வியாழன், 30 ஜூன், 2016

வேலையில்லாமல் கஷ்டப்படும் நபர்களுக்காக ஒரு கதை


                     Image result for Road side temple

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருக்கும். நான் என் அலுவலகத்திற்குப் போகும் வழியில் ஒரு நாற்சந்தியில் ஒரு மூலையில் கொஞ்சம் இடம் விஸ்தாரமாய் இருந்தது. ஒரு நாள் அந்த இடத்தில் ஒரு சிறிய ஓலைப் பந்தல் 6 க்கு 6 அடி அளவில் போடப்பட்டு அதற்குள் ஒரு அடி உயரமுள்ள ஒரு வட்ட வடிவிலான கருங்கல் நட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆற்றுப் படுகைகளில் கிடைக்குமே அந்த மாதிரியான கல்.

அந்தக் கல்லுக்கு விபூதி பட்டை போட்டு சந்தனப்பொட்டு, குங்குமப்  பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லுக்கு முன் ஒரு உடைத்த தேங்காய், இரண்டு வாழைப் பழங்கள், ஒரு வாழைப்பழத்தில் இரண்டு ஊதுபத்திகள், தாம்பூலம் , ஒரு சிறிய பித்தளைச்சொம்பிற்கு வாயில் ஒரு மஞ்சள் துணியைக்கட்டி, நடுவில் கொஞ்சம் கிழித்து விட்டு, வைத்திருந்தது. இவைகளுக்கு முன்னால் ஒரு ஒல்லியான ஆசாமி காவி வேட்டி, துண்டுடன் உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்தபடி இருந்தான்.

சரி ஏதோ பைத்தியக்காரன் போலிருக்குது என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் போகப்போகத்தான் தெரிந்தது அவன் பைத்தியக்காரன் இல்லை, மற்றவர்களைப் பைத்தியம் பண்ண வந்தவன் என்று. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் சேர்ந்தார்கள். அந்த வழியில் போகும் மாட்டு வண்டிக்காரர்கள் அங்கு நின்று அந்த சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகத் தொடங்கினார்கள்.

இவ்வாறு பக்தர்கள் அதிகரிக்கவே அந்தப் பூசாரி பந்தலை விஸ்தரித்து சாமியை வலுப்படுத்தினான். ஒரு வருடம் சென்றது. முதல் விழாவை விமரிசையாகக் கொண்டாடினான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். சாமியும் ஆசாமியும் நிரந்தரமாகி விட்டார்கள்.

அந்த ரோட்டில் பக்கத்து ஊரிலுள்ள செங்கல் காளவாய்களிலிருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகள் அந்த வழியாகப் போவது வழக்கம். இந்தப் பூசாரி அப்படிப் போகும் வண்டுகளிலிருந்து இரண்டிரண்டு செங்கல்கள் வாங்கிக் கொள்வான். இப்படியே செங்கல்களைச் சேகரித்தான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சிமென்ட், மணல் ஆகியவைகளை வாங்கிக் கொடுத்தார்கள். சில மாதங்களில் ஒரு பத்துக்குப் பத்து கோவில் அங்கே உருவாகி விட்டது.

அந்த சாமி கேட்பவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் சக்தி உள்ளது என்று புகழ் பரவ ஆரம்பித்தது. பலர் அந்தக் கோவிலின் நிரந்தர புரவலர்கள் ஆனார்கள். ஒவ்வொரு இந்துப் பண்டிகையையும் விமரிசையாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். இப்படி அந்தக் கோவில் நிரந்தரமானதாக ஆகிவிட்டது. சமீபத்தில் அந்த வழியாகப் போனபோது கவனித்தேன். சாமிக்கு கருங்கல் தரை, வெள்ளிக் கவசம், உற்சவ வாகனங்கள் இத்தியாதிகளுடன் மிகவும் செல்வாக்காக விளங்கியது.

சாமிக்கே இப்படியென்றால் பூசாரியைப் பற்றிக் கேட்க வேண்டுமா? அவரும் பட்டில் காவி உடுத்துக்கொண்டு ரொம்பவும் சௌக்கியமாக இருந்தார்.

நம் இளைஞர்கள் பலர் படித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கோவில் பூசாரியைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

திங்கள், 27 ஜூன், 2016

கடவுள்களுக்கு நோய்கள் வராதா?

                                  Image result for கடவுள்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது ஒரு பெரும் விவாதத்திற்குரிய விஷயம். அந்த விவாதம் இப்போது வேண்டாம். கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.

கடவுளை மனிதன்தான் உருவாக்கினான் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அப்படி கடவுள்களை உண்டாக்கும்போது அந்தக் கடவுள்களை தன் உருவம் மாதிரியே உண்டாக்கினான். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சில கடவுள்களுக்கு நான்கு தலை, ஆறு தலை, நான்கு கைகள், பனிரெண்டு கைகள் என்று உருவகப்படுத்தினான்.

அத்துடன் நில்லாது கடவுள்களுக்கு தன்னைப்போலவே ஆசா பாசங்களையும் கற்பித்தான். கல்யாணம், குடும்பம், குழந்தை குட்டிகள், பலதார மணம், சக்களத்திச் சண்டை, பங்காளிச் சண்டை, கற்பழிப்பு, பிறன் மனை விழைதல் இப்படி எல்லாம் கற்பித்தான். அப்புறம் கடவுள்களுக்கு பசி, தாகத்தையும் உண்டு பண்ணினான்.

கடவுள்களும் இப்படியே ஆசா பாசங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடவுள்கள் இப்படி இருப்பதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது வருகின்றன. அவைகளுக்கு பல காலமாக விடை தேடுகிறேன். அவ்வளவுதான்.

1. கடவுள்கள் காலையில் எழுந்ததும் குளிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். மாலை வந்தால் ஆடல் பாடல்களைக் கண்டு களிக்கிறார்கள், இரவானால் சகதர்மிணியுடன் பள்ளியறை எழுந்தருள்கிறார்கள். இவ்வளவும் செய்கிறார்கள். ஆனால் மனிதர்கள் மாதிரி அவர்கள் காலை எழுந்தவுடன் ஏன் பாத்ரூம் போவதில்லை என்று தெரியவில்லை. எந்தக் கோவில்களிலும் கடவுள்களுக்காக பாத் ரூம் கட்டப்படவில்லையே, ஏன்?

2. மனிதர்களில் நோய்வாய்ப் படாதவர்கள் அபூர்வம். அவர்களுக்கு நோய் தீர்க்க தெருவிற்குத் தெரு பல விதமான ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன. இப்படி கடவுள்களுக்கும் நோய் வராதா? தேவலோகத்தில் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே. அவர்களுக்கு நோய் வந்தால் எப்படி அந்த நோயைக் குணப்படுத்திக் கொள்வார்கள்?

பல நாட்களாக இந்த இரண்டு சந்தேகங்களும் என் மண்டையில் புரண்டு கொண்டேயிருக்கின்றன. இந்த சந்தேகங்கள் வந்ததினால் நான் கடவுள்களுக்கு விரோதியாய் விடுவேனோ என்ற சந்தேகமும் இப்போது புதிதாய் முளைத்திருக்கிறது. இந்த சந்தேகங்களுக்கு நான் உங்களிடம் விடை கேட்கப்போவதில்லை. ஏனெனில் உங்கள் மனம் புண்படலாம். ஆகவே இந்தப் பதிவைப் படித்து விட்டு ஒரு ஸ்னானம் செய்து நீங்கள் இதைப் படித்த பாவத்தைப் போக்கிக்கொள்ளவும்.

எனக்கு நரகம்தான் பலிக்கும் என்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் ஆப்த நண்பர்கள் எல்லோரும் அங்குதான் இருப்பார்களாகையால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

சனி, 25 ஜூன், 2016

நண்பனைச் சிக்கலில் இருந்து விடுவித்த கதை.

                   
                         Image result for Thief and police

ஒரு நல்ல திருடன்தான் ஒரு நல்ல போலீஸ்காரன் ஆகமுடியும் என்று சொல்வார்கள். அதேபோல் சில தந்திரவாதிகளின் ஏமாற்றுதலில்
இருந்து தப்பிக்க நீங்களும் ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக இருக்க வேண்டும். ஏமாற்ற வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அந்த குயுக்தி முறைகளை அறிந்திருப்பது அவசியம்.

என் நண்பர் ஒருவர் தன் வீட்டில் உள்ள ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் குடியிருந்த ஒருவன் இவரிடம் அவ்வப்போது ஆயிரம் இரண்டாயிரம் என்று கைமாத்து வாங்குவான். சொன்ன நாளில் திருப்பிக்கொடுத்து விடுவான். இப்படி சில மாதங்கள் ஆகியவுடன் என் நண்பருக்கு அவன் மீது அபார நம்பிக்கை வந்து விட்டது.

ஒரு நாள் அவன் தன் மனைவியின் வேலையை நிரந்தரமாக்க அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கேட்கிறார்கள், கொடுக்கலாமா என்று இவரிடம் கேட்டிருக்கிறான். இவருக்கு அந்தக் கம்பெனியை நன்றாகத் தெரியும். கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இரண்டு நாள் கழித்து அவன் இவரிடம் வந்து, சார், ஒரு லட்சம் ரூபாய் சேகரித்து விட்டேன். இன்னும் ஒரு லட்சம் வேண்டும். நாளைக்குள் பணம் கட்டவேண்டும் என்கிறார்கள். ஊரில் ஒரு இடம் இருக்கிறது. அதை விற்றால் ஒரு லட்சம் வரும். வந்தவுடன் கொடுத்து விடுகிறேன். நீங்கள்தான் என்னை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று அழுதிருக்கிறான்.

நண்பருக்கு அப்படியே மனது வெய்யிலில் வைத்த ஐஸ் கட்டியாக உருகிவிட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். அவனும் அதை பவ்யமாக வாங்கிக்கொண்டு போய் பணத்தை வாங்கிவிட்டான். இவர் அவனிடம் ஒரு புரோநோட் வேண்டுமென்றிருக்கிறார். அவன் ஸ்டேஷனரி கடையில் விற்கும் ஒரு புரோநோட் பாரத்தை வாங்கி ஒன்றும் எழுதாமல் கீழே மட்டும் ஒரு கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறான். நண்பரும் அதை வாங்கி வைத்துவிட்டார்.

நாலைந்து மாதம் ஆகி விட்டது. பணம் திரும்பி வரவில்லை. இதனிடையில் அவன் வேறு வீட்டிற்கு குடி போய்விட்டான்.  இவர் அவனை நெருக்கியிருக்கிறார். அவன் ஒரு நாள் ஒரு லட்சத்தி நான்காயிரத்திற்கு (நான்காயிரம் வட்டி) இவர்பேரில் ஒரு செக் கொடுத்து விட்டு, சார் இதை உடனே பேங்கில் போடவேண்டாம், ஊரில் இருந்து வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை, வந்தவுடன் நான் சொல்கிறேன், அப்போது இந்த செக்கைப் பேங்கில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

நண்பரும் சரியென்று அந்த செக்கை வாங்கி வைத்துக்கொண்டார்.
ஒரு மாதம் சென்றது. அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. போன் பண்ணினால் எடுப்பதில்லை. சரி, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று நண்பர் செக்கை கலெக்ஷனுக்குப் போட்டார். கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்பி வந்து விட்டது.

இந்த நிலைமையில் நண்பர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். நான், பொறுப்போம், பார்க்கலாம், அவனை எப்படியாவது பிடித்து என்ன விவரம் என்று கேளுங்கள் என்றேன். இரண்டு நாள் கழித்து நண்பர் ஓடோடி வந்தார். இதற்குள் அவர் யாரையோ சிபாரிசு பிடித்து பேங்க் மேனேஜரைக் கைக்குள் போட்டுக்கொண்டார். அவர் மூலம் அவன் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டார். இரண்டாயிரம் ரூபாய்தான் இருந்தது. அவன் வருவதாகச் சொன்ன ஒரு லட்சம் ரூபாய் வந்தாலும் மொத்தம் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே இருக்கும், நம் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கு அல்லவா, இது எப்படி பாஸ் ஆகும் என்று புலம்பினார்.

நான் அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு. நாளைக்கு பேங்குக்கு வரும்போது உங்கள் செக் புக்கை எடுத்து வாருங்கள், மிச்ச்த்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறி அவரை அனுப்பி வைத்தேன். மறுநாள் பேங்க்குக்குப் போனால் நண்பர் காத்துக் கொண்டிருந்தார். அந்த கடன் வாங்கினவனும் கூட இருந்தான். அவனிடம் என்னப்பா இன்றைக்கு செக்கை கலெக்ஷனுக்குப் போட்டு விடலாமா என்று கேட்டேன். அவன் தாரளமாகப் போடலாம் சார் என்றான்.

அவனுடைய எண்ணம் அவன் கணக்கில் வரப்போகும் ஒரு லட்சத்தையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரம்தானே இருக்கும். நாம் இவர்களுக்குக் கொடுத்தது ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கான செக்கல்லவா? இவர்கள் அந்தச் செக்கை பாஸ் பண்ணமுடியாது என்ற நினைப்பில் சம்மதம் சொல்லிவிட்டான். அதுவுமில்லாமல் கவுன்டர் கிளார்க்கிடம் ஐம்பதாயிரத்திற்கு தனியாக ஒரு செக் கொடுத்து வைத்திருந்தான். இவன் எதிர் பார்க்கும் பணம் வந்தவுடன் அந்த ஐம்பதாயிரம் பணத்தை எடுப்பது அவன் திட்டம்.

நானும் நண்பரும் மேனேஜர் ரூமுக்குப் போய் அவருக்கு முன்னால் அமர்ந்தோம். அவர் இன்னும் தபால் வரவில்லை, கொஞ்சம் பொறுங்கள் என்றார். சிறிது நேரத்தில் தபால் வந்தது. எதிர் பார்த்த ஒரு லட்சம் ரூபாயும் வந்திருந்தது. அவர் அந்த கடன்காரனின் கணக்கைப் பார்த்தார். பார்த்துவிட்டு எங்களிடம் சென்னார், இந்தப் பணத்தைப் போட்டாலும் ஒரு லடசத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே வருகிறது. உங்கள் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய் அல்லவா? பாஸ் ஆகாதே என்றார்.

அவரிடம் நான்,  சார் எவ்வளவு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றேன். அவர் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றார். நான் நண்பரிடம் மேனேஜர் சென்ன தொகைக்கு உங்கள் செக் ஒன்று அந்த திருடன் பெயருக்கு எழுதுங்கள் என்றேன். அப்படியே எழுதிக்கொடுத்தார். மேனேஜரிடம் அந்தச் செக்கைக் கொடுத்து சார் இந்தப் பணத்தை அவன் கணக்கில் சேர்த்து விட்டு பிறகு எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது பாருங்கள் என்றேன். அவர் அப்படியே செய்து விட்டு, சார் உங்கள் செக் இப்போ பாஸ் ஆகிவிடும் என்றார். அப்படியே செய்யுங்கள் என்று சொல்லி என் நண்பருடைய  செக்கைப் பாஸ் பண்ண வைத்தேன்.

