திங்கள், 26 மார்ச், 2012

விருந்தினராக உறவினர் வீட்டில் தங்கலாமா?

காலங்கள் மாறிவிட்டன. உள்ளன்போடு ஒருவரை நேசிக்கும் பண்பு மறைந்துவிட்டது. உறவினர்களை, கல்யாணம் போன்ற விசேஷங்களில் பார்த்து நலம் விசாரிப்பதுடன் இன்றைய உறவுகள் முடிந்து விடுகின்றன.

லீவு வந்தால் சிறுவர் சிறுமியர் உறவினர் வீடுகளுக்குச் செல்வது என்ற வழக்கம் ஏறக்குறைய மறைந்துவிட்டது.

காரணங்கள் ஆயிரம் சொல்லமுடியும். ஆனால் அடிப்படைக் காரணம் ஒன்றுதான். அது மனிதர்களின் மனம் பணம் சம்பாதிப்பதிலும், தங்கள் வசதிகளை உயர்த்திக்கொள்வதிலும் ஈடுபடுகிறதே தவிர, மனித உறவுகளைத் தேடுவதில் இல்லை.

 ஆகவே இன்று நாம் ஒரு ஊருக்கு ஏதாவது வேலையாகச் செல்லுகிறோம் என்றால் அந்த ஊரில் நம் உறவினரோ, நண்பரோ இருந்தால் அவர் வீட்டில் தங்கலாம் என்று எண்ணக்கூடாது.  அவர்களுக்கு ஆயிரத்தெட்டு கஷ்டங்கள். போகிறவர்களுக்கும் பல எதிர்பார்ப்புகள். இதனால் நடைமுறையில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன.

எனக்குத் தெரிந்த இரண்டு பேர் தங்கள் மகளைப் பார்க்கச்சென்றாலும் கூட, அங்குள்ள ஓட்டலில் தங்கித்தான் மகளைப் பார்க்கப் போவார்கள். நான் கூட இதைத் தவறாகப் புரிந்ததுண்டு. ஆனால் வயதான பிறகு, இன்று சிந்தித்தால் அதுதான் சௌகரியம் என்று தோன்றுகிறது.

காலத்தின் மாறுதல்களுக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

23 கருத்துகள்:

  1. சரியாச்சொன்னீங்க. நாங்களும் இப்படித்தான் செய்யறோம். ஊர்லே அவுங்கவுங்க வேலைகள் நம்மாலே பாதிக்கப்படக்கூடாதுல்லையா?

    அதான் சென்னைக்குப்போகும் டிக்கெட் புக் பண்ணுவதே நமக்கு தங்க இடம் கிடைச்சபிறகுதான் ஆகிப்போச்சு.

    பதிலளிநீக்கு
  2. காலத்தின் மாறுதல்களுக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    வேறு வழி??????????

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் என்றாலும் மாற்றிக்கொள்ள முடியவில்லை.. ஒவ்வொரு முறை இந்திய வரும்போதும் அடி பட்டாலும்! நம்மளவிற்கு வசதியாக இருந்தாலும், நம் உறவினர் எப்படி வாழ்கிறார்கள்.. அந்த சூழ்நிலையில் நம்மால் அனுசரித்து போவது எப்படி போன்ற அனுபவ பாடங்கள் ஹோட்டலில் தங்கினால் கிடைக்காதே!

    பதிலளிநீக்கு
  4. //காலத்தின் மாறுதல்களுக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.//

    காலத்தின் கட்டாயம்.... :(

    பதிலளிநீக்கு
  5. பள்ளி விடுமுறை காலங்களில் நான் பாட்டி வீட்டுக்கு செல்வது என்பது மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும்...

    தற்போது இன்றைய தலைமுறையினரிடம் அந்த பழக்கம் முற்றிலும் நீங்கி விட்டது...

    பதிலளிநீக்கு
  6. காலத்தின் மாற்றம் இன்னும் வருங்காலங்களில் அதீதமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் சார். இப்போதெல்லாம் விஷேஷங்களுக்கே ஹோட்டலில் தான் ரூம் போட்டு கொடுக்கிறார்கள். நம்ம மரியாதையையும் காத்துக்கணும், அடுத்தவங்களுக்கும் தொல்லை கொடுக்க கூடாது.

    பதிலளிநீக்கு
  8. // ஆகவே இன்று நாம் ஒரு ஊருக்கு ஏதாவது வேலையாகச் செல்லுகிறோம் என்றால் அந்த ஊரில் நம் உறவினரோ, நண்பரோ இருந்தால் அவர் வீட்டில் தங்கலாம் என்று எண்ணக்கூடாது. அவர்களுக்கு ஆயிரத்தெட்டு கஷ்டங்கள். போகிறவர்களுக்கும் பல எதிர்பார்ப்புகள். இதனால் நடைமுறையில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன.//

    உண்மை தான். வெளியில் எங்காவது ரூம் போட்டு தங்குவதே மிகவும் நல்லது.

    பதிலளிநீக்கு
  9. உண்மை தான் சார்,,, எல்லா இடங்களிலும் மாற்றம் வந்துடுச்சிங்க சார்

    பதிலளிநீக்கு
  10. சரியாத் தான் சொல்றீங்க ஐயா.... நம்மால் அடுத்தவங்களுக்கு எதுக்கு சிரமம்.

    பதிலளிநீக்கு
  11. //காலங்கள் மாறிவிட்டன. உள்ளன்போடு ஒருவரை நேசிக்கும் பண்பு மறைந்துவிட்டது. உறவினர்களை, கல்யாணம் போன்ற விசேஷங்களில் பார்த்து நலம் விசாரிப்பதுடன் இன்றைய உறவுகள் முடிந்து விடுகின்றன.
    // வருத்தம் தரும் உண்மை.உறவினர்கள் வரும் பொழுது "ஹாய்"சொல்லி விட்டு லேப்டாப்பில் மூழ்கி விடும் இன்றைய இளையவர்களின் செயலை கண்டித்து திருத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை.

    பதிலளிநீக்கு
  12. பதிவுகள் பார்த்துக் கொண்டிருக்கும்போது யாராவது வந்தால் நானே அப்படித்தான் செய்கிறேன். என்னை யார் கண்டிப்பது?

    பதிலளிநீக்கு
  13. உள்ளன்போடு உபசரித்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஆனாலும் இன்னும் எங்கள் வீட்டுக்கு விருந்தினர் வருவதை ஆவலுடனேயே எதிர்பார்க்கிறது மனம். தாங்கள் கூறியுள்ளதுபோல் வரவேற்கப்படாத இடங்களுக்கு வருகை புரிவதில் கவனம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொது விதிகளுக்கு எப்போதும் விதிவிலக்குகள் உண்டு. இன்றைய நகரச் சூழ்நிலையில் இரு சாராரும் ஒத்த மனத்துடன் இருந்தால் இன்றும் விருந்தினராகத் தங்கலாம். நல்ல புரிதலும் அனைத்து விஷயங்களிலும் அனுசரித்துப் போதலும் அவசியம்.

      நீக்கு
  14. ஐயா ஒரு நாள் ,மூன்று நாளோ தங்கினால் ஒன்றும் இல்லை.பத்து நாள் தங்கினால் உண்மையான மதிப்பு தெரியும்.அதுவே ஒரு மாதம் எந்த காரணமே இல்லாமல் அல்லது கொவிச்சுட்டு வந்து தங்கி பாருங்கள் ஒன்று உங்களை சமாதானம் செய்து அனுப்ப பார்ப்பார்கள் நீங்கள் அப்பவே புரிச்சு கிளம்பிருனும் இல்லை அதன் பின் ஜாடை மாடையாக வரும் திட்டு இருக்கே அப்பப்பா.
    அதெல்லாம் அனுபவிச்சா தான் தெரியும்.

    ஐயா ஏற்கனவே ஈமெயில் சந்தாவைக்குமாறு சொல்லிட்டேன்.இப்போது இருப்பது வேலையே செய்ய மாட்டேக்குது கவனீங்க . . . . .

    ப்ளாக்கரில் ஆட் கெசட்டில் ரெடி மேட்டாக உள்ளது.இணைக்க வேண்டியது மட்டுமே வேலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அரிஃப்,
      எனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் உபயோகித்துப்பார்த்து விட்டேன். நீங்கள் சொன்ன வழியில் போகும்போது அது என்னமோ எர்ரர் மெசேஜ் கொடுக்குது. அது மாதிரி செய்தால் ஒண்ணும் நடக்க மாட்டேனென்கிறது. நீங்கள் இப்போதைக்கு பாலோயர்ஸ் ஆக சேர்ந்து கொள்ளுங்கள். நான் முயற்சியைக் கைவிடாது செய்கிறேன். திடீரென்று ஒரு நாளைக்கு விடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  15. ஆம் நல்ல சிந்தனை. இதற்கு நாம் எல்லோரும்தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  16. ’விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தான்’ என்று பழமொழியே இருக்கிறதே! தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் தங்கலாம். ஆனால் அவர்கள் சுதந்திரம் தடைப்படலாம். என் உறவினர் ஒருவர், ’நம் சௌகர்யத்தை முன்னிட்டு’ அவர்கள் வீட்டிற்கு போய்ச் சேர்ந்ததும், ரிடர்ன் டிக்கட் எடுத்து விட்டீர்களா என்பார். போனவுடன் ரிடர்ன் டிக்கட்டைக் காட்டி விட்டால் மகிழ்வாக வரவேற்பார்கள்.
    வ.க.கன்னியப்பன்

    பதிலளிநீக்கு
  17. உறவினர் வீட்டில் சாப்பாடு நன்றாக இருந்தாலோ,இரவாகி விட்டாலோ விருந்தினராக கட்டாயம் தங்கி விடலாம்.

    எனக்கென்னமோ ஆசிய தேசங்கள் உறவு மனப்பான்மையை இன்னும் பாதுகாக்கிறார்கள் என்றே நினைக்கின்றேன்.காரணம் குவைத்தில் மேற்கத்தியவர்கள் விமான நிலையத்துக்கு பெட்டி படுக்கையோடு தனியாகவே பயணம் செய்கிறார்கள்.ஆனால் இந்தியா,பாகிஸ்தான்,பெங்களாதேஷ்,பிலிப்பைன்ஸ்,இலங்கைன்னா ஒரு ஆள் பயணத்துக்கு ஒரு பத்துப் பேராவது வழியனுப்ப வந்து விடுகிறார்கள்:)

    இதில் அப்பாவிகளாக பிரச்சினையில் தனியாக செல்பவர்கள் வீடுகளில் பணிபுரியும் பெண்கள்:(

    பதிலளிநீக்கு