திங்கள், 14 மே, 2012

நீங்கள்தான் குடும்பத் தலைவரா?


புதுசா ஒருவர் இந்திய நாட்டின் ஜனாதிபதி ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குப் பதவிப் பிரமாணம் எடுத்தவுடனே, அவரைக் கொண்டு போய் ஜனாதிபதி மாளிகையில் குடி வைத்து விடுவார்கள். அந்த மாளிகையில் எத்தனை அறைகள் இருக்கின்றன என்று இதுவரை இருந்த ஒரு ஜனாதிபதிக்கும் தெரிந்திருக்காது என்று நம்புகிறேன். அந்த மாளிகையைக் கட்டின இஞ்சினீயருக்குத் தெரிந்திருக்கலாம்.

அந்த புது ஜனாதிபதிக்கு தான்தான் இந்த பரந்த நாட்டின் ஜனாதிபதி என்று உணருவதற்கே சில வாரங்கள் ஆகும். அது மாதிரி நம் நாட்டில் வாழ்க்கை நடத்தும் பலருக்கு, தான்தான் குடும்பத்தலைவர் என்பது மறந்து போயிருக்கும். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

நீங்கள் உங்களை குடும்பத் தலைவன் என்று நினைக்கிறீர்களா? அதை உறுதி செய்ய சில கேள்விகள்.

1. ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் என்கிற இடத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா?

2. குடும்பத்தின் வருமானம் உங்கள் மூலமாக மட்டுமே வருகிறதா?

3. சம்பளம் வாங்கியதும் சம்பளக் கவரை அப்படியே மனைவி கையில் கொடுக்கிறீர்களா?

4. உங்களுடைய அன்றாட செல்வுகளுக்கு மனைவியிடம் வாங்கிக் கொள்கிறீர்களா? அதற்கு மாலையில் கணக்கு சொல்கிறீர்களா?

5. தீபாவளிக்கு உங்களுக்கு புது வேஷ்டி சட்டை உங்கள் மனைவி வாங்கிக் கொடுக்கிறார்களா?

6. பள்ளி சுற்றுலா போக உங்கள் குழந்தைகள் அம்மாவிடம் பர்மிஷனும் பணமும் வாங்குகிறார்களா?

7. தினம் சாப்பிடும்போது உங்களுக்கு அர்ச்சனை நடக்கிறதா?

8. உங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது சமையலறையில் பாத்திரங்கள் உருளுகின்றனவா?

9. காலையில் ஆறிப்போன காப்பியைக் குடிக்கிறீர்களா?

10. வீட்டில் பல முக்கியமான காரியங்கள் உங்களுக்குத் தெரியாமல் நடக்கின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் "ஆம்" என்று நீங்கள் பதில் சொன்னால் கண்டிப்பாக நீங்கள்தான் குடும்பத் தலைவர். எந்த சந்தேகமும் வேண்டாம்.



20 கருத்துகள்:

  1. ///
    7. தினம் சாப்பிடும்போது உங்களுக்கு அர்ச்சனை நடக்கிறதா?///

    காசு நாம் கொடுக்காமல் அர்ச்சனை "நமக்கு செய்யப் படும் இடம்" அங்கு தான். அதை வாங்கிக் கொள்வதில் அப்படி என்ன கஷ்டம்?

    பதிலளிநீக்கு
  2. அந்த ஏழாவது பாயிண்ட்டைத்தவிர இங்கே வேற ஒன்னும் கோபாலுக்குக் கொடுத்து வைக்கலை.

    2 வது பாய்ண்ட் உண்மைன்னாலும்............. 3ஆவதுக்கு இல்லைன்னு சொல்லணும். சம்பளம் கொடுக்கும் படுபாவிகள் இங்கே வேலை செய்யறவனுக்கே காசைக் கண்ணுலே காமிக்கமாட்டாங்களே:(

    முதல் பாய்ண்ட்லே ஜெயிக்கணுமுன்னு இந்தியா வந்தப்ப முயற்சி செஞ்சுருக்கலாமோ? உனக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்களே!!

    பதிலளிநீக்கு
  3. இந்து தர்மத்தின்படி ஸ்வாமிக்கு நைவேத்யம் ஆனவுடன் அர்ச்சனை செய்யவேண்டும். ஆக நீங்கள் நம் தர்மத்தை ஸ்ரத்தையாக கடைப்பிடிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. மனைவிக்கு கணவன்தானே கண்கண்ட தெய்வம். சரிதானுங்களே!!!!!!

    பதிலளிநீக்கு
  4. நீங்கள்தான் குடும்பத் தலைவரா? அர்ச்சனையுடன் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான், நான், நானேதான் குடும்பத்தலை............. இருங்க, ஊட்ல கேட்டுட்டு சொல்றேன்.

      நீக்கு
  5. நண்பரே!
    தாங்கள் விண்டது, கண்டதா? அல்லது வாழ்வில் கற்றுக் கொண்டதா?
    எதுவானாலும் பல அதிலே உண்மை! நன்றி!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. ஆக மொத்தம் குடும்பத்தலைவர் மற்றும் ஜனாதிபதி ரெண்டு பேருமே வாயில்லா பூச்சிகள் என்று சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லீங்க, உங்க மூளை சுறுசுறுப்பாத்தான் இருக்குது.

      நீக்கு
  7. அவ்வப்போது பொறி கட்டையால் அடி விழுகிறதா ..? இதை மறந்திட்ட மாதிரி தெரியுது ..? ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  8. எங்க வூட்ல நான்தான் தல! அதனால, அடிக்கடி அது உருளும் !

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. எங்களைப் பார்த்து கத்துக்குங்க.

      நீக்கு
    2. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .

      நீக்கு