புதன், 30 டிசம்பர், 2015

ஏன் மனிதன் மிருகமாகிறான் ?

                                                Image result for டீக்கடை                   

சமீபத்தில் எங்களூரில் நடந்த இரு நிகழ்ச்சிகள்.

ஒன்று; டீக்கடை ஒன்றில் ஒருவன் குடித்து விட்டு வந்து தாறுமாறாகப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறான். அதை அங்கு டீ குடித்துக்கொண்டிருந்த ஒருவன் கண்டித்திருக்கிறான்.

இருவருக்கும் வாக்குவாதம் பெரிதாகி குடிகாரன் மற்றொருவனை தான் வைத்திருந்த கத்தியால் பல இடங்களில் குத்தியிருக்கிறான். குத்துப்பட்டவன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டான்.

இன்னொரு நிகழ்வு;

ஒரு குடிசைவாழ் பகுதி. அங்கு ஒரு குடும்பம் - கணவன், மனைவி, இரு பெண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தைக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்குப் போய் ஜீவனம் செய்பவர்கள்.

அதே போல் பக்கத்து குடிசையிலும் ஒரு கணவன் மனைவி. இதேபோல் கூலி வேலைக்காரர்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

அந்த குழந்தை இல்லாத பெண்ணிற்கும் குழந்தை பெற்ற ஆணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் கணவன் இதைக் கண்டித்திருக்கிறான். ஆனால் பலன் இல்லை.

ஒரு நாள்  அந்த தம்பதிகள் வேலைக்குப் போகும்போது இந்தக் குழந்தை பெறாத ஆள் துணைக்கு ஒரு உறவினனைக் கூட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே போய் அவர்கள் இருவரையும் கொலை செய்திருக்கிறான்.

இந்த மாதிரி நிகழ்வுகள் அடிக்கடி செய்தித்தாள்களில் வருகிறது. மனிதன் என்னவாக மாறிக்கொண்டு வருகிறான் என்று யோசித்தால், அவன் மிருகமாகத்தான் ஆகிக்கொண்டு வருகிறான் என்பது புலனாகிறது.

இந்த நிகழ்வுகளை செய்திகள் என்ற அளவில் நாம் படித்து விட்டு அடுத்த நிமிடம் இந்த உலகம் அப்படித்தான் என்று நம் மனதிற்கு ஒரு ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்த செய்தியைப் படிக்கப்போய் விடுகிறோம். 

பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களின் நிலை என்ன ஆகும் என்று நாம் யாரும் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. பல உப்புச்சப்பு இல்லாத காரணங்களுக்காக பெரிய பெரிய போராட்டங்கள் நடத்தும் சமூக அமைப்புகள் இத்தகைய மக்களிடம் சென்று அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டினால் இத்தகைய சமூகம் கொஞ்சமாவது சீராகுமே என்று என் மனதிற்குத்தோன்றுகிறது. 

நான் நினைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் என் நினைவுகளில் அத்தகைய எண்ணம் தோன்றுகிறது.

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பதிவுகளும் பின்னூட்டங்களும்.

பதிவுகளுக்கு யார் பின்னூட்டம் போடுகிறார்கள்? உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள், அல்லது நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கும் பதிவர்க்ள, இப்படி. இவை தவிர பின்னூட்டங்கள் அதிகமாக எந்தப் பதிவுகளுக்கு வருகிறது என்று என் பதிவுகளை வைத்து சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு வித்தியாசமான கருத்து அல்லது பலரும் பல வகையான கருத்துகள் வைத்திருக்கும் ஒரு பிரச்சினை, இப்படிப்பட்ட பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் நிறைய வருகின்றன. அதில் பல வசை பாடுகின்றனவாக இருக்கும். அப்படிப்பட்ட வசைகளைக் கேட்க விரும்பாதவர்கள் அப்படிப்பட்ட பதிவுகள் எழுத மாட்டார்கள். எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் வரமுடியாத பதிவுகளாக எழுதுவார்கள்.

எனக்கு அப்படிப்பட்ட உப்புச் சப்பு இல்லாத பதிவுகள் எழுதுவதில் அவ்வளவு விருப்பமில்லை. பதிவுகள் காரசாரமாக இருக்கவேண்டும். பலருடைய சிந்தனைகளைத் தூண்டி விடவேண்டும். மாற்றுக்கருத்துகளும் வசைகளும் வரத்தான் செய்யும். அவைகளை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதில்தான் உங்கள் தனித்துவம் இருக்கிறது.

இந்த ஆள் இப்படித்தான் வம்பில் மாட்டிக்கொள்வார் என்று பலரும் சொல்லலாம். சண்டை வேண்டாம் என்று சொல்லலாம். ஆனால் ஆழமான விவாதம் செய்ய யாரும் முன் வருவதில்லை. இப்போது வரும் பதிவுகளில் பெரும்பாலும் அப்படித்தான் வருகின்றன. நிஜவாழ்க்கையில் இருக்கும் அக்கப்போர்களே போதும், பதிவுகளில் வேறு அக்கப்போர் எதற்கு என்று பல பதிவர்கள் பதிவுலகை விட்டே போய்விட்டார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்சம் பதிவர்களும் ஆன்மீகப் பதிவுகள், சமையல் குறிப்புகள், கை வைத்தியம், கணினி பராமரிப்பு இப்படி பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி நான் எழுதக் காரணம் இன்று ஒருவர் என் பழைய பதிவிற்கு பின்னூட்டம் போட்டிருந்தார். எனக்கு அந்தப் பதிவே மறந்து போயிருந்தது. தலைப்பைப் பார்த்ததும் யாரோ எழுதிய பதிவு போல என்று நினைத்தேன் கடைசியில் பார்த்தால் அது நான் எழுதிய பதிவு.

அதைப்போய் படித்தேன். அந்த பதிவின் தலைப்பு -

காதலர் தினமும், தொடரும் அமில வீச்சுகளும்.

அந்தப் பதிவு மிகவும் காரசாரமாய் இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்று படித்துப் பாருங்கள். அதில் பதிவை விட பின்னூட்டங்கள்தான் காரம் கொண்டவை. அது மாதிரி விஷயங்கள் சமீப காலமாகக் கிடைப்பதில்லை.
இனிமேல் பதிவுகள் எழுதினால் அந்த மாதிரிதான் எழுதவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

செவ்வாய், 22 டிசம்பர், 2015

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும்.

                                       Image result for திருடன்

நான் பாட்டுக்கட்டி ஊட்ல வச்சிருந்தேன்.எவனோ அதை திருடிட்டுப் போய் யூ-ட்யூப்ல போட்டுட்டான்.

இது என்ன கதை. படிக்கறவனெல்லாம் கேனையன்னு நினைக்கறாங்களா? பொறந்த கொழந்த கூட இண்ணைக்கு கம்ப்யூட்டர்லதான் வெளையாடுது.

அப்பனும் மவனும் நல்லா பூச்சுத்தறாங்கையா!

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

                               Image result for பதற்றம்

மனிதனின் வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத நேரம் ஏது? நமது அன்றாட நிகழ்வுகளில் சில, நாம் எதிர்பார்ப்பதற்கு நேர் மாறாகவும் நடக்கக்கூடும். அத்தகைய தருணங்களில் நம்மையும் அறியாமல் பதற்றம் தொற்றிக் கொள்ளும். சிலர் வீட்டில் இதனால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. திடீரென வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது கூட பதற்றத்திற்கு காரணமாக இருக்கும் !

குடும்பத்தலைவிக்கு காலையில் கண் விழித்தது முதல் பதற்றமும் பின் தொடரும். குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்ல தயார் படுத்துவதிலிருந்து கணவர் அலுவலகம் புறப்படும் வரை எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்துப் பணியாற்ற வேண்டும். பள்ளிக்கும் அலிவலகத்திற்கும் உரிய நேரத்திற்குச் செல்ல பஸ், கார் போன்ற வாகனங்கள் முறையாக வந்து செல்ல வேண்டுமே என்கிற கவலை பதற்றமாக உருமாறும் ! சாலைகளில் எந்தவிதமான தடங்கல் விபத்து இன்றி பயணிக்க வேண்டுமென்ற ஆர்வம் கூட பதற்றத்திற்கு இடம் கொடுக்கும். இதே போல்தான் ரெயில் மற்றும் விமானப் பயணங்களின் போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும்.

படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு பயம்; தேர்வு முடிவுகளில் பதற்றம் தோன்றுவதை கண்கூடாகப் பார்க்கலாம். படித்து முடித்தபின் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது ஏற்படும் பதற்றம் சொல்லி மாளாது. உடல் நலமின்றி சிரம்பஃபடுபவர்கள் மருத்துவரைப் பார்க்கும் வரை பதற்றத்துடனேயே வரிசையிர் உட்கார்ந்து இருப்பார்கள். திருமணமான புதிதில் கணவன் வீட்டிற்கு முதன் முதலாகச் செல்லும் மணப்பெண்ணின் பதற்றம் கொஞ்ச நஞ்சம் அல்ல!

ஒரு சிலர் 'எனக்கு கவலைப்பட ஏதுமில்லை' என்று வீராப்பு பேசுவர். இது போன்றவர்களுக்கு ஏற்படும் மிகச்சிறிய சறுக்கலும் அவர்களது நிலைப்பாட்டை புரட்டிப் போட்டுவிடும்.

நம் உடல், மனம், பணம், குடும்பம், வேலை தொடர்புடைய பல கவலைகள் எல்லோருக்குமே இருந்தாலும், அதை மிகைப்படுத்தி, பதற்றப்படுவதே பெரும்பாலோரின் வழக்கமாக உள்ளது.தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பதற்றம் ஏற்படுவது சகஜமாக உள்ளது. இதனால் அவர்களது எண்ணங்களில், செயல்களில் ஒருவித தடுமாற்றம் தோன்றுகிறது. முடிவில் கவலை, கோபம், பயம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளால் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

 பதற்றம் தோன்றுவதற்கான அறிகுறிகள்

o     மனதளவில் அதிகப்படியான அழுத்தம்.

o     எந்த ஒரு பிரச்சினையையும் சற்று முகைப் படுத்திப் பார்க்கும் போக்கு.

o     எதிலும் பரபரப்பு, எளிதில் கோபமடைதல்.

o      பிறரிடம் எரிந்து விழும் குணம்.

o      வியர்த்துக்கொட்டுதல்.

o      வயிற்றில் பரபரப்பு, வாந்தி வரும் உணர்வு, அடிக்கடி மலம் சிறுநீர்        கழிக்கும் உணர்வு.

o      உடல் சோர்வு அடைதல்.

o     கைகால் நடுக்கம்.

o     தூக்க உணர்வு மேலோங்குதல்.

o    சிறிய செயல்களுக்காக மனம் நோந்து போதல்.

o    எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியமல் திணறுதல்.


பதற்றம் ஏன் ஏன் தோன்றுகிறது என்பதற்கு சரியான காரணங்கள் அறியப்படவில்லை. சிலருக்கு இது பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம் என்று தெரிகிறது. நமது எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றிற்காகச் செயல்படும் மூளைப்பகுதியில் உள்ள நரம்பு செல்களின் செயல்பாட்டில் உள்ள குறைகள் காரணமாக இருக்க க்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மிகப்பெரிய மனத்துயர், நெருங்கியவரின் உறவுகளில் இழப்பு, உடல் பாதிப்பு போன்றவையும் காரணமாக இருக்கலாம். மது, காப்பி, டீ போன்றவற்றை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவதாலும் பதற்றம் உண்டாகக் கூடும். சிலருக்கு இளம் வயதிலும், பொதுவாக 35 வயதிலும் பதற்றம் காணப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்படைகிறார்கள்.

பதற்றத்தை கட்டுப்படுத்த வழியுண்டா?

o    ஆரம்ப நிலையிலுள்ள பதற்றத்தை அறிவுசார் நடத்தை மாற்றுச் சிகிச்சை (Cognitive Behaviour Therapy) மூலம் சரி செய்யலாம்.

o    பதற்றத்தை நீக்கக்கூடிய சில மருந்துகள், மனச்சோர்வை நீக்கும் மருந்துகள் உள்ளன. இவற்றை உரிய மருத்துவர் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.

o    வேலையுனூடே சற்று இளைப்பாறுதல், மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுதல், Bio-Feed Back எனப்படும் நம் உறுப்புகளின் இயக்கத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தல் முறைகள் ஆகியன நல்ல பயன் தரும்.

o    தினமும் உடற்பயிற்சி, சமச்சீர் உணவு போன்றவை பதற்றத்தைக் குறைக்க உதவும்.

இவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு முகவும் தேவையானது.

தகவல்: பொன்மொழி பிரபு, மனமகிழ் ஆலோசனை மன்றம், கோவை. தங்க மங்கை இதழ், ஜூன், 2015

தகவல் உதவி: முனைவர்  சி.ஆர்.எல். நரசிம்மன், ஓய்வு பெற்ற மண்ணியல் துறைப் பேராசிரியர், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம், கோவை.(கைபேசி- 8754005750)      

செவ்வாய், 15 டிசம்பர், 2015

பிச்சையெடுத்தானாம் பெருமாளு, பிடுங்கித்தின்னானாம் அனுமாரு

   

                                         Image result for அனுமார்

இதுதான் நடக்குது இப்போ சிங்காரச் சென்னையிலே. அராஜகம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இப்போது சென்னை சென்றால் அளிந்து கொள்ளலாம்.

வெள்ளத்தில் அல்ல்லுற்றவர்களுக்காக மாவட்டங்கள்தோறும் பல நிவாரணப்பொருட்களைச் சேகரித்து சென்னைக்கு லாரி லாரியாக அனுப்புகிறார்கள். இவைகளை ஊர் எல்லையிலேயே வழிமறித்து கொள்ளை அடிக்கிறது ஒரு கும்பல். இதைக் கேட்பாரில்லை.

தலைமையே அப்படி இருக்கும்போது யாரையும் குறை சொல்லிப் பலன் இல்லை.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க

இந்தப் பழமொழியை அநேகமாக எல்லோரும் அறிந்திருக்கலாம்.

அறிந்திருக்கவில்லை என்றால் இப்போது அறிந்து கொள்ளவும்.

சிறுவயது முதலே எனக்கு ஊர் சுற்றிப் பார்ப்பது மிகவும் விருப்பமான சமாச்சாரம். ஆனா அப்போவெல்லாம் ஊர் சுற்றுவதற்கு வேண்டிய காசு இல்லை, இப்போ காசு இருக்கிறது ஆனால் சுதந்திரம் இல்லை.

அதற்கு முன் இந்தப் பாட்டை ஒரு முறை பாடிப் பார்த்துக்கொள்ளவும்.



நல்ல ஓட்டலுக்குப் போய் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் இருந்தது. அன்றைக்கு கல்லைத் தின்றாலும் செரிக்கக் கூடிய தெம்பு இருந்தது. குறிப்பா பல்லு நல்லா இருந்தது. என்ன இருந்து என்ன பிரயோஜனம்? அன்றைக்கு கையில காசு இல்லை.

இன்னைக்கு காசு இருக்குது, பல்லு இல்லே, பசி இல்லே. ரெண்டு தோசை முருகலாச் சாப்பிட்டா நடு ராத்தியில நெஞ்சு கரிக்குது. எழுந்திரிச்சி அரை ஸ்பூன் பெருங்காயத்தை வாயில் போட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிச்சாத்தான் சரியாகுது.

இந்த லட்சணத்தில ஊர் சுத்திப் பாக்கணும்னு ஆசை. இரண்டு நாளைக்கு முன்னால தெரிஞ்ச டிராவல்ஸ்காரன் போன் பண்ணி, துபாய் போறேன்னு சொன்னீங்களே, வாரீகளா என்று கேட்டான். எப்பவோ சொல்லி வச்சது. இப்ப போன் பண்ணறான். இதைக் காதில் கேட்ட என் சகதர்மிணி என்ன போன் என்றாள்.

நான் இந்த டிராவல்ஸ்காரன் துபாய் வர்றியான்னு கேக்கறான், ரெண்டு பேரும் போகலாமா என்றேன். நான் வரலை என்றாள். அப்ப நான் மட்டும் போய்ட்டு வரட்டுமான்னு கேட்டேன். நான் வராத இடத்திற்கு நீங்களும் போக க்கூடாது அப்படீன்னுட்டாள்.

இந்த மாதிரி அக்கிரமம் உலகத்தில் உண்டா?  இங்கிலீசுல ஒரு பழமொழி சொல்லுவாங்க.  Dog in the manger policy அப்படீன்னு. நாய் போயி மாட்டுக்காடில உக்காந்துட்டு தானும் வைக்கோல சாப்பிடாம மாட்டையிம் வைக்கோல சாப்பிட உடாம வம்பு பண்ணுமாம். அந்த மாதிரி ஆயிப்போச்சுங்க என் கதை.

செவ்வாய், 8 டிசம்பர், 2015

கல்யாணம் கட்டுவது எதற்காக?

                                       Image result for கல்யாணம்

இது என்ன கேள்வி? "கல்யாணம் கட்டுவது பிள்ளை பெறுவதற்காக" என்று எகத்தாளமாகப் பதில் சொல்வது சுலபம். ஆனால் கல்யாணத்தின் பின்னால் உள்ள அனைத்து காரணங்களையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிள்ளை பெறவது என்பது கல்யாணத்தின் ஒரு முக்கிய அம்சம்தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக மட்டும்தான் கல்யாணம் செய்து கொள்கிறோமா?

மனித சமூகத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பது பல் காலமாக ஒரு தேவையாக இருந்து வந்திருக்கிறது. இனவிருத்தி ஒரு நோக்கமாக இருந்தாலும் இவ்வாறு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ஒரு நம்பிக்கையான துணை வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அவசியம். மனைவி இந்த வகையில் ஒரு வாழ்க்கைத் துணைவியாக இருக்கிறாள்.

ஒரு குடும்பம் என்றால் ஒரு ஆண், ஒரு பெண், சில பல குழந்தைகள் சேர்ந்தது என்று அனைவரும் அறிவோம். பொதுவாக ஆண் குடும்பத்தலைவன் என்று அறியப்படுகிறான். குடும்பத்தின் பாதுகாப்பு, அதை வழிநடத்துவது, குடும்பத்திற்கு வேண்டிய பொருளாதாரத்தை ஈட்டுவது ஆகியவை இவனுடைய முக்கியப் பொறுப்புகள்.

அதே சமயம் குடும்பத்தலைவி என்று அறியப்படும் பெண், வீட்டில் இருந்து கொண்டு அந்தக் குடும்பத்தை நிர்வகிக்கிறாள். கணவனுக்கு உதவியாக இருத்தல், பிள்ளைகளைப் பேணுதல், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணவு அளித்தல் ஆகியவை இவள் பொறுப்பாகும்.

கால மாற்றத்தால் பெண்களும் வெளியில் சென்று வேலை பார்க்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இப்படி ஆணும் பெண்ணும் பொருள் ஈட்டும்