திங்கள், 27 பிப்ரவரி, 2012

உலகமே ஒரு நாடக மேடை


நாடகத்தில் நடிகர்கள் பலப்பல வேஷங்கள் கட்டுகிறார்கள். அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கும் அந்த வேடத்திற்கும் சம்பந்தமிருக்காது. நல்ல குணசீலரான ஒருத்தர் வில்லனாக வேஷம் கட்டியிருப்பார். அவர் அப்படி நடிக்கும்போது, பார்க்கும் ரசிகர்கள் அவர் மீது அதீத வெறுப்பைக் காட்டினால் அது அவருடைய நடிப்புக்கு வெற்றி என்று கூறுகிறோம். பெரிய பணக்காரர் பிச்சைக்காரனாக வேஷம் போட்டிருப்பார். அவர் அந்த வேடத்திற்குப் பொருத்தமாக நடிப்பார்.

நிஜ வாழ்க்கையிலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நடந்து (நடித்து) கொண்டிருக்கிறோம். பல சமயங்களில் நாம் வேஷத்தை மாற்ற வேண்டியிருக்கிறது. வீட்டில் ஒரு வேஷம். அலுவலகத்தில் வேறொரு வேஷம். பஸ்சில் போகும்போது இன்னொரு வேஷம். இப்படியாக ஒரு நாளில் பல வேஷங்களில் நாம் உலா வருகிறோம். ஆனால் அதை நாம் வேஷம் என்று உணர்வதில்லை.

அரசில் பெரிய பதவியில் எல்லோரையும் கிடுகிடுக்க வைக்கும் அதிகாரி, தன்னுடைய மேலதிகாரி முன் கூழைக் கும்பிடு போடுவார். அலுவலகத்தில் கீழ்மட்ட நிலை ஊழியர் வீட்டுக்குப் போனவுடன் பெரிய தர்பார் பண்ணுவார்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பவை. இணையம் வந்த பிறகு, ஒரு காலகட்டத்தில் பிளாக்குகள் வந்தன. பிளாக்குகள் இன்னொரு மாதிரியான நாடகமேடை. நம் ஒவ்வொருவருடைய எண்ணங்களுக்கும் வடிகாலாக இந்த பிளாக்குகள் அமைந்தன. மனித இயல்பு என்னவென்றால், நம்மை யாரும் பார்க்காதபோதுதான் அவரவர்கள் இயற்கைக் குணங்கள் வெளிவரும். இந்த பிளாக்குகளில் யாரும் தங்கள் சொந்த விவரங்களைக் கூறவேண்டிய அவசியம் இல்லை. அதனால் என்ன வேஷம் கட்டிக்கொண்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள். இது ஒரு மாபெரும் சௌகரியம். பிளாக்குகள் பிரபலமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்யாரும் எதைப் பற்றியும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். இதுதான் மிகச்சிறந்த நடிப்பு ஆகும். எவ்வளவு சௌகரியம் பாருங்கள்

இதனால்தான் உலகமே ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்போது நமது ஆன்மீகவாதிகளின் மிகப் பிரியமான கேள்விக்கு வருவோம்.

நான் யார்?” என்று கண்டுபிடித்தால் முக்தி அடையலாம் என்று காலம் காலமாகச் சொல்லி வருகிறார்கள்இந்த நாடக உலகில் எல்லோரும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் போது நான் யாரென்று எப்படி சொல்வது? என் மனைவிக்கு புருஷன் என்று சொல்வதா? என் மகனுக்கு நான் தகப்பன் என்று சொல்வதா? நான் ஒரு ஆபீசர், பியூன் இப்படி எதைச்சொன்னாலும் அது ஒரு பகுதி உண்மைதானே தவிர முழு உண்மையும் ஆகாது. ஆனால் நான் யார் என்று தேடு, நீ முக்தி அடைவாய், அல்லது ஞானம் பெறுவாய் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி நடைமுறைக்கு பொருந்தாத வேதாந்தக் கருத்துகளினால்தான் இந்து சமயம் சாதாரண நிலையில் உள்ள மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது

7 கருத்துகள்:

 1. இவை எல்லாவற்றிக்கும் முதல் முக்தி என்றால் என்ன, ஞானம் ஏன் தேவை என்பதைக் குழப்பமில்லாமல் இந்துசமயம் எடுத்துக்கூறுமா

  பதிலளிநீக்கு
 2. ’நான்’ அப்படிங்கிறது ஒரு வித கர்வம்.., பெருமை.நான் இல்லனேன்னா ஒன்னுமே நடக்காதுங்கிர தற்பெருமை..ஆனா நான் இல்லேன்னாலும் உலகம் ஓடிகிட்டுதான் இருக்கும். இதுதான் எதார்த்தம் .

  இந்த ’நான்’ஐ மட்டும் விட்டுட்டு நாம் அப்படின்னு நினைச்சா உலகத்துல சந்தோஷப்பட ஏகப்பட்ட விஷயம் இருக்கு. இது ஒரே நாளில் வந்துடாது .:-)

  பதிலளிநீக்கு
 3. ஐயா, உலகமே ஒரு நாடகமேடை. அதில் நாமெல்லாரும் நடிகர்கள்.நன்றாகவே நடிக்கிறோம். ஒரு சந்தேகம். உடை மாற்றும் ஒப்பனை அறை எங்கே இருக்கிறது.?

  பதிலளிநீக்கு
 4. இப்படி நடைமுறைக்கு பொருந்தாத வேதாந்தக் கருத்துகளினால்தான் இந்து சமயம் சாதாரண நிலையில் உள்ள மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது.


  சாதாரணமக்கள் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்..
  மெத்தப்ப்படித்த மேதாவிகள்தான சொதப்பும் விஷயம் இது...

  கல்லாதபேர்களே நல்லவர்கள்!!

  பதிலளிநீக்கு
 5. ஐயா எங்கோ ஆரம்பித்து எங்கோ முடித்திருக்கிறீர்கள்! இருப்பினும் நாம் அனைவருமே நடிகர்கள் எனது நிஜம்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரெக்ட்டா பாயின்ட்ட புடிச்சிட்டீங்க. ஐடியா பத்தல. கொஞ்சம் கடன் கொடுங்க, மணி.

   நீக்கு