செவ்வாய், 19 மார்ச், 2013

7. தூதரகம் திறப்பு.


மறுநாள் எழுந்தவுடன் மயனைக் கூப்பிட்டு, நீங்கள் செக்குவுடன் உடனே பூலோகத்திற்குப் போய் நமக்கு கொடுத்துள்ள நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் "தேவேந்திர நகர்" என்ற நகரத்தை சகல வசதிகளுடன் நிர்மாணியுங்கள். ஒரு பத்தாயிரம் பேர் தங்குவதற்கான வசதிகளும், ஹெலிகாப்டர் தளம் மற்றும் தூதரக ஆபீஸ்களும், நல்ல பாதுகாப்பான மதில் சுவர்களும், மற்றும் அந்த ஊருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.

அப்படியே நமது தேவ்லோக் பேங்கிற்கும் அந்த தூதரகத்துக்குள்ளேயே ஒரு கிளை கட்டுங்கள். அதில் எல்லாவித சௌகரியங்களும் இருக்கட்டும்.

நாளை காலை பத்து மணிக்கு இந்த தூதரக திறப்பு விழா நடக்கட்டும். இந்திரனும் இந்திய ஜனாதிபதியும் இந்த தூதரகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார்கள். இங்கிருந்து நாம் எல்லோரும் செல்வோம். இந்தியாவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேரை அழைக்கலாம்.

இந்தியாவில் இந்த மாதிரி விழாக்களை நடத்த "Event Manager" கள் இருப்பார்கள். அவர்களில் ஒரு நல்ல நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள். விழா மிகப் பிரமாதமாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிடுங்கள். விழா முடிந்தவுடன் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் ஆடம்பரமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லி விடுங்கள். நீங்கள் போகலாம் என்று சொன்னேன். அவர்களும் புறப்பட்டுப் போனார்கள்.

இந்திரன் இந்த விழாவிற்காக பூலோகத்திற்குப் போய்வர புருனே சுல்தான் வைத்திருக்குற மாதிரி ஒரு பிளேன் உடனடியாக வாங்குங்கள், அதன் விடியோ இதோ இருக்கிறது. அதனுள் 100 பேர் அமரும்படியான ஒரு நடன அரங்கம் அவசியம் இருக்கட்டும். இந்திரனால் நாட்டியம் பார்க்காமல் கொஞ்சநேரம் இருந்தால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அதனால் ஜாக்கிரதை.



தூதரகத் திறப்பு விழா அழைப்பிதழ் இந்தியாவின் அனைத்து பாரலிமென்ட் உறுப்பினர்கள். வெளிநாட்டுத் தூதுவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள்,
அனைத்து தமிழ் பதிவர்கள், ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும், மத்திய அரசு அனைத்து செயலர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், அனைத்து மத்திய மாநில மந்திரிகளுக்கும் உடனடியாக கொடுத்து விடுங்கள்.

அப்படியே அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, மறுநாள் காலை திறப்பு விழாவிற்கு அனைத்துப் பிரமுகர்களும் வந்து விட்டார்கள். தூதரக வாசலில் அனைவருக்கும் சோமபானம் கொடுத்து வரவேற்கப்பட்டார்கள். வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை இந்திய ஜனாதிபதி அவர்கள் விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோலால் வெட்டி தூதரகத்தைத் திறந்து வைத்தார். ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் அந்த கத்தரிக்கோலை பவ்யமாக வாங்கி தன் பைக்குள் வைத்துக்கொண்டார். இதை பிற்பாடு ஜனாதிபதி வாங்கிக் கொள்வார். இது பல காலமாக அனுஷ்டிக்கப்படும் சம்பிரதாயம்.

பிறகு எல்லோரும் விழாப் பந்தலுக்குள் நுழைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் தனியாக அழைத்துக்கொண்டு போய் அலங்கார மேடையில் அமரச் செய்தார்கள். கடவுள் வாழ்த்துக்குப் பின்னர், நான் வரவேற்புரை வழங்கினேன். அப்போது நான் சொன்னதாவது.

இந்த நாள் இதுவரை பூலோகத்திலேயே யாரும் பார்த்திராத பொன்னாள். இந்த தேவலோகத் தூதரகத்தை புண்ணிய பூமியான இந்தியாவில்தான் முதலில் அமைக்கவேண்டும் என்று மும்மூர்த்திகளும் விரும்பினார்கள். அதனால்தான் இங்கு அமைத்தோம்.

இன்று முதல் இந்தப் புண்ணிய பூமியில் பல அதிசயங்கள் நடைபெறப் போகின்றன. உலகிலேயே பெரிய வல்லரசாக இந்தியா பரிணமிக்கப் போகிறது. அதன் பலனை இந்திய மக்கள் அனைவரும் அனுபவிப்பார்கள்.

தேனும் பாலும் இனி இந்திய ஆறுகளில் ஓடும். வறுமை என்பதே எங்கும் இருக்காது. ஒரு பெண் சகல ஆபரணாதிகளுடன் டில்லி தெருவில் இரவு பனிரெண்டு மணிக்கு தனியாக, பயமில்லாமல் நடமாடலாம். இந்தியா சொர்க்கபூமியாக மாறப்போகிறது. மகாத்மா காந்தி சொன்ன ராம  ராஜ்யம் வரப்போகிறது. எல்லோரும் அதற்குத் தயாராகுங்கள்.

இந்த விழாவிற்கு வந்துள்ள அனவரையும் இரு கரம் கூப்பி வருக, வருக என்று வரவேற்கிறேன்.

கைதட்டல் வானைப் பிளந்தது. பிறகு ஜனாதிபதி இரண்டு மணிநேரம் பேசினார். வேத காலத்தில் இந்தியாவிற்கும் தேவலோகத்திற்கும் இருந்த தொடர்பிலிருந்து ஆரம்பித்து, இருபத்தியோராம் ஆண்டுக்கு வருவதற்குள் எல்லோருக்கும் பசி வந்து விட்டது. நன்றி நவிலலை சுருக்கமாக கூறிவிட்டு கூட்டத்தை அவசரமாக முடித்து விட்டு எல்லோரும் சாப்பிடப் போனோம்.

சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்த பின் தேவலோக நடன மங்கையர் நால்வரின் நடனம் தொடங்கியது. எல்லோரும் வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் அந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


நடனம் முடிந்து இரவு உணவு அருந்தியபின் எல்லோரும் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுப் போனார்கள். இதற்கு முன்பாகவே நான் இந்திய பிரதம மந்திரியையும் நிதி அமைச்சரையும் பார்த்து மறுநாள் காலை பத்து மணிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் வைத்திருக்கிறேன். நீங்கள் இருவரும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

தேவேந்திரன் ஊருக்குப் போய்விட்டான். நாங்கள் மூவரும் (நான், பொது, செக்கு) உறங்கச்சென்றோம்.

18 கருத்துகள்:


  1. //ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் அந்த கத்தரிக்கோலை பவ்யமாக வாங்கி தன் பைக்குள் வைத்துக்கொண்டார். இதை பிற்பாடு ஜனாதிபதி வாங்கிக் கொள்வார். இது பல காலமாக அனுஷ்டிக்கப்படும் சம்பிரதாயம்.//

    அரசாங்க இரகசியங்கள் எல்லாம் வெளியே சொல்லிவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம்தானே?

      நீக்கு
    2. பழைய ஜனாதிபதி பிரதீபா பாடீல் தனது பதவிக்காலம் முடிந்து ஜனாதிபதி மாளிகையை காலி செய்யும் போது ஏகப்பட்ட டிரக்குகளில் தன சாமான்களை அள்ளிக்கொண்டு போனார் என்று படித்த போது ஆச்சர்யமாக இருந்தது. அது எப்படி என்று இப்போதுதான் புரிகிறது.

      சேலம் குரு

      நீக்கு
  2. அஙுகு எனக்கு ஒரு ப்ளாட் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு இல்லாமயா? அடுத்த பதவில் விவரங்கள் கொடுத்திருக்கிறேன். பார்த்துவிட்டு நீங்கள் மயக்கம் போட்டால் கம்பெனி பொறுப்பில்லை.

      நீக்கு
    2. முன்பே ஒரு பதிவில் அய்யா அவர்கள் " நடுத்தர மக்களுக்கு அங்கே வேலை இல்லை. 100 கோடிக்கு மேல் வைத்திருப்பவர்களுக்குத்தான் தேவலோகத்திற்கு இம்மிக்ரேஷன் விசா கொடுக்கப்போகிறோம். உங்களுக்கு கதை மட்டும்தான்." என்று சொல்லியிருக்கிறார்கள்.
      நம்மிடம் கோடி வேட்டிதான் இருக்கிறது.
      உங்களுக்கு ஒரு பிளாட் வாங்கும்போது எனக்கும் ஒன்று சொல்லி வையுங்கள் கவியாழி அவர்களே

      சேலம் குரு

      நீக்கு
  3. ஒரு பெண் சகல ஆபரணாதிகளுடன் டில்லி தெருவில் இரவு பனிரெண்டு மணிக்கு தனியாக, பயமில்லாமல் நடமாடலாம். இந்தியா சொர்க்கபூமியாக மாறப்போகிறது. மகாத்மா காந்தி சொன்ன ராம ராஜ்யம் வரப்போகிறது. எல்லோரும் அதற்குத் தயாராகுங்கள். ...!!!!!???????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப்பட்ட செய்திகளை கனவில்தான் கேட்டுக் கொள்ளவேண்டும் போல் இருக்கிறது.

      நீக்கு
    2. முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்கள் சொல்வது போல முதலில் கனவு காணலாம். பிறகு அதை நடை முறை படுத்தலாம்.
      ஆனால் என்ன, கனவு காண்பதோடு பல பேர் நிறுத்திகொண்டுவிடுகிறார்கள். இன்றைய நிலை இதுதான் என்பதுதான் கவலையாக இருக்கிறது. அதற்கு மேல் ஒரு படி செல்பவர்கள் வெளிநாடு சென்று விடுகிறார்கள்.

      சேலம் குரு

      நீக்கு
  4. //இந்திரனால் நாட்டியம் பார்க்காமல் கொஞ்சநேரம் இருந்தால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அதனால் ஜாக்கிரதை.//
    எப்படி நமது அரசியல்வாதிகள் மக்களை இலவசங்கள் கொடுத்து அப்படியே மயக்கி வைத்திருக்கிறார்களோ அதே மாதிரி நீங்கள் இந்திரனுக்கு தேவையான நடன அரங்கத்தை அமைத்து கொடுத்து மயக்கி வைத்து உங்களுக்கு தொந்திரவு வராமல் பார்த்து கொள்கிறீர்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
  5. //இந்திரனும் இந்திய பிரதமரும் இந்த தூதரகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார்கள்.....
    வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை இந்திய ஜனாதிபதி அவர்கள் விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோலால் வெட்டி தூதரகத்தைத் திறந்து வைத்தார்//

    பிரதமர் திடீரென்று ஜனாதிபதியாகி விட்டாரே.

    புரிகிறது. பிரதமர் DMK உடன் பேச்சு வார்த்தையில் இருப்பார் என்று ஜனாதிபதியை வைத்து திறந்து விட்டீர்கள்.
    ஆனாலும் எனக்கு அழைப்பு அனுப்பாமல் விட்டு விட்டீர்களே

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  6. //மறுநாள் எழுந்தவுடன் மயனைக் கூப்பிட்டு...... "தேவேந்திர நகர்" என்ற நகரத்தை நிர்மாணியுங்கள். ஒரு பத்தாயிரம் பேர் தங்குவதற்கான வசதிகளும், ஹெலிகாப்டர் தளம் மற்றும் தூதரக ஆபீஸ்களும், நல்ல பாதுகாப்பான மதில் சுவர்களும், மற்றும் அந்த ஊருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.
    நாளை காலை பத்து மணிக்கு இந்த தூதரக திறப்பு விழா நடக்கட்டும்//


    பெருமதிப்பிற்குரிய அய்யா அவர்களே
    தயவு செய்து அந்த மாயனை எங்கள் ஊருக்கு அனுப்புங்களேன்.
    இன்று சொல்லி ஒரு நகரையே கட்டி நாளையே திறப்பு விழா என்றால் நம்பவே முடியவில்லை.
    இங்கு ஒரு வீட்டை கட்ட ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகியும் இன்னும் பாதி வேலை பாக்கி இருக்கிறது. கண்ணை கட்டிக்கொண்டு போகிறது. அதற்குள் கொத்தனார் கூலி இரண்டு மடங்காகி விட்டது. போட்ட ப்ளானுக்கு வீட்டை கட்ட வேண்டுமானால் தேவ்லோக் பேங்கு கிளையில்தான் லோன் வாங்க வேண்டும் போலிருக்கிறது. அதனால் ஒன்று மாயனை அனுப்பி உதவி செய்யுங்கள் இல்லையென்றால் தேவ்லோக் பேங்கு கிளையில் உடனடியாக லோனுக்கு அரேஞ்ச் செய்யுங்கள்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  7. //மகாத்மா காந்தி சொன்ன ராம ராஜ்யம் வரப்போகிறது. எல்லோரும் அதற்குத் தயாராகுங்கள்.//

    இதை படித்தவுடன் பல சந்தேகங்கள் மனதில் தோன்றின.

    - ஐயையோ அப்போது இந்த சென்சேஷனல் நியூஸ் கொடுக்கும் ஊடகங்கள் கதி எல்லாம் அவ்வளவுதானா?

    - டாஸ்மாக் மூட வேண்டியிருக்குமே. அப்புறம் வருமானத்துக்கு எங்கே போவது? இலவசங்கள் எல்லாம் அவ்வளவுதானா?

    - செயின் ஸ்நாட்சர்ஸ், வீடு புகுந்து கொள்ளையடிப்போர், ஈவ் டீசிங் ஆட்கள், முக்கியமாக வாலெண்டைன் டே ஆட்கள் எல்லாம் பிழைப்பதற்கு வேறு வழி பார்க்கவேண்டியதுதானா?

    - அரசியல் மாநாட்டுக்கு வந்தால் ஒரு குவார்ட்டர் கிடையாதா இனிமேல். நாங்கள் எங்கே போவோம்?

    - ராம ராஜ்யம் என்றால் ஒருவனுக்கு ஒருத்திதானா? ஊருக்கு ஊர் பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்பவர்கள் என்ன ஆவார்கள்?



    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  8. //இன்று முதல் இந்தப் புண்ணிய பூமியில் பல அதிசயங்கள் நடைபெறப் போகின்றன. இதற்கு முன்பாகவே நான் இந்திய பிரதம மந்திரியையும் நிதி அமைச்சரையும் பார்த்து மறுநாள் காலை பத்து மணிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் வைத்திருக்கிறேன். நீங்கள் இருவரும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள்//

    இந்தப் புண்ணிய பூமியில் நடை பெறப்போகும் பல அதிசயங்களுக்கும் பிரதம மந்திரி, நிதி அமைச்சருடன் நடக்கப்போகும் முக்கிய மீட்டிங்குக்கும் பெரிய கனெக்சன் உண்டு என்று நினைக்கிறேன். பார்த்து பேசுங்கள். பிரதம மந்திரி வாயை திறந்தால் முத்து உதிர்ந்து விடும் என்பது போல் இருப்பார். நிதி அமைச்சரோ சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றிருப்பார். (தெலுங்கானா சமாச்சாரம்தான்). எனவே பேசுவதை வீடியோ எடுத்து விடுங்கள். பின்னால் உபயோகமாக இருக்கும்.
    ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  9. //அனைத்து தமிழ் பதிவர்கள்,//
    எனக்கு அழைப்பிதழ் வரவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவேண்டுகிறேன். "பொது" கொஞ்சம் சொதப்பிவிட்டார். பதிவர் என்றவுடன் அவர் எல்லா பதிவாளர்களுக்கும் அழைப்பு அனுப்பிவிட்டார்.

      நீக்கு
  10. தூதரக திறப்பு அட்டகாசம்!
    இந்திய நதிகளில் இனி பாலும் தேனும் .....தண்ணீர்?

    பதிலளிநீக்கு