வியாழன், 3 நவம்பர், 2016

இன்று ஒரு பொன்னான தினம்


என் மொபைல் போனுக்கு அழைப்புகள் வருவது அபூர்வம். 23000 ரூபாய் கொடுத்து ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியிருக்கிறேன்? அழைப்புகள் வருவதில்லை என்றால் என் மனம் எப்படி வேதனைப் படும் என்று இந்த உலகத்தில் கவலைப் படுபவர்கள் யாரையும் காணோம்.

இதில் இன்னொரு சங்கடம் என்னவென்றால் நான் வெகு ஆபூர்வமாகத்தான் வெளியில் செல்கிறேன். ஏதாவது விசேஷங்களுக்குப் போவதோடு சரி. அதுவும் மிக நெருங்கிய உறவினர் நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு மட்டும்தான் போவேன். நான் வைத்திருக்கும் ஒரு டப்பா காரில் நானே ஓட்டிக்கொண்டு போவதுதான் வழக்கம்.

என் ராசி என்னவென்றால் இப்படி எப்போதாவது அபூர்வமாக வெளியில்  கார் ஓட்டிக்கொண்டு போகும் சமயங்களில்தான் என் மொபைலுக்கு அழைப்புகள் வரும். (திரு ஆர்ஆர்ஆர் மன்னிக்கவேண்டும்). இதில் உள்ள சங்கடம் என்னவென்றால், நான் ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டுமே செய்து பழகியவன். அந்த வேலையைச் செய்யும்போது அதிலேயே ஆழ்ந்து விடுவேன்.

உதாரணத்திற்கு கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பார்த்துக் கொண்டிருக்கும்போது யார் என்ன கேட்டாலும் அது என் காதில் விழாது. அப்படி வேலையில் ஆழ்ந்து போகும் எனக்கு நான் கார் ஓட்டும்போது என் மொபைலில் அழைப்பு வந்தால் அந்த அழைப்பு மணிச்சத்தம் என் காதில் விழுவதில்லை. வயசானத்துக்கு அப்புறம் உங்களுக்கு காது மந்தமாகிக் கொண்டு வருகிறது, வேலையில் மூழ்கி விடுகிறேன் என்பது எல்லாம் சும்மா கதை என்று என் மனைவி சொல்கிறாள். அதை நம்புவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்படி இருக்க, நேற்று  காலையில் நான் ஒரு கல்யாணத்திற்குப் போய்விட்டு அப்படியே இன்னொரு விசேஷத்திற்குப் போகவேண்டி இருந்தது. கார் ஓட்டிக்கொண்டு போகும்போது மொபைலில் அழைப்பு மணி அடித்தது. வீட்டுக்காரிதான் மொபைல் மணி அடிக்கிறது என்று சொன்னாள். காரை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு (ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்வேன் என்று நான் முன்பு கூறியிருந்ததை நினைவு கொள்ளவும்) போனை எடுத்து ஆன் செய்தேன்.

அதிசயமாக பதிவுலக நண்பர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி போன் செய்தார். குசலம் விசாரித்து விட்டு அவரிடம் கூசாமல் ஒரு பொய் சொன்னேன். நான் டிரைவிங்கில் இருக்கிறேன், அப்புறமாக உங்களைக் கூப்பிடுகிறேனே என்றேன். அவரும் சரி என்று போனை அணைத்து விட்டார்.

மதியம் விசேஷத்திற்குப் போய்விட்டு சாப்பிட்டு விட்டு (சாப்பிடுவதுதான் அந்த விசேஷம் - வளைகாப்பு என்றால் அதுதானே) வீட்டிற்கு வந்து தூங்கி எழுந்த பிறகு அவருக்கு போன் செய்தேன். அவர் கிடைத்தார். வழக்கமான உரையாடல்களுக்குப் பின் எவ்வளவு நாள் கோவையில் இருப்பீர்கள் என்றேன். இன்னும் இரண்டு நாள் இருப்பேன் என்றார். அப்படியானால் நீங்கள் தங்கியிருக்கும் இடத்தைச் சொல்லுங்கள், நாளைக்காலை உங்களை வந்து சந்திக்கிறேன் என்றேன். அவர் ரேஸ்கோர்ஸ் ஏரியாவில் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கிறேன் என்றார்.

சரி, அங்கே உங்களை நாளைக்காலை 8.30 மணிக்கு சந்திக்கிறேன், அங்கிருந்து பக்கத்தில் உள்ள ஒரு அன்னபூர்ணா ஹோட்டலுக்குப் போய் ஒன்றாக டிபன் சாப்பிடுவோம் என்று சொல்லி விட்டு பேச்சை முடித்தேன். எனக்கு ஒரு குணம் என்னவென்றால் ஏதாவது ஒரு காரியத்திற்கு ஒரு டைம் சொல்லி விட்டால் அந்த டைமை கண்டிப்பாக கடைப் பிடிக்கவேண்டும் என்ற குணம். போகும் வழியில் ஏதாவது இடைஞ்சல் ஏற்படலாம் என்பதால் அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே அங்கு சேரும்படியாக வீட்டிலிருந்து புறப்பட்டு விடுவேன்.

காலை நேரம் என்பதால் சாலைகள் காலியாகவே இருந்தன. ஆதலால் அரை மணி நேரம் முன்பாகவே, அதாவது எட்டு மணிக்கே அங்கு போய்விட்டேன். என்னுடைய திட்டம் என்னவென்றால் அரை மணி நேரம் அங்கு உலாவி விட்டு சொன்ன நேரத்திற்கு அவரைப் பார்க்க ரூமுக்குப் போகலாம் என்று நினைத்தேன். காரை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் தம்பதி சமேதராக திருஆர்ஆர்ஆர் காலை வாக்கிங்க் போய்விட்டு திரும்புகிறார்கள். அவர்கள் பார்வையில் பட்டாயிற்று. இனி வேறு வழியில்லை.

அவர்களுடன் அவர்கள் ரூமிற்கு போய் வரவேற்பு ஏரியாவில் உட்கார்ந்து அளவளாவினோம். தம்பதிகள் ஒவ்வொருவராக குளித்து ரெடியானார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அங்கே பக்கத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலுக்குப் போனோம். அங்கு டிபன் சாப்பிட்டு விட்டு நான் கை கழுவப்போனேன். நான் கை கழுவி விட்டு டேபிளுக்கு திரும்பும் சமயத்தில் சர்வர் பில் கொண்டு வந்து கொடுத்தார். அந்த சர்வரிடம் ஆர்ஆர்ஆர் சொல்லி வைத்திருப்பார் போல இருக்கிறது. பில்லை அவரிடத்தில் கொடுத்து விட்டார்.

நான் எவ்வளவோ மன்றாடிப்பார்த்தும் பில்லை அவர் என்னிடம் கொடுக்காம்ல் அவரே செட்டில் பண்ணி விட்டார். நீங்கள் பெரியவர் என்று ஒரு சப்பைக்கட்டு வேறு. இவரேதான் கெஸ்ட் ஹவுசில் பேசிக்கொண்டிருக்கும்போது உங்களைப் பார்த்தால் வயதானவராகத் தெரியவில்லையே என்று ஐஸ் வைத்தவர். மனிதர்கள் எப்படியெல்லாம் பேச்சு மாறுகிறார்கள் என்று பாருங்கள்.

பிறகு அவர்களை கெஸ்ட் ஹவுசில் திரும்பக் கொண்டு போய் விட்டு விட்டு வீட்டிறகுத் திரும்பினேன். அவர்களுக்கு வேலை இருந்ததால் வீட்டிற்கு அழைத்து வரமுடியவில்லை.  இப்படியாக இன்று ஒரு பொன்னாளாக அமைந்தது.

18 கருத்துகள்:

  1. அபாரமான ஹாஸ்யம்.. வாசிக்க வாசிக்க சிரிப்பு.. சந்திப்பு வாழ்க

    பதிலளிநீக்கு
  2. சார்...இதை..இதைத் தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்....

    பதிலளிநீக்கு
  3. //இன்று ஒரு பொன்னான தினம்//

    அழகான தலைப்புடன் அறிமுகம் வாய்ந்த இருவரைப் பார்த்ததில், அன்னபூர்ணாவில் நானும் டிபன் + காஃபி சாப்பிட்டது போன்றதோர் திருப்தியாக உணர்ந்தேன்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் மனம் இளமை அய்யா... இனிய சந்திப்பிற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. உங்களின் பொன்னான நாள் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! எந்த ஒரு நிகழ்வையும் சுவைபட சொல்வதில் தங்களுக்கு நிகர் தாங்களே! இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

    பதிலளிநீக்கு
  6. பெரியவர்கள் எப்படி நேரத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்பதைக் காண்பித்துள்ளீர்கள். 'ஒரு சமயத்தில் ஒரு வேலை' என்பதை 'இரு சமயத்தில் ஒரு வேலை' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நான்கூட நகைச்சுவைக்காக அப்படி எழுதியுள்ளீர்களோ என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக ப்ரூப் பார்க்கவில்லை. சரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  7. எனக்கு நாங்கள் உங்களைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
  8. சந்திப்பு சுவைத்தது ஐயா வாழ்க நலம்
    த.ம.2

    பதிலளிநீக்கு
  9. பொன்னான சந்திப்பு உங்கள் அருமையான ஹாஸ்ய நடையில் அற்புதம் சார்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. இனிமையான சந்திப்பு. ஆர் ஆர் ஆர் தம்பதியரை நானும் சந்தித்திருக்கிறேன்! அவரை மட்டும் தனியாக சென்னையில் ஒருமுறை. தம்பதி சமேதராக அவர் இல்லத்தில் மறுமுறை!

    பதிலளிநீக்கு
  11. ஐயா நீங்கள் வைத்திருக்கும் ஐபோன் விலை 23000/-- தானா?
    எப்போதும் விருந்தினரை உபசரிப்பது அன்னபூர்ணாவில் மட்டுமே என்பது ஏன்?
    கேட்பவர் எதிரில் இல்லை என்றால் கூசாமல் போய் சொல்லலாம். அய்யன் வள்ளுவரே போய் சொல்ல சொல்லியிருக்கார் நன்மை உண்டாகும் எனின். ஆக போய் சொன்னதற்காக வருந்த வேண்டாம்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும், முனைவர் ஐயாவும் சந்தித்தபோது அங்குதான் அழைத்துப்போனார்.

      நீக்கு
  12. நல்ல ஒரு சந்திப்பை தங்கள் பாணியில் பகிர்ந்த விதம் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  13. வழக்கம் போல உங்கள் பாணீயில் ஒரு சுவாரஸ்யமான பதிவு. பதிவர் சந்திப்பு என்றால் என்னென்வெல்லாம் சாப்பிட்டீர்கள் என்று சொல்ல வேண்டும் என்பது எழுதாத விதி. துளசி டீச்சர் (துளசி தளம்), மேஜையில் இருந்த பிளேட்டில் இருப்பது முதற்கொண்டு சொல்லி இருப்பார். தொடரட்டும் இந்த மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. வருகை தந்த அனைவருக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு