வியாழன், 11 மார்ச், 2010

ஜோசியம் உண்மையா, பொய்யா?



கோள்களின் நிலைக்கும் ஒருவனுடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அந்த தொடர்பை கணித்து தனிமனிதனின் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சொல்ல ஒரு நல்ல ஜோதிடனால் முடியும் என்றும் முந்தைய பதிவில் பார்த்தோம்.


ஜோதிடத்தில் உண்மையாகவே இவ்வாறு சொல்ல முடியுமா, இல்லை இது ஒரு பொய்யான சாஸ்திரமா? இந்த விவாதம் காலங்காலமாக நடக்கிறது. ஜோதிடம் பொய் என்று எந்தவித குழப்பமும் இல்லாமல் நம்புகிறவர்கள் இந்தப்பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டிய அவசியம் இல்லை. சும்மா இந்த ஆள் என்ன சொல்கிறான் என்று பார்ப்பதற்காக படிப்பதைப்பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை.




ஜோதிடம் ஒரு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு சைன்ஸ், அதனால் எனக்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன், நான் அதை முழுவதுமாக நம்புகிறேன், என்பவர்களும் இந்தப்பதிவை படிக்கவேண்டாம். ஏனென்றால் படித்தால், என்னைப்பற்றி தோன்றும் தாறுமாறான எண்ணங்கள், உங்களுக்கோ எனக்கோ நன்மை பயக்காது.


இந்தப்பதிவு, ஜோசியம் உண்மையாக இருக்குமோ, எவ்வளவு தூரம் நம்பலாம், எவ்வளவு பலிக்கும் அல்லது இது முற்றிலும் ஏமாற்றுக்காரர்களின் பணம் பறிக்கும் தந்திரமோ என்ற மனக்குழப்பத்தில் இருப்பவர்களுக்காகவே.


இப்படி மனக்குழப்பத்தில் இருப்பவர்களை நம்பித்தான் எல்லா அரைகுறை ஜோசியர்களும் தொழில் நடத்துகிறார்கள். பூரணமாக ஜோசியத்தில் நம்பிக்கை வைத்திருப்பவன் ஜோசியத்தை பூரணமாகக் கற்றவனைத்தெரிந்து வைத்திருப்பான். அவன் அவர்களிடம் போய்விடுவான். அந்த ஜோசியர்களும் அரைகுறை நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஜோசியம் பார்க்க மாட்டார்கள்.


மனக்குழப்பம் உள்ளவனை இந்த அரைவேக்காட்டு ஜோசியர்கள் பார்த்தவுடனே அடையாளம் கண்டு கொள்வார்கள். அவர்கள் முழிக்கும் முழி, காட்டும் தயக்கம், கூட வந்திருக்கும் ஆட்களின் பேச்சுக்கள் இவைகளை வைத்து, ஆஹா, இன்று நம் வலையில் நல்ல பட்சி மாட்டிட்டதையா என்று சந்தோஷப்பட்டு, தடபுடலாக வரவேற்பு கொடுப்பார்கள்.


முதலில் இவர்களுக்கு ஜோசியத்தில் உண்டான ஐயத்தைப்போக்க வேண்டும். அதில் இந்த ஜோசியர்கள் கை தேர்ந்தவர்கள். என்ன சொல்வார்கள் என்றால் -


"பாருங்க, லோகத்திலே ஜோசியத்தையே படிக்காமல் பொய்யாக ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். என்னைக்கூட நீங்கள் அப்படி நினைத்தால் நான் உங்களைத் தவறாக நினைக்கமாட்டேன், ஏனென்றால் இன்றைக்கு உலக்ம அப்படித்தான் இருக்கிறது. அன்றைக்குப் பாருங்கள் ......... (வந்திருப்பவர்களின் ஊருக்குப்பக்கத்து ஊர் பெரியதனக்காரர் - அவர் இவரிடம் ஜோசியம் பார்க்கவே வந்திருக்க மாட்டார், ஆனால் அவர் பெயரை இந்த ஜோசியர் எப்படியோ தெரிந்து வைத்திருப்பார்) எங்கெங்கேயோ போய் ஜோசியம் பார்த்து, பல்லாயிரம் ரூபாய்கள் செலவு செய்து பரிகாரங்கள், பூஜைகள் செய்து, பல கோயில்கள் போய் சாமி தரிசனம் எல்லாம் செய்தும் பலன் ஒன்றும் தெரியாமல் சோர்ந்து போய்,யாரோ சொல்லி, கடைசியாக என்னிடம் வந்தார்.அவருக்கு நான் சொன்ன ஜோசியத்தினால்தான் அவர் இன்றைக்கு ஓஹோன்னு இருக்கிறார். நீங்கள் அவரிடம் போய் என்னைப்பற்றி கேளுங்கள், அவருக்கு என்னுடைய ஜோசியத்தைப்பற்றி தெரியும்."


இவ்வாறு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவார். வந்தவர்கள் இவருடைய பேச்சில் மயங்கி ஆஹா, நாம் மிகச்சிறந்த ஒரு ஜோசியரிடம் வந்திருக்கிறோம் என்று நம்பி, அவரிடம் தங்கள் பிரச்சினைகள் பற்றி தேவைக்கு மேல் சொல்லி தங்கள் குடுமியை அவரிடம் கொடுத்து விடுவார்கள்.




பிறகு என்ன வழக்கம்போல் ஜாதகத்தைப்பார்த்து, ராகு கேதுவைப்பார்க்கிறான், கேது சனியைப்பார்க்கிறான், சனி உன்னைப்பார்க்கிறான், நீ என்னைப்பார்க்கிறாய், நான் உன் பர்ஸைப்பார்க்கிறேன், என்று அவனை பைத்தியம் பிடிக்குமளவிற்கு குழப்பி, அவன் பர்ஸை கணிசமாக இளைக்க வைத்து அனுப்பிவிடுவான். இவனும் ஆஹா, ஜோசியர் கெட்டிக்காரர் என்று பேசிக்கொண்டு ஊரில் போய் எல்லாரிடமும் தான் ஜோசியம் பார்த்த பிரலாபத்தைப் பீத்திக்கொள்வான்.


இன்னும் ஒரே பதிவு, ஜோசியத்தை முடித்துக் (விடுகிறேன்) கொள்கிறேன்.

10 கருத்துகள்:

  1. "இப்படி மனக்குழப்பத்தில் இருப்பவர்களை நம்பித்தான் எல்லா அரைகுறை ஜோசியர்களும் தொழில் நடத்துகிறார்கள். "
    இது எல்லாம் இருக்கட்டும் முதல்ல தமிளிஷ் வோட்டு பட்டையை உங்கள் ப்ளாக்ல வைங்க சார்(தாத்தா இப்படி அழைக்கலாமா ) நானும் உங்களுக்கு தமிளிஷ் வோட்டு போடா ரொம்ப கஷ்டமா இருக்கு

    இது கூட உங்கள் பதிவு பல பேரை சென்றடையாமல் இருக்க இது கூட காரணம் காரணம்

    ஒவ்வொரு பதிவு முடிவுலும் தமிழ்ஸ் மற்றும் தமிழ் 10 வோட்டு பட்டை இருக்குமாறு வைத்து கொள்ளவும்

    சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
  2. நன்றி அரும்பாவூர்,

    தாத்தா என்று தாராளமாக அழைக்கலாம். உண்மையில் நான் தாத்தாவாகி ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகின்றன்.

    இந்தப்பதிவிப்பட்டைகளை நான் இன்னும் வசப்படுத்த முடியவில்லை. முனைப்பு குறைவு. சரி செய்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆமாங்க, ஒரு சமயம் அந்த ஆள் அந்த ஊர் பெரிய மனிதரிடம் போய்க்கேட்டு விட்டால் ஜோசியர் குட்டு ஒடஞ்சு போகுமே?

    பதிலளிநீக்கு
  4. நம்ம ஜோசியரு ஜகஜ்ஜால கில்லாடியாச்சுங்களே, இதுக்கெல்லாம் அசந்துருவாருங்களா.

    இதப்போயி அவரு கிட்ட சொன்னா என்ன சொல்வாருன்னா-

    அய்யய்யோ, இதப்போயி அவருகிட்ட எதுக்குங்க கேட்டீங்க, அவரு எங்கிட்ட ஜோசியம் பார்க்க வந்ததை யாருகிட்டயும் சொல்லக்கூடாதுன்னு கண்டீப்பா சொல்லிட்டுப் போனாருங்களே,

    நீங்க நம்ம ஆளுன்னு நம்ம்ப்ப்பி உங்க கிட்ட சொல்லிட்டனுங்களே, நீங்க இப்படிப்போய் அவருகிட்டயே கேப்பீங்கன்னு நெனக்கலீங்களே.

    இனி நானு அவரு மூஞ்சிலே எப்படீங்க முளிக்கெறது, அய்யய்யோ, ஏனுங்க இப்படிப் பண்ணுணீங்க.

    இப்படிச்சொன்னா போதுமுங்க, வந்த ஆளுங்க ஜோசியர் காலிலெ விழாக்கொறையா மன்னிப்பு கேட்டுவிட்டு சொஞ்சம் பணமும் தட்சிணையாக்கொடுத்து விட்டு ஓடியே விடுவார்கள். ஜோசியரும் சந்தோஷமாக பணத்தை பாக்கெட்டில் போட்டுவிட்டு, இந்த மாதிரி மாங்கா மடயன்கள் நாட்டுலெ இருக்குறமட்டும் நமக்கென்ன குறை என்று அடுத்த கேஸைக் கவனிக்கப் போய்விடுவார்.

    பதிலளிநீக்கு
  5. ஜோசியருகளுக்கு இப்ப நேரம் சரி இல்லை போல, கூடிய விரைவில்
    கடைய சாத்த போறாங்க. (அந்த பொன்னாள் எப்போ)

    பதிலளிநீக்கு
  6. சைவகொத்துபுரோட்டாவுக்கு,

    நாம மாங்கா மடையன்கள் இத்தனை பேர் இருக்கிறப்போ, இந்த சாமியார்கள், சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்கள், ஜோசியர்கள், பேயோட்டுபவர்கள், பைனான்சியர்கள், நைஜீரியா நாட்டு லாட்டரிகள், இவைகளை எல்லாம் ஒழிய விட்டுவிடுவோமா?

    பதிலளிநீக்கு
  7. It is a collections of Data. Most of the things are arranged in an order /manner to explain the results whether it is favour or un favour to any individual.

    Actually it is not related with mathematics 0r astronomy in any way.

    But the "So called " Dubaakoors are pamper themselves that they are all experts or mathematical Gurus.

    பதிலளிநீக்கு
  8. முதலில் ஆஜர் ஆகோணும்
    பிறகு ஆற அமர வாசிக்கோணும்...அப்புறமா பின்னூட்டம் போடணும்

    பதிலளிநீக்கு
  9. goma said

    //முதலில் ஆஜர் ஆகோணும்
    பிறகு ஆற அமர வாசிக்கோணும்...அப்புறமா பின்னூட்டம் போடணும்//

    எங்கூர்ல சொல்வாங்க-
    ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு அப்பறம்தான் மனுசனைக்கடிக்கோணும் -
    அப்படீன்னு.

    இப்பத்தானுங்க ஆட்டைக்கடிச்சுட்டு இருக்கறனுங்க. எப்பிடியும் மனுசனைக்கடிக்கிற லெவலுக்கு வந்துருவனுங்க

    பதிலளிநீக்கு
  10. //பிறகு என்ன வழக்கம்போல் ஜாதகத்தைப்பார்த்து, ராகு கேதுவைப்பார்க்கிறான், கேது சனியைப்பார்க்கிறான், சனி உன்னைப்பார்க்கிறான், நீ என்னைப்பார்க்கிறாய், நான் உன் பர்ஸைப்பார்க்கிறேன், என்று அவனை பைத்தியம் பிடிக்குமளவிற்கு குழப்பி, அவன் பர்ஸை கணிசமாக இளைக்க வைத்து அனுப்பிவிடுவான். இவனும் ஆஹா, ஜோசியர் கெட்டிக்காரர் என்று பேசிக்கொண்டு ஊரில் போய் எல்லாரிடமும் தான் ஜோசியம் பார்த்த பிரலாபத்தைப் பீத்திக்கொள்வான்.//

    இதுதானே இப்போ அதிகம் நடக்கிறது.

    பதிலளிநீக்கு