செவ்வாய், 15 அக்டோபர், 2019

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே!


இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங்கு தேவையில்லை.

பிளாக்கரில் ஏதோ நோண்டிக்கொண்டு இருக்கையில் என்னுடைய பிளாக்கைப் பற்றி கூகுளார் சில விபரங்களை என் முன் எடுத்து வைத்தார். முக்கியமாக அவர் சொன்னது என்னுடைய பிளாக் இன்னும் உயிருடன் இருக்கிறது. அதை இன்னும் சில அன்பர்கள் பார்த்துக்கொண்டும் பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

நான் இந்தப் பதிவுலகம் அஸ்தமித்துப் போய்விட்டது என்று நம்பிக்கொண்டிருக்கையில் இந்த விபரங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தன.

15-10-2019 அன்று எடுத்த ஸ்கிரீன் ஷாட்

இந்த விபரங்கள் 15-10-19 அன்று கூகுளாரின் தயவில் ஸ்கிரீன் ஷாட்டாக எடுக்கப்பட்டது. இது வரைக்கும் என்னுடைய பதிவை 13 லட்சம் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள் என்கிற விஷயம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தவிர போன மாதம் ஏறக்குறைய 5000 பேர் இந்த தளத்தைப் பார்வையிட்டு இருக்கிறார்கள்.

இந்த எண்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் நம் தளத்திற்கு இன்னும் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றுவது சரியல்ல. அவர்களுக்காகவாவது இனி பதிவுகள் எழுதியே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இந்தப் பதிவுலகில் நான் 2009 ம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். இன்றைக்கு ஏறக்குறைய 10 வருடங்கள் ஓடி விட்டன. அன்று பதிவுலகில் கொடி கட்டிப் பறந்தவர்களில் அநேகம் பேர் காணாமல் போய்விட்டார்கள். ஒரு சிலர்தான் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதில் முக்கியமானவர்கள்.

1, துளசி டீச்சர் அவர்கள்
2.திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள்
3. திரு G.N.பாலசுப்பிரமணியன்
4. திரு ஸ்ரீராம் அவர்கள்
5.திரு கண்ணன் அவர்கள்
6.திரு வே.நடனசபாபதி அவர்கள்

இன்னும் மற்ற சிலர்.

இது தவிர வருடந்தோறும் பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டு பதிவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கவும் வசதியாக இருந்தது. அனைத்தும் இப்போது கனாக் கண்ட மாதிரி காணாமல் போயின. எல்லாம் காலத்தின் கோலம். இதில் முகப்புத்தகம், வாட்ஸப்  போன்றவைகளின் பங்கும் உண்டு.

ஆனால் மற்ற மொழிகளில் பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன, சில பதிவுகளின் மூலம் சிலர் பணம் கூட ஈட்டுகிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது. நான் எழுதுவதைப் படித்து விட்டு ஏதோ நான்கு பேர் என்னைத் திட்டி பின்னூட்டம் போட்டால் அதுவே போதும் எனக்கு. பாராட்டுகளை விட கண்டன பின்னூட்டங்கள்தான் என்னை விழிப்பாக வைத்திருக்கும். என் வயதில் அது ஒன்றே எனக்குத் தேவையானது.

பார்ப்போம்.



புதன், 11 செப்டம்பர், 2019

தஹில் இரானியை திகில் இரானியாக்கிய கதை.

தமிழில் ”திகிலடிச்சுப்போனான்” என்ற வார்த்தை ஒருவன் திடீரென்று ஏற்படும் ஏதோவொரு சம்பவத்தினால் நிலை குலைந்து போவதைக் குறிக்கும்.  இந்தப்பதிவில் அந்த வர்த்தையை அந்தப் பொருளில்தான் உபயோகப்படுத்தியிருக்கிறேன். வேறு விதமான அர்த்தங்கள் கற்பித்துக்கொள்ளாதீர்கள்.

பொதுவாக அரசுத்துறை அதிகாரிகளை (நீதித்துறையும் ஒரு அரசுத்துறைதானே) மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடமாறுதல் செய்வது வழக்கம்தான். இது சாதாரண அதிகாரிகளுக்குப் பொருந்தும். ஆனால் பெரிய பதவிகளில் இருக்கும் நீதிபதிகள், அரசு செக்ரடரிகள், பல்வேறு துறைத்தலைவர்கள் போன்ற அதிகாரிகளை மாற்றும்போது சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அவர்களாக விருப்பப் படும்போது அல்லது அத்தகைய பதவிகளில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய பின்பு அவரை இடமாற்றம் செய்வார்கள். அதே மாதிரி ஒருவர் பதவு உயர்வு பெறும்போதும் வழக்கமாக இட மாற்றம் செய்வது உண்டு. இத்தகைய இடமாற்றங்கள் போதுவாக அந்த அதிகாரிக்கு பெரிய மனத்தாங்கல் ஏற்படாது.

ஆனால் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாது. அந்தக் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் மேலிடத்திற்கு அசவுகரியங்கள் ஏற்படும்போது அந்த அதிகாரியை அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகும்.அப்போது அவரை முக்கியமல்லாத பதவிகளுக்கு மாற்றுவார்கள். அவருடைய பதவியின் தரத்தில் மாற்றமிருக்காது. ஆனால் பதவியின் முக்கியத்துவம் மிகவும் குறைந்துவிடும்.

இத்தகைய சூழ்நிலையில் அந்த அதிகாரி சம அதிகாரிகளின் மதிப்பில் மிகவும் தாழ்ந்து விடுவார். இது ஏறக்குறைய ஒரு பதவி இறக்கம் போலப் பாவிக்கப்படும். இது ஒரு அவமானமாகும். பலர் இதைத் தாங்க முடியாமல் விடுமுறையில் செல்வார்கள். ஒரு சிலர் வேலையை ராஜினாமா செய்வார்கள். மேலிடத்தில் இதை எதிர்பார்த்துத்தான் காயை நகர்த்துவார்கள்.

அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமில்லை. ஆகவே தஹில் இரானியை மாற்றுவதற்கு வலுவான அரசியல் காரணங்கள் ஏதாவது இருந்திருக்கலாம். எப்படியானாலும் சம்பவம் நடந்து விட்டது. அதற்கு எதிர்வினையும் ஏற்பட்டாகி விட்டது. இதற்கு மேல் மேலிடம் இறங்கி வந்து சமாதானம் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல் சம்பந்தப்பட்டவரும் தன் நிலையிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ள முடியாது.

இதை ஒரு விபத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

புதன், 5 ஜூன், 2019

ஞாயிறு, 2 ஜூன், 2019

இந்தி எதிர்ப்பும் திராவிடக் கட்சிகளும்.

1950 களில் திராவிடக் கழகம் பெரியார் தலைமையில் இயங்கியபோது நாத்திகமும் பிராமணத் துவேஷமும்தான் அந்தக் கட்சிக் கொள்கையாயிருந்தது. பின்பு பெரியார் மணியம்மையைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகு தி.மு.க. தோன்றியது.

அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மட்டும் நம்பியிராமல் மாணவர்களைக் கவரும் பொருட்டு இந்தி எதிர்ப்பைத் தங்கள் முக்கிய கொள்கையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை. போராடுவதற்கு ஏதாவது சாக்கு வேண்டும், அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்கைதான் இது.

இந்தப் போராட்டம் பல்வேறு கட்டங்களில் பலவிதமாக நடத்தப்பட்டு கடைசியில் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் இந்தி சொல்லிக்கொடுப்பது நின்று போயிற்று. இந்த நிலையினால் தமிழ் இளைஞர்கள் இந்தி படிக்காமல் மத்திய அரசு வேலைகளைக் கோட்டை விட்டார்கள். ஆனால் பிராமணர்கள் தனிப்பட்ட முறையில் இந்தி கற்றுக்கொண்டு டில்லிக்கோட்டையில் பல முக்கிய பதவிகளில் கோலோச்சினார்கள், கோலோச்சுகிறார்கள்.

இப்போது மத்திய அரசு இந்தியை பாடத்திட்டத்தில் சேர்த்தால் நல்லதாகப்போச்சு என்று இருக்காமல் அதை எதிர்த்து உயிர் தியாகம் செய்ய இந்த திராவிடக்கட்சிகள் கூவுகின்றன. இந்தத் திராவிடக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் தங்கள் வாரிசுகளுக்கு இந்தி படிப்பிக்கிறார்கள். இந்த அடிமட்ட மக்கள்தான் அறிவு கெட்டுப்போய் இந்தி எதிர்ப்புக் கோஷம் போட்டுக்கொண்டு அழிந்து போகிறார்கள்.

தமிழன்தான் தமிழனுக்கு எதிரி.

வியாழன், 16 மே, 2019

சரித்திரம் தெரியுமா?

எனக்கு 13 வயது இருக்கும். ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு இந்த சரித்திரப் பாடத்தின் மீது ஒரு வெறுப்பு. மண்டையில் ஏறவே இல்லை. என் வாத்தியார் இந்தப் பாடத்தில் சுலபமாகப் பாஸ் செய்ய ஒரு வழி சொல்லிக் கொடுத்தார். ஏதாவது ஒரு ராஜா தன் ஆட்சியின்போது செய்த சாதனைகள் என்னவென்று கேட்டால் எதுவும் யோசிக்காமல் சாலைகள் போட்டார், சாலைகளின் ஓரத்தில் மரம் நட்டார், குளங்கள் வெட்டினார், சத்திரங்கள் கட்டினார் என்று இப்படி எழுதினால் போதும், நீ பாஸ் ஆகி விடுவாய் என்று சொல்லிக்கொடுத்தார்.

அது போலவே எழுதி சரித்திரம் பாஸ் செய்து மேல் படிப்புகளெல்லாம் படித்து மேலே வந்தது ஒரு பெரிய கதை.

ஆனால் என்னுடைய ஆயுள் காலத்திலேயே ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது. நான் மேற்கூறியவாறு சரித்திரம் படித்துக்கொண்டு இருக்கும்போது தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை சினிமா பாணியில் பத்திரிக்கைக்காரர்கள் பிரசுரித்தார்கள்.

அதில் எனக்கு நினைவு இருப்பதெல்லாம் அந்த படு கொலையைச் செய்தவன் ஒரு தேசத்துரோகி என்றும் அவன் பெயரைச் சொன்னாலே ஏழேழு தலைமுறைக்கும் பாவம் வந்து சூழும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இன்றைக்கும் அவன் பெயரைச் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது.

இது நடந்து ஒரு எழுபது வருடங்கள் ஆகியிருக்கும். இன்றைக்கு அவனை யாரோ ஒரு சினிமா நடிகர் என்னமோ சொல்லிவிட்டார் என்பதால் இந்த தேசமே அந்த நடிகரை கால்வேறு கைவேறு ஆக்கத்துடிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மகாத்மா காந்தி சிலைக்குப் பக்கத்திலேயே அவன் (அவர் என்று சொல்ல வேண்டுமோ) சிலையை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு எழுபது வருடத்திலேயே, என் வாழ்நாளில் நடந்ததையே மக்கள் மாற்றுகிறார்கள் என்றால், 1000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாய் சரித்திரத்தில் சொல்பவைகளை எவ்வாறு நம்பவது?

பின் குறிப்பு; இது ஒரு சரித்திர ஆராய்ச்சிப் பதிவுதானே தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை என்று ஆணையிட்டுச் சொல்கிறேன். அப்படியும் இந்தப் பதிவிற்கு உள் நோக்கம் கற்பிப்பவர்கள் ஏழேழு ஜன்மத்திற்கும் இந்தியாவிலேயே பிறக்கக்கடவது என்று சாபம் கொடுக்கிறேன்.

17-5-2019  / 6.00 AM    இதையும் பாருங்கள்;

Bhopal candidate Pragya Thakur courted fresh controversy on  .. 

ஞாயிறு, 12 மே, 2019

காதல் விபத்துகள்


காலையில் பேப்பரைத் திறந்தால் கொலைச்செய்திகள்தான் முதலில் கண்ணில் படுகின்றன. அவைகளில்  பெரும்பாலானவை காதல் சம்பந்தப்பட்டதாக இருப்பது வருத்தத்குரியது. அதிலும் குறிப்பாக எங்கள் மாவட்டம் அதில் முன்னிலை வகிப்பதைக் கண்டு தலை குனிகிறேன்.


தற்காலத்தில் காதல் கல்யாணங்கள் அதிகமாக நடப்பதாக நான் நினைக்கிறேன். அவைகளில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவுகின்றன என்பது ஒரு பரிதாபம்.

ஏன் காதல் கல்யாணங்கள் தோல்வியில் முடிகின்றன என்று பார்த்தால், சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

கல்யாணம் என்றால் என்ன, கல்யாணம் செய்துகொண்ட பிறகு அந்தக் கணவன் மனைவிக்கு உண்டான பொறுப்புகள் என்னென்ன, இவைகளைப் பற்றி இன்றைய காதலர்கள் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பம் அமைப்பது என்பது விளையாட்டுக் காரியம் அல்ல. ஆனால் 21 அல்லது 22 வயது வேலையில்லாத ஒருவன் 18 வயது கல்லூரியில் படிக்கும் பெண்ணைக் காதல் கல்யாணம் செய்தால், அவனுக்கு குடும்பப் பொறுப்புகள் என்ன என்று தெரியுமா?

அதிலும் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடைபெறும் கல்யாணங்களில் அவர்கள் தங்கள் சுய காலிலேயே நிற்க வேண்டும் என்றால் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா?

உலகம் போற போக்கை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வியாழன், 4 ஏப்ரல், 2019

ஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்?

கொஞ்ச நாளா பதிவுலகப் பக்கம் வரவில்லை. கொஞ்ச நாள் என்ன? ரொம்ப நாள் ஆச்சு. சரி, இப்ப என்ன திடீரென்று இந்தப் பக்கம் என்று சிலர் கேட்கக்கூடும். அதற்காக முன்னெச்சரிக்கையாக இதோ பதில்.

எனக்கு அதிகார பூர்வ வயசு 85. ஜாதக பூர்வமாக வயசு 84. இது எப்படி நேர்ந்தது என்பதை வேறொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன். இப்ப விஷயத்திற்கு வருவோம். இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவனும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த விதி எனக்குப் பொருந்தாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் நானும் இந்த விதிக்குள்தான் வருவேன் போலத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. உடலில் சிலபல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நெஞ்சில் லேசாக வலி தோன்றியது. என் டாக்டர் பெண்ணிடம் கூறினேன். அவள் உடனடியாக என்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் அங்குள்ள இருதய நோய் நிபுணரிடம் விட்டாள்.


அவர் வழக்கமாகச் செய்யும் ECG, Echo Cardiogram எல்லாம் செய்து விட்டு, ஒரு  Angiogram செய்து பார்த்துடலாமே என்றார். என் பெண் அப்படியே செய்யுங்கள் என்று கூறி விட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை இப்படி ஒரு சூழ்நிலையில் ஏன்ஜியோ செய்கிறேன் என்று டாக்டர் சொன்னபோது நான் சொன்னேன். இப்படி முதலில் ஏன்ஜியோ செய்கிறேன் என்பீர்கள், அப்புறம் இரண்டு அடைப்பு இருக்கிறது, ஒரு சின்ன (?) ஆபரேஷன் செய்தால் சரியாகி விடும் என்பீர்கள். எனக்கு இந்த வித்தை எல்லாம் வேண்டாம், ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்து அனுப்புங்கள் என்று கறாராகச் சொல்லி மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண்ணோ பட்டு லேசாக நெஞ்சில் அவ்வப்போது வலி வர ஆரம்பித்தது. எனக்கும் வயதாகி விட்டபடியால், சரி உடல்நிலை எப்படியிருக்கிறது, இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்போம் என்று தெரிந்து கொள்ளலாம் என்ற ஆசை வந்தது. அதனால்தான் என் பெண்ணிடம் கூறி இப்படி இந்த டாக்டரிடம் செல்ல வேண்டியதாகப் போயிற்று.

சரி, அதையும் பார்த்து விடுங்கள் என்றேன். ஒரு இரண்டு மணி நேரம் என்னென்னமோ செய்து ஒரு வழியாக ஏன்ஜியோ செய்து முடித்தார்கள். என்னைக் கொண்டு போய் தனியாகப் படுக்க வைத்தார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஒரு ரூம் கொடுத்து இன்று இரவு இங்குதான் தங்க வேண்டும் என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டுப் புளிய மரத்திற்குப் பயப்பட முடியுமா? எல்லாவற்றிற்கும் தலையாட்டினேன்.

மறுநாள் காலையில் என் பெண்ணும் வந்த பிறகு டாக்டர் அறையில் ஏன்ஜியோ ரிசல்டைப் பரிசீலித்தோம், இருதயத்திலுள்ள முக்கிய மூன்று இரத்தக் குழாய்களில் இரண்டில் 90 சத அடைப்பு இருக்கிறது. மீதி ஒரு ரத்தக்குழாயினாலும் புதிதாக உண்டான subsidiary ரத்தக்குழாய்களினாலும் இருதயம் ஓரளவு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதுதான் இப்போதைய நிலை என்று டாக்டர் சொன்னார்.

இந்த நிலையில் என்ன செய்யலாம் என்று மகள் கேட்டாள். ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யலாம், ஆனால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கிறது என்றார். அப்படி சர்ஜரி செய்தால் எவ்வளவு முன்னேற்றம் இருக்கும் என்று கேட்டதற்கு அவர் சுமார் 10 % முன்னேற்றம் இருக்கும் என்றார்.

இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்த நான் சொன்னேன். டாக்டர், எனக்கு 84 வயது ஆகிவிட்டது, இந்த ஆபரேஷனில் ரிஸ்க் அதிகம் என்று நீங்களே சொல்லுகிறீர்கள், தவிர ஆபரேஷனுக்குப் பிறகு வரும் முன்னேற்றமும் கணிசமாக இல்லை. இந்த நிலையில் இந்த ஆபரேஷனைத் தவிர்த்து மருந்து மாத்திரைகளினால் நான் சிரமப்படாத அளவிற்கு என்னைத் தயார் செய்தால் போதும், நானும் அதிகமாக அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுகிறேனே என்று சொன்னேன்.

