இப்படி ஒரு பின்னூட்டம் என் ஒரு பதிவிற்கு வந்தது.
அய்யா அவர்களே
ஒரு பதிவில் இதை படித்தேன். நம்பவே முடியவில்லை.
இத்தகைய அரசியல்வாதியையும் இன்றைய அரசியல்வாதிகளையும் compare செய்து ஒரு பதிவிடுங்களேன். இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு புதிய பாடமாக இருக்கும்.
அன்பரின் வேண்டுகோளை நிறைவேற்றும் அளவிற்கு எனக்கு அரசியல் ஞானம் இல்லை. ஆகவே அவர் பின்னூட்டத்தை மட்டும் அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். கூடவே என் அனுபவங்கள் சிலவற்றையும் பகிர்கிறேன்.
முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
உரையாடலின் நடுவே நினைவு கூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார்.
‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர்.
‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார்.
‘நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு.
‘விடமாட்டேன்னுதீகளே...’ என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் ‘ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...’ என்று நிறுத்தச் சொல்கிறார்.
அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு.
காமராசர் களை பறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் ‘ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...’ என்று கூவியிருக்கிறார்.
புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் ‘ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...’ என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார்.
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்.
நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் !
அவர்தான் நம் அய்யா காமராசர்!
சேலம் குரு
என் அனுபவம் ஒன்று:
என் நினைவில் நின்ற அன்றைய ஒரு அரசியல்வாதி பற்றிய நினைவு. எல்லா அரசியல்வாதிகளும் காமராஜர் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
நான் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு !956 ல் படித்தபோது நடந்த நிகழ்வு. நான் மாணவ மன்ற செயலாளராக இருந்தேன். மாணவ மன்றத்திற்காக ஒரு கூடுதல் ஹால் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு அன்றைய முதல் அமைச்சரைக் கூப்பிட்டிருந்தோம்.
முதல் அமைச்சர் அடிக்கல் நாட்டுவதற்காக புதிதாக ஒரு கலவைச்சட்டியும் ஒரு கொத்தனார் கரண்டியும், இரும்பில், வாங்கி வைத்திருந்தோம். விழாவிற்கு இரண்டு நாள் முன்பு விழா ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த ஒரு முக்கிய மாவட்ட அதிகாரி இந்த கரண்டியைப் பார்த்துவிட்டு, இது சரிப்படாது, முதல் அமைச்சர் பயன்படுத்தும் கரண்டி வெள்ளியில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
நான் என்ன இது, கொத்தனார் கரண்டி வெள்ளியில் கிடைக்குமா என்று சந்தேகப்பட்டுக்கொண்டு நகைக் கடைக்குப் போனால் அங்கு வெள்ளியில் ரெடிமேடாக இந்தக் கரண்டி வைத்திருந்தார்கள். விசாரித்ததில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் விழாக்களில் இது சகஜம் என்று சொன்னார்கள். அரசியல்வாதி வந்து போனபிறகு இந்தக் கரண்டியைத் திருப்பிக்கொண்டு வந்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டேன். அந்தக் கடைக்காரர்கள் சிரித்தார்கள்.
எனக்கு அப்போது வயது 21. உலகம் என்றால் வீடு, கல்லூரி மட்டுமே. அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. மந்திரி வந்து போனபிறகு கொண்டு வாருங்கள், வாங்கிக்கொள்கிறோம் என்று சொன்னார்கள்.
சரியென்று ஒரு கரண்டி வாங்கி வந்து வைத்திருந்தோம். விழாவிற்கு மந்திரி வந்து அடிக்கல் நாட்டினார். நான் மேஸ்திரியிடம் மந்திரி போனவுடன் அந்த வெள்ளிக் கரண்டியை பத்திரமாக என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன்.
விழா முடிந்து மந்திரி போன பிறகு மேஸ்திரியிடம் அந்தக் கரண்டி எங்கே என்று கேட்டேன். தம்பி, அடிக்கல் நாட்டின உடனே மந்திரி அந்தக் கரண்டியை தன் உதவியாளரிடம் கொடுத்தார். அவர் வாங்கி தன் பையில் போட்டு கொண்டு போய் விட்டாரே என்றார்.
அப்போதுதான் எனக்கு அந்த நகைக் கடைக்காரர் ஏன் சிரித்தார் என்று புரிந்தது.
அன்றைய அரசியல்வாதி வெள்ளியில் கரண்டி கேட்டார். இன்றைய அரசியல்வாதிகள் தங்கம் அல்லது பிளாட்டினத்தில் கரண்டி கேட்பார்கள் என்று நினைக்கிறேன். இதுதான் அன்றைய அரசியல்வாதிக்கும் இன்றைய அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம்.
அனுபவம் இரண்டு:
நான் முதல் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது நடந்த நிகழ்ச்சி.
அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை எங்கள் கல்லூரிக்கு அழைத்திருந்தார்கள். அனைத்து முதுகலை மாணவர்களும் ஆசிரியர்களும் அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்து மாணவர்களும் நேரு கோட் அணிந்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எல்லோரும் புதிதாக அந்த கோட் தைத்தோம். அதனுடன் போட்டோ எடுத்துக்கொண்டோம். இது ஒன்றும் பெரிதல்ல.
அவருக்கு உணவு தயாரிக்க டில்லி அசோகா ஓட்டலில் இருந்து ஒரு சமையல்காரரை விமானத்தில் தருவித்தார்கள். அவருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சன்மானம். அன்றைய (1958) ஆயிரம் ரூபாய் இன்றைக்கு லட்சம் ரூபாய்க்கு சமம். அவர் செய்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து பெரிய ஆபீசர்களும் ஆடிப்போய்விட்டார்கள். நேருவுக்குக் கூட அவ்வளவு பயப்படவில்லை. எப்படியோ விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
அனுபவம் மூன்று:
கேரளாவில் நடந்த ஒரு செமினாருக்குப் போயிருந்தேன். கேரள விவசாய மந்திரி கலந்து கொள்வதாக ஏற்பாடு. விழா ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்பாக ஒரு அம்பாசிடர் கார் வந்து முகப்பில் நின்றது. வேட்டி சட்டை போட்டவர்கள் இருவர் இறங்கினார்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. எந்தப் போலீசும் இல்லை. விழா அமைப்பாளர்கள் அவர்களை வரவேற்று மேடைக்கு அழைத்துச்சென்றார்கள். ஒருவர் மேடையில் அமர்ந்தார் மற்றவர் கீழே முதல் வரிசையில் அமர்ந்தார்.
இவர்கள் யார் என்று விசாரித்தேன். மேடையில் அமர்ந்தவர்தான் விவசாய மந்திரி. கீழே அமர்ந்தவர் அவருடைய உதவியாளர் என்றார்கள். அந்த எளிமையைக் கண்டு நான் அதிசயித்தேன்.
எளிமை கண்டு அதிசயமும்
பதிலளிநீக்குஆடம்பரம் கண்டு அதிர்ச்சியுமாக
அரசியலின் பரிணாமத்தை விளக்கிய அனுபவப்பாகிர்வுகள்.
பெருமூச்சுடன் படிக்க வேண்டிய அனுபவங்கள். இனி இப்படிப் பார்க்கவே முடியாது என்பது சோகம்.
பதிலளிநீக்குஐயா. இது போன்று எதிர்கட்சியிலும் சில அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள். 1962 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் எங்கள் ஊருக்கு அருகே உள்ள குறுக்கு சாலை அருகே இருந்த சைக்கிள் கடையில் விருத்தாசலம் செல்லும் பேருந்துவிற்காக காத்திருந்தேன். அந்த கடைக்காரர் ஒரு திமுகஅபிமானி. அப்போது விருத்தாசலத்திலிருந்து வந்த ஒரு பேருந்துவிலிருந்து ஒருவர் இறங்கினார். அவர் நேரே சைக்கிள் கடைக்காரரிடம் வந்து அருகில் உள்ள ஒரு சிற்றூருக்கு போய் வர வாடகைக்கு சைக்கிள் கிடைக்குமா என்றார். அதற்கு சைக்கிள் கடைக்காரர் ‘உங்களை யாரென்று தெரியாதே.எப்படி சைக்கிள் தருவது?’ என்றார். அதற்கு அவர் அருகில் உள்ள தொகுதியின் தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் என்றார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் அந்த கடையில் அண்ணா படம் மாட்டியிருந்ததும், கதையின் பெயர் பலகையை கருப்பு சிகப்பில் எழுதியிருந்ததும் தான்.அப்படியும் அந்த கடைக்காரர் நம்பவில்லை. அருகில் இருந்த நான் அவருடைய புகைப்படத்தை நாளேடுகளில் பார்த்திருந்ததால் அவர் சொல்வது சரிதான் என்றேன். அப்புறம் தான் அவருக்கு சைக்கிளை வாடகைக்கு கொடுத்தார் அந்த கடைக்காரர். இப்போது அந்த மாதிரி காட்சிகளை பார்க்கமுடியுமா? இப்போதெல்லாம் உள்ளூர் வார்டு கவுன்சிலர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற மறு நாளிலேயே ஸ்கார்ப்பியோ காரில் அல்லவா உலா வருகிறார்கள். ம்.ம். இப்போது அரசியலில் இறங்குபவர்கள் பணம் சம்பாதிக்கவே வருகிறார்கள். அவர்களிடம் எளிமையை எதிர்பார்க்கலாமா?
பதிலளிநீக்குஆச்சர்யம் தான் ஐயா
பதிலளிநீக்குநிறைகுடங்கள் தளும்பாது.. இது எல்லோருக்கும் பொருந்தும்.
பதிலளிநீக்குஅன்றும் சில சுரண்டல்காரர்கள் இருந்தார்கள்! இன்றும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள்!
பதிலளிநீக்குஎத்தனை அனுபவம்.....
பதிலளிநீக்குஇப்போது இருப்பவர்களில் சிலராவது நல்லவர்களாக இருக்கிறார்கள்....
ஐயா, வெள்ளிக் கரண்டியில் சாப்பிட்ட முதலமைச்சர் யார்? ஏனெனில் 1956-ல் சென்னை மாகாணத்தின் முதல்வர் காமராசர் என்கிறது விக்கிபீடியா.
பதிலளிநீக்குஐயையோ, காமராஜர் இல்லை. என் ஞாபக மறதியின் விளைவு. அன்றைய விவசாய அமைச்சர் என்று நினைக்கிறேன். பெயர் வேண்டாமே. அது சரி, இப்படியெல்லாமா ஆராய்ச்சி செய்து குறுக்கு கேள்வி போடுவது?
நீக்குவெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறீர்கள் ... என்றா உலகமிது...
பதிலளிநீக்குநான் 70 களில் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் சங்கம் ஒன்று எங்கள் கல்லூரியில் இயங்கி வந்தது. பிரபலமான பேச்சாளரான ஒருவரை முதன்மை பேச்சாளராக அழைத்திருந்தோம். அவரும் வந்தார். பயணக்களைப்பு நீங்க VIP தங்கும் விடுதியில் சிரம பரிகாரம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்திருந்தோம். திடீரென்று தமிழ் சங்க மாணவர் பிரதிநிதியை அழைத்து தனது கைகடிகாரத்தை கொடுத்து சற்றே பழுதுபட்டிருப்பதாகவும் சரி செய்து கொண்டு வருமாறும் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்குள் வந்துவிட்டால் பரவாயில்லை என்றும் கூறினார். கல்லூரி CITY இல் இருந்து 12 KM தூரம். அப்போது பஸ் ஒன்றுதான் ஒரே வழி. எனவே ஒரு மாணவனை அனுப்பி உடனடியாக பழு பார்த்துக்கொண்டு வர அனுப்பினோம். உடனடியாக வேண்டும் என்பதால் கடைகாரனும் சற்றே அதிக பணத்திற்கு சரி செய்து கொடுத்தான். இதற்கு சற்று நேரமாகி விட்டது. கைகடிகாரம் வந்து சேரும்வரை தங்கும் விடுதியை விட்டு நகரமாட்டேனென்று விட்டார் அந்த பேச்சாளர். நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்காததால் மாணவர்களை சமாளிக்க மிமிக்ரி பாட்டு என்று சமாளித்தோம். பிறகு கைகடிகாரத்தை அணிந்து கொண்டு வந்து பேச ஆரம்பித்தவர் நிகழ்ச்சி முடிந்தவுடன் பழுது பார்த்த பணத்தை பற்றி பேச்சே எடுக்காமல் கிளம்பி விட்டார். அன்றைய தினத்துக்கு நூறு ரூபாய் மாணவர்களுக்கு பெரிய தொகை. நாங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று வசூலித்து கொடுத்தோம்.