இரண்டாயிரத்தி ஐந்நூறு செலவில் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் பணம் வசூலாகி விட்டது. பேங்க் மேனைஜர் அசந்து விட்டார். சார் நீங்கள் பலே கில்லாடியாக இருக்கிறீர்களே என்று பாரட்டினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

அதற்குள் இந்த செக் பாஸான விவரம் கவுன்டர் கிளார்க் மூலம் அந்த கடன்காரனுக்குத் தெரிந்து விட்டது. வெளியில் எங்களைப் பார்த்தவுடன் காச் மூச்சென்று கத்தினான். நான் சொன்னேன், நீ செக்கைப் போடச் சொன்னதினால்தானே நாங்கள் போட்டோம், இப்ப எதற்கு கத்துகிறாய், உன் வேலையைப் பார் என்று சொல்லி அவன் அனுப்பினோம்.

அடுத்த நாள் ஒரு பெரிய பிரியாணி ஒட்டலில் நான் கேட்ட ஐட்டங்கள் எல்லாம் என் நண்பர்  வாங்கிக் கொடுத்தார்.

புதன், 22 ஜூன், 2016

ஒரு பரோபகாரியின் கதை

                                         Image result for இரு நண்பர்கள்
ஒரு ஊரில் இரு நண்பர்கள். ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்ம்கு பட்டப்படிப்பு முடிந்தவுடன் சென்னையில் வேலை கிடைத்தது. சில வருடங்கள் கழித்து இருவருக்கும் மணமானது. இரு குடும்பமும் அன்னியோன்னியமாக இருந்தன.

இந்நிலையில் ஒருவன் வீடு வாங்க ஆசைப்பட்டான். அந்த ஏரியாவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு இருவாகிக்கொண்டு இருந்தது. அதில் இவன் ஒரு அபார்ட்மென்ட் பதிவு செய்தான். கையிலுருந்த சேமிப்பு பணத்தையெல்லாம் கொடுத்து விட்டு பிறகு பேங்க் லோன் அப்ளை பண்ணினான்.

பேங்க்கில் ஒருவர் கேரண்டி போடவேண்டும் என்றார்கள்.
நமது கதாநாயகன் தன் நண்பனைக் கேட்டான். அவன் அதற்கென்ன, கையெழுத்துதானே, போட்டால் போயிற்று என்று பேங்கிற்குப் போய் கையெழுத்து போட்டான்.

அபார்ச்மென்ட் கட்டிடம் வளர்ந்தது. மொத்தம் பதிமூன்று மாடிகள். ஒரு நாள் பெரிய புயல் காற்று, இடியுடன் மழை வந்தது. அந்தக் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. அபார்ட்மென்ட் புக் பண்ணினவன் இதைக்கேட்டதும் மாரடைப்பில் இறந்து விட்டான்.

இப்போது அந்த பேங்க் கடனுக்கு யார் பொறுப்பு?

ஞாயிறு, 19 ஜூன், 2016

ஊர்ல விசேஷமுங்க !

                                Image result for சென்னை நாடார் கடை

திருநெல்வேலியிலிருந்து ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு பையன் வீட்ல கோவிச்சிக்கிட்டு மெட்ராஸுக்கு ரயில் ஏறிட்டான். (வித்அவுட்லதான்). கையில காலணா கிடையாது. ரயில்  சென்னை வந்தது. இவன் ரயிலை விட்டுக் கீழே இறங்கி திருதிருவென்று முளித்துக்கொண்டிருந்தான்.

அதே ரயில்ல வந்த தனபால் நாடார் இந்தப் பையனைப் பார்த்தார். அவரும் இந்த மாதிரி திருநெல்வேலியிலிருந்து ரயில் ஏறி சென்னை வந்தவர்தான். இப்போது அவர் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு அதிபதி. இந்தப்பையனைப் பார்த்ததும் அவருக்கு விவரம் புரிஞ்சு போச்சு. பையனைக் கூப்பிட்டு டிபன்காப்பி வாங்கிக்கொடுத்தார். வா, வீட்டுக்குப் போகலாம் என்று கூட்டிக்கொண்டு போனார்.

அவனுக்கு வீட்டில் இருந்த அவருடைய சின்னப்பையனின் இரண்டு பழைய டிரஸ்ஸைக்கொடுத்து போட்டுக்கொள்ளச்சொல்லி, அவர் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போகும்போது அவனையும் கூட்டிச்சென்றார். அங்கிருந்த மேனேஜரிடம் இவனை ஒப்படைத்து வேலையில் பழக்கும்படி சொன்னார்.

அந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு வீடு எடுத்து அங்கேயே சாப்பாடு போட்டு தங்க வைத்திருந்தார்கள். இதுதான் தெற்கத்திக்காரர்களின் வழக்கம். இந்தப் பையனும் அப்படியே அந்த விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான், பையன் மிகவும் சூட்டிக்கை. வேலைகளை நன்றாக கற்றுக்கொண்டு வெகு சீக்கிரத்தில் முதலாளியின் அபிமானத்திற்கு உள்ளானான்.

இவன் 25 வயது ஆகும்போது சூப்பர் மார்க்கெட்டின் நெளிவு சுளிவுகள் இவனுக்கு அத்துபடியாய் இருந்தன. முதலாளி இவனை அந்த நிறுவனத்தின் மேனேஜராக பதவி கொடுத்து வைத்திருந்தார். அவருக்கும் வயது ஆகிவிட்டது. முன் போல் சூப்பர் மார்க்கெட்டைக் கவனிக்க முடியவில்லை. பையன் படித்து முடித்து வெளி நாட்டுக்கு வேலயாகப் போய்விட்டான்.

அவருக்கு ஒரு பெண். 20 வயதில் அவள் திருமணத்திற்கு தயாராக இருந்தாள். முதலாளி யோசித்தார். இந்த மேனேஜர் பையன் பல வருடங்களாக நம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். எந்த தப்புத்தண்டாவும் இல்லை. அவனை ஏன் நம் மாப்பிள்ளையாக்கிக் கொள்ளக்கூடாது என்று யோசித்தார். மனைவி மற்றும் மகளிடம் கலந்து ஆலோசித்தார். அவர்கள் சம்மதம் தரவே அந்தப்பையனிடம் கேட்டார். அவனும் சம்மதம் தரவே கல்யாணத்தை ஜாம் ஜாமென்று முடித்து, சூப்பர் மார்க்கெட்டை அவன் பெயருக்கே மாற்றி எழுதி விட்டார்.

சில வருடங்கள் கழித்து முதலாளியும் அவர் மனைவியும் காலமாகி விட்டார்கள். இந்தப் புது முதலாளியும் வியாபாரத்தை நன்றாக கவனித்து விருத்தி பண்ணினான். மனைவியையும் நன்றாக வைத்திருந்தான். ஒரு பெண், ஒரு பையன் பிறந்தார்கள். குடும்பம் சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தது.

இவன் இப்படி நன்றாக இருக்கும்போது ஊரில் இருந்த இவனுடைய பழைய சொந்தங்களைப் பார்த்து உறவுகளைப் புதுப்பித்துக்  கொண்டான். பிறகு ஊரில் நடக்கும் விசேஷங்களுக்கு இவனுக்கு அழைப்பு வைத்தார்கள். இவனும் கெத்தாக போய்வந்து கொண்டிருந்தான்.

இப்படி இருக்கையில் ஊர்ல ஒரு விசேஷம் ஞாயிற்றுக்கிழமை வைத்திருந்தார்கள். இவனும் சனிக்கிழமை மாலை பத்து மணி வரையில் சூப்பர் மார்கெட் விவகாரங்களைப் பார்த்து முடித்து விட்டு வீட்டுக்குப்போய் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு இரவு 11 மணிக்கு திருநெல்வேலிக்கு தன் காரில் புறப்பட்டான்.

கார் புதிதாக 40 லட்சத்திற்கு வாங்கின சொகுசு கார். ஏக்சலேட்டரை லேசாக அழுத்தினாலே 100 கிமீ ஸ்பீடில் போகும். கொஞ்சம் பலமாக அழுத்தினால் 150 கிமீ ஸ்பீடில் போகும். டிரைவர் நல்ல வாலிபம். 22 வயதுதான் ஆகிறது. முதலாளி டிரைவரிடம் கேட்டார். என்னப்பா, ராத்திரி தூங்காம கார் ஓட்டுவியா? இரண்டு நாள்கூட தூங்காமல் வண்டி ஓட்டுவேன், சார் என்று டிரைவர் பதிலளித்தான்.

குடும்பம் முழுவதும் காரில் ஏறினார்கள். டிரைவரும் 150 கிமீ வேகத்தில் ஓட்டி திருநெல்வேலிக்கு காலை 6 மணிக்கு அவர்ளைக் கொண்டு வந்து சேர்த்தான். ஒரு பெரிய லாட்ஜில் முதலிலேயே ரூம் ரிசர்வ் செய்திருந்தார்கள். அங்கு சென்று காலைக் கடன்கள், குளியல்கள் இத்தியாதிகளை முடித்து விட்டு 8 மணிக்கு விசேஷம் நடக்கும் வீட்டிற்குப் பாய் சேர்ந்தார்கள்.

விசேஷம் நடத்தும் வீட்டுக்காரருக்கு வாயெல்லாம் பல். அண்ணாச்சி, வாங்க, வாங்க என்று தடபுடலான வரவேற்பு. பார்த்தவர்களிடமெல்லாம் "நம்ம அண்ணாச்சி" என்று அறிமுகம் செய்து வைத்தார். அண்ணாச்சியைக் கூட்டிக்கொண்டு போய் டிபன் சாப்பிட வைத்தார்கள். விசேஷம் நடந்து முடிந்தது. டிரைவரும் திவ்யமாகச் சாப்பிட்டான். டைம்11 மணி. சாப்பாட்டுப் பந்தி போட்டார்கள். விசேஷம் நடத்தும் வீட்டுக்காரர் அண்ணாச்சியை சாப்பிடாமல் போகக்  கூடாது என்று கூட்டிப்போய் பந்தியில் உட்கார வைத்து விட்டார்.

விருந்தில் பிரியாணி, ஆடு, மாடு, கோழி, பறப்பன, ஊர்வன எல்லாத்தையும் புடிச்சுப் போட்டிருந்தார்கள். அண்ணாச்சி நன்றாகச் சாப்பிட்டார். டிரைவர் வாலிப வயது இல்லையா? அவனும் ஒரு பிடி பிடிச்சான். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு 2 மணிக்கு திரும்பப் புறப்பட்டார்கள்.

வரும் வழியில் மதுரை மீனாட்சியம்மன் தரிசனம். திருச்சியைத் தாண்டும்போது நல்ல மாலை வேளை. சூரியன் மறைந்த நேரம். காருக்கு லைட் போட்டு ஓட்டவேண்டிய கட்டம். அப்படி லைட் போட்டவுடன் கண்கள் அந்த லைட்டுக்கு அட்ஜஸ்ட் ஆக கொஞ்ச நேரம் ஆகும். அந்த நேரத்தில் இந்தக் காருக்கு முன்னால் ஒரு லாரி போய்க்கொண்டிருந்தது.

டிரைவர் அந்த லாரியை முந்திப்போக முயன்றான். யாருடைய தவறு என்று தெரியவில்லை. கார் லாரியின் பின் பக்கம் டமார் என்று மோதியது. அடுத்த நாள் செய்தித்தாள்களில் திருச்சிக்குப் பக்கத்தில் கார் விபத்தில் ஐந்து பேர் மரணம் என்று செய்தி பிரசுரமானது.

யாரைக் குற்றம் சொல்ல முடியும்?
               

எந்தக் கதையானாலும் அதில் ஒரு நீதி சொல்லப்படவேண்டும். இந்தக் கதைக்கு அவரவர்கள் இஷ்டம்போல் நீதி வைத்துக்கொள்ளலாம்.