திங்கள், 25 ஜூன், 2012

ஆபீசர்ஸ் கிளப் ஆண்டுவிழா

கோவை விவசாயக்கல்லூரி வளாகத்தில் வெள்ளைக்காரன் காலத்தில் ஆரம்பித்த ஆபீசர்ஸ் கிளப் ஒன்று இருந்தது. சமீபத்தில் அதை மூடி விட்டதாகக் கேள்விப்பட்டு வருந்தினேன். இங்கிலாந்தில் இந்த மாதிரி கிளப்புகள் பிரபலம். ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி கிளப் வைத்திருப்பார்கள். மெசானிக் கிளப் என்று நம் ஊரில் இப்போது இயங்கும் (முகமூடிக் கொள்ளையர்கள் மாதிரி நடு ராத்திரியில் கூடுவார்கள்) அங்கிருந்து இறக்குமதியான சரக்குதான்.

எங்கள் ஆபீசர்ஸ் கிளப்புக்கு பெரிய பாரம்பரியம் உண்டு. அதில் ஒன்று ஆண்டு விழா கொண்டாடுவது. ஆண்டு விழாவிற்கென்று ஒரு மாத்திற்கு முன்பிருந்தே விளையாட்டுப்போட்டிகள் நடக்கும். டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கேரம்போர்டு, செஸ் இத்தியாதிகள். ஆண்டு விழாவில் இந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்படும். இது ஒரு பெரிய செலவாகும். அடுத்ததாக ஒரு டிராமா போடுவார்கள். அதற்கும் செலவு பிடிக்கும். அப்புறம் ஒரு டின்னர்.

ஆண்டு விழாவிற்கென்று ஒரு கமிட்டி போடப்படும். மொத்தம் இவ்வளவு ரூபாய் பட்ஜெட் என்று ஒரு தொகை ஒதுக்கப்படும். அதற்குள் இந்த செலவுகளையெல்லாம் அடக்கிக்கொள்ள வேண்டும். கமிட்டி மீட்டிங்க் நடக்கும்போது இந்தப் பட்ஜெட்டைப் பிரித்துக்கொள்வதில் அடிதடி சண்டைகூட நடக்கும். பொதுவாக இந்த டிராமாக்கார ர்கள்தான் அதிகப் பணம் வேண்டுமென்று சண்டை அதிகமாகப் போடுவார்கள்.

இவர்களைக் கண்டால் மற்றவர்களுக்கெல்லாம் எரிச்சல். ஏனென்றால் ரிகர்சல் போடுகிறோம் என்று அடிக்கடி கிளப் செலவில் டிபன் காப்பி சாப்பிடுவார்கள். அந்த வருடம் இவர்களை எப்படியும் மட்டம் தட்டுவது என்று எல்லோரும் ஏகமனதாக முடிவு செய்திருந்தோம்.

முதல் மீட்டிங்கில் விவாதம் தொடங்கியது. ஒவ்வொரு குழுவிற்கும் தொகை பிரித்து வழங்கப்பட்டது. டிராமாக்காரர்களுக்கு வேண்டுமென்றே குறைவான தொகை கொடுக்கப்பட்டது. ஏகப்பட்ட சத்தம். அவர்களுக்கு மட்டும் எதற்கு அவ்வளவு, எங்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறீர்கள், இப்படி தலைக்குத்தலை குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தார்கள்.

இரு குறிப்பிட்ட ஐட்டத்திற்கு இவ்வளவு தொகை அதிகம், அதை நீக்கி விடலாம் என்று டிராமாக்காரர்கள் ஒரேயடியாய்க் குதித்தார்கள். எல்லோருக்கும் ஒரே எரிச்சல். எப்படியாவது மீட்டிங்கை முடித்துவிடவேண்டும் என்று எல்லோரும் ஆசைப்பட்டார்கள்.

அப்பாது நான் சொன்னேன். அந்த ஒரு ஐட்டத்தை நீக்கினால் இவ்வளவு பணம் மிச்சமாகிறது என்று சொன்னீர்களல்லவா? இந்த ஆண்டு விழாவையே நிறுத்தி விட்டால் எல்லாப் பணமும் மிச்சமாகுமல்லவா? என்று ஒரு போடு போட்டேன். எல்லோரும் இருந்த மன நிலையில் இந்த ஐடியாவை எல்லோரும் ஆமோதிக்க அந்த வருட ஆண்டு விழா வெற்றிகரமாக கேன்சல் செய்யப்பட்டது.

9 கருத்துகள்:

  1. எல்லோரும் இருந்த மன நிலையில் இந்த ஐடியாவை எல்லோரும் ஆமோதிக்க அந்த வருட ஆண்டு விழா வெற்றிகரமாக கேன்சல் செய்யப்பட்டது.

    பயனுள்ள பகிர்வு!

    பதிலளிநீக்கு
  2. நீங்க ஆண்டுவிஆவே வாணாம்னு கோடு போட்டதை வச்சு ஆஃபீசர்ஸ் கிளப்பே வாணாம்னு ரோடு போட்டுட்டாங்க போலிருக்கு.

    அன்புடன்,
    டோண்டு ரகவன்

    பதிலளிநீக்கு
  3. அது சரி...
    ஆட்டையை காலி பண்ணிட்டீங்க.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு