வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

புத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 1


இந்த வாசகத்தை 60 வயதைக் கடந்தவர்கள் அநேகமாகக் கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால் இன்றுள்ள வாலிபர்களுக்கு கணினியும் தொலைக்காட்சிப் பெட்டியுமே நண்பர்கள்.

சார்லஸ் டிக்கன்ஸ் என்பவர் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர். அவருடைய 200 வது பிறந்த நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது வெளியான ஒரு செய்தி. இளைஞர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் அவருடைய நாவலைப் படிக்க இப்போதைய இளைஞர்களுக்குப் பொறுமை இல்லை என்று சொல்லியிருந்தார்கள். சார்லஸ் டிக்கன்ஸின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் 500 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும்.

இன்றைய வாரப் பத்திரிக்கைகளிலேயே ஒரு பக்கத்திற்கு மேல் வரும் எந்தச் செய்தியையும் இன்றைய இளைஞர்கள் படிப்பதில்லை என்று கேள்விப்பட்டேன். இந்த நிலை எதைக் காட்டுகின்றது என்றால் இன்றைய இளைஞர்கள் எந்தக் காரியத்திலும் ஆழமாக ஈடுபடுவதில்லை என்பதுதான் அந்த உண்மை. டிவி பார்க்கும்போதே நிமிடத்திற்கு ஒரு சேனலை மாற்றுவதுதான் இன்றைய இளைஞர்களின் கலாசாரம்.

இந்த செய்தியைப் படித்தவுடன் நான் அந்தக் காலத்தில் படித்த புத்தகங்கள் நினைவுக்கு வந்தன. நான் 5 ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே ஆனந்தவிகடன் படிக்கும் வழக்கம் ஆரம்பமாகிவிட்டது. பக்கத்து வீட்டில் விகடன் வாங்குவார்கள். அவர்கள் படித்தபின் நான் அதை இரவல் வாங்கிப் படிப்பேன். துணுக்குகள், யுத்தச்செய்தி, சசியின் ஒரு பக்கக் கதைகள், தேவன், லக்ஷ்மி ஆகியோரின் தொடர்கதைகள், இப்படி பல ஆசிரியர்கள் அறிமுகமானார்கள். பிறகு கல்கி. அப்புறம் குமுதம் + கல்கண்டு.

ரொம்ப நாள் கோவையிலேயே முதல் ஆளாக குமுதம் ஏஜன்டிடம் போய் குமுதம் பார்சலைப் பிரித்தவுடன் முதல் காப்பியை (நான்கு அணா விலை) வாங்கி படித்துக் கொண்டே நடந்து வீடு வருவதற்குள் படித்து முடித்து விடுவேன். பிறகு அவற்றில் வரும் தொடர்கதைகளைச் சேர்த்து பைண்ட் பண்ணிப் பாதுகாத்து வந்ததெல்லாம் அந்தக்காலம்.

என் பெரியம்மா பையன் மூலமாக நான் நாவல்களுக்கு அறிமுகமானேன். முதலில் துப்பறியும் நாவல்கள், பிறகு சமூக நாவல்கள். கோவையில் மணிக்கூண்டு எல்லோருக்கும் தெரியும். அங்கு அந்தக் காலத்தில் ஒரு லைப்ரரி இருந்தது. அதில் புத்தகம் எடுத்து வீட்டுக்குக் கொண்டு வரவேண்டுமென்றால் ஸ்கூல் ஹெட்மாஸ்டரிடம் கடுதாசி வாங்கி, ஐந்து ரூபாய் டிபாசிட் கட்டி பிறகுதான் புத்தகங்கள் எடுத்துவர முடியும். எப்படியோ தில்லுமுல்லு செய்து ஐந்து ரூபாய் சேர்த்துவிட்டேன். ஹெட்மாஸ்டரிடம் லெட்டர் வாங்குவது என்பது அந்தக் காலத்தில் சிம்ம சொப்பனம்.

இதை எப்படி சமாளித்தேன் என்று அடுத்த பகுதியில் பார்ப்போமா

5 கருத்துகள்:

 1. ஆஹா... புத்தகங்கள் பற்றிய தொடரா? உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்... இன்றைக்கு புத்தகங்கள் படிப்பது என்பது மிகவும் குறைந்துவிட்டது உண்மை....

  பதிலளிநீக்கு
 2. புத்தகங்களுடனான தங்களது அனுபவம் மெய்மறக்க செய்கிறது..தங்களது அனுபவத்தை சிறப்பாக பகிர்ந்தமைக்கு எனது நன்றிகள்..

  @@ டிவி பார்க்கும்போதே நிமிடத்திற்கு ஒரு சேனலை மாற்றுவதுதான் இன்றைய இளைஞர்களின் கலாசாரம். @@
  இன்றைய இளைஞர்கள் இதுதான் (வி)வேகம் என்று பெரும்பாலும் நினைத்துக்கொள்கிறார்களோ ?? நானும் அந்த வயதில் நடமாடும் வேகம்தான்..

  அடுத்த பாகம் எப்பொழுது ?? ஆவலுடன் காத்திருக்கிறேன்.
  சைக்கோ திரை விமர்சனம்

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான் சார். இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. சிறு வயதில் இருந்தே இந்த பழக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே சாத்தியம். நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 4. ஒரு தலைமுறையை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு..நன்றாக இருக்கிறது..தொடரவும்

  பதிலளிநீக்கு
 5. நல்ல தொடர் ஐயா.... புத்தகங்கள் படிப்பது இப்போது குறைந்து தான் போய் விட்டது. கணினியும், தொலைக்காட்சியும் ஆக்கிரமித்து விட்டன.....

  மணிக்கூண்டு அருகில் இருப்பது மாவட்ட நூலகம் தானே ஐயா....என் அப்பாவின் அலுவலகமான பொதுப் பணித்துறை கட்டிடத்தின் எதிரே இருக்கும். இப்போது அது இல்லையா.....

  பதிலளிநீக்கு