சனி, 17 செப்டம்பர், 2011

கல்யாண சீர்கள் – இணைச்சீர்.


இது ஒரு மீள் பதிவு.


இந்த சீர் சில ஊர்களில் மிக முக்கியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம் இதில் வரவு இருக்கிறது. பொதுவாக எல்லோருடைய வீட்டிலும், பெண் பிள்ளைகள் இருந்தால் செலவுதான். அவர்களுக்கு துணிமணிகள், நகை நட்டுகள், திரட்டிச்சீர், கல்யாணம், வளைகாப்பு, பேருகாலம், குழந்தைக்கு பேர் சூட்டுதல், குழந்தைக்கு காது குத்து, அதுக்கு திரட்டிச்சீர், கல்யாணம், இப்படி செலவுகள் தொடர்கதையாகப் போய்க்கொண்டிருக்கும். இந்த தொடர் கதையில் பெண் பிள்ளைகளிடமிருந்து வரும்படி பெருவதற்கு உண்டானது இந்த இணைச்சீர் ஒன்றுதான். அதுவும் வீட்டில் ஆண் பிள்ளை இருந்தால் மட்டுமே நடக்கக் கூடியது.

இணைச்சீர் செய்வது மாப்பிள்ளையின் சகோதரி. வசதியுள்ளவர்கள் இதற்காக ஒரு தனி மணவறை போடுவார்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை. சீர் செய்யும் இடத்தை சாணிபோட்டு வளிச்சு கோலம் போட்டு புள்ளார் புடிச்சு வச்சு பூசை சாமானெல்லாம் எடுத்து வைக்கோணும். அப்பறம் பொறந்தவ தன்னோட சீர்வரிசைகளை ஒரு போளமூடியில வச்சு அங்க புள்ளாருக்கு முன்னாடி கொண்டுவந்து வச்சுடுவாள். சீர் வரிசை என்னன்னா மாப்பிள்ளைக்கு வேட்டி, துண்டு, சட்டை, அப்பறம் எதாச்சும் நகை இல்லைன்னா பணம், இதெல்லாம் இருக்குமுங்க. அப்புறம் மாப்பிள்ளயக்கூட்டீட்டு வந்து அங்க ஒரு மணையப் போட்டு உக்கார வைப்பாங்க. சீர் பண்ற சகோதரி பண்ணாடி தொணை மாப்பிள்ளையா பக்கத்தில நிப்பாருங்க.

சீர்க்காரம்மா இந்த சீர் சாமான்களுக்கு தண்ணி சுத்திப்போட்டு எடுத்து அந்த சகோதரி கையில குடுப்பாங்க. அந்தப்புள்ள அந்தப்போள மூடிய தலைல வச்சுட்டு மாப்பிள்ளையை மூணு சுத்து வலமாச் சுத்து வந்து அதைய மாப்பிள்ள கிட்ட கொடுக்குமுங்க. மாப்பிள்ள அந்த புதுத்துணிகள ரூம்ப்புக்கு எடுத்துட்டுப் போயி உடுத்திட்டு வந்து மணையில உக்காருவாருங்க. அப்பறம் பொறந்தவ நகையை எடுத்து மாப்பிள்ளைக்கு போடுவாங்க. நகை இல்லேன்னா பணத்தை எடுத்து கையில கொடுப்பாங்க. நகை/பணத்தை வாங்கிட்டு மாப்பிள்ளை சும்மா இருக்கு முடியுமாங்க. அவரும் தன் பங்குக்கு சகோதரிக்கு நகையோ பணமோ குடுப்பாருங்க. அப்பறம் பூசையப் பண்ணி சாமி கும்பிட்டுட்டு ரூம்ப்புக்கு போயிடுவாங்க.

இந்த சீரு நடக்கறப்போ ஒறம்பறைங்க நெறைய பேரு ஊட்டுக்குப்போயிருப்பாங்க. இதைப்பாக்கறதுக்கு கொஞ்சம் பேருதான் இருப்பாங்க. இவ்வளவுதானுங்க இணைச்சீரு.

2 கருத்துகள்: