திங்கள், 11 ஜூன், 2012

பதிவர் சந்திப்பின் நோக்கம் என்ன?

11-6-2012:
பின் குறிப்பு - முன்னால் போடப்படுகிறது.
அன்புடைய சக பதிவர்களுக்கு,
யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. சங்கவி மிகுந்த ஆர்வத்துடன் கோவைப் பதிவர் குழுமம் ஆரம்பித்துள்ளார். அவருக்கு எல்லோரும் ஆதரவு அளிப்போம். நான் கடைசி வரை இல்லாமல் இருந்து விட்டு, சகட்டு மேனிக்கு குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பது நியாயமல்ல. குழுமம் வளரவேண்டும் என்பதே என் ஆசை. எல்லோருடைய ஆசையும் அதுவாகத்தான் இருக்கும்.

நடந்தவைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். இன்னும் சங்கவி, குழும சந்திப்பைப் பற்றி பதிவிடவில்லை என்று நினைக்கிறேன். அவர் பதிவிட்ட பின் மற்ற கருத்துகளையும் பரிசீலனை செய்யலாம். 

======================================================================


10-6-2012 அன்று கோவைப் பதிவர் குழுமத்தின் சந்திப்பு நடந்தது. எனக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை. எதிலாவது முதலாவதாக வரவேண்டும் என்பதுதான் அது. அந்த ஆசை நேற்று நிறைவேறியது. லால்குடி ரெஸ்டாரென்ட்டுக்கு நான் 1.35 க்குப் போனேன். நான்தான் முதல் ஆள். அதே மாதிரி எனக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் 4.45 க்கு முதல் ஆளாக வெளியேறினேன். இப்படி இரண்டு சாநனைகளை ஒரே நாளில் நடத்தினேன்.

என் ஆயுளில் அதிக விலையில் சினிமா பார்த்ததும் இந்த சந்திப்பில் நிறைவேறியது. நான் வெளியில் வரும்போது பதிவர் அறிமுகங்கள் ஏறக்குறைய முடிந்து விட்டன. பிறகு நடந்தவைகளை மற்றவர்கள் பதிவில் பார்த்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். நான் எடுத்த சில புகைப்படங்கள்.






பதிவர் குழுமத்தலைவர் சங்கவி அரசியலில் குதிக்கத் தயாராகிறார். (வேஷ்டி சட்டையைக் கவனிக்கவும்) 





ஆங்காங்கே பதிவர் சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் என்ன பலன் என்று யோசித்தால் வெறுமையே மிஞ்சுகிறது.

எனக்கு சில கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் பல அழகான, ஆழமான கருத்துகள் கொண்ட பழமொழிகள் உள்ளன. அதில் ஒன்று "கிழவன் பேச்சு கின்னாரக்காரனுக்கு ஏறுமா" என்பது ஒன்று.

ஏறுகிறதோ இல்லையோ, ஊதுகிற சங்கை ஊதி வைத்தால் விடியறபோது விடியட்டும் என்றபடி என் கருத்துக்களை இங்கே பதிக்கின்றேன்.

1. எந்த ஒரு சங்கமும் தொடர்ந்தும், நீடித்தும் நடக்கவேண்டுமென்றால் பொருளாதார வசதி வேண்டும். பதிவர்கள் எந்த அளவிற்கு இதை வழங்க முடியுமோ அந்த அளவிற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.

2. பதிவர்கள் குழுமத்தின் நோக்கங்கள் தெளிவாகவும் அந்தக் கூட்டத்தினருக்கு பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும். இதை வரையறுக்காமல் எந்த செயலையும் மேற்கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு பதிவர் கூட்டத்தில் சினிமா காட்டுவது தேவையற்ற ஒன்று. நேரத்தை விரயம் செய்யும் செயல்.

3. அகலக்கால் வைத்து தடுமாறுவதை விட மெதுவாகச் செல்வது இலக்கை விரைவில் அடைய உதவும்.

52 கருத்துகள்:

  1. நீங்கள் சொன்ன கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரி! எங்கு சென்றாலும், அந்த சினமா கருமாந்திரைத்தை கொண்டாந்து உயிரை எடுப்பானுங்க! சினிமா பார்க்கணும் என்றால் தியேட்டருக்கு போக வேனடியது தானே!

    ///எதிலாவது முதலாவதாக வரவேண்டும் என்பதுதான் அது. அந்த ஆசை நேற்று நிறைவேறியது. லால்குடி ரெஸ்டாரென்ட்டுக்கு நான் 1.35 க்குப் போனேன். நான்தான் முதல் ஆள். அதே மாதிரி எனக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் 4.45 க்கு முதல் ஆளாக வெளியேறினேன். இப்படி இரண்டு சாநனைகளை ஒரே நாளில் நடத்தினேன்.///


    நான் உங்கள் பதிவை படிப்பதே இந்த குசும்பை (கோவை குசும்பு!) நினைத்துத்தான்! அதென்ன "லால்குடி ரெஸ்டாரென்ட்!"

    நம்ம பழைய திமுக அமைச்சர் நேரு வோட சொந்த ரெஸ்டாரென்ட்டா? இப்ப இந்த வேலையில் இறங்கி விட்டாரா?

    இருந்தாலும் நாம் தைரிய லட்சுமியின் கொடுமைகள்....ஓவராத்தான் இருக்கு! பாவம் நேரு!

    பதிலளிநீக்கு
  2. இணையத்தில் இருப்பவர்களை இதயங்களால் இணைக்க செய்யும் முயற்சிதான் இந்த பதிவாளர்கள் சந்திப்பு என நான் நினைக்கிறேன். கருத்துக்களால் வேறுபட்டு இருந்தாலும் நாங்கள் பதிவாளர்கள் என்ற முறையில் நாங்கள் நண்பர்களே என்பதை உலகுக்கு காட்டும் ஒரு சிறு முயற்சியாக இதை பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கோவை பதிவர் சந்திப்பினைப் பற்றிய பதிவு அருமை. சங்கவியின் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். தங்களின் ஆலோசம்னைகளைக் கருத்தில் கொள்ளலாம். முகம காணாது - இணையத்தில் நட்பு பாராட்டும் நண்பர்கள் கூடி மகிழ் இச்சந்திப்புகள் உதவும். - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கருத்தை முற்றும் நான் ஏற்றுக் கொள்கிறேன்!

    பதிவர்களுக்கென்று,ஒரு குறிக்கோள்,கொள்கை, அமைப்பு, பொருளாதார வசதி
    கண்டிப்பாகத் தேவை!
    ஏதோ கூடிக்கலையும் ஒன்றாக இல்லாமல் பயன் தரும் வகையில் அமைய வேண்டும் என்பதே என ஆசை! எதிர் காலமாவது இதற்கு வழி காட்டுமா...?

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. உங்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும்

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே....!இருந்தாலும் நாம் தவழும் குழந்தை மெல்ல..மெல்ல...நடை போடுவோம்!

    நாம் கற்றுக் கொண்ட பாடம்

    1.இனி ஹால் கிடைத்த பிறகுதான் தேதியை முடிவு செய்யவேண்டும்.
    2.இரவே சென்று ஆடியோ சிஸ்டத்தை சோதித்திருக்க வேண்டும்.
    3. முடிந்த அளவு 4மணிக்குள் குறைந்த பட்சம் 3மணி நேரத்தில் சந்திப்பை நிறைவு செய்ய வேண்டும்

    மற்றபடி சந்திப்பு நிறைவாக இருந்தது...உங்களின் பங்களிப்புக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. பதிவர்கள் சந்திப்பு என்பது முதலில் முகம் பார்க்காமல் இணையத்தில் அண்ணன், தம்பி, சகோதரி, மாப்ள, மச்சி, மாம்ஸ், அப்படின்னு பழகிக் கொண்டிருக்கும் நண்பர்கள் நேரில் சந்தித்தால் அவர்களை பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்பு தோன்றுமே. அதை அனுபவித்தால் தான் தெரியும்.

    முதல் சில சந்திப்புகள் நீங்கள் சொல்கிற மாதிரி பயனுள்ளவையாக இல்லா விட்டாலும், அடுத்தடுத்து சந்திப்புகளை பயனுள்ளவையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

    உலக படம் சிறந்த படமாக இருந்தாலும் எல்லோராலும் அதன் அலை ஓட்டத்தில் பயணம் செய்ய முடியாது. ஆகையால் சிலருக்கு உலக படங்களை தவிர்க்க தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பாக்கறதுக்காகவா பதிவர்கள் நேரத்தை செலவு செய்வது? வெகு சிரமப்பட்டு, செலவு செய்து, முப்பது பதிவர்களைக்கூட்டி வைத்துக்கொண்டு ஒண்ணேமுக்கால் மணி நேரம், பத்து நிமிஷத்திற்கொரு இன்டர்வல் விட்டுக்கொண்டு நேரத்தை வீண் செய்த குற்றத்தை மன்னிக்கவே முடியாது. படம் பார்க்க வேண்டுமென்றால் அவரவர்கள் சி.டி. வாங்கி வீட்டில் சௌகரியமாகப் பார்த்துக்கொள்ளலாம். அல்லது தியேட்டர் செல்ல விருப்பமுள்ளவர்கள் தியேட்டருக்குச் செல்லலாம். பதிவர் சந்திப்பு சினிமா பார்க்கவா? அப்புறம் எப்பொழுது பதிவர் குழுமத்தான் குறிக்கோள்களைப் பற்றி விவாதிப்பது?

      நீக்கு
    2. முப்பது பதிவர்களை சிரமப்பட்டு கூட்டியது சினிமா பார்க்கவா? அதுக்கு வீட்டிலேயே இருந்திருக்கலாமே?

      நீக்கு
    3. திரைப்படம் உயர்திரு பாஸ்கரன் அவர்களின் பங்களிப்பு! தன் செலவில் செய்வதாக ஆர்வத்துடன் கேட்டார் அதனால் மறுக்கமுடியவில்லை! அந்த திரைப்படம் உலகஅளவில் பலவிருதுகளை வாங்கிய பலரின் பாராட்டைப் பெற்ற! நாம் இணையத்தில் தேடினாலும் கிடைக்காத திரைப்படம். திரையரங்கிலும் வராது இந்த மாதிரி நிகழ்வுகளில் கண்டால்தான் உண்டு....திருப்பூர் புத்தக கண்காட்சியில் பதிவர்களின் குறும்படம், உலக திரைப்படம் என தினம் மூன்று திரைப்படங்கள் திரையிடுகிறார்கள்...புத்தகம் விற்கும் இடத்தில் எதற்காக திரையிடுகிறார்கள்....?

      நீக்கு
  8. பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் . பிறகு அதை பயனுள்ளதாக மாற்ற முயற்சிக்கலாம் .

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. சார் வணக்கம் ,

    ""என் ஆயுளில் அதிக விலையில் சினிமா பார்த்ததும் இந்த சந்திப்பில் நிறைவேறியது""

    நல்லா கிண்டல் அடிகிறீங்க சார் .

    ஆங்காங்கே பதிவர் சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் என்ன பலன் என்று யோசித்தால் வெறுமையே மிஞ்சுகிறது.

    அது உங்கள் கருத்து என்று நினைக்கிறேன் சார்.உலகில் எந்த செயலையும் பலனுள்ளவையாக ஏற்றுகொள்வது நம் திறமையில் உள்ளது .

    பதிலளிநீக்கு
  11. உங்களின் எண்ணங்களை கொட்டித்தீர்த்தமைக்கு நன்றி...

    அதையும் கருத்துரையில் நண்பர் ஒருவர் எள்ளி நகையாடிய விதம் மிக அருமை.

    அடுத்த பதிவர் சந்திப்பில் உங்கள் எண்ணங்கள் நிறைவேற முயற்சி செய்யலாம்

    நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  12. அன்பின் ஐயா...

    உங்கள் எண்ணங்களை கொட்டித்தீர்த்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்..

    அதிலும் நண்பர் ஒருவர் கருத்துரையில் எள்ளி நகையாடிய விதம் அருமை. ( !! )

    எனினும் உங்களின் எண்ணங்கள் அடுத்த முறை சரிசெய்யப்படும்

    நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  13. @ ராஜராஜேஸ்வரி மேடம்..

    //// முப்பது பதிவர்களை சிரமப்பட்டு கூட்டியது சினிமா பார்க்கவா?
    அதுக்கு வீட்டிலேயே இருந்திருக்கலாமே?நேரத்தை போக்க பதிவர் சந்திப்பா!!! ////

    அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  14. உலக சினிமா என்ற போரடிக்கும் 1.30 மணிநேர நிழ்வுடன் துவங்கியது கோவை வலைப்பதிவர் குழுமம். எப்படா முடியும் என்று மனதுக்குள் அளுத்துக்கொண்டேன். ஆனால் புரியாமல் 1.30 மணிநேரம் ஓடிக்கொண்டிருந்த படத்துக்கு உலக சினிமா ரசிகன் தந்த 2 நிமிட விளக்கம் மிக அருமை. இப்போது மீண்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

    திரைப்படம் பதிவர் சந்திப்புக்கு முன்னான நிகழ்ச்சி. அது 3 மணியை கடந்திருக்ககூடாது.

    திரைபடம் நீண்டுகொண்டு போரடிக்க, புறியாமல் போக காரணம் மைக்செட் குளறுபடி தான். அதற்காக தான் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்று நினைக்கிறேன். பரவாயில்லை.

    ஆனாலும் பேராசிரியர் அவர்களின் ஆலோசனைகள் கவனிக்கப்பட வேண்டியது. பல்வேறு பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி கூடும் ஒரு கூட்டம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பல்வேறு பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி கூடும் ஒரு கூட்டம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.//

      என்னுடைய ஆதங்கமே இதுதான்.

      நீக்கு
  15. அன்பின் ஐயா..

    தங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி

    சங்கவி அண்ணன் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஈரோடு சென்றிருப்பதால் அவரால் பதிவிட முடியவில்லை.

    தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  16. சார் ஒரு சொல் உண்டு .
    ""குறைகளை எங்களிடம் கூறுங்கள் .நிறைகளை நண்பர்களிடம் கூறுங்கள் ""
    ஒரு சக பதிவராக .எங்கள் மூத்தவராக உங்களுக்கு குறைகளை சுட்டிகாட்ட எல்லா உரிமையும் இருக்கிறது .
    இதுநம்ம வீட்டு விசேஷம்.
    நீங்கள் எழுதியதை விட நம் சங்கமத்தில் என்ன நடந்தது என்றே தெரியாமல் சிலர் எள்ளி நகையாடிய விதம் மிகுந்த மன வருத்தத்தை அளித்தது .
    நேற்று நடந்தது முதல் படி தான். தவறு என பட்டால் நாம் கலந்து பேசலாம் .

    நட்புடன் ,
    கோவை சக்தி

    பதிலளிநீக்கு
  17. ஒருவருடைய ஆர்வத்தையோ, முயற்சியையோ ஆதரிக்காவிட்டாலும், பொதுவெளியில் கருத்தை பகிர்வது சங்கடத்தையே உருவாக்கும், இதனை தாங்கள் குழும மெயிலிலேயே தெரிவித்து இருக்கலாமே, இரண்டு நாட்கள் முன்னதாகவே நிகழ்ச்சி நிரல் வெளியிட்டு இருந்தார்கள், விருப்பம் இல்லாவிடில் அந்த நேரத்தை தாங்கள் தவிர்த்து இருக்கலாம், பொதுவில் நீங்கள் ஒரு கருத்தை சொன்னதால், நானும் என்னுடைய கருத்தினை சொன்னேன், உங்கள் மனம் புண்படுவதற்காக அல்ல, மன்னிக்கவும், குறைகள் நம் உள்ளேயே தீர்க்கப்பட வேண்டும், பொதுவில் அல்ல என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
  18. பதிவுலகில் பொது, தனி, என்ற பாகுபாடு இல்லையென்பது என் கருத்து. நாம் பதிவு போடுவதே பொது வெளியில்தான். இதில் மூடி மறைக்க ஒன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விருப்பம் இல்லாவிடில் அந்த நேரத்தை தாங்கள் தவிர்த்து இருக்கலாம்,//

      இந்த நிலைப்பாடு குழுமத்தின் வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும்.

      நீக்கு
    2. ///பதிவுலகில் பொது, தனி, என்ற பாகுபாடு இல்லையென்பது என் கருத்து. நாம் பதிவு போடுவதே பொது வெளியில்தான். இதில் மூடி மறைக்க ஒன்றும் இல்லை./// அப்புறம் எதனால் தாங்கள் குருப் மெயில் வேணாம் என்று சொல்லி வெளியேறினீர்கள்...?

      நீக்கு
    3. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்க மூன்று மணிக்கு மேலே வந்து இருக்கலாமே..ஏன் முதல் ஆளா (நீங்க சொன்னது )வந்தீங்க..?நாங்க தான் தெளிவாய் சொன்னேமே... இரண்டு டு மூணு மணி திரைப்படம் என்று..

      நீக்கு
    4. ஒத்துக் கொள்கிறேன் ஐயா, ஆனால் நான் குறிப்பிட்டது உங்களுக்கு அந்த நிகழ்வில் சினிமா பிடிக்காத காரணத்தினால் அந்த நேரத்தை தவிர்க்கலாமே என்றுதான் கூறினேன், மற்றபடி உள்காரணம் ஒன்றும் இல்லை

      நீங்கள் பெரியவர், குழுமத்தில் மூத்தவர், குழுமத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்யலாம் என நீங்கள் முன்னுதாரணமாக அறிவுறுத்தி இருக்கலாம், குழுமத்தின் அனைத்து உறுப்பினர்கள் தலைவரே என்று ஆன பிறகு உங்களது கருத்துக்களை குழுமத்திலேயே சொல்லி வழிநடத்தி இருக்கலாமே ஐயா, பெரியவர்களுடைய வழிகாட்டுதலும், ஆலோசனைகளையும் கண்டிப்பாக குழுமத்திற்கு தேவை, அதை யாரும் நிராகரிக்க போவதில்லை, உங்க்ளது கருத்துக்களை பொதுவில் தெரியப்படுத்தி என்னதென்றே தெரியாமல் நண்பர்கள் எள்ளி நகையாடுவது வருத்தத்தையே தருகீறது

      நீக்கு
    5. //பதிவுலகில் பொது, தனி, என்ற பாகுபாடு இல்லையென்பது என் கருத்து. நாம் பதிவு போடுவதே பொது வெளியில்தான். இதில் மூடி மறைக்க ஒன்றும் இல்லை.//

      ஒரு வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை அந்த வீட்டில்தான் பேசி தீர்க்க வேண்டும், பிரச்சனைதானே அது வீட்டில் நடந்தால் என்ன? வீதியில் நடந்தால் என்ன? என்று செயல்பட்டால் கெடப்போவது வீட்டின் மானம்தான், இது என்னுடைய தாழ்மையான கருத்து

      நீக்கு
  19. சமூக அக்கரை, விழிப்புணர்வு இவையும் வலைப்பதிவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வலைப்பதிவு என்பது ஒரு மாற்று ஊடகமாக உருமாறி கொண்டிருக்கும் வேளையில் சில வலைப்பதிவர் சந்திப்புகள் என்பது உண்மையில் நண்பர்கள் சந்திப்பாக முடிந்து விடுகின்றது. வலைப்பதிவர்கள் அங்கீகரிக்கபட்ட குழுவாக கூட வேண்டும். தங்கள் பெருமைகளை பாராட்டாது ஒரு குழுவாக ஒற்றுமையாக செயல்படும் சூழல் உருவாக வேண்டும். வலைப்பதிவர் கூடலில் தங்களுக்கு வேணாதவர்களை ஒதுக்கும் தளமாகவும் பார்க்கபப்டுகின்றது. தனி நபர்கள் ஒழுங்கு படுத்தாது ஒரு blogger association முன் நின்று செய்ய வேண்டும் என்பதே என் ஆவல்!

    பதிலளிநீக்கு
  20. ///லால்குடி ரெஸ்டாரென்ட்டுக்கு நான் 1.35 க்குப் போனேன். நான்தான் முதல் ஆள். அதே மாதிரி எனக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் 4.45 க்கு முதல் ஆளாக வெளியேறினேன்.///
    வந்தது சத்தியமா நீங்க முதல் ஆள் இல்ல...ஆனா போனதுல நீங்க தான் பர்ஸ்ட் ...

    பதிலளிநீக்கு
  21. ///என் ஆயுளில் அதிக விலையில் சினிமா பார்த்ததும் இந்த சந்திப்பில் நிறைவேறியது//
    ஒருவேளை ரேஸ்கோர்ஸ் இல் பதிவர் சந்திப்பு நடக்கும்போது படம் காட்டியிருந்தால் அப்படியே ப்ளேட் மாத்தி எழுதி இருப்பீங்க தானே.///என் ஆயுளில் இலவச விலையில் சினிமா பார்த்ததும் இந்த சந்திப்பில் நிறைவேறியது//.. எப்படியோ நாங்க உங்களுக்கு படம் காட்டிட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எப்படியோ நாங்க உங்களுக்கு படம் காட்டிட்டோம்//

      அர்த்தம் வேறு மாதிரி தொனிக்கிறதே? படம் காட்டுவது என்பதற்கு கோவை வட்டாரத்தில் என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

      நீக்கு
    2. அன்பின் ஐயா

      ///
      படம் பாக்கறதுக்காகவா பதிவர்கள் நேரத்தை செலவு செய்வது? வெகு சிரமப்பட்டு, செலவு செய்து, முப்பது பதிவர்களைக்கூட்டி வைத்துக்கொண்டு ஒண்ணேமுக்கால் மணி நேரம், பத்து நிமிஷத்திற்கொரு இன்டர்வல் விட்டுக்கொண்டு நேரத்தை வீண் செய்த குற்றத்தை மன்னிக்கவே முடியாது. ////

      உங்களிடம் நேரிடையாய் ஓர் கேள்வி..

      நிகழ்ச்சியில் படம் ஒளிபரப்பப்படும் என்பது முதலிலேயே உங்களுக்கு தெரியுமா ? ? அல்லது தெரியாதா ??

      அப்படியே தெரியாவிட்டாலும் படம் காட்டுவதில் என்ன மன்னிக்க முடியாத குற்றம் கண்டுவிட்டீர்கள்

      நீக்கு
    3. தெரிந்துதான் வந்தேன். ஆனால் படம் காட்டின விதத்தை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். சந்திப்பின் நோக்கம் படம் பார்ப்பது மட்டுமா? எல்லோரும் வந்து சேருவதற்கான யுத்தி அது. ஒன்றரை மணி நேரம் செலவழித்து படத்தை முழுதாகப் பார்த்தோமா? இடையில் எவ்வளவு தடங்கல்கள். நேரத்தை வீண் செய்தது குற்றம் இல்லையென்றால் அப்புறம் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.

      நீக்கு
    4. ///தெரிந்துதான் வந்தேன். ////

      இந்த ஒரு வார்த்தை போதும் ஐயா..

      நன்றி
      சம்பத்குமார்

      நீக்கு
  22. ///உதாரணத்திற்கு பதிவர் கூட்டத்தில் சினிமா காட்டுவது தேவையற்ற ஒன்று. நேரத்தை விரயம் செய்யும் செயல்.///
    ஒருவேளை படம் போடாமல் இருந்து இருந்தால் நீங்கள் கூட்டம் முடியும் வரை இருந்து இருப்பீங்களா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் போடாமல் இருந்திருந்தால் அந்த நேரத்தில் பயனுள்ள பல விஷயங்களப் பேசி இருக்கலாம். நான் சென்றது என் சொந்த வேலை காரணமாக. அதை நான் வந்தவுடனே சங்கவியிடம் சொல்லிவிட்டேன்.

      நீக்கு
  23. வணக்கம் ஐயா தாங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...


    ///1. எந்த ஒரு சங்கமும் தொடர்ந்தும், நீடித்தும் நடக்கவேண்டுமென்றால் பொருளாதார வசதி வேண்டும். பதிவர்கள் எந்த அளவிற்கு இதை வழங்க முடியுமோ அந்த அளவிற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.///

    நிச்சயம் கட்டுப்படுத்த வேண்டும்...

    தங்கள் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களின் வழிநடத்தலோடு இனி வரும் நிகழ்வுகள் இருக்கும்...



    //2. பதிவர்கள் குழுமத்தின் நோக்கங்கள் தெளிவாகவும் அந்தக் கூட்டத்தினருக்கு பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும். இதை வரையறுக்காமல் எந்த செயலையும் மேற்கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு பதிவர் கூட்டத்தில் சினிமா காட்டுவது தேவையற்ற ஒன்று. நேரத்தை விரயம் செய்யும் செயல்.//

    இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசும் போதே குறிப்பிட்டேன் இது நமது முதல் சந்திப்பு பரஸ்பர அறிமுகம் அடுத்த நமது இலக்கு என்னவாக இருக்கவேண்டும் என்று அனைவரையும் பேசச்சொன்னோம்.. நமது இக்குழும சந்திப்பில் நம்மாள் முடிந்தவரை அண்ணன் யோகநாதனுக்கு 150 மரக்கன்றுகளும் மகி மகேந்திரன் அவர்களுக்கு 50 மரக்கன்றுகளும் அளித்தோம்.. அப்போது நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்...

    நிகழ்ச்சி நிரலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் நிகழ்ச்சி ஆரம்பம் 3 மணிக்குத்தான் என்று... 2 முதல் 3 வரை பாஸ்கரன் அவர்கள் அவருடைய சொந்த முயற்சியில் ஓர் அற்புதமான திரைப்படத்தை திரையிட்டார் இது அவரை ஊக்குவிக்கும் எண்ணம் மட்டுமே..

    மற்றபடி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  24. வேஷ்டி கட்டியவர் அரசியல் வாதியா...எனக்கு விளங்க வில்லை...ஒரு அரசியல் வாதியை போல் எனக்கு பிடிக்கவில்லை என்ற மனோபாவத்தில் நிகழ்ச்சியின் இடையே வெளிநடப்பு செய்வது ? ... ஒரு நிகழ்ச்சியின் முழுமையாக இருந்து அதில் உள்ள குறைகள் அல்லது நிறைகளை சுட்டிகாட்டுவது ஒரு சிறந்த விமர்சனமாக இருக்கும் என கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடையில் வெளியேறினால் நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. நான் வந்ததுமே சங்கவியிடம் நான் சொந்த வேலை காரணமாக 4.45க்குப் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். அதனால்தான போக நேர்ந்தது.

      நீக்கு
  25. சாமி சார்,

    கல்லூரியில் முதல் நாள் பாடம் எடுக்காமல் மாணவர்கள்,பேரு,ஊருனு கேட்டுட்டு அன்று சும்மா விடுவதில்லையா,அது போல முதல் பதிவர் சந்திப்பை ஃபிரியா வச்சுக்கலாம்னு படம் காட்டியிருக்கலாம்.

    அதிக விலைக்கொடுத்து பார்த்த படம்னு சொல்லியிருக்கீங்க, காசு வாங்கிட்டாங்களா படத்துக்கு? பதிவர் சந்திப்பில் படம் போடுவதாய் இருந்தால் இலவசமா போடணும்னு ரூல்ஸ் போடணும் அப்போ.

    ஷஷாங்ஸ் ரிடெம்ப்ஷன், பேட்டில் ஷிப் போடொம்ஸ்கின் போன்ற கிளாசிக் படங்களை போட்டா எப்போ வேண்டுமானாலும் பார்க்கலாம். அசித்,விசய் படங்களைப்போட்டால் சொல்லுங்க நானே பஸ் புடிச்சு வந்தாவது சண்டைப்போடுறேன் :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வவ்வால் அவர்களே, இது முதல் சந்திப்பு அல்ல. முதல் சந்திப்பில், அடுத்த சந்திப்பில் செயல் திட்டம் தீட்டுவோம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் ஆக்க பூர்வமாக நமது குழுமத்தின் நோக்கத்தை வரையறுத்தோமா? கூடுவதும் கலைவதுமாக இருப்பதுதான் குழுமத்தின் நோக்கமா?

      படத்துக்குன்னு காசு வாங்கலைதான். அந்த நேரம் வீணாகிப்போனது இழப்புதானே. பதிவர் சந்திப்பு படம் பார்க்கத்தான் என்றால் அத்தகைய சந்திப்பில் கலந்து கொளவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது பதிவர் சந்திப்பும் இல்லை.

      நீக்கு
  26. நீங்கள் சொன்னது 100 சதம் சரியே அய்யா. ஒருவருக்கு உலகப் படம் பிடிக்கும் அதனால் அவர் ஒன்றரை மணி நேரத்தைக் கொல்வார். மற்றவருக்கு உலக சிறு கதை பிடிக்கும், மற்றொருவருக்கு உலக கவிதை பிடிக்கும். அதற்காக ஒரு மணி நேரம் கதையையும் கவிதையும் மேடையில் படித்துக் கொண்டிருந்தால் என்ன ஆவது?

    உங்கள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கேலி செய்யும் பின்னூட்டங்கள் வருத்தமளிக்கின்றன. படம் பார்ப்பதற்கு மட்டும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து அதைச் செய்யலாம். பதிவையும் படிக்காமல் பின்னூட்டம் இடுகிறார்கள், நீங்கள் நிகழ்ச்சி பிடிக்காமல் வெளியேறினீர்கள் என்று சொல்லவேயில்லை, ஆனால் ஒரு பின்னூட்டம் அப்படி இருக்கிறது. குறையாகப் பட்டதை பொதுவில் சொன்னால் என்ன தனியாகச் சொன்னால் என்ன? சொன்ன கருத்தை மட்டும் பார்க்கலாமே.

    சங்கவியின் முதிர்ந்த பதிலுக்கு நன்றிகள்.

    //அவருடைய சொந்த முயற்சியில் ஓர் அற்புதமான திரைப்படத்தை திரையிட்டார் இது அவரை ஊக்குவிக்கும் எண்ணம் மட்டுமே..// எனக்கு சில அற்புதமான எத்தியோப்பிய சிறுகதைகள் பிடிக்கும். அதனால் நான் ஒரு மணி நேரம் எத்தியோப்பிய மொழி சிறு கதையை வாசிக்க வேண்டும். அதை எல்லோரும் கேட்க வேண்டும். ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்...

      அடுத்த சந்திப்பில் நிச்சயம் உங்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கித்தருகிறோம்... வந்து கதை சொல்லுங்க கேட்டுட்டாப்போச்சு...

      நீக்கு
  27. வவ்வால்,

    கல்லூரி முதல் நாளும் பதிவர் சந்திப்பும் ஒன்றா? கல்லூரிக்கு வகுப்பு போல தினமும் பதிவர் சந்திப்பு நடத்த முடியுமா? மேலும் கல்லூரியில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே ஏஜ் குரூப்பில் இருப்பவர்கள். பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம். அந்த சமயத்தில் பொதுவான அஜென்டாக்கள் வைப்பதே நல்லது. உலக படங்கள் இந்த நிகழ்வில் திரையிடப் படுவது சாமி அய்யா சொன்னது போல நேரத்தை வீணடிப்பது தான். அவர் சொன்னதில் 100% உடன் படுகிறேன். நிகழ்ச்சி 3 - 6 தான். படம் போட்டது 2 - 3 தான் என்பதெல்லாம் சமாளிப்புகளே. அந்த நேரத்தையும் உபயோகமாக எதற்காகவாவது கலந்தாலோசனை செய்தல் போன்றவைகளைச் செய்திருக்கலாமே.

    மரம் வழங்கியது போன்றவை நல்லது தான். அனாலும் படம் திரையுதலைத் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம் வருவதை மறுப்பதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  28. ///இது முதல் சந்திப்பு அல்ல. முதல் சந்திப்பில், அடுத்த சந்திப்பில் செயல் திட்டம் தீட்டுவோம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் ஆக்க பூர்வமாக நமது குழுமத்தின் நோக்கத்தை வரையறுத்தோமா? கூடுவதும் கலைவதுமாக இருப்பதுதான் குழுமத்தின் நோக்கமா?///

    நீங்க இல்லாத போது என்னென்ன நடந்தது என்று தெரியுமா..

    நமது இக்குழும சந்திப்பில் அண்ணன் யோகநாதனுக்கு 150 மரக்கன்றுகளும் மகி மகேந்திரன் அவர்களுக்கு 50 மரக்கன்றுகளும் அளித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரக்கன்றுகள் கொடுக்கப்போவது நிகழ்ச்சி நிரலில் இருந்தது. அது நடக்கும் என்பதுவும், நடந்தது என்பதுவும் தெரியும். மரக்கன்றுகள் கொடுத்தது குழுமத்தின் திட்டங்களில் எப்போதாவது பேசியிருக்கிறோமா? கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல், இந்த மரக்கன்றுகளுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? பதிவர்கள் கொடுத்ததுதானே. இதனால் குழுமத்திற்கு என்ன பலன்? சமூக சேவை செய்யலாம்தான். எப்போது? பணம் அதிகமாக இருக்கும்போது. குழுமத்திடம் அப்படி பணம் அதிகமாக இருக்கிறதா?

      நான் முன்னால் போனதைப்பற்றி பேசுவது வாதத்திற்கு வலு சேர்க்காது.

      நீக்கு
  29. அன்புள்ள அமர பாரதி,
    2 - 3 க்குள் படம் போட்டு முடித்திருந்தால் பிறகு சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்திருந்திருக்கலாம். படம் நல்ல படம்தான். ஆனால் படம் ஆரம்பித்தது 2.20 க்கு. DVD பிளேயர் சரியில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை நின்று போயிற்று. அதை சரி செய்து, FF பண்ணி, விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க இன்னொரு பத்து நிமிடம். இப்படி ஐந்தாறு தடவை நடந்து, வந்திருந்தவர்கள் எல்லாம் சலிப்படைந்து, அப்புறம் படம் போட்டவரே படத்தைப் பாதியில் நிறுத்தி, கதைச்சுருக்கம் சொல்லி முடித்தார். ஒரு நல்ல மனநிலையில் ஆரம்பித்திருக்கவேண்டிய கூட்டத்தை இம்மாதிரி சொதப்பலில் ஆரம்பித்தது மகா கொடுமை.

    இதை எடுத்துக் கூறினால் அதன் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு விதண்டாவாதம் செய்கிறார்கள். என்னைப்பற்றி குறை கூறுவதோடு, தங்கள் குறைகளையும் ஆராய்ந்தால் குழுமம் சிறக்கும். "அது எல்லாம் எங்களுக்குத் தெரியும்" என்று சொல்பவர்களோடு நான் கருத்துப் பரிமாற்றம் செய்ய விரும்பவில்லை.

    பதிலளிநீக்கு
  30. மதிப்பிற்குரிய ஐயா நீங்கள் குழுமத்தின் மூத்தவர். உங்கள் பங்களிப்பு மிக முக்கியமானது. உங்கள் கருத்துக்களை குழுமம் நிச்சயம் பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். குழுமம் செயல்பாடு குறித்த ஆலோசனைகளை எனது பதிவில் பகிர்ந்துள்ளேன்.

    http://tamilmalarnews.blogspot.in/2012/06/blog-post_12.html

    உங்களது ஆலோசனைகளையும் பகிருங்கள். இணையம் மூலமாகவே விவாதித்து குழுமத்தை முழுமையடைய செய்வோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அதைத்தான் முழு மனதுடன் விரும்புகிறேன். என் பதிவின் நோக்கமும் அதுவேதான். ஆனால் என் கருத்துகளை பல விதத்தில் விமரிசித்து பின்னூட்டங்கள் போடும்போது அவற்றிற்குப் பதிலளிக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறதல்லவா?

      குழுமப் பொறுப்புகளில் ஈடுபட்டுள்ள இளம் நண்பர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்பது என் அபிப்பிராயம்.

      முக்கிய பொறுப்பிலுள்ளவர்கள் தனியாகக் கூடி குழுமத்தை எவ்வாறு வழிநடத்தலாம் என்று ஆலோசித்தால் நல்மாக இருக்கும். விவாதத்தை வளர்த்திக்கொண்டு போவதில் யாருக்கும் பலனில்லை. பின்னூட்டம் போடப்பட்டால் அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. ஏனென்றால் என் மீது ஒரு குற்றம் சுமத்தப்படும்போது நான் பதிலளிக்காமல் இருந்தால் அந்த்க்குற்றத்தை ஒப்புக் கொண்டவனாகிறேன். உண்மையாக நான் குற்றம் ஏதாவது செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

      விவாதங்கள் மனக்கசப்பைத்தான் வளர்க்கின்றன என்று நான் கருதுகிறேன். இதற்கு மேலும் யாராவது என் மீது குற்றம் சொல்லி பின்னூட்டம் போட்டால் அதற்குப் பதிலளிப்பேன். இத்துடன் இந்த விவாதத்தை நிறுத்திவிட்டால் மேலும் மேலும் மனக்கசப்பு வளர்வதைத் தடுக்கலாம்.

      நீக்கு