புதன், 22 பிப்ரவரி, 2012

திருட்டு என்றால் என்ன?



என்ன, சின்னக்குழந்தைக்குக் கூட தெரியும் கேள்வியை முன் வைக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? தெரிந்தேதான் இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

அடுத்தவர்களின் பொருள்களை அதன் சொந்தக்காரருக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்வது திருட்டு என்பதை சிறு குழந்தையும் அறியும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் திருட்டுகள் இவ்வளவு வெளிப்படையாக இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் இன்னொருவருடைய பதிவை எடுத்து தங்களுடைய தளத்தில் பிரசுரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது திருட்டா இல்லையா? பொருளைத் திருடினால்தான் திருட்டு, கருத்தை அல்லது எழுத்தை திருடினால் அது திருட்டல்ல என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அது பொருளாக இருந்தாலும், கருத்தாக இருந்தாலும், அவைகளினுடைய சொந்தக் காரர்களுடைய அனுமதி இல்லாமல் எடுத்தால் அது திருட்டுத்தான் என்பது என் கருத்து. அது என்ன காரணத்திற்காக எடுக்கப்பட்டாலும் சரியே, அது திருட்டுதான். சொந்தக்காரர் யாரென்று தெரியாத நிலையிலும் ஒரு பொருளை நம்முடைய உபயோகத்துக்காக எடுத்துக் கொண்டால் அதுவும் திருட்டே.

சில நாட்களுக்கு முன் ஒரு துப்புரவுத் தொழிலாளி, ரயில் கம்பார்ட்மென்டில் தான் பார்த்த பணப்பையை அதிகாரிகளிடம் கொடுத்ததை செய்தித் தாள்களில் படித்தோம். அதை அவர் வைத்துக் கொண்டால் யாருக்கும் தெரிந்திருக்காது. இருந்தாலும் நமக்கு சொந்தமில்லாதவற்றை நாம் வைத்துக்கொள்வது திருட்டு என்று அவர் நினைத்ததால்தான் அவர் அதை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். இதுதான் மனச்சாட்சி.

நான் தினமும் வாக்கிங்க் போகும்போது பலர் (அவர்களும் வாக்கிங்க் செல்பவர்கள்தான்) கையில் ஒரு பையும் கோலும் வைத்துக் கொண்டு மற்றவர்கள் வீடுகளிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பூச்செடிகளிலிருந்து குச்சியால் இழுத்து பூக்களைப் பறித்துச் செல்லுகிறார்கள். இது அவர்கள் வீட்டிலிருக்கும் சாமிக்குப் போடுவதற்காக இருக்கும்.

இதைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் தோன்றும் கேள்விகள் இரண்டு.
   
   1. இது திருட்டா, அல்லவா. அந்த வீட்டுக்காரருக்குத் தெரியாமல் இந்த வேலை நடைபெறுகிறது. அப்போது இதை திருட்டு என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

   2.     இந்த மாதிரி பறித்த பூக்களைக் கொண்டு செய்யப்படும் வழிபாட்டினால் கடவுளுக்கு என்ன ப்ரீதி ஏற்படும்?

9 கருத்துகள்:

  1. சென்னை வாழ்க்கையில் நம்ம வீட்டில் தினமும் பூ திருடுபவரை ஒருநாள் கையும் களவுமாகப் பிடிச்சுக் கேட்டதுக்கு.... 'சாமிக்குமா...'ன்னார். 'ஏங்க சாமி திருட்டுப்பூ கேட்டாரா' ன்னேன்.

    அசடு வழிஞ்சார்:(

    பதிலளிநீக்கு
  2. சார்..தங்களுக்கான பதிவினை பதிவிட்டுள்ளேன்.
    http://velang.blogspot.in/2012/02/blog-post_22.htmlஃ
    மின்தடை காரணமாக உடனே பதிவிட முடியவில்லை.தாமதத்திற்கு மன்னிக்கவும். வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  3. அறிவு இறைவன் கொடுத்த அருள்களில் ஒன்று. அதனை ஒருவர் சொன்ன கருத்தையோ அல்லது எழுதியவைகலையோ தான் சொன்னதாக அல்லது தான் எழுதியதாக சொல்வது தவறு.அதனையே நாம் அவர்கள் சொன்னவைகளை அல்லது எழுதியவைகளை அவர்கள் பெயரிலேயே பயன் படுத்துவது தவறாக அல்லது திருட்டாக இருக்க முடியாது அவர் அதனை செய்யக் கூடாது என்று தடை விதித்து சொன்னால் தவிர. இருப்பினும் அறிவு அவரை விட்டு உலகத்திற்கு வந்த பிறகு அவ்விதம் தடை போடுவது சிறப்பாக இருக்காது .அறிவு அனைவரிடமும் சென்றடைய வேண்டும். திருவள்ளுவர் ,கம்பர் , சித்தர் பாடல்கள் இன்னும் பல தமிழ் காவியங்கள் எழுதியவராலும் அல்லது அதனை உலகத்திற்கு கண்டு பிடித்து தந்தவர்களும் தடைவிதித்து இருந்தால் எப்படி நிலைமை இருக்கும் என்பதனை சிந்தித்து பாருங்கள். இன்று எல்லாமே தொழில் மயமாக மாறிவிட்டதால் சிந்தனையின் வெளிப்பாட்டின் வழியே வந்த
    எழுத்துகளும் வியாபாரமாக மாறிவிட்டது . முடிந்தவரை இவைகள் 'காப்பிரெய்ட்' இல்லாமல் இருப்பது சிறப்பாகும்.

    பதிலளிநீக்கு
  4. சமூகத்திற்கு மிக அவசியமான... எழுத்துகள்... பதிவு...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சார்,
    சற்று சிக்கலான கேள்வி ?
    கீழே உதிரும் நல்ல பூக்களை பயன்படுத்துவதில் தவறில்லை .வீட்டுக்கு சொந்தக்காரர் பூக்களை பறிப்பதில்லை என்றால் அவரிடம் உத்தரவு கேட்டு பறிக்கலாம் .வீட்டுக்காரரிடம் கேட்காமல் பறிப்பது நாகரிகமற்ற செயல் .
    நன்றி ,
    கோவை சக்தி

    பதிலளிநீக்கு
  6. சொந்தமில்லாத பொருளை எடுப்பது திருட்டு, அது ஏதாவது ஃபிஸிகல் ஆப்ஜெக்ட் ஆக இருக்கும் பட்சத்தில்.எண்ணங்களை அப்படிக் கூற முடியாது. பலருக்கும் ஒரே சிந்தனை வர வாய்ப்புள்ளது.பட்டினத்தார் கருத்துக்களை கண்ணதாசன் உபயோகிக்க வில்லையா.பாரதியின் பாஞ்சாலி சபதம் திருட்டா.?ஒரு கருத்து பலரால் பலவிதத்தில் கையாளப் பட்டது. எழுத்துலகில் எல்லாமே திருட்டாகத்தான் இருக்கும். உங்கள் முகப்பில் இருப்பதுபோல் எல்லோரும் சொல்வதில்லையே.

    பதிலளிநீக்கு