திங்கள், 4 ஜூன், 2012

தலைமுறை இடைவெளி என்பது என்ன?


நேற்று என் பேரன்கள் - பேரர்கள் என்று மரியாதையாகச் சொன்னால் அர்த்தம் வேறு விதமாகப் போய்விடும்- KFC போய் விட்டு வந்தார்கள். அங்கு என்ன விசேஷம் என்று கேட்டால் "அதெல்லாம் உங்களுக்குப் புரியாது தாத்தா" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

அப்புறம் வெளியில் விசாரித்ததில் தெரிய வந்தது. கோழிக்கறிக்கு முலாம் பூசி கொள்ளையடிக்கும் இடம் என்று சொன்னார்கள். கோரைப் பாயில் படுத்துத் தூங்குகிறவனுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் ரூமில் படுக்கவைத்தால் அவன் எப்படித் தூங்குவான்?

இந்தக் காலத்துப் பசங்களுக்கு அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க அவர்கள் பெற்றோர் தயங்குவதில்லை. நமக்குத்தான் அந்தக் காலத்துல அனுபவிக்க முடியலே. நம்ம பசங்களாவது அனுபவிக்கட்டுமே என்பது அவர்கள் எண்ணம். நமக்கு ஒவ்வொரு பைசாவையும் எண்ணி செலவு செய்துதான் பழக்கம். எதுவானாலும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க என்பதுதான் நம் காலத்தில் எழுதாத சட்டம்.

அப்புறம் இன்னொண்ணு. இந்தக் காலத்துப் பசங்க காசைத் தொடுவதே இல்லை. எதற்கும் அட்டைகள்தான். காசு எங்கிருந்து, எப்படி வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.

அந்தக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு போவோம். "அரை டவுசர்" என்பது சிறு பையன்களைக் குறிக்கும் சொல். ஒருநாள் ஜவுளிக்கடையில் 70 வயசு கிழவர் முக்கால் பேன்ட் வாங்கிக்கொண்டிருந்தார். என்ன சார், பேரனுக்கா என்று கேட்டேன். இல்லைங்க, எனக்குத்தான் என்றார். அவர் அமெரிக்காவிலிருக்கும் கமனைப் பார்க்கப் போகிறார். அங்கே அதுதான் பேஷனாம்.

அந்தக் காலத்தில முடி வெட்ட காசு இல்லாமல் முடி காடாக வளர்ந்தாருக்கும். இப்ப என்னடா என்றால் அதுதான் பேஷன் என்கிறான் என் பேரன்.

இதுதாங்க தலைமுறை இடைவெளி. இன்னும் என்னென்ன கண்றாவிகளெல்லாம் வரப்போகுதோ, தெரியாது. அதுக்குள்ள போய்ச்சேர்ந்துட்டா பரவாயில்லை.

13 கருத்துகள்:

 1. //அப்புறம் இன்னொண்ணு. இந்தக் காலத்துப் பசங்க காசைத் தொடுவதே இல்லை. எதற்கும் அட்டைகள்தான். //

  பெற்றோரின் வங்கி சேமிப்பை உறிஞ்சும் அட்டைகள்.
  :)

  எந்தக் காலமாக இருந்தாலும் தனிமனித வாழ்கைப் போராட்டம் மற்றும் அவரவர் வயிற்றுக்கு அவரவர் சாப்பிடுவது தவிர்க்க முடியாதது. :)

  பதிலளிநீக்கு
 2. இதுதாங்க தலைமுறை இடைவெளி

  இன்னும் நிறைய பாருங்கள் !

  பதிலளிநீக்கு
 3. இருவரும் எதிர் எதிர் திசையில் போவதால்தான்
  இடைவெளி அதிகரிக்கிறது
  நாம் விலகாது ஒட்டிப் போனால் இடைவெளி குறையத்தான்
  செய்யும் இல்லையா.நான் அதைத்தான் செய்கிறேன்
  அவர்கள் விரும்புகிற அனைத்தையும் புரிந்து கொள்ள விரும்புகிறேன்
  அதனாலோ என்னவோ அவர்கள் என்னை ஒட்டியே வலம் வருகிறார்கள்
  சிந்திக்கத் தூண்டிய பதிவு.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. “பழையன கழிதலும் புதியன புகுதலும்
  வழுவல கால வகையினானே!” என்று தொல்காப்பியமே சொல்கிறது.

  எனவே நாம் இருக்கும் வரை இந்த வேடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான்!!

  பதிலளிநீக்கு
 5. இன்றைய உலகம் இப்படித்தான் உள்ளது
  நாம், நம் வழியில் வாழ்ந்து, வாழ்வு முடியின்
  போவோம் என்பதே என் கருத்து!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. அட ....ரொம்பத் தான் பேராசை உங்களுக்கு !!இன்னும் எவ்வளவு இருக்கு இந்த உலகத்தில ....

  பதிலளிநீக்கு
 7. இழுவையாகயில்லாமல் நறுக்கென்று முடித்துவிட்டீர்கள்.
  (பெரியவர் மகனைப் பார்க்கப் போகிறாரா, 'கம'னைப் பார்க்கப் போகிறாரா?)

  பதிலளிநீக்கு
 8. கிராமத்தில் பிறந்து வளர்ந்த எங்களுக்கும் இதெல்லாம் இன்னும் புதுமையாகவும் வியப்பாகவும் தான் உள்ளது . இப்படியே எங்க காலம் போகும் போல ....

  பதிலளிநீக்கு
 9. ஒன்று நமக்குப் புரிவதில்லை. இன்னொன்று அவர்கள் புரிந்துகொள்ள விரும்புவதில்லை.எஞ்சிய காலம் கிருஷ்ணா, ராமா என்று இருந்து போக முடிவதில்லையே.!

  பதிலளிநீக்கு
 10. இதுதாங்க தலைமுறை இடைவெளி. இன்னும் என்னென்ன கண்றாவிகளெல்லாம் வரப்போகுதோ, தெரியாது. அதுக்குள்ள போய்ச்சேர்ந்துட்டா பரவாயில்லை//// ஐய்யயோ அப்படி எல்லாம் சொல்லப்படாது எங்களுக்கு சுவாரசியமான பதிவுகள் தருவது யாரு. ரசிக்க வேண்டியது தான். என் மகன்கள் எடுக்கும் பென்சில் கட், கிளிந்த கால் சட்டைகள்(புது பாஷன்) எனக்கு பிடிப்பதில்லை. இது தான் பாஷனாம். அம்மா உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கின்றார்கள். கடையில் அவர்கள் துணி எடுக்கும் போது தள்ளி இருந்து அவதானிப்பதும் சட்டைபையை திறைந்து பணம் கொடுப்பது மட்டும் தான் என்னவர் வேலை!

  பதிலளிநீக்கு
 11. அப்படியெல்லாம் போய்ச்சேர முடியாது. அதுக்கும் நேரம் வரணுமுல்லே? அதுவரை நடப்பதை எல்லாம் கவனமாப் பார்த்துவச்சுப் பதிவுகள் போட்டுக்கிட்டு இருங்க:-)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வயசானதுக எல்லாம் வழக்கமா பாடற பாட்டு - யாருக்கும் தொந்திரவில்லாம சீக்கிரம் போய்ச் சேர்ந்துட்டாப் போதும் - ஆனா யமதூதன் வர்ற மாதிரி தெரிஞ்சா ஓடி ஒளிஞ்சுக்குவாங்க. இதுதான் உலக நடைமுறை. நான் மட்டும் எப்படி விதி விலக்காக இருக்கமுடியும்? அப்படி இருந்தா நல்லாயிருக்குமுங்களா?

   பதிவு போடறதுதான் இப்ப முழு நேரத்தொழில். (சாப்பிடற, தூங்கற நேரம் போக)

   நீக்கு