வியாழன், 22 செப்டம்பர், 2011

ஒரு ஆண்மகன் அடிமையாகும் விதம்




மாப்பிள்ளையைக் கோயல்ல இருந்து கூட்டிக்கொண்டு வந்ததும் மணவறையில் உக்கார வைப்பாங்க. தாய் மாமன் கல்யாண மாலையைப் போடுவார். அய்யர் தயாராக இருப்பாருங்க. ஹோமம் வளர்க்க வேண்டிய சாமான்கள் எல்லாம் ரெடியாக வைத்திருப்பாரு. கொஞ்சம் பெரிய வீட்டுக்கல்யாணம் என்றால் கூட ஒரு அசிஸ்டன்டையும் கூட்டிக்கொண்டு வந்திருப்பார். மாப்பிள்ளை வந்து உக்கார்ந்ததும், சினிமாவுல வர்ற மாதிரி, “பொண்ணக்கூட்டிட்டு வாங்கோஅப்படீன்னு அய்யரு கொரல் கொடுப்பார்.

பொண்ணூட்டுக்காரங்க பொண்ணைக் கூட்டிட்டு வந்து மணவறைய வலமாச்சுத்தி வந்து பொண்ணை மாப்புள்ளக்கி வலது புறமா உக்கார வைப்பாங்க. மாப்பிள்ளைக்கு ஒரு தொணைப்பையன் கூட இருப்பானுங்க. அவன் மாப்பிள்ளைக்கு மச்சான் மொறையில இருக்கோணுமுங்க. அப்படியே பொண்ணுக்கும் ஒருத்தரு தொணையிருக்கோணுமுங்க. அது பொண்ணுக்கு அண்ணி மொறைல இருக்கோணுமுங்க.

மாப்புள்ளயும் பொண்ணும் மணவறைல உக்காந்த பின்னாடி, அய்யரு அவரோட காரியங்கள ஆரம்பிப்பாரு. அவரு அவங்க மொறைப் பிரகாரம்தான் செய்வாரு. சங்கல்பம், விநாயகர் துதி, சிவசக்தி ஆவாஹனம், கலச பூஜை, நவக்ரஹ பூஜை, அக்னி வளர்த்தல், தெய்வங்களுக்கு நைவேத்தியங்கள், பெற்றோர்களுக்கு பாத பூஜை, கன்னிகாதானம், மாங்கல்யதாரணம், அக்னி வலம் வருதல், மங்கல வாழ்த்து, சூரிய நமஸ்காரம், பெரியோர்கள் ஆசீர்வாதம், அருகுமணம் எடுத்தல் ஆகியவைகளை ஒரு ஒழுங்கு முறையோடு செய்வாங்க.
சேலம் பக்கத்தில் வேறு மாதிரியாக செய்வார்கள். அங்கு அருமைக்காரர் என்று ஒருவர் இருக்கிறாரு. அங்க அவர் வச்சதுதான் சட்டம். முந்தியெல்லாம் ஊர்ல பெரியவரு ஒருத்தரு அருமைக்காரரா இருப்பாரு. அவரு இந்த கல்யாணம் காச்சி எல்லாம் செஞ்சு வைப்பாருங்க. காசு பணம் எல்லாம் ஒண்ணும் வாங்க மாட்டாருங்க. இப்ப சில பேரு இத ஒரு வியாபாரமாவே பண்றாங்களாமுங்க. இதுக்கு ஆயிரக்கணக்குல பணமும் வாங்கறாங்கன்னு கேள்விங்க.
இந்த அருமைக்காரருக்கு அய்யரோட மந்த்ரம் மாயம் எல்லாம் ஒண்ணும் தெரியாது. சும்மா ஒரு புள்ளாரப்புடிச்சு வச்சு, தீபம் பத்தவச்சு, ஒரு கற்பூரத்த பத்தி புள்ளாரச் சுத்திக் காட்டுனார்னா பூஜை முடிந்தது. பொறவு மங்கிலியத்த கற்பூரத்த சுத்திக்காட்டி, அங்க இருக்கற பெரியவங்க எல்லார் கிட்டயும் காட்டி அவங்க ஆசீர்வாதம் செஞ்சுட்டாங்கன்னா அவ்வளவுதான். தாலிய எடுத்து மாப்பிள்ள கிட்ட கொடுத்து பொண்ணு கழுத்துல கட்டச் சொல்வாருங்க. அப்றம் நாசிவன் மங்கல வாழ்த்து படிச்சான்னா முகூர்த்தம் முடிஞ்சாச்சுங்க.
அட்சதை போடறது எல்லா இடங்களிலும் இந்துமத சம்ப்ரதாயங்களில் முக்கியமான ஒனண்ணுங்க. அரிசியை மஞ்சப்பொடியுடன் சிறிது தண்ணீர் உட்டுக் கலக்குனா மஞ்சள் அரிசி ரெடி. சிறிது காலத்திற்கு முன்னால் வரை இந்த அரிசியை மட்டும்தான் ஆசீர்வாதத்திற்கு பயன்படுத்தினார்கள். ஆனா இப்ப அரிசிகூட பலவிதமான உதிரிப்பூக்களையும் சேர்த்து அனுப்புகிறார்கள். யாராவது சிறுவர்கள் அல்லது சிறுமிகள் அல்லது பெரியவர்கள் இதை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு மணப்பந்தலுக்கு முன்னால் உக்கார்ந்து கொண்டிருக்கும் அனைவரிடமும் காட்டுவார்கள் அவர்களும் கொஞ்சம் அரிசியை, தற்போது பூவும் அரிசியும் சேர்ந்ததை, எடுத்து கையில் வைத்துக்கொண்டு, மாப்பிள்ளை பொண்ணுக்கு தாலி கட்டும்போது மணமக்கள் தலையில் போடுவதாக நினைத்துக்கொண்டு முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஆட்கள் மேல் போடுவார்கள். எப்படியோ மணமக்களை ஆசீர்வாதம் செய்த திருப்தி எல்லோருக்கும் வந்துவிடும்.
அப்புறம் வாத்தியம். எல்லாக் கல்யாணங்களிலும் நாதஸ்வர வாத்தியம் அவசியமுங்க. இரட்டைத்தவிலும் இரட்டை நாயனமும் இருந்து விட்டால் மண்டபம் ஒரே சந்தை இரைச்சல்தான். மணமகன் தாலி கட்டும்போது சகலவாத்தியம் என்று அய்யர் ஜாடை செய்வாருங்க. உடனே வாத்தியக்காரர்கள் உச்சகட்ட கதியில் மண்டபமே இடிந்து விடுவது போல சப்த ஜாலங்கள் செய்வார்கள். அப்புறம் நாசிவன் மங்கலவாழ்த்து பாடும்போது ஒற்றை தவில் மட்டும், நாசிவன் ஒவ்வொரு அடி பாடி நிறுத்தும்போதும், “டும்என்று ஒரு ஒத்தை அடி அடிக்கவேண்டும். இதுக்கு கொட்டுத்தட்டுதல் என்று பெயர். இது எல்லா வாத்தியக்காரர்களுக்கும் தெரியும். ஆனாலும் தெரியாதமாதிரி பாவனை பண்ணிக்கொண்டு உக்காந்திட்டிருப்பானுங்க. யாராச்சும் போய் ஒரு சவுண்ட் உட்டாத்தான் அப்புறம் வேண்டா வெறுப்பாக இந்தக்காரியத்தைச் செய்வார்கள். நியாயமாக தவில்காரன் எழுந்து வந்து நாசிவன் பக்கத்துல நின்னு இந்த ஒத்தை அடி அடிக்கவேண்டும். கல்யாணக்காரர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ளாவிட்டால் அவன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே கொட்டுத்தட்டுவான். பெரிய மண்டபமாக இருந்தால் நாசிவன் நிறுத்தும்போது இவன் கொட்டுத்தட்ட மாட்டான். தாளகதி மாத்தி தட்டுவான். இதெல்லாம் அவனுங்க வேணும்னே செய்யற குசும்புங்க. அவனுக கிட்ட மொதல்லயே, ரேட் பேசறப்பவே இதையெல்லாம் கண்டிப்பா சொல்லிப்போடோனுமுங்க.
இப்பிடி ரெண்டு விதமா முகூர்த்தம் நடந்தாலும் நாசிவன் மங்கலவாழ்த்து சொல்றது ரொம்ப முக்கியமுங்க. பொண்ணோட தம்பி இல்லைன்னா தம்பி மொறைல ஒரு பையனைக் கூட்டி வந்து அவனுக்கு தலைப்பா கட்டி, (ஒடனே திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணிக் கடைக்குப் போயிடாதீங்க) மாலை போட்டு மாப்புள்ளைக்கு முன்னாடி ஒரு சேர்ல உக்கார வைப்பாங்க. மாப்பிள்ளைக்கும் இந்தப்பையனுக்கும் நடுவில ஒரு ஸடூல்ல போட்டு அது மேல ஒரு பராத்தட்டத்தில நெறய அரிசி போட்டு வைப்பாங்க. மாப்புள்ளயோட ரெண்டு கையையும் இந்தப் பொண்ணோட தம்பியின் ரெண்டு கையையும் கோத்து அந்த அரிசிக்குள்ள வச்சுடுவாங்க. இப்படி கைகளை வைக்கறதுக்கு முன்னாடி நாசிவன் ரெண்டு பேரோட கைவிரல்களிலும் நெட்டி எடுத்து வுடுவானுங்க.
பொறவு நாசிவனுக்கு அய்யரு நாலு வெத்தல எடுத்து அதுல கொஞ்சம் மஞ்சளரிசியை வச்சு கொடுப்பாருங்க. அதுதான் நாசிவனுக்கு மங்கல வாழ்த்து சொல்றதுக்கு பர்மிசன். இந்த மங்கல வாழ்த்துப்பாட்டு எல்லாத்துக்கும் மனப்பாடமா தெரியாதுங்க. அதனால நாங்க என்ன பண்ணுனோமின்னா, எங்க ஊர்ல மங்கல வாழ்த்த நல்லா சொல்லக்கூடிய ஒரு நாசுவனப்புடிச்சு இந்த மங்கலவாழ்த்தை பாடச்சொல்லி ரெக்கார்டு பண்ணி சி.டியா போட்டுட்டோமுங்க. அத முழுசாக் கேக்கோணுமுங்க. நான் கல்யாணத்தப் பத்தி எழுதறதயெல்லாம் அந்தப் பாட்டுல சொல்லியிருக்குங்க. இந்தப்பாட்டு கம்ப நாட்டாழ்வார் எங்களுக்காகப் பாடிக்கொடுத்ததுன்னு சொல்வாங்க.
இப்படியாக முகூர்த்தம் முடிந்ததும் எல்லாரும் டிபன் சாப்பிடப்போவாங்க. நாமுளும் போய் டிபன் சாப்புட்டுட்டு வந்து மேக்கொண்டு காரியங்களைக் கவனிக்கலாமுங்க.
தொடரும்

13 கருத்துகள்:

  1. கலியாண வீட்டு நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாகவும், ஒவ்வோர் சம்பவங்களிற்கேற்ற விளக்கங்களோடும் எழுதியிருக்கிறீங்க.

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. பாதி விஷயம் தெரியாம , ஆளாளுக்கு இப்படி பண்ணனும் அப்படி பண்ணனுமுன்னு , கொடுமை பண்றத
    விட்டுடீங்க!


    சூர்யா படத்தில் விஜய் வில்லன் ?


    காஞ்சனா பார்ட் 3 - ரஜினி நடிக்க மறுப்பு

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  4. மணவிழாவை பற்றி அருமையாக பதிவு செய்துள்ளீர் பேராசிரியரே. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //ஒரு ஆண்மகன் அடிமையாகும் விதம் //
    அடிமை ஆவதற்க்கா இவ்வளவு ஏற்பாடு? இதெல்லாம் செய்யாவிட்டாலும் கடைசியில் அடிமை தானே ஆகிறான்.

    பதிலளிநீக்கு
  6. //நிரூபன் said...
    கலியாண வீட்டு நிகழ்வுகளைச் சுவாரஸ்யமாகவும், ஒவ்வோர் சம்பவங்களிற்கேற்ற விளக்கங்களோடும் எழுதியிருக்கிறீங்க.

    ரசித்தேன்.//

    வாங்க, நிரூபன். கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பார்ப்பானை 'அவரு இவருன்னு'ட்டு தவில்காரரை 'அவன் இவன்'ன்னு சொல்றதுல இருந்து உங்க வழக்கம் நல்லா விளங்குதுங்க...

    பதிலளிநீக்கு
  8. //Malarvannan said...
    பார்ப்பானை 'அவரு இவருன்னு'ட்டு தவில்காரரை 'அவன் இவன்'ன்னு சொல்றதுல இருந்து உங்க வழக்கம் நல்லா விளங்குதுங்க...//

    தவறுக்கு வருந்துகிறேன். பழக்க தோஷம் சீக்கிரம் விலகுவதில்லை.

    பதிலளிநீக்கு
  9. //பார்ப்பானை 'அவரு இவருன்னு'ட்டு தவில்காரரை 'அவன் இவன்'ன்னு சொல்றதுல இருந்து உங்க வழக்கம் நல்லா விளங்குதுங்க... //




    அவர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களைத் திருத்தும் நோக்கோடு கற்றவர்கள் கூறும் அறிவுரைகளை எந்நாளும் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் மரபணுக்களின் குணம் அவர்களை இவ்வாறு ஆக்கியிருக்கிறது. நல்ல பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கும் விதைகள்தான் முளைத்து, வளர்ந்து பலன் கொடுக்கும். கட்டாந்தரையில் விதைக்கும் விதைகள் முளைக்க மாட்டாது.

    பதிலளிநீக்கு
  10. திரு.anonymous ,, இந்த பெயரில் எழுதும் தங்களின் மரபணு குணம் எங்களுக்கு புரிந்தது....

    எங்கள் ஊரில் இந்த மாதிரி குணத்திற்கு வேறு ஒரு பெயர் இருக்கு....ஆனா வேண்டாம்...

    பதிலளிநீக்கு
  11. Sir, i truly enjoy your description of the kounder style weddings. Please keep them coming. Also write about other kounder sambradayangal. I particularly found your piece on the peaceful and simple lives of farmers a century ago and the relationship between ejamarnars and kudiyanavan very interesting.

    Your vasagi from florida USA

    பதிலளிநீக்கு