டாக்டர் அதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார். உங்கள் நிலையில் நீங்கள் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்று ஒரு சர்டிபிகேட்டும் கொடுத்து விட்டார். ஆகவே மக்களே, டாக்டர்கள் சொல்லுகிறார்களே என்று எந்த ஆபரேஷனுக்கும் சம்மதித்து விடாதீர்கள். அந்த ஆபரேஷன் உங்களுக்கு அவசியம்தானா, அதனால் உங்கள் உடல்நிலை மேம்படுமா என்பதையெல்லாம் தீர யோசித்து அப்புறம் முடிவு எடுங்கள்.

மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது உடல்நிலையில் எந்த பின்னடைவும் இல்லை.

வெள்ளி, 15 மார்ச், 2019

38. பொள்ளாச்சி பாலியல் வக்கிரங்கள்

                                 
                                   

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வக்கிரங்களைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதாயம் தேடுகின்றன. பத்திரிக்கைகள் கல்லா கட்டுகின்றன.

ஆனால் யாராவது இந்த அக்கிரமங்கள் நடப்பதற்கு அடிப்படைக் காரணங்களைப் பற்றி எள்ளளவாவது  சிந்திக்கிறார்களா என்றால், ஒருவரையும் காணோம். இந்த அக்கிரமக்காரர்கள் எந்தப் பெண்ணையும் பலாத்காரமாகவோ, மயக்க மருந்து கொடுத்தோ தூக்கிக் கொண்டு போனதாக எந்தச் செய்தியும் இது வரை இல்லை.

பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களும் தங்களுடைய பூரண நினைவுடனேயே தங்களுடைய பரிபூர்ண சம்மதத்துடனேயே சென்றிருக்கின்றார்கள். கூட்டிக்கொண்டு போனவர்கள் அந்தப்பெண்களை சீரழித்தது ஒரு வகையில் காட்டுமிராண்டித்தனம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்தப் பெண்கள் அவர்களுடன் போனது அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியுமா? பெற்றோர்களின் அனுமதியுடன்தான் அவர்கள் சென்றார்களா?

மனிதனாகப் பிறந்தவன் ஒவ்வொருவனுக்கும் இயற்கை சில பயங்களைக் கொடுத்திருக்கிறது. இருட்டு பயம், புது இடம், புது மனிதர்கள், புது சூழ்நிலை இவைகளைக் கண்டு பயம், எதிர்பாலரிடம் பேச. பழக பயம். இப்படி “தெனாலி” படத்தில் கமலஹாசன் லிஸ்ட் போடுவாரே அந்த மாதிரி நிறைய பயங்கள் இயற்கை நம்மிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கள் எல்லாம் நம்முடைய பாதுகாப்புக்குத் தானே ஒழிய சும்மா விளையாட்டுக்கல்ல.

அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பல எச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவேண்டும். அதில் முக்கியமாக பெரியவர்கள் (பெற்றோர்களும் இதில் அடங்கும்) சொல்லும் அறிவுறைளைக் கேட்டு நடக்கவேண்டும். பெற்றோர்களிடத்தில் உண்மையை பேச வேண்டும். இப்படியெல்லாம் சில பழக்க வழக்கங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய இளைய சமுதாயம் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. தாங்கள் நினைப்பதுதான் சரி, தங்கள் நண்பர்கள் செலவதுதான் வேதவாக்கு. இப்படியாக அவர்களுடைய போக்கு இருக்கிறது. ஆணுக்குப் போட்டியாக பெண்களும் இப்படியான கலாச்சாரத்தைக் கடைப் பிடிக்கிறார்கள்.

பாய் பிரண்ட் இல்லையென்றால் அது மகா கேவலம் என்ற எண்ணம் பொதுவாக எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. பாய் பிரண்டுடன் ஊர் சுற்றுவது ஒரு கட்டாயம் என்ற நிலைக்கு இன்றைய கல்லூரிப் பெண்கள் வந்திருக்கிறார்கள். இந்த மாதிரி சுற்றுவதற்கு பல பொய்க் காரணங்களை
வீட்டில் சொல்லி நம்ப வைக்கிறார்கள்.

இந்த மனப்பாங்கை இன்றைய கயவர்கள் நன்கு புரிந்து கொண்டு பல அக்கிரமங்கள் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த பொள்ளாச்சி விவகாரமும். அடிப்படைக் காரணத்தை அலசாமல் நடந்த நிகழ்வுகளை மட்டும்  ஆராய்வதில் எந்தப் பலனும் இல்லை.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு

                                              Image result for ரூபாய்
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும் வாயில் ஈ போவது தெரியாமல் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கையில் காலுக்கடியில் ஒரு சுண்டெலி ஓடிப்போய் விட்டது.

ஸ்டேண்டர்டு டிடக்ஷன் என்று ஒன்று ஒரு காலத்தில் இருந்ததை சம்பளதாரர்கள் ஏறக்குறைய மறந்தே போய்விட்ட நிலையில் அருண் ஜேட்லி அவர்கள் அதை இப்போது நினைவூட்டியிருக்கிறார்.

சரி, சம்பளம் வாங்குறவனுக்கு என்னதான் மிச்சம் என்று கேட்பவர்களுக்கு-
நான் பென்சன்தான் வாங்குகிறேன். எனக்கு என்ன மிச்சமாகும் என்பதுதான் எனக்குத் தெரிகிறது. நான் வாங்கும் பென்சனில் சுளையாக நாற்பது ஆயிரம் ரூபாய்க்கு இன்கம்டாக்ஸ் கட்ட வேண்டியதில்லை. இப்போது 20 சதம் கட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆகவே எட்டு ஆயிரம் ரூபாய் மிச்சம். ஆனால் இன்னொரு ஆப்பை அருண் ஜேட்லி வைத்திருக்கிறார்.

எஜுகேசன் செஸ் 3 % ஆக இருந்ததை இப்போது 4 % ஆக உயர்த்தி இருக்கிறார். அதில் ஒரு ஆயிரம் ரூபாய் போய்விடும். ஆக மொத்தம் ஏழு ஆயிரம் ரூபாய் மிச்சமாகும். வந்தது லாபம் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

செவ்வாய், 30 ஜனவரி, 2018

36. யூட்யூப் விடியோ டவுன்லோடெர்

Youtube Downloader என்று ஒரு புரொக்ராம் யூட்யூபிலிருந்து விடியோக்களை டவுன்லோடு செய்ய மிகவும் உபயோகமாக இருந்தது. நான் அதை உபயோகித்து பல பாடல்களை டவுன்லோடு செய்து சேகரித்து வைத்திருக்கிறேன்.

இரண்டு நாட்களாக இந்த புரொக்ராம் சரியாக வேலை செய்வதில்லை. யாருக்காவது விபரம் தெரிந்தால் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திங்கள், 15 ஜனவரி, 2018

34. தற்கால சங்கீத வித்வான்கள்

நான் கொஞ்சம் கர்னாடக இசைப் பிரியன். இந்த சங்கீதத்தின் கணக்கு வழக்கெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. நல்ல இசையென்றால் கேட்டு ரசிப்பேன் அவ்வளவுதான்.

இங்கே நான் பதிவு செய்திருக்கும் பாட்டும் பாடகியும் சங்கீத உலகில் பிரபலமானவர்கள். முதலில் அதைக் கேளுங்கள். பிறகு நான் என் சந்தேகத்தைச் சொல்லுகிறேன்.




இந்தப் பாடகிக்கு முன் ஒரு லேப்டாப் வைத்திருக்கிறார்கள் அல்லவா? இது எதற்கு என்று  நான் ரொம்ப நாளாய் என் மூளையைக் குழப்பிக்கொண்டு இருந்தேன். (எப்படி, சந்தடி சாக்கில் எனக்கும் மூளை இருக்கும் சமாச்சாரத்தை உங்களுக்கு சொல்லிவிட்டேன் பார்த்தீர்களா?)

இன்றைக்குத்தான் இந்த ரகசியத்தை எப்படியும் கண்டு பிடித்து விடுவது என்று கூகிளாரை வினவினேன். அவர் சொல்கிறார் - இது ஒரு டெலிபிராம்ப்டராம் - பாடகர்களுக்கு பாட்டின் வரிகள் மறக்காமலிருக்க அந்த வரிகள் இந்த லேப்டாப்பில் நகர்ந்து கொண்டு இருக்குமாம். அதைப் பார்த்து பாடகர்கள் பாடுவார்கள் என்று கூகுளார் சொன்னார்.

டிவி வந்த புதிதில் செய்தி வாசிப்பாளர்கள் இந்த மாதிரி டெலிபிராம்ப்டர்கள் உபயோகப்படுத்துவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது மேடைப் பாடகர்களும் இந்த யுக்தியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு புரட்சிதான்.

சில பாடகர்கள் பாட்டை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு அதைப் பார்த்துப் பாடுவதைப் பார்த்திருக்கிறேன். பரவாயில்லை, தொழில் நுட்பம் எப்படியெல்லாம் பயன்படுகிறது பாருங்கள். அநேகமாக இன்னும் சில வருடங்களில் பாட்டை முன்பே பதிவு செய்து கொண்டு வந்து மேடையில் பக்க வாத்தியக்காரர்களும் பாடகரும் அந்த இசைக்கு ஏற்றபடி வாயையும் கையையும் அசைப்பார்கள் என்று யூகிக்கிறேன்.

என் சிறு வயதில் பிரபல பாடகர்கள் நான்கு ஐந்து மணி நேரக் கச்சேரிகளில் இந்த மாதிரி எந்த யுக்தியும் இல்லாமல் எப்படிப் பாடினார்கள் என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

சனி, 30 டிசம்பர், 2017

33. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது.

                                            Image result for மாடு பிடித்தல்

ஆனாலும் சும்மா சொல்லப்படாது. நம் இந்தியர்கள் வாய்ச்சொல்லில் அசகாய சூரர்கள். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள்.

நான் அப்போதே சொன்னேன். ஆனா காசை வாங்கிட்டு இந்த அதிகாரிகள்தான் அனுமதி அளித்தார்கள் என்று எப்போதும் எதிர்க் கட்சிக்காரன் சொல்லிக்கிட்டுத் தான் இருப்பான்.

ஆனா இவனும் அந்தக் காசில் பங்கு வாங்கிக்கொண்டு வாயையும் **ச்சையும் மூடிக்கொள்வான்.

எப்படியோ இந்திய ஜனத்தொகையில் 14 பேரை சில நொடிகளில் குறைத்தாய் விட்டது.

என்ன பரிதாபம் என்றால் இதுவும் சில நாட்களில் மறந்து போகும். கும்பகோணம் பால் மணம் மாறாத சிறார்களின் மறைவை விடவா இது கொடியது?

சனி, 23 டிசம்பர், 2017

32. சங்கீதக் கச்சேரிகளும் மைக்குகளும்


                                    Image result for மார்கழி கச்சேரிகள்

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் ராம நவமிக்காக கச்சேரிகள் நடக்கும். எங்கள் வீட்டிற்கு நன்றாகக்  கேட்கும். அப்படிக்கேட்டு கேட்டுத்தான் எனக்கு கர்னாடக சங்கீதத்தின் பேரில் ஒரு ஈடுபாடு வந்தது.

மதுரை மணி அய்யர், மதுரை சோமு, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், எம்.எம். தண்டபானி தேசிகர், ஆலங்குடி சகோதரர்கள், காருகுறிச்சி அருணாசலம் முதலானவர்களின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். இந்த வித்வான்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக கச்சேரி நடக்கும் இடத்திற்கும் போவேன். ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து விட்டு திரும்பி விடுவேன்.

அப்போதெல்லாம் மேடையில் ஒரே ஒரு மைக் மட்டும்தான் வைப்பார்கள். வார்ப்பாட்டுக்காரருக்கு எதிரில் ஒரு ஒன்றரை அடி தூரத்தில் இந்த மைக் இருக்கும். கச்சேரியில் நடக்கும் வாய்ப்பாட்டு, பிடில், மிருதங்கம், கடம் ஆகியவைகளின் தொனி நன்றாகக் கேட்கும். அப்போதைய வித்வான்கள் மைக் வருவதற்கு முன்பே பாடுவதற்கு பழகியவர்கள். பெரிய கூட்டங்களில் கூட மைக் இல்லாமல் பாடக்கூடியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


                          Related image

பிறகு கொஞ்ச வருடங்களை கழித்து ஒவ்வொரு வித்வானுக்கும் தனித் தனி மைக்குகள் வைக்க ஆரம்பித்தார்கள். இங்குதான் வில்லங்கம் ஆரம்பமாகியது. சில வித்துவான்கள் மைக் காரருடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவர்களின் மைக்குக்கு மட்டும் ஒலியைக் கூட்டுமாறு செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த சதி வேலைகளுக்கு எல்லையில்லாமல் போயிற்று. அப்போது இருந்த பாலக்காடு மணி என்பவர் பிரபல மிருதங்க வித்வான். அவர் மிருதங்க வாசிப்பு அவ்வளவு நன்றாக இருக்கும். அதனால் அவருக்கு ஏகப்பட்ட கிராக்கி. இந்த மைக் சதிகளைப்  பார்த்து பொறுக்க மாட்டாமல் இனி மைக் வைக்கும் கச்சேரிகளுக்கு நான் மிருதங்கம் வாசிக்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டார்.

அவருடைய வாசிப்புக்காகவே பல கச்சேரிகள் மைக் இல்லாமல் நடந்தன. பிறகு காலம் மாறி விட்டது. பாலக்காடு மணி அய்யரும் போய்ச்சேர்ந்து விட்டார்.

1970 களில் என்று நினைக்கிறேன். அப்போது குமாரி - காயத்திரி அவர்களின் வீணைக் கச்சேரி அன்றைய புரந்தரதாஸ் அரங்கில் (கோவை) நடை பெற்றது. வீணையின் நாதம் கணீரென்று பது விதமாக இருந்தது. நன்றாக இருக்கிறது என்று பேசிக்கொண்டோம். பிறகுதான் அதன் ரகசியம் வெளியானது. காயத்திரியின் தந்தை சினிமா உலகத்தில் ஒரு சவுண்ட் இன்ஜினீயர். அவர் வீணையில் ஒரு ஸ்பெஷல் மைக்கைப் பொருத்தி அதை கச்சேரி ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்து விட்டார்.

வீணையின் நாதம் அட்டகாசமாக கேட்டது. பிறகு இந்த டெக்னிக்கை எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இன்று கடத்திற்குக்கூட இந்த மாதிரி மைக் பொருத்தும் டெக்னிக்கை ஆரம்பித்து விட்டார்கள்.

தவிர இப்போது பாடும் வாய்ப்பாட்டுக்  காரர்களின் பாட்டு எதிரில் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கூட சரியாக காதில் விழாது. அவ்வளவு குரல் வளம். ஆகவே அவர்களின் வாய்க்கருகே இரண்டு அங்குலம் தள்ளி மைக் வைக்கப்படுகிறது. தவிர ஒவ்விருவருக்கும் தனித்தனி மைக். மிருதங்க வித்வானுக்கு இரண்டு மைக். இனி பாடகரின் தாவாக்கொட்டையில் மைக் வைக்க வேண்டியதுதான் பாக்கி.

                                             Image result for mic in carnatic music

இந்த முறையில் ஒவ்வொரு வித்வானும் அவரவர்கள் மைக்கை அட்ஜஸ்ட் செய்கிறார்கள். மொத்தத்தில் இன்று நாம் கேட்கும் கச்சேரிகள் முற்றிலும் சின்ந்தெடிக் ஆக மாறி விட்டது. இது மட்டுமா? கச்சேரிகளில் இன்று தம்புரா என்பது ஏறக்குறைய மறைந்து போய்விட்ட ஒன்றாக ஆகி விட்டது. அதற்கு எலெக்ட்ரானிக் சுருதிப்பெட்டி வந்து விட்டது.

அந்தக்காலத்தில் கச்சேரிகள் நான்கு ஐந்து மணி நேரம் நடக்கும். வாய்ப்பாட்டுக்காரரைத் தவிர வேறு யாரும் தண்ணீர் அருந்தினதை நான் பார்த்ததில்லை. இன்று கச்சேரியில் ஒவ்வொருவர் பக்கத்திலும் இரண்டிரண்டு வாட்டர் பாட்டில்கள்.

இவ்வாறாக கர்னாடக சங்கீதம் கம்ப்யூட்டர் சங்கீதமாக மாறிக்கொண்டு வருகிறது.

                                 Image result for carnatic music

திங்கள், 18 டிசம்பர், 2017

31. காதல் கல்யாணம்

                                      Image result for காதலர்கள் படங்கள்
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதுதான் இல்லறம். ஆனால் அந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது பணம். பணம் இல்லையேல் முற்றும் துறந்த முனிவர்களினால் கூட வாழ முடியாது.

தற்போது செய்தித்தாள்களில் பிரபலமாக இருக்கும் கௌசல்யா-சங்கர் காதலை எடுத்துக்கொள்வோம். அவல்களின் கல்யாணம் நடக்கும்போது கௌசல்யாவிற்கு 18 வயது, சங்கருக்கு 21 வயது. அப்போதுதான் இருவரும் மேஜர் ஆகியிருக்கிறார்கள். இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கரின் குடும்பம் ஏழ்மையின் விளிம்பில்தான் இருந்தது என்று யூகிக்கிறேன்.

காதல் சினிமாவில் வேண்டுமானால் உயர்வாகக் காட்டப்படலாம். ஆனால் யதார்த்த த்தில் காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன.

இந்த நிலையில் அவர்கள் எந்த அடிப்படையில் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. காதல், சாதி வெறி ஆகியவை ஒருபுறம் இருக்க, அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு வாழ்வதற்கான பொருளாதார பலம் அவர்களுக்கு இல்லை. அந்த நிலையில் தங்களுக்கு கல்யாணம் அவசியமா என்ற சிந்தனை வராதா?

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்?

இது எனக்கு ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

செவ்வாய், 12 டிசம்பர், 2017

30. பிட் காயின் எனும் மகா மோசடி


பிட்காயின் வேண்டுமா என்று நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அது ஒரு நையாண்டிப் பதிவு என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அந்தப் பதிவில் பலர் இந்த பிட்காயினைப் பற்றி விவரமான பதிவு ஒன்று போடுங்கள் என்று விருப்பப்  பட்டிருந்தார்கள்.

அவர்களுக்காக நேற்று இரவு முழுவதும் விழித்திருந்து ஆராய்ச்சி செய்ததில் எனக்குத் தெரிய வந்த சில உண்மைகளை இங்கே பகிர்கின்றேன்.

1. மிக மிக அரிய மூளை உள்ள ஒருவன் இதில் ஈடுபட்டிருக்கிறான். பிட்காயின் என்பது அவன் மூளையில் உதித்த ஒரு பக்கா ஃப்ராடு ஐடியா.

2. பிட்காயின் என்பது ஒரு மாயை. ஒரு வித ஏமாற்று வழிகள் மூலம் அப்படி ஒன்று இருப்பதாக பலரை நம்ப வைத்திருக்கிறான். நம்ம ஜனங்கள்தான் இப்படிப்பட்ட ஏமாற்றுத் திட்டங்களில் பலாப் பழத்தை மொய்க்கும் ஈக்கள் மாதிரி தங்கள் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவார்களே.

நம் ஊரில் நடந்த ஈமு கோழித்திட்டம் நல்ல உதாரணம்.

3. இந்த பிட்காயினை உற்பத்தி செய்பவர்கள் ஊரில் உள்ள இளிச்சாவாயன்களைக் கண்டு பிடித்து அவர்கள் தலையில் இந்த பிட்காயின்களைக் கட்டுகிறார்கள். 

4. அந்த இளிச்சவாயன்கள் சாதாரண இளிச்சவாயன்கள் இல்லை. பெரிய பெரிய பிசினஸ் மேக்னட்டுகள். அவர்களுக்கு உள்ள ஒரே கவலை, அவர்களிடம் இருக்கும் கணக்குக் காட்டாத பணத்தை எப்படி பத்திரப்படுத்துவது என்பதுதான்.

5. அவர்களுக்கு இந்த பிட்காயின் ஒரு வரப்பிசாதமாக வாய்த்தது. இதில் பணத்தைப் போட்டால் பணம் எங்கிருக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாது.

6. இவர்கள் போடும் பணம் எங்கே போகிறது என்று அந்த ஒரிஜினல் பக்காத் திருடனுக்கு மட்டுமே தெரியும்.

7. இந்த பிட்காயினைக் கொண்டு ஆயிரம் வித்தைகள் செய்யலாம் என்பது அண்டப்புளுகு.

8. இந்த பிட்காயினுக்கு விலை நிர்ணயம் செய்வது அந்த பக்காத்திருடனே.

9. இந்தப் பிட்காயினுக்காக தனி ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்ஐ நடத்துபவர்களும் வடிகட்டின அயோக்கியர்களே.

10. அவர்கள் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிந்தவர்கள்.

11. ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்  என்ன வேலை செய்யும்? பிட்காயினை ஒருவன் விற்கிறான் என்றால், யாராவது வாங்குபவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அப்படி இரண்டு பார்ட்டிகளும் கிடைத்து விட்டால் இவனிடம் இருந்து அவனுக்கு இந்த பிட்காயினைக் கைமாற்றி விட்டு இவனுடைய கமிஷனை எடுத்துக்கொள்வான்.

12. இந்த வியாபாரத்தில் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்  ஒரு புரோக்கர் மட்டுமே. பிட்காயின் செல்லுமா செல்லாதா என்பதற்கு அவன் எந்தக் கேரன்டியும் தரமாட்டான். எல்லா ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்களும் இந்த விதமாகத்தான் செயல்படுகின்றன.

இந்த உலகமகாத் திருட்டு இன்னும் சில நாட்களில் அம்பலமாகப்போகிறது. பார்த்து அனுபவியுங்கள். பதிவர்கள் யாரிடமும் இந்த பிட்காயின் வாங்கும் அளவிற்கு வசதி இல்லையாதலால் அவர்கள் எந்த வருத்தமும் பட வேண்டியதில்லை.

திங்கள், 11 டிசம்பர், 2017

29. பிட் காயின் வேண்டுபவர்கள் அணுகவும்.


பிட் காயினைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லையென்று நம்புகிறேன். இனி உலக முழுவதும் பிட் காயின்தான் புழக்கத்திற்கு வரப்போகிறது.

இதன் விலை 2017 ம் ஆண்டு துவக்கத்தில் 1000 டாலராக இருந்தது இப்போது 15000 டாலராக இருக்கிறது. என்ன ஒரு வளர்ச்சி பார்த்தீர்களா? 2016 ம் ஆண்டில் ஒரு 100 பிட் காயின் வாங்கிப் போட்டிருந்தால் இன்று நீங்கள் ஒரு கோடீஸ்வரர்தான்.

இந்த விவகாரத்தில் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், இந்த பிட்காயின் எங்கே கிடைக்கும் என்பதுதான். இப்படி மக்கள் வகை தெரியாமல் திண்டாடுகிறார்களே என்று நான் இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன்.

ரகசியமாக விசாரித்ததில் இந்த பிட் காயினை ஒரே ஒருவர்தான் தயாரிக்கிறார் என்பதுவும் அவர் வட துருவத்தில் யாரும் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் தன் கம்ப்யூட்டருடன் வசிக்கிறார் என்பதுவும் தெரிய வந்தது. அவருக்கு பல இடங்களில் ரகசிய ஏஜண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் தெரிய வந்தது.

இதில் ஒருவர் எனக்கு தற்செயலாக அறிமுகம் ஆனார். அவர் எனக்கு எவ்வளவு பிட்காயின் வேண்டுமானாலும் வாங்கிக்கொடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார். இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் விலை 10 லட்சம் ரூபாய். தேவைப் படுபவர்கள் எவ்வளவு பிட்காயின் வேண்டுமோ அவ்வளவிற்கான தொகையை என்னுடைய ஸ்டேட் பேங்க் கணக்கில் கட்டிவிட்டு அந்த விபரத்தை எனக்குச் சொன்னால் அவர்களுக்கு இந்த பிட் காயின்கள் அனுப்பி வைக்க முடியும். 

பிட்காயின்களை நேரில் பார்க்கமுடியாது. அவைகள் உங்களுக்கு ஒரு கணக்கு ஆரம்பித்து அந்தக்கணக்கில் இந்த பிட்காயின்களை சேர்த்து விடுவோம். இந்தக்கணக்கு விபரங்கள் எங்கள் கம்பயூட்டரில் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். இதன் விலை ஏற ஏற உங்கள் பிட்காயின்களின் மதிப்பும் ஏறிக்கொண்டே போகும். இந்த பிட்காயின்களின் மதிப்பை எண்ணிக்கொண்டே நீங்கள் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கலாம்.

இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த பிட்காயின் என்னும் கோபுரம் சீட்டுக்கட்டு கோபுரம் மாதிரி சரிந்து விடும். ஆனால் எங்களிடம் வாங்கிய பிட்காயின்கள் அப்படியே இருக்கும். அதில் எந்த வித மாற்றமும் ஏற்படாது. அப்போது தங்கள் பிட்காயினுக்கு பணம் வேண்டுபவர்கள் அன்றைய மதிப்பு எவ்வளவோ அந்த நிலவரத்திற்கு பணம் பெற்றுக்கொள்ளலாம். (எங்களுடைய கணிப்பு - அன்றைய தேதியில் ஒரு பிட்காயின் ஏறக்குறைய நூறு ரூபாய் இருக்கும்)

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையோடு எங்களிடம் பிட்காயின் வாங்கி பயனடையுங்கள்.

வாழ்க பிட்காயின். வாழ்க இவ்வைகயம்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

28. டாக்டர்களுக்கும் கிளினிகல் லேப்களுக்கும் உள்ள உறவு

                                                Image result for clinical laboratory

இன்றைய தலைப்புச் செய்திகளில் ஒரு செய்தி பார்த்திருப்பீர்கள்.

கிளிக்கல் லேப்கள் டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கின்றனவாம். இந்த அதிசய உண்மையை இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் பெங்களூருவில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது பற்றிய உண்மைகள் ஒருபுறம் இருக்க-

இன்னொரு செய்தி-

ஆங்கிலத்தில்-

While the labs searched have declared an undisclosed income of over Rs 100 crore, the amount of referral fee in case of a single lab is more than Rs 200 crore, it said in a statement.

அதாவது ஒரு லேபில் மட்டும் சுமார் 200 கோடி இந்த மாதிரி டாக்டர்களுக்குக் கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்களாம். இது ஒரு வருடத்திற்கு என்று வைத்துக்கொள்ளலாம். சுமாராக 20 % கமிஷன் என்று வைத்துக்கொண்டால் அந்த லேப்பில் வருடத்திற்கு 1000 கோடி பிசினஸ் நடந்திருக்க வேண்டும். ஆதாவது ஏறக்குறைய ஒரு நாளைக்கு 3 கோடிக்கு பிசினஸ். இப்படி 3 கோடி பிசினஸ் செய்யக்கூடிய கிளினிக் லேப் பெங்களூரில் இருக்கிறதா?

எனக்கு நம்பிக்கை வரவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

திங்கள், 27 நவம்பர், 2017

27 - தற்கொலை செய்வது எப்படி?

                                                         Image result for தற்கொலை செய்து கொள்வது எப்படி
தற்சமயம் செய்தித் தாள்களில் தற்கொலைச் செய்திகள் அதிகமாக வருகின்றன. சாதாரண, அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஒரு ஆசிரியை மாணவிகளைத் திட்டினார் என்பதற்காக நான்கு மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். புருஷனுடன் சண்டை போட்டு விட்டு குழந்தைகளுடன் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பெற்றோர் செலவிற்கு காசு கொடுக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம். தான் விரும்பிய படிப்பில் சேர்க்கவில்லை என்பதற்காக என் உறவினர் பையன் உயிரை மாய்த்துக்கொண்டான்.

ஏன் இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரணப் பிரச்சினைகளுக்கு மனமொடிந்து போகிறார்கள் என்று புரியவில்லை. இவர்களின் வளர்ப்பு முறையில் ஏதாவது கோளாறு இருக்கிறதா? அல்லது இவர்கள் வாழும் சமுதாய சூழ்நிலை இவர்களைப் புறக்கணிக்கிறதா?

எனக்கு ஒன்று புலனாகிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி உண்டாகியிருக்கிறது. இன்றைய குடும்பம் ஒரு தாய் தகப்பன் ஒரு பிள்ளை என்பதாக இருக்கிறது. வளரும் பிள்ளைகளுக்கு வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவ பெற்றோர்களுக்கு நேரமில்லை.

எந்நேரமும் டிவி, சினிமாக்களைப் பார்த்துக்கொண்டு குழந்தைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. பணக்காரர்களின் வீட்டில் மட்டுமல்ல, நடுத்தர மக்களின் வீட்டிலும் இப்படித்தான் நடக்கிறது. வாழ்க்கையைச் சந்திக்க வேண்டிய மன தைரியத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையிலிருந்து பெற்றோர்கள் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது.

படிப்பு என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்வது என்பது போய் மார்க் வாங்குவதற்கு மட்டும் என்று ஆகிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு நல்ல மார்க் வாங்குவதுதான் வாழ்க்கை என்று ஆகி விட்டது.  அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவதோ பழகுவதோ அரிதாகி விட்டது. உலகம் என்றால் படிப்பும் மார்க்கும் என்று ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய மனத்துணிவு இல்லை.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தப் பிரச்சினையை ஆழ்ந்து சிந்தித்து தீர்வு காணாவிட்டால் எதிர்கால சமுதாயம் மனத்துணிவற்ற ஒரு சமுதாயமாக மாறிவிடும்.