பதிலளிநீக்குஇந்த நிகழ்வை படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது.
திருச்சி காயத்ரி மணாளன்
மூன்று அனுபவங்களில் இரண்டில் இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்தார்கள்...
பதிலளிநீக்குமூன்றாவதில் கேரள அரசியலில் காமராஜர்கள் தெரிந்தார்கள்.
ஆனால் எல்லாரும் காமராஜர் ஆவதில்லை...
அருமை ஐயா...
எளிமை என்றவுடன் எனது நினைவுக்கு வந்த ஒரு நிகழ்வு.
பதிலளிநீக்கு2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரில் CII நடத்திய ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு மாநில முதல்வரை (கர்நாடக முதல்வர் அல்ல) சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். 'முதல்வர் ஆயிற்றே நேரத்திற்கு எங்கே வரப்போகிறார் வந்தாலும் கூடவே பந்தா காட்டும் கூட்டமும் வருமே இன்றைக்கு நாம் நேரத்துக்கு ஓட்டலுக்கு திரும்ப போக முடியாது' என்று இருந்தேன். மாலை 4 மணிக்கு அவரது நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருந்தது. சரியாக 4 மணி அடித்துக்கொண்டிருக்கும்போது இரண்டு - இரண்டு என்றால் இரண்டே இரண்டு - போலீஸ்காரர்கள் மட்டும் அரங்கின் உள்ளே வந்தார்கள். அவர்கள் பின்னாலேயே அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் ஆகிய முதல்வர் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அனைவரும் வியப்பில் ஆழ்ந்து விட்டோம். மணி நான்கு ஒன்றுக்கு பேச ஆரம்பித்தவர் இருபது நிமிடங்கள் பேசினார். அனைவரும் spell bound ஆக இருந்தார்கள். பேசி முடித்தவர் அடுத்த நொடி, நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஏதோ பேசினார். நிகழ்ச்சி தொகுப்பாளர் ' நமது சிறப்பு பேச்சாளர் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் உடனடியாக செல்ல வேண்டியிருக்கிறது' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தன் இருகைகளையும் கூப்பிக்கொண்டு மேடையை விட்டு இறங்கியவர் அரங்கின் இருபுறமும் பார்த்து சிரித்தவாறே நடந்து சென்று விட்டார்.
இன்னமும் அந்த தாடி வைத்த முகம் நினைவை விட்டு அகலவில்லை. வந்தவர் அன்றைய குஜராத் முதல்வரும் இன்றைய பாரதப்பிரதமரும் ஆகிய திரு நரேந்திர மோடிதான்.
இன்றைக்கும் இந்த நிகழ்ச்சியை என்னால் நம்பமுடியவில்லை .
திருச்சி அஞ்சு
இம்மாதிரி அதிசயங்களும் நடக்கின்றன.
நீக்குஅன்பிற்கினிய நண்பர் பழனி.கந்தசாமி அவர்களுக்கு அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி எழுதியது. நலம், நலமறிய ஆவல்.நிற்க! தங்களின் இமெயில் முகவரியை உடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். எனது மெயில் முகவரி a.s.mohamedali@gmail.com ஆகும். என்றும் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி.
பதிலளிநீக்குஎன் மெயில்:
நீக்கு