செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கல்யாணத்தில் பெண்ணெடுக்கும் சீர்







மாப்பிள்ளை அழைப்பு முடிந்து மாப்பிள்ளை கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது இங்கே பெண் வீட்டில் பெண்ணுக்கு பெண்ணெடுக்கும் சீர் நடக்கும். பெண்ணை மணப்பெண்ணாக சிங்காரித்து மணவறையில் கொண்டு வந்து உட்கார வைப்பார்கள். பொண்ணோட தாய்மாமன், தாய்மாமன் இல்லாவிட்டால் மாமன் மொறையில் உள்ள ஒருவர் பொண்ணுக்கு மணமாலையைப் போடுவார். பிறகு நெருங்கிய சொந்தத்தில் மாமன் மொறையில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு புது வேஷ்டி, துண்டு கொடுத்து உடுத்த வைப்பார்கள். எல்லோருக்கும் நாவிதர் தோளில் ஒரு பூச்சரம் போடுவார். எல்லாரும் போய் பொண்ணோட ரெண்டு கையிலயும் சந்தனம் பூசி ஆசீர்வதித்துவிட்டு (அதாவது மொய்ப்பணம் கொடுத்துட்டு) வந்து நின்று கொள்வார்கள். இதுல என்ன கருத்துன்னா, மொற மாப்பிள்ளைக சம்மதத்தோடதான் இந்தக்கல்யாணம் நடக்குதுங்கறத எல்லாத்துக்கும் காட்டற சீர் இது. மொற மாப்பிள்ளைக்குத்தான் அக்கா புள்ளயக் கட்டறதுக்கு மொத உரிமை உண்டு. அவன் சம்மதிச்சாத்தான் அடுத்தவங்களுக்கு பொண்ணைக் கட்டிக்குடுக்கலாம். இப்பல்லாம் இந்த வழக்கம் மாறிப்போச்சுங்க.
எல்லோரும் ஆசீர்வதித்து முடிந்தவுடன் நாசிவன்இன்னும் பொண்ணெடுக்கிற மாமன்மார் யாராச்சும் இருக்கீங்களா, இருந்தா உடனே வாங்கோஅப்படீன்னு மூணு தடவ கூப்பிடுவான். எல்லாரும் வந்திருப்பாங்க. இருந்தாலும் மொறைக்கு இப்படிச் செய்யோணும். அப்புறம் சீர்க்காரம்மா. சரி இனி நாட்டாங்கல்லுக்குப் போய்ட்டு வந்திடலாம்னு பொறப்படுவாங்க.
இந்த நாட்டாங்கல்லுக்குப் போற சீர் இருக்குதுங்களே, இது ரொம்ப சரித்திர முக்கியத்துவம் உள்ளதுங்க. பழய காலத்துல ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாட்டமைக்காரர் இருப்பாருங்க. ஒரு பகுதியில பல ஊருங்க இருக்கும். ஒவ்வொரு ஊருக்கும் அதன் எல்லையைக் குறிக்க நாலு பக்கமும் கல்லு நட்டிருப்பாங்க. இதை நாட்டுக்கல் என்று சொல்வார்கள். கால ஓட்டத்தில் இது நாட்டாங்கல் என்று ஆகிவிட்டது. ஆட்டுக்கல்லை எங்கூர்ல ஆட்டாங்கல் என்று சொல்லும் வழக்கம் உண்டு. ஒரு ஊருக்கு நாட்டாமைக்காரர் வருகிறார் என்றால், அந்த ஊர்க்கவுண்டர் இந்த நாட்டாங்கல் வரை சென்று அவரை வரவேற்று அழைத்து வரவேண்டும். ஒரு வீட்டில் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் என்றால் நாட்டாமைக்காரருக்கு கண்டிப்பாக அழைப்பு உண்டு. அவர் முகூர்த்த நேரத்திற்கு சற்று முன்பாக வருவார். அவரைப் பெண் வூட்டுக்காரர்கள் அனைவரும், மணப்பெண் உட்பட, சென்று வணங்கி வரவேற்று மேளதாளத்துடன் மணப்பந்தலுக்கு அழைத்து வரவேண்டும். இப்போது அந்த நாட்டாமை வழக்கொழிந்து போனாலும் அந்த வழக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த சீர் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுதான் மணப்பெண் நாட்டுக்கல்லுக்கு சென்றுவரும் சீர் எனப்படுகிறது. இப்போது ஊர் எல்லையில் கல் நடும் பழக்கம் எல்லாம் மறைந்து விட்டபடியால், மணப்பந்தலுக்குப் பக்கத்திலேயே ஒரு கல்லை நட்டு வைத்து, மணப்பெண் அது வரையில் போய் வருவது என்ற வழக்கம் வைத்திருக்கிறார்கள். பெண்ணை நாட்டுக்கல் வரை மாத்துப்போட்டு அழைத்துப்போய் அங்கு ஒரு போளமுடியில் மாத்துப்போட்டு நிற்க வைப்பார்கள். பிறகு சீர்க்கார அம்மா சோற்றில் உருட்டப்பட்ட உருண்டைகளைக்கொண்டு திருஷ்டி சுற்றிப்போடுவார்கள். பிறகு கற்பூரம் பற்றவைத்து சாமி கும்பிடுவார்கள். இந்த சீர் முடிந்த்தும் பெண்ணைக்கூட்டிக்கொண்டு போய் பெண்ணின் அறையில் விட்டுவிடுவார்கள்.
இதற்குப்பிறகுதான் மாப்பிள்ளையை கோவிலிலிருந்து மணப்பந்தலுக்குக் கூட்டிக்கொண்டு வருவார்கள்.




3 கருத்துகள்:

  1. நம்ம சமூக வழக்கங்களை அருமையாக சொல்லி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான தகவல்

    Without Investment Data Entry Jobs !

    FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.
    உங்கள் பக்கத்து முறைமைகளை தெரிந்து கொண்டோம்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு