புதன், 13 மார்ச், 2013

6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.

(இந்தத் தொடர் முற்றிலும் கற்பனையே. சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே.)

மறுநாள் எழுந்தவுடன் மந்த்ராலோசனை சபை கூடியது. சபை என்றால் நான், பொது மற்றும் செக்கு மட்டும்தான்.

பொது= நான் நேற்று சொன்ன மேட்டரைப் பற்றி சிந்தித்தீர்களா என்றான். பொது, அவசரப்படாமல் நாம் காய்களை நகர்த்தவேண்டும், அவசரப்பட்டால் மும்மூர்த்திகள் நம்மைக் காலி பண்ணிவிடுவார்கள். நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். கேளுங்கள்.

முதலில் நம் தேவலோகத்திற்கு இந்தியாவில் ஒரு தூதரகம் நிர்மாணிக்கவேண்டும். அது சட்டபூர்வமானதாக இருக்கவேண்டும். ஒரு ஐயாயிரம் ஏக்கரில் அந்த தூதரகம் கட்டப்படவேண்டும். சுற்றிலும் உயரமான மதிற்சுவர்களும், நல்ல பாதுகாப்பான வாயிற்கதவுகளும் அமைக்கவேண்டும். இந்திய ஜனாதிபதியையும் தேவேந்திரனையும் சேர்த்து அதற்கு திறப்பு விழா நடத்துவோம்.

இந்தியாவில் இதற்கு முன்பு இப்படியொரு விழா நடக்கவில்லை என்கிற மாதிரி அந்த விழா இருக்கவேண்டும். பொது, நீ முதலில் சென்று இதற்கான சட்டபூர்வமான அனுமதிகளைப் பெற்று வா. செலவைப்பற்றிக் கவலைப்படாதே. எவ்வளவு செலவு ஆனாலும் எப்படியோ காரியத்தை முடித்து வா என்றேன்.

நம் தேவலோக பேங்கில் இப்போது இந்திய கரன்சி இருக்காது. ஆகவே நீ 24 கேரட் தங்க பார்களாக கொண்டுபோய் அங்கே மாற்றிக்கொள். சீக்கிரம் புறப்படு என்றேன்.

அவன் ஒரு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றான். நான் மயனைக் கூப்பிட்டு நம் தேவலோகத்திற்கு நல்ல நான்கு சக்கர வாகனங்களும் விமானங்களும் வேண்டுமே. சீக்கிரம் நாம் பூலோகத்திற்கு விமான சர்வீஸ் ஆரம்பிக்கவேண்டும்.

நீங்கள் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஏர்பஸ் கம்பெனியில் ஒரு ஆயிரம் ஏர்பஸ் 380 ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு உடனடியாக அனுப்பச்சொல்லுங்கள். விமானம் ஓட்ட நம் ஆட்களுக்குப் பயிற்சி கொடுக்க நல்ல பயிற்சியாளர்களை ஒரு வருட கான்ட்ராக்டில் கூட்டி வாருங்கள். இந்தியாவில் "கிங்பிஷர்" என்ற ஏரோப்பிளேன் கம்பெனி போண்டியாகிவிட்டதால் அதன் ஆட்கள் எல்லோரும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மொத்தமாக நம் ஏரோப்பிளேன் கம்பெனிக்கு கூட்டி வந்துவிடுங்கள்.


அப்படியே பக்கத்திலுள்ள ஜெர்மனி நாட்டிற்குப் போய் பிஎம்டபிள்யூ வகைக் கார்கள் ஓரு லட்சம் கார்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வாருங்கள். இரண்டு கம்பெனிக்கும் கேஷ் தங்கமாக கொடுத்துவிடுங்கள். நீங்கள் ஒரு ஹெலிகாப்டரில் உடனடியாகப் புறப்படுங்கள் என்று உத்திரவு போட்டேன்.


குபேரனைக் கூப்பிட்டு, இதோ பாரும், குபேரா, நாம் அடுத்த நாடுகளுடன் வியாபாரம் செய்ய தங்கத்தையே நம்பியிருக்கக்கூடாது. பூலோகத்தில் புழங்கும் சில நாடுகளின் நோட்டுக்கள் நம்மிடம் இருக்கவேண்டும். அமெரிக்க டாலர்,  ஐரோப்பிய யூரோ, இந்த இரண்டும் இப்போதைக்குப் போதும். நீங்கள் போய் இந்த இரண்டு நாடுகளின் பேங்குகளுடன் பேசி, அவர்களுக்குப் போதுமான தங்கத்தைக் கொடுத்து அந்த கரன்சிகளை வாங்கி வாருங்கள்.

அத்துடன் ஸ்விஸ் வங்கிக்குப் போய் இந்தியர்கள் அங்கு கருப்புப் பணமாக வைத்திருக்கும் அனைத்து ரூபாய்களையும் வாங்கி வந்து விடுங்கள். அவர்கள் சட்டம், விட்டம் என்று பேசுவார்கள். அதைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களை அப்படியே நிற்கப் பண்ணிவிட்டு இந்திய ரூபாய்கள் அனைத்தையும் கொண்டு வந்து விடுங்கள், என்றேன்.

அரை மணி நேரத்தில் குபேரன் வந்து விட்டான். பிரபோ, ஸ்விஸ் நாட்டுக்கு இன்னொரு முறை நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றான். ஏன் என்று கேட்டதற்கு, இந்திய ரூபாய்கள் அனைத்தையும் நான் போன ஹெலிகாப்டரில் ஏற்ற முடியவில்லை, அதனால்  நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கொண்டு போனால்தான் சரியாக இருக்கும் என்றான். அப்படியே போய்விட்டு வா என்றேன். போய்விட்டு  அரை மணி நேரத்தில் வந்து விட்டான். ஸ்விஸ் பேங்கில் எத்தனை இந்திய ரூபாய் இருந்தது என்றேன். அவன் சுமார் ஐம்பதாயிரம் லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றான். சரி, எல்லாவற்றையும் லாக்கரில் வையுங்கள் என்றேன்.


அடுத்து சில நிமிடங்களில் மயன் வந்து விட்டான். பிரபோ, நீங்கள் சொன்னபடி ஏர் பஸ்களும், கார்களும் வந்து விட்டன, அவைகளை எங்கே நிறுத்துவது என்றான். தேவலோகத்துக்கு வெளியே இதற்குப் போதுமான ஷெட்கள் கட்டி அங்கே நிறுத்துங்கள் என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த வேலையை முடித்து விட்டு மயன் வந்து விட்டான்.

மயன், இந்த ஏர்பஸ்களையும் கார்களையும் ஓட்டுவதற்கு வேண்டிய ஆட்களை சித்திரகுப்தனிடம் சொல்லி வாங்கிக்கொள். அவர்களைப் பழக்கத் தேவையானவர்களை பூலோகத்திலுருந்து டெபுடேஷனில் வரவழைத்துக்கொள். பிரஹஸ்பதி சும்மாதானே இருக்கிறார். அவரை இந்த ஓட்டுநர் பயிற்சியைப் பார்த்துக்கொள்ளட்டும். பிறகு அவரே இந்த வாகனங்களுக்கெல்லாம் பொறுப்பாக இருந்து கொண்டு அவைகளை நிர்வகிக்கட்டும்.

மாலை ஆகிவிட்டது. எங்கே இந்தியாவிற்குப் போன பொதுவைக் காணோமே என்று நினைத்தபோது அவன் வந்து விட்டான். அவன் வாயெல்லாம் பல். தலைவா, வெற்றி, வெற்றி என்று கூவிக்கொண்டே வந்தான்.

அவனை உட்காரவைத்து ஆசுவாசப்படுத்திய பிறகு, விவரங்கள் கேட்டேன். எல்லாம் நான் எதிர் பார்த்தபடியேதான் நடந்திருக்கிறது. இவன் நேராக பிரதம மந்திரியின் ஆபீசுக்குப் போயிருக்கிறான். அங்கு இவனுக்குத் தெரிந்த ஒரு எம்.பி. இருந்திருக்கிறார். அவர் கொஞ்சம் பெரிய புள்ளி. இவன் விவரம் சொன்னவுடனே, இருவரும் நேராக பிரதம மந்திரியின் ரூமுக்குப் போயிருக்கிறார்கள். விவரம் சொன்னவுடன், அவர் எல்லாம் பேசிவிட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். பேசிவிட்டேன், நீங்கள் ஒரு பிகர் சென்னால்போதும் என்றார். உடனே அவர் போனில் அவருடைய செக்ரட்டரியைக் கூப்பிட்டு இவர்கள் மேட்டரை முடித்துக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அந்த செக்ரட்டரி ரூமுக்குப் போனவுடன் ஐட்டம் எங்கே என்று கேட்டிருக்கிறார். எம்.பி. எவ்வளவு என்று கேட்க அவர் பத்தாயிரம் (கோடி) என்று சொல்லியிருக்கிறார். அவர் பொதுவைப் பார்க்க, பொது இதோ என்று பத்து சூட்கேசைக் கொடுத்திருக்கிறார். அடுத்த அரை மணி நேரத்தில் தேவலோக தூதரகத்திற்காக தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலமும் அதற்குண்டான நடைமுறை உத்திரவுகளும் கையெழுத்தாகிவிட்டன. நம்முடைய தூதரகத்திற்கு தனிப்பட்ட முறையில் Special Diplomatic Immunity கொடுத்திருக்கிறார்கள். இந்திய ஜனாதிபதியும், பிரதம மந்திரியையும் தவிர்த்து வேறு யாரும் நம் தூதரக நடவடிக்கைகளில் தலையிடமுடியாது. தவிர, தேவலோகத்தில் இந்தியாவிற்கும் ஒரு தூதரகம் வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்போதுதான் இரு வழிப் போக்குவரத்திற்கு ஏதுவாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்படியா, அதுவும் நியாயம்தான், அப்படியே செய்து விடுவோம் என்றேன்.

நிலம் தமிழ்நாட்டில் எங்கே கொடுத்திருக்கிறார்கள் என்றேன். நீலகிரி மலை அடிவாரத்தில் பவானி ஆற்றை அடுத்து கொடுத்திருக்கிறார்கள் என்றார். தமிழ்நாட்டில் யாராவது இதற்கு ஏதேனும் சங்கடங்கள் கொடுப்பார்களோ என்றேன். என் நண்பர் எம்.பி. இதை அங்கேயே சுட்டிக் காட்டினார்.  நாங்கள் நேராக தமிழ்நாடு சென்று அங்கிருந்து ஏதும் தடங்கல்கள் வராதபடி ஏற்பாடு பண்ணிவிட்டோம் என்றார்.

பிறகு ஏன் நீ வருவதற்கு  இவ்வளவு லேட் என்றேன். அது இந்த ஆர்டரை எல்லாம் காப்பி எடுக்க ஜீராக்ஸ் மிஷினுக்கு கரன்ட் இல்லை. கரன்ட் வந்தவுடன் காப்பி எடுத்துக்கொண்டு வர நேரம் ஆகிவிட்டது என்றார்.

நல்ல வேலை செய்தீர். இப்போது எல்லோரும் ஓய்வெடுப்போம். மற்ற வேலைகளை நாளை பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனோம்.

19 கருத்துகள்:

  1. //இந்தியாவில் "கிங்பிஷர்" என்ற ஏரோப்பிளேன் கம்பெனி போண்டியாகிவிட்டதால் அதன் ஆட்கள் எல்லோரும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மொத்தமாக நம் ஏரோப்பிளேன் கம்பெனிக்கு கூட்டி வந்துவிடுங்கள்.//

    இந்த செய்தி "கிங்பிஷர்" ஊழியர்களுக்கு நிச்சயம் காதில் தேன் பாய்ந்தது போல் இருக்கும்.

    எப்போது பொதுத்தேர்தல் நடத்த இருப்பதாக உத்தேசம்?

    பதிலளிநீக்கு
  2. லாக்கருக்கு ஒரு பெரிய வீடே தேவைப்படுமே...

    இப்போது சூடு(ம்) பிடித்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. //காப்பி எடுக்க ஜீராக்ஸ் மிஷினுக்கு கரன்ட் இல்லை. கரன்ட் வந்தவுடன் காப்பி எடுத்துக்கொண்டு வர நேரம் ஆகிவிட்டது//
    கரென்ட் நிலைமையை இதை விட அருமையாக யாராலும் சொல்ல முடியாது. இதை மேம்படுத்த தேவலோகத்தில் இருந்து HT கனக்க்ஷன் ஒன்று கொடுக்கலாமே. இன்றைய சூழ்நிலையில் அது ஒன்றுதான் வழியாக தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  4. ஸ்விஸ் வங்கிக்குப் போய் இந்தியர்கள் அங்கு கருப்புப் பணமாக வைத்திருக்கும்
    அனைத்து ரூபாய்களையும் வாங்கி வந்து விடுங்கள்.

    எவ்வளவு சுலபமாக ஸ்விஸ் வங்கி பணத்தை மீட்டுவிட்டீர்கள் ஐயா..!
    பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  5. // பிரபோ, ஸ்விஸ் நாட்டுக்கு இன்னொரு முறை நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றான். ஏன் என்று கேட்டதற்கு, இந்திய ரூபாய்கள் அனைத்தையும் நான் போன ஹெலிகாப்டரில் ஏற்ற முடியவில்லை..... ஸ்விஸ் பேங்கில் எத்தனை இந்திய ரூபாய் இருந்தது என்றேன். அவன் சுமார் ஐம்பதாயிரம் லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றான்//
    நீங்கள் நமது அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் மற்றும் கருப்பு பண முதலைகளையும் தப்பு கணக்கு போட்டு விட்டீர்கள். இல்லையென்றால் முதலிலேயே எல்லா ஹெலிகாப்டர்களையும் அனுப்பி நேரத்தை மிச்சப்படுதிருக்கலாமல்லவா.
    ஆனால் உங்கள் மேல் தப்பில்லை. என்ன செய்வது நம்மை போன்ற நடுத்தர குடும்பங்களுக்கு தெரிந்த பெரிய நம்பரே ஒரு கோடிதானே. அதவும் கனவில்தான் பார்க்கமுடியும்.
    ஐம்பதாயிரம் லக்ஷம் கோடி என்றவுடன் ஒவ்வொரு கருப்பு பண முதலைகளின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. என்னடா இது. நம்மோட பணமே இவ்வளவு ஆச்சே. மீதி எல்லாம் என்ன ஆகிறது. எது எப்படியோ நம்மூர் சிஐபி யை ஏமாற்றியது போல குபேரனையும் ஏமாற்றி விட்டோம். இனி மேல் நமக்கு கவலையில்லை. தேவ லோக குபேரனாலேயே கண்டு பிடிக்க முடியாவிட்டால் வேறு யாராலும் கண்டு பிடிக்க முடியாது. இனி மேல் ஜாலிதான்

    பதிலளிநீக்கு
  6. நிலம் தமிழ்நாட்டில் எங்கே கொடுத்திருக்கிறார்கள் என்றேன். நீலகிரி மலை அடிவாரத்தில் பவானி ஆற்றை அடுத்து கொடுத்திருக்கிறார்கள் என்றார்.//

    பரவாயில்லையே .தங்களுக்கு ரொம்ப வசதியாக .கோவைக்கு அருகிலேயே நிலம் கிடைத்ததே..!

    பதிலளிநீக்கு
  7. நல்ல கற்பனை .நானும் நினைத்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. //இந்திய ஜனாதிபதியும், பிரதம மந்திரியையும் தவிர்த்து வேறு யாரும் நம் தூதரக நடவடிக்கைகளில் தலையிடமுடியாது//
    அவர்களுக்கு இருக்கும் குடைச்சலில் இதை பற்றி எங்கே கவலை பட போகிறார்கள். ஏற்கனவே பத்து பெட்டிகள் வேறு தண்டம் அழுதாகி விட்டது. எனவே நீங்கள் இனிமேல் தனிக்காட்டு ராஜாதான்.
    நிதானமாக யோசித்து பார்த்தால் இத்தகைய தனித்து முடிவெடுக்கும் உரிமை நல்ல, மீண்டும் கவனியுங்கள், நல்ல ஆட்களிடம் இருந்தால் கண்டிப்பாக நல்ல முடிவுகள்தான் எடுக்கப்படும். நல்ல விளைவுகள்தான் நிகழும்.
    சாம பேத தான தண்டம் பலிக்காதபோது தகிடுதத்தம் செய்துதான் ஆக வேண்டுமானால், ஒரு நல்ல காரியத்துக்காக, இப்படி லஞ்சம் கொடுத்து தனி காட்டு ராஜாவாக ராஜ்ஜியம் நடத்துவதில் தப்பேயில்லை.
    எங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகாது என்ற நம்பிக்கையுடன் தொடரை தொடர்ந்து படிக்கிறோம்

    பதிலளிநீக்கு
  9. //நாங்கள் நேராக தமிழ்நாடு சென்று அங்கிருந்து ஏதும் தடங்கல்கள் வராதபடி ஏற்பாடு பண்ணிவிட்டோம் என்றார்.//
    தமிழ் நாட்டில் எத்தனை பெட்டிகள் கை மாறின என்ற விவரம் சொல்லவேயில்லையே.

    பதிலளிநீக்கு
  10. கரண்டுக்கு மாயன் வசம் சொல்லி ஒரு 15000 MW பவர் பிளான்ட் ஒன்றை கேட்கவேண்டியது தானே

    பதிலளிநீக்கு
  11. //நீங்கள் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஏர்பஸ் கம்பெனியில் ஒரு ஆயிரம் ஏர்பஸ் 380 ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு .......பக்கத்திலுள்ள ஜெர்மனி நாட்டிற்குப் போய் பிஎம்டபிள்யூ வகைக் கார்கள் ஓரு லட்சம் கார்களுக்கு ஆர்டர் ........அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ, இந்த இரண்டும் இப்போதைக்குப் போதும்......ஸ்விஸ் வங்கிக்குப் போய் இந்தியர்கள் அங்கு கருப்புப் பணமாக வைத்திருக்கும் அனைத்து ரூபாய்களையும் வாங்கி வந்து விடுங்கள்//
    ஏதேது, உலகை பற்றிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிரீர்களே. எல்லாமே வேர்ல்ட் கிளாஸ் ஒன்தான்.
    தயவு செய்து இன்றைய அரசியல்வாதிகளையும் வியாபாரிகளையும் உள்ளே விட்டு விடாதீர்கள். தேவலோகத்தில் ஒரு ideal world உருவாக்கி காட்டுங்கள். அங்குள்ள அனைத்தும் நல்லவை. மனிதர்களும் நல்லவர்கள், வல்லவர்கள் என்ற நிலையை மனதில் நினைத்து பார்ப்பதற்கே நன்றாக உள்ளதே. ஆயின் என்ன செய்வது எல்லாமே கதையாக உள்ளது எனும்போதுதான் மனதை பிசைகிறது.

    பதிலளிநீக்கு
  12. ஏதேது பலமான யோசனைகள், திட்டங்கள் என பிரமாதப் படுத்துகிறீர்களே! தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  13. கலக்கலான பகிர்வா ஐயாவோட நடையில் வெளுத்து வாங்குதே...

    தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  14. எழுதுவதில் கொஞ்சமாவது REALITY இருக்க வேண்டுமென்பதால், அந்த

    கரன்ட் கட் சமாசாரத்தை எழுதியிருக்கிறீர்களென நினைக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  15. ஐயா, தேவலோக தூதரகத்தில் எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்கள்.//’’’ கொஞ்சம் காதை கிட்ட கொண்டு வாங்கக..,,,’முதல் மாத சம்பளத்தை உங்களுக்கு தந்துவிடுகிறேன்’’

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்க வேண்டாங்க, இங்கேயே நம்ம தூதரகத்தில நல்ல வேலையாப் போட்டுத்தரணுங்க. கமிஷன் எல்லாம் வேண்டாங்க.

      நீக்கு
  16. ரொம்ப நல்லா இருக்கு - கற்பனை வளமும், எழுத்து நடையும். வளரட்டும்

    எதற்கும் என் கனவுகளையும் வாசித்துப் பாருங்கள் ...

    பதிலளிநீக்கு