பினால் காரும் இடது புறம் திரும்புகிறது. காரை நிறுத்தவேண்டுமானால் பிரேக்கை அழுத்தினால் கார் நிற்கிறது.

இப்படித்தான் காரை உருவாக்கியிருக்கிறார்கள். இந்க்காரின் குணாதிசியங்களை நன்கு அறிந்தவர்கள் காரை தன் கட்டுப்பாட்டில் வைத்து விபத்தில்லாமல் ஓட்டுவார்கள். ஆனால் அந்தக் காரின் சக்திகளை நன்றாகப் புரிந்து கொள்ளாத ஒருவன் அதை ஓட்டும்போது ஒரு கட்டத்தில் அதை தன் கட்டுப்பாட்டுக்குள் நிலை நிறுத்த முடிவதில்லை.

உதாரணமாக அந்தக் கார் 150 கிமீ வேகத்தில் போகக்கூடும். அந்த வேகத்தில் போகும்போது அதை வளைவுகளில் சுலபமாகத் திருப்ப முடியாது. அப்படி திருப்பும்போது அந்தக் கார் ஓட்டுனர் நினைக்காத திசையில் போகும். அப்போது விபத்து ஏற்படுகிறது. அதே போல் அந்த வேகத்தில் போகும் காரை அவசரமாக நிறுத்தவேண்டும் என்று சடன்பிரேக் போட்டால் கார் குட்டிக்கரணம் அடிக்கும்.

இந்த தன்மைகளை இளைஞர்கள் உணருவதில்லை. அதனால்தான் பல விபத்துகள் ஏற்படுகின்றன. அனுபவப்பட்ட ஓட்டுனர்கள் கூட சோர்வாக இருக்கும்போது இந்த உண்மைகளை மறந்து விடுகிறார்கள். அவர்களும் விபத்து உண்டாக்குகிறார்கள். தவிர சோர்வுடன் கார் ஓட்டும்போது அவர்களின் விவேகம் குறைந்து விடுகிறது. தூரத்தில் நிற்கும் லாரி நிற்கிறதா அல்லது ஓடிக்கொண்டிருக்கிறதா என்பதை அவர்களால் உணர முடிவதில்லை.

வெகு சமீபத்தில் வந்தவுடன்தான் நிலைமை புரிகிறது. அப்போது பதட்டத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் விபத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் எல்லோருக்குத் சாதாரண சமயத்தில் நன்கு தெரியும். ஆனால் வாகனத்தில் ஏறி அந்த சீட்டில் உட்கார்ந்தவுடன் அவர்கள் வேறு மனிதனாக மாறிப்போகிறார்கள். தாங்கள் கற்றவற்றை மறந்து போகிறார்கள். "நான் எவ்வளவு அனுபவப்பட்ட ஓட்டுனர், என் வண்டிக்கு விபத்து எப்பொழுதும் ஏற்படாது" என்ற மமதையுடன் காரை ஓட்ட முற்படுகிறார்கள்.

இந்த மமதைதான் விபத்துகளை ஏற்படுத்துகிறது. மக்கள் எப்போது திருந்துவார்க்ள என்று தெரியவில்லை.

12 கருத்துகள்:

  1. ஒரு நொடி அலட்சியம்அல்லது கவனக்குறைவு
    பெரு இழப்பினை அல்லவா ஏற்படுத்திவிடுகிறது

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் அந்த வார்த்தையில்
    குழப்படி இருந்தது
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    இதுவும் ஒருவகையில்
    முள் குத்தியது போலத்தான்

    பதிலளிநீக்கு
  3. கவலைப்படாதீர்கள். இப்போதே தானியங்கி கார்கள் வந்துவிட்டன (Google). இன்னும் கொஞ்சநாளில் காரில் அமர்ந்துவிட்டு போகுமிடம் குறிப்பிட்டால் போதும். கார் தானாகவே அந்த இடத்திற்கு சென்று நிற்கும். எல்லாவற்றையும் computer மற்றும் GPS பார்த்துக்கொள்ளும். விபத்துகள் ஏற்ப்படும் வாய்ப்பு குறைவு.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. அந்த நொடிநேரத்தில் நம் மூளை மரத்துப்போகுமோ...

    பதிலளிநீக்கு
  5. கையில் கடிகாரம் கட்டிக் கொண்டிருப்பவன் காலமே தன் கையில் என்று எண்ணிக்கொள்ளலாமா இயதிரத்துக்கு மதிப்பு கொடுத்தால் நாம் எஜமானன் அது ஊழியன் தவறினால் அது எஜமான் நாம் ...சொல்லத் தேவை இல்லை

    பதிலளிநீக்கு
  6. ஓட்டுனர்கள் அனைவரும் ஒருவித கட்டுப்பாட்டுடன் வண்டிகளை ஓட்டி, சாலை விபத்துகள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டி, இந்தப்பதிவினை மிகவும் நிதானத்துடன் தாங்கள் ஓட்டியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. விபத்து என்பது நொடிப்பொழுது கவனக்குறைவே ஆனாலும் இன்றைய இளைஞர்களுக்கு அசால்ட்தனம் நிறையவே உள்ளது
    த.ம. 4

    பதிலளிநீக்கு
  8. நொடி நேர கவனக்குறைவு - நேற்று திண்டுக்கல் நெடுஞ்சாலையில் ஒரு விபத்து கண்டேன்... நொடி நேர கவனக் குறைவு தான் பெரிய விபத்தை ஏற்படுத்துகிறது. ஓட்டும்போது புரிவதில்லை.

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் கவனக் குறைவே விபத்துக்களுக்கு முதல் காரணம்!

    பதிலளிநீக்கு


  10. எப்போது வாகன ஓட்டி மிதமிஞ்சிய வேகத்தில் ‘பறக்கிறாரோ’ அப்போதே வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது என்பது உண்மை. அதைத்தான் நாளேடுகள் மறைமுகமாக ‘வாகனம்,ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது’ என தெரிவிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  11. தற்போது அமெரிக்காவில் உள்ள டொயோடா பிரயசின் (toyota prius ) இந்த வருட மாடலில் காரை தானியங்கி (cruise control ) மூலம் இயக்கும்போது, முன்னே சென்று கொண்டிருக்கும் வாகனம் நம் வாகனத்தை விட குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தால், தானாகவே வேகத்தைக் குறைத்து விடுகிறது. முன்னால் வாகனமோ ஏதாவது நின்று கொண்டிருந்தால், நம் வாகனமும் நின்று விடுகிறது.

    நம் ஊரிலும் வரவேண்டும். எவ்வளவு விபத்துகள் குறையும்!

    பதிலளிநீக்கு