வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பதிவுலக நிதர்சனங்களும், என் வயிற்றெரிச்சலும்பதிவுகளில் எதைப்பற்றி எழுதலாம் என்பதற்கு எந்த வரைமுறைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படி எழுதவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. யாரும் யாரைப் பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது என்கிற நடைமுறை ஒழுங்கெல்லாம் பதிவுலகில் தேவையில்லை.

அவரவர்களுக்குத் தோன்றியதை எழுதலாம். கூகுளாண்டவர் இந்த சுதந்திரத்தை எல்லாப் பதிவர்களுக்கும் வரமருளியிருக்கிறார். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், பதிவின் தலைப்பு பார்ப்பவர்களின் கவனத்தை சுண்டி ஈர்த்து பதிவுக்குள் கொண்டு வரவேண்டும். அவ்வளவுதான். தலைப்புக்கும் பதிவில் எழுதியிருப்பதற்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய சட்டம் ஒன்றுமில்லை. தலைப்பு எவ்வளவு கேவலமாக இருக்கிறதோ அந்த அளவு பதிவின் ஹிட்ஸ் கூடும்.


அவதூறு பதிவுகள் போட்டால், அதைப்பற்றி யாரும் வெட்கப்படத் தேவையில்லை. பூக்காரி பதிவை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்தப் பதிவை படிக்காதவர்கள் அபாக்கியசாலிகள். அத்தகைய பதிவுகள் உங்கள் பதிவுகளுக்கு நல்ல விளம்பரமாக அமையும். எதிர்ப்புகள் அதிகமாக வந்தால் ஒரு மன்னிப்பு பதிவு போட்டுவிட்டால் மேட்டர் முடிந்து விடும்.

பதிவுகளினால் சமூகத்திற்கு என்ன நன்மை என்று அடிக்கடி சில மேதாவிகள் கேட்பதுண்டு. இது ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக கேட்கப்படும் கேள்விதானே தவிர இதற்கு யாரும் பதிலை எதிர்பார்ப்பதில்லை. பதில் சொல்வாரும் இல்லை.

ஆக மொத்தம் பதிவுகள் எதற்காக எழுதப்படுகின்றன என்று சுருக்கமாகச் சொல்லப்போனால் அவரவர்கள் பெருமை கொள்வதற்காகத்தான். நான் இவ்வளவு பதிவுகள் போட்டிருக்கிறேன், இத்தனை ஹிட்ஸ், etc. etc. என்று அவ்வப்போது அவர்கள் பதிவிலேயே போட்டுக்கொள்வார்கள். இது போக இந்தப் பதிவர்களை ஊக்கப்படுத்தவென்றே சில பதிவுகள் இருக்கின்றன. அவர்கள் இன்னாருடைய பதிவில் சமுதாய சீர்திருத்த சிந்தனைகள் கொட்டிக்கிடக்கின்றன, தேவையானவர்கள் போய் அள்ளிக்கொள்ளலாம் என்கிற மாதிரி எழுதுவார்கள். எல்லாம் இலவசம்தான்.

அபூர்வமாக நல்ல கருத்துகள் அல்லது பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட பதிவுகளும் இருக்கின்றன. அவைகளை எழுதுபவர்களும் படிப்பவர்களும் என்னைப் போன்ற, “காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது” மாதிரி ஆட்கள்தான். மக்களை எப்படியும் ஆண்டவன் அருளுக்கு ஆளாக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆன்மீகப் பதிவுகள் சிலர் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு அருள் மழையை தாங்கும் சக்தியை ஆண்டவன்தான் கொடுக்கவேண்டும்.

கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்த யார் வேண்டுமானாலும் பதிவு போடலாம். கம்ப்யூட்டர்கள் அவரவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வேலை செய்யும் ஆபீசில் இருந்தால் போதும். எப்படிப் பதிவுகள் ஆரம்பிப்பது என்பதற்கே பல பதிவுகள் போடப்படுகின்றன. தினம் மூன்று பதிவுகள் போடும் பதிவர்களிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒரு பதிவு போடுபவர்கள் வரை பல தரப்பட்ட பதிவர்கள் இருக்கிறார்கள். பதிவு போடுவதோடு நின்று விடாமல் கிடைத்த ஈமெயில் விலாசங்களுக்கெல்லாம் மெயில் தவறாது அனுப்புபவர்களும் உண்டு. யாம் பெற்ற இன்பம் (துன்பம்) எல்லோரும் பெறவேண்டும் என்கிற பரந்த மனப்பான்மை. அதுதான் ஏகப்பட்ட திரட்டிகள் இருக்கின்றனவே! அப்புறம் எதற்கு இந்த வாதனை?

தமிழில் பதிவு எழுதுவதில் ஒரு பெரிய சௌகரியம் என்னவென்றால் தமிழ் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படிப்பட்ட தப்புகளையும் செய்யலாம். தமிழாசிரியர் படித்தால் தூக்குப்போட்டுக் கொள்ள (கொல்ல)  வைக்கும் அளவுக்கும் எழுதலாம். கேட்பார் யாருமில்லை.

பதிவுகளுக்கு நீள, அகல வரம்புகள் எதுவுமில்லை. நாலு வரி கவிதையும் போடலாம். நாற்பது பக்கம் கட்டுரையும் எழுதலாம். அப்படி எழுத ஒரு தனி அலுவலகம் வேண்டும். கூட, அத்தகைய பதிவுகளில் வரும் போட்டோக்களை எடுப்பதற்கு ஒரு தனி போட்டோகிராபி டீமே வேண்டும். இந்தப் பதிவுகளினால் என்ன வருமானம் வந்து, அலுவலர்களுக்கு எப்படி சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகிறது என்பதைப்பற்றி யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும். அப்படியே மொக்கைப் பதிவு போட்டாலும் முந்நூறு பின்னூட்டங்கள் வரவழைப்பது எப்படி என்பது போன்ற டிப்ஸ்களும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஏன் இப்படி திடீரென்று ஞானோதயம் வந்தது என்றால், இத்தகைய பதிவுகளுக்குத்தான் மவுசு கூடுகிறதே தவிர, என்னை மாதிரி நல்ல, தரமான, ஆழ்ந்த கருத்துகளுடன் எழுதும் பதிவுகளை சீந்துவாரைக் காணோம். அந்த வயிற்றெரிச்சல்தானே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. அப்படி யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அமிர்தாஞ்சனம் வாங்கி தடவுங்கள். சரியாகப் போய்விடும்.
42 கருத்துகள்:

 1. உலகத்தோ டொற்ற வொழுகல் பலகற்றும்
  கல்லார் அறிவிலாதார். குறள்.

  ஒரே மாதிரி பதிவுகள் போட்ட போரடிச்சுடும். அதுக்காகத்தான் இப்படி, ஹிஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 2. தேவைப்படுபவர்களுக்காக - பூக்காரி லிங்க்:

  http://www.vinavu.com/wp-content/uploads/2010/05/pookari-narsim.pdf

  பதிலளிநீக்கு
 3. :) என்ன ஆச்சு ஐயா ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள், நீங்கள் குறிப்பிடுவது பதிவர்களுக்கு துவக்கத்தில் இருக்கும் ஆர்வமாகக் கூட இருக்கும், எனக்கு தெரிந்து 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக மொக்கையாக எழுதித் தள்ளுபவர்கள் எவரும் இல்லை, நாளடைவில் மா(ற்)றிக் கொள்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஏய்ன்யா டாக்டரு.

  நீங்க மட்டும் ஒங்களுக்குத் தெரிந்த டாக்டரு வேலையப் பத்தி எழுதாம நேரத்த வீணடிக்கிறீங்களே.

  பதிலளிநீக்கு
 5. அருமை அய்யா,
  பதிவுலக்ம் கூட வாழும் உலகின் பிரதிபலிப்புதான்.நல்லது கெட்டது எதுவும் நடக்கும்.இதுவும் இயல்பாக்வே என்க்கு தெரிகிறது.நன்றி

  பதிலளிநீக்கு
 6. கோவி.கண்ணன் said..
  //எனக்கு தெரிந்து 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக மொக்கையாக எழுதித் தள்ளுபவர்கள் எவரும் இல்லை,//

  மொக்கையை விடுங்கள் கண்ணன், 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதுபவர்களே மிக மிக குறைவு என்பது என் கணிப்பு. இரண்டு வருடங்களில் காணாமல் போகிறவர்களே அதிகம்.

  பதிலளிநீக்கு
 7. பெருமளவிற்கு உண்மை. இந்த கூட்டத்தில் நானில்லை என்று என்னளவிற்கு ஒரு ஆறுதல்.

  அதிலும், சுண்டி இழுக்கும் தலைப்புகள் பெரும்பாலும் வெற்று தான்!

  பதிலளிநீக்கு
 8. //தமிழில் பதிவு எழுதுவதில் ஒரு பெரிய சௌகரியம் என்னவென்றால் தமிழ் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படிப்பட்ட தப்புகளையும் செய்யலாம். .... படித்தால் தூக்குப்போட்டுக் கொள்ள (கொல்ல) வைக்கும் அளவுக்கும் எழுதலாம். கேட்பார் யாருமில்லை.// சரியா சொன்னீங்க .

  பதிலளிநீக்கு
 9. ஒரே வார்த்தையில் சொல்லட்டுமா?
  உங்களைப் போன்ற சிலருக்கு வயிற்றெரிச்சல் - அவ்வளவுதான்! :-))

  பதிலளிநீக்கு
 10. //தலைப்பு எவ்வளவு கேவலமாக இருக்கிறதோ அந்த அளவு பதிவின் ஹிட்ஸ் கூடும்//

  அப்படியொன்று அவசியமில்லை: "பதிவுலக நிதர்சனங்களும், என் வயிற்றெரிச்சலும்" என்று தலைப்பிட்டாலே போதும் ஐயா! ஏதோ பஞ்சாயத்து போலிருக்கிறது என்று வாசிக்க வருவார்கள்! :-)

  //நான் இவ்வளவு பதிவுகள் போட்டிருக்கிறேன், இத்தனை ஹிட்ஸ், etc. etc. என்று அவ்வப்போது அவர்கள் பதிவிலேயே போட்டுக்கொள்வார்கள்.//

  கூந்தல் இருக்கிற ராசாத்தி கொண்டை போடுகிறாள்! :-)

  என்ன தவறு கண்டீர்கள்? யாரும் காசுபணத்துக்காக பதிவு எழுத வரவில்லை. தங்களது பதிவு குறித்த புள்ளி விபரங்களை தந்தால், ஏன் பலருக்கு ஜுரம் வருகிறது?

  //அவைகளை எழுதுபவர்களும் படிப்பவர்களும் என்னைப் போன்ற, “காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது” மாதிரி ஆட்கள்தான்.//

  ஓஹோ! அப்படியென்றால் உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் மிகவும் மோசமான இடுகைகளை எழுதுகிறார்களாமா? இதைச் சொல்வதற்கா இவ்வளவு சுற்றி வளைக்கிறீர்கள்? :-)))))))))

  வலைச்சரம் போய்ப்பாருங்கள்! உங்களது கருத்து பொய் என்று உணர்வீர்கள். இளைஞர்கள் தான் அதிகம் மெனக்கெட்டு இலக்கியம், அரசியல், சமகால நிகழ்வுகள் என்று பட்டை கிளப்புகிறார்கள்.

  //ஏன் இப்படி திடீரென்று ஞானோதயம் வந்தது என்றால், இத்தகைய பதிவுகளுக்குத்தான் மவுசு கூடுகிறதே தவிர, என்னை மாதிரி நல்ல, தரமான, ஆழ்ந்த கருத்துகளுடன் எழுதும் பதிவுகளை சீந்துவாரைக் காணோம்//

  உங்கள் பதிவோ யார் பதிவோ, அது தரமாகவும் ஆழ்ந்த கருத்துக்களுடன் இருக்கிறதா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. எனது இடுகைகளுக்கு வரவேற்பு இல்லை என்பதற்காக, மற்ற பதிவர்களின் முயற்சியை நான் மட்டம் தட்ட மாட்டேன். (நான் மற்றவர்களுக்காகப் பேச முடியாது அல்லவா?)

  நீங்களோ நானோ, ஒரு இடுகை எழுதினால் நூறு பேரையாவது சென்றடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சிலருக்கு அந்த எண்ணிக்கை மாறுபடலாம். குமுதம் வாசிக்கிறவன் ஏன் கலைமகள் வாசிப்பதில்லை என்று கேட்க முடியாது. அவரவர் ரசனைக்குத் தகுந்தவாறு எழுதுவார்கள்; வாசிப்பார்கள். அவ்வளவு தான்.

  பதிவர்களைக் குறித்து ஆயாசப்படுகிறவர்கள், தங்களது எதிர்பார்ப்புகள் என்ன என்று தெளிவாக எழுதுவதில்லை. பொத்தம்பொதுவாக, என்னைத் தவிர மற்ற பதிவர்கள் அனைவரும் சுத்த வேஸ்ட் என்ற ரீதியிலேயே எழுதுகிறார்கள். அதை இந்த இடுகையும் நிரூபித்திருக்கிறது.

  இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க! :-))))))))))))

  பதிலளிநீக்கு
 11. அய்யா....உங்க அளவுக்கு தமிழ் ஞானம் எனக்கில்லை...அதனாலத்தனோ என்னவோ என் பதிவுகளில் தமிழ் அப்படி இருக்கிறது...என்னை பொறுத்தவரை வாழ்கையின் ஒவ்வொரு நொடியும் நாம் அனுபவிக்கவே கொடுக்கப்பட்டது என்பதாலே நான் பதிவுலகில் இன்னும் இருக்கிறேன்...இவை என் தாழ்மையான கருத்துக்கள் அவ்வளவே!

  பதிலளிநீக்கு
 12. முக்கியமா அடுத்தவர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய தாங்கள் பின்னூட்டப்பெட்டியை திறந்ததற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. புதிய விடயங்களோடு, ஆரோக்கியமான பதிவுலகிற்குத் தேவையான கருத்துக்களையும் சொல்லியிருக்கிறீங்க, நன்றி தலைவா.

  பதிலளிநீக்கு
 14. மக்களின் மன அலைகள் சாமியின் மன அலைகள் போல அல்ல. அதனால் தான் உங்களை போன்று ஆழ்ந்த சிந்தனையுள்ள கருத்துக்களையுடைய பதிவுகளை மக்கள் படிப்பதில்லை என நினைக்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 15. //சேட்டைக்காரன் said...
  ஒரே வார்த்தையில் சொல்லட்டுமா?
  உங்களைப் போன்ற சிலருக்கு வயிற்றெரிச்சல் - அவ்வளவுதான்! :-))//

  அதெப்படீங்க, இவ்வளவு பெரிய உண்மையை இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சுட்டீங்க!

  பதிலளிநீக்கு
 16. //அதெப்படீங்க, இவ்வளவு பெரிய உண்மையை இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சுட்டீங்க! //

  தலைப்பு நீங்கதானே போட்டிருக்கீங்க? :-)

  பதிலளிநீக்கு
 17. //மனதாவது புண்பட்டிருந்தால் அமிர்தாஞ்சனம் வாங்கி தடவுங்கள். சரியாகப் போய்விடும்.//

  a wonderful sujatha style line

  பதிலளிநீக்கு
 18. பழையன கழிதலும் புதியன புகுதலும்....

  நெல்லை சந்திப்புல எக்காரணத்தை முன்னிட்டும் கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் பண்ண மாட்டேன்னீங்க.. இப்போ ஓப்பன் பண்ணீ இருக்கீங்க.. இது போல மாற்றங்கள் மாற்றம் பெறுவது தவிர்க்க முடியாது

  பதிலளிநீக்கு
 19. எனக்கு தெரிஞ்சு இட்லிவடை தான் ரொம்ப காலமா எழுதுறார்(கள்).

  ஏன் காணாமல் போகிறார்கள்?
  நான் கொஞ்ச வருசம் எதுவும் கிறுக்காம இப்போ திரும்பி கிறுக்க வந்து இருக்கேன். காரணம் வேலை அதிகம். பதிவு எழுதுறது ஒரு பொழுதுபோக்கு தான். ஹிட்ஸ் வச்சி சம்பாதிக்க எல்லாம் நேரம் இல்லை.

  பதிலளிநீக்கு
 20. நீங்கள் எழுதியுள்ள விசயங்கள் பல ஒத்துக் கொள்ளக்கூடியது. நானும் இதே போலத்தான் பதிவுலகத்தை முதன் முதலாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த போது படித்த போது ஆச்சரியமாக இருந்தது. அடா எப்படி இத்தனை நாளும் இந்த உலகத்தை தவறவிட்டோம் என்று ஆயாசமாக இருந்தது. ஆனால் எப்படி பின்னூட்டமிடுவது என்று கூட புரியவில்லை.

  ஆனால் இந்த வலை உலகில் நாள் ஆச்சரியப்படுவது என்னவென்றால் நாம் பதிவிட்ட சில நொடிகளில் எப்படித்தான் தெரியுமோ?

  தலைப்பைப் பார்த்து அல்லது தொடர்ச்சியாக படிப்பவர்கள், தேடுதலுடன் இருப்பவர்கள் என்று ஒரு படை பட்டாளமே உள்ளே வந்த கொண்டிருப்பதை அவர்கள் எதன் மூலம் வருகின்றார்கள் என்பதை பார்ப்பதே ஒரு நல்ல பொழுது போக்கு மற்றும் ஆச்சரியம்.

  மற்றபடி ஓட்டு, பின்னூட்ட எண்ணிக்கையை தொடக்கம் முதலே நான் கவனித்தது இல்லை. காரணம் சில சமயம் உணர்ந்து நாம் எழுதியதை நாம் மனதில் உள்ளதைப் போல விமர்சனம் மூலம் நமக்கு புரிய வைத்து இன்ப அதிர்ச்சியை கொடுப்பவர்களைப் பார்த்து பல முறை வியந்துள்ளேன். குறிப்பாக கூகுள் தளத்தில் எந்த வார்த்தையை தேடும் போது நாம் தளத்திற்கு அந்த வார்த்தைகள் அழைத்து வந்தது என்பதை கவனிக்கும் போது அடுத்த ஆச்சரியம் காத்திருக்கும்.

  ஆக மொத்தம் நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தைகளும் முக்கியம். அந்த வார்த்தைகள் கூகுள் கடலில் ஏதோவொரு இடத்தில் முத்தாக சிப்பியாக, சங்காக இருக்கிறது என்பதே நிதர்சனம். எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்கள் எதை குறித்தோ தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த கூகுள் என்ற வரப்பிரசாதம் வழிகாட்டியாய் இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கும் போது இந்த வலை உலகில் ஒரு காதலே பிறக்கின்றது.

  நான் பல தளங்களை பார்த்துள்ளேன். நம்மை விட சிறப்பாக ஒரு தேர்ந்த சிற்பி போல எழுத்து நடையை காட்டியிருப்பார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல காற்றாடிக் கொண்டிருக்கும். பல சரித்திர குறிப்புகளை அவர்களை அறியாமல் தானம் போலவே வழங்கியிருக்கிறார்கள் என்பதே கண்கூடு.

  மற்றபடி தொடர்ச்சியாக வெகு ஜன வாரப்பத்திரிக்கைகளை இப்போது என்னால் படிக்க முடியவில்லை. வலைதளத்தில் காப்பி பேஸ்ட் பதிவுகளை அந்த குறையையும் நீக்கி விடுகின்றது. மற்றபடி நக்கல் நையாண்டி பல சமயம் சிரிக்க வைக்கின்றது. என் பார்வையில் மொக்கை என்பது எதுவுமில்லை. நாம் உள்வாங்கிக் கொண்டிருப்பதைப் பொறுத்து தான் மாறுபடிகின்றது. வேண்டாம் என்றால் அந்த பக்கம் போகவே தேவையில்லை. மற்றபடி ஹிட்ஸ் போன்ற சமாச்சாரங்கள் என்னைப் பொறுத்தவரையிலும் கிளுகிளுப்பு சமாச்சாரங்கள். அவர்களுக்கு பிடிக்கின்றது. அனுபவித்து விட்டு போகட்டுமே?

  யார் தான் பாராட்டுகளை விரும்பாதவர்கள் இருக்கிறார்கள். நீங்க தாராபுரத்தான், சென்னைபித்தன் போன்றவர்கள் கூட இந்த வயதில் உருப்படியாக நேரத்தை செலவளிக்க உதவும் இந்த வலைப்பதிவுகள் செய்யும் பணி மகத்தானது தானே.

  வலைதளங்களை விடுங்க. யூ டியுப், செய்தி பத்திரிக்கைகள், தனி இதழ்கள், விரும்பிய மற்ற சமாச்சாரக்ஙள என்று எல்லாவகையிலும் பார்த்தாலும் கூட ரிமோட் போல நாம் பய்ன்படுத்திக் கொள்வதைப் பொறுத்து தான்.

  நல்லதை தேடுங்க. நல்ல விசயங்கள் கண்களுக்கு தென்படும்.

  ஏறக்குறைய இதுவொரு பயிற்சிக்களம். பயன்படுத்திக் கொள்வதைப் பொறுத்து தான். வெகுஜன பத்திரிக்கைகள் திரித்துக் கூறுவதை ஆதாரப்பூர்வமாக அங்கங்கே வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் மூலம் ஈழம் தொடர்பாக பல விசயங்களை நான் புரிந்து கொண்டேதே இந்த வலைபதிவுகள் மூலம் தான்.

  கண்ணன் சொன்னது போல தொடக்கத்தில் ஆர்வக்கோளாறு. அப்புறம் ஆர்வத்தை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்பவர்கள பத்திரிக்கை வரைக்கும் பயணித்து விடுகிறார்கள்.

  பாருங்க பெரிதாக வந்து விட்டது. நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 21. உங்கள் பதிவில் ஒரு லிங்க் பார்த்து அதிர்ந்து போனேன். சிலவற்றை எழுது முன் நீங்கள் கொஞ்சம் நிதானித்து எழுதலாம். யாரையாவது சப்போர்ட் பண்ண நினைத்து பலரை நீங்கள் தாக்குதலுக்குள்ளாக்குவதாக எனக்கு தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 22. உங்கள் ஆதங்கம் புரிகிறது...எதற்கு எழுதுகிறேன் என்று உங்களையே கேளுங்கள்...விடை கிடைக்கும்....

  பதிலளிநீக்கு
 23. உங்களுடைய பல கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன். ஆனால் சில பதிவர்களின்மேல் லேசான எரிச்சல் தென்படுகிறதே அது ஏன்? தங்களைப் போன்றவர்களுக்கு அது தேவை இல்லையே! தமிழைத் தவறாக எழுதுகிறார்கள் என்பது மனதை வருத்துகிற ஒரு விஷயம்தான். அவர்களுடைய எழுதும் ஆர்வத்தைப் பாராட்டலாம். ஆனால் கொஞ்சம்கூட எவ்வித முயற்சிகளும் இல்லாமல் கண்டபடி மொழிக்கொலைப் புரிவதை தவிர்த்தால் நல்லது.
  கவர்ந்திழுக்கும் தலைப்புக்களால் ஒரு பயனும் இல்லை. அப்படியே எல்லாரையும் இழுத்துப் படிக்கவைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் சிலர் தலைப்பு வைத்திருப்பார்கள். அந்தத் தலைப்புக்களே அவர்களின் எழுத்தைக் காட்டிக்கொடுத்துவிடும். அந்தப் பதிவுகளை சுலபமாகக் கடந்து சென்றுவிடுவேன்.

  பதிலளிநீக்கு
 24. சகோ.Dr.P.Kandaswamy,PhD., அவர்களே...

  பதிவை படித்துவிட்டு எனது கருத்துக்களை நிறைய நிறைய பக்கம் பக்கமாக பகிறலாம் எனத்தான் வந்தேன்.

  ஆனால், தங்களின் முதல் பின்னூட்டம் பல விஷயங்களைஎழுதவிடாமல் தேவையற்றதாக்கி என்னை தடுத்து விட்டது.

  :-)

  உங்களின் விமர்சனம் என்னவோ இப்பதிவுக்கும் அம்சமாக பொருந்திப்போகிகிறது..!

  :-)


  தங்கள் வலைப்பூவின் Popular posts-இல் இப்போது இப்பதிவுதான் முதலிடம்.

  சாதித்து விட்டீர்கள் டாக்டர்.
  வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு
 25. ***பதிவுகளுக்கு நீள, அகல வரம்புகள் எதுவுமில்லை. நாலு வரி கவிதையும் போடலாம். நாற்பது பக்கம் கட்டுரையும் எழுதலாம். அப்படி எழுத ஒரு தனி அலுவலகம் வேண்டும். கூட, அத்தகைய பதிவுகளில் வரும் போட்டோக்களை எடுப்பதற்கு ஒரு தனி போட்டோகிராபி டீமே வேண்டும். இந்தப் பதிவுகளினால் என்ன வருமானம் வந்து, அலுவலர்களுக்கு எப்படி சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகிறது என்பதைப்பற்றி யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்***

  வர வர ரொம்ப நல்லாத்தான் எழுதுறீங்க நீங்க!

  அதுமாதிரி மொக்கைப்பதிவுக்கு கவர்ச்சியா "பதிவுலகில் ஆபாசப் பதிவர் மனைவி கோபித்துக்கொண்டாள்"னு ஒரு டைட்டில் கொடுங்கனு சொல்ல மறந்துட்டீங்க!

  பதிலளிநீக்கு
 26. நான் கவிதை சொன்னதுக்கு நீங்க பொழிப்புரை சொல்றீங்களாக்கும்:)

  http://parvaiyil.blogspot.com/2011/08/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 28. சில நியாயமான கோபங்கள். எனக்கும் இந்த சுண்டி இழுக்கும் தலைப்பைப் போட்டுவிட்டு உள்ளே சம்பந்தமில்லாமல் எழுதும் கருமாயத்தைப் பார்த்தால் வாந்தி வருகிறது. அப்படி எழுதும் ஆட்களை அடையாளம் கண்டு கொண்டால் அதன் பின்பு அவர்கள் என்ன எழுதினாலும் திரும்பிப் பார்ப்பதில்லை. அதுதான் நம் உடல் நலத்துக்கு நல்லது.

  சில கோபங்களுக்கு மருந்தில்லை. நம் எழுத்தை வாசிப்போருக்குப் பிடிக்காவிட்டால் அப்படியே விட்டு விடுவதுதான் நல்லது. அவர்களுக்குப் பிடிக்க வில்லையே என்று வருத்தப் பட்டால் அவர்களுக்குப் பிடிக்கிற மாதிரி எழுத முயல்வோம். அவர்களுக்காக எழுத முயன்றால் நம் நடை மாறும். எழுது பொருளும் கூட மாற நேரிடும். கூட்டம் வேண்டும் என்றால் அதைச் செய்துதான் ஆக வேண்டும்.

  நம் எழுத்தில்தான் தரம் இருக்கிறது என்று நம்பினால் அப்படியே தொடர்வதே நல்லது. ஆனால் கூட்டம் வராது. நம் எழுத்தை எல்லோருக்கும் பிடிக்க வைப்பது சிரமம். இதில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை - எப்போதாவது ஒருநாள் உட்கார்ந்து யோசிக்கையில் கோபம் வரும். யாருமே இல்லாத கடையில் எதற்கு இப்படி ஆற்றிக் கொண்டிருக்கிறோம் என்று. அப்படியே போனால் தொடர்ந்து எழுதுவதற்கு உந்துதலும் ஆர்வமும் கூட இல்லாமல் போகும் அபாயம் நேரலாம். அந்த வெறுமையை வெல்ல முடிந்தவர்கள்தாம் நல்ல எழுத்தைத் தொடர்ந்து கொடுக்க முடிந்தவர்கள். ஆழ்ந்த எழுத்துக்களைக் கொடுக்க முடிந்தவர்களைப் போலவே ஆழ்ந்த வாசிப்புக் கொண்டோரும் மிகக் குறைவு. நாள் முழுக்க ஆழ்ந்த வேலைகள் செய்து விட்டு, அவசர அவசரமாக ஏதாவது கொறிக்க வருபவர்கள் நிறைய இருக்கிறோம். வாசிப்பையும் ஆழ்ந்து போய்ச் செய்வது எங்கள் மன உளைச்சளைத்தான் கூட்டும். எனவே, எங்கள் சுவையைக் கண்டு கொள்ளாமல் போய் விடுங்கள். :)

  இரண்டையும் கலத்தல் ஒரு விதம். கூட்டம் சேர்க்கக் கொஞ்சம்; தன் மன திருப்திக்குக் கொஞ்சம் என்று எழுதுவோர். அதில் ஒரு சிக்கல் - எல்லோருமே, "இந்த ஆள் ஒன்னு உருப்படியா எழுதுனான்னா அடுத்தது (அல்லது அடுத்த ஐந்து) கண்டிப்பா விளங்காது!" என்பார்கள். :)

  பதிலளிநீக்கு
 29. தீவிர வாசிப்பாளர்களும் பதிவுகளைப் பார்வையிடுகிறார்கள் என்றே நினைக்கின்றேன்.ஆனால் தீவிர வாசிப்பை மெல்லிய நகைச்சுவை கூடிய பதிவுகள் முந்திக்கொள்கின்றன என்பதும் இருக்கும் சூழல்களில் ரிலாக்ஸ் செய்துகொள்ளும் தளமாகவே பெரும்பாலும் பதிவுகள் இருக்கின்றன.அது தவிர்க்க முடியாத ஒன்றே.கூடவே சமூகப் பிரச்சினைகளும் கூட இங்கே அலசப்படவும் செய்கின்றன.எப்படியோ நடப்பு காலத்தில் பதிவுகள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கின்றன.

  உங்களுக்கு கொசுறு தகவலாக அன்னாஹசாரே உண்ணாவிரதத்தால் தொலைக்காட்சிகளுக்கு எப்படி கடிவாளம் போடுவதென்று காங்கிரஸ் அரசு கமிட்டியில் பேசி எந்த முடிவும் ஏற்படாமலே முடிந்திருக்கிறது.அதிக கலந்துரையாடல் நிகழும் பட்சத்தில் பதிவுகளுக்கும் இப்படியான ஆலோசனைகளை அரசு கட்டிலில் இருப்பவர்கள் கொண்டு வர முயற்சி செய்யும் காலமும் வரும்.

  பதிலளிநீக்கு
 30. வள்ளுவர் தாத்தா இருந்திருந்தால் என்னைக் கேட்காமல் ஒருவரும் குறளைப் பயன்படுத்த முடியாது என்று டிஸ்கியே போட்டிருப்பார்.காரணம் சோ,சுப்ரமணியன் சுவாமி,ராமகோபாலன் குழுவை மூவர் மரணதண்டனைக்கு ஆதரவான குரலுக்கு கரிச்சுக்கொட்ட நான் போட்ட குறள்...

  உலகத்தோ டொற்ற வொழுகல் பலகற்றும்
  கல்லார் அறிவிலாதார்.

  பதிலளிநீக்கு
 31. பாரதிராஜா, ராஜநடராஜன், ஜோதிஜி ஆகியோருக்கு தனிப்பட்ட (Special) நன்றி.

  எனக்கு ஒரு மகத்தான சந்தோஷம் என்னவென்றால் பதிவுகளின் நோக்கம் என்னுடைய இந்தப் பதிவின் மூலம் முழுமையாக நிறைவேறியிருக்கிறது என்பதுதான்.

  ஒரு பதிவின் கருத்துக்கள் படிப்பவர்களினால் அலசப்படும்போதுதான் அதன் நோக்கம் நிறைவேறுகிறது. அந்த வகையில் இப்பதிவிற்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. இந்தக் கருத்துகளை ஒட்டி/வெட்டி இன்னொரு பதிவு போடுகிறேன். போடுவது அவசியமாகிறது.

  பதிலளிநீக்கு
 32. Only when I read your post, I could make out how ignorant I am about the blog world. I do not read all and sundry posts. May be that is the reason. Can I say that blessed are those that are ignorant.?

  பதிலளிநீக்கு
 33. சாரி பாஸ் உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை.....
  ஆனாலும் உங்கள் கருத்தை உணர்வை மதிக்குறேன்,

  பதிலளிநீக்கு
 34. //துஷ்யந்தன் said...
  சாரி பாஸ் உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை.....
  ஆனாலும் உங்கள் கருத்தை உணர்வை மதிக்குறேன்,//

  No problem friend. No two people need to have same perception. I value your opninion very much. Thanks for visiting.

  பதிலளிநீக்கு
 35. //G.M Balasubramaniam said...
  Only when I read your post, I could make out how ignorant I am about the blog world. I do not read all and sundry posts. May be that is the reason. Can I say that blessed are those that are ignorant.?//

  Sure Sir, Ignorance is Bliss.

  பதிலளிநீக்கு
 36. சார், வணக்கம்! கும்புடுறேனுங்க!

  பதிவுலகம் தொடர்பா, நான் ஒரு பதிவு போட்டிருக்கேன்! வந்து பார்த்து உங்க கருத்த சொல்லுங்க!

  ரொம்ப நன்றி!

  பதிலளிநீக்கு
 37. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  சார், வணக்கம்! கும்புடுறேனுங்க!

  பதிவுலகம் தொடர்பா, நான் ஒரு பதிவு போட்டிருக்கேன்! வந்து பார்த்து உங்க கருத்த சொல்லுங்க!

  ரொம்ப நன்றி!//

  என்னுடைய பதில் கும்பிடுங்க. கொஞ்சம் பொறுத்துங்குங்க. இப்பத்தான் படிச்சுட்டு இருக்கனுங்க. ABT, LMW, FORD, OXFORD, ICICI, TASMAC, இந்தப் பட்டங்களெல்லாம் வாங்கோணுமுங்க, வாங்கிடுவேனுங்க. எதுக்குன்னு கேளுங்க, எல்லாம் பறக்க வுடறதுக்குத்தானுங்க. அப்புறமா வந்தாத்தான் உங்களுக்கு சமமா இருக்குமுங்க.

  பதிலளிநீக்கு
 38. //ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
  சார், வணக்கம்! கும்புடுறேனுங்க!

  பதிவுலகம் தொடர்பா, நான் ஒரு பதிவு போட்டிருக்கேன்! வந்து பார்த்து உங்க கருத்த சொல்லுங்க!

  ரொம்ப நன்றி!//

  கும்பிடறனுங்க. ஒரு தப்பு நடந்து போச்சுங்க. நீங்க மன்னிக்கணுங்க. உங்க பதிவப் பாக்காம நானு உங்க பின்னூட்டத்துக்கு பதில் எழுதீட்டனுங்க.

  அப்பறமா போயித்தான் உங்க பதிவப் பார்த்தனுங்க. அசந்து போய்ட்டனுங்க. நானு எத்தன பட்டம் வாங்கினாலும் உங்களுக்கு சமமா ஆக முடியாதுன்னு தெரிஞ்சுட்டனுங்க. நெஜமாத்தான் சொல்றனுங்க. உங்க பதிவ பீட் பண்ணறதுக்கு எந்தப் பதிவும் இல்லைங்க.

  பதிலளிநீக்கு
 39. ஒரு பதிவின் கருத்துக்கள் படிப்பவர்களினால் அலசப்படும்போதுதான் அதன் நோக்கம் நிறைவேறுகிறது//
  :-)
  -nilaamaghal

  பதிலளிநீக்கு
 40. என்ன‌ ஆச்ச‌ர்ய‌ம்! செல‌க்ட் ப்ரொஃபைல்‍ ‍_ல் கூகுள் அக்கெள‌ண்ட், நேம் யுஆரெல் எல்லாம் நிராக‌ரித்து விடுகிற‌து! அனானிம‌ஸ் க‌ருத்து த‌டாலென‌ ப‌திவாகிற‌து! என்ன‌ கொடுமை சார் இது?!
  ‍-நிலாம‌க‌ள்

  பதிலளிநீக்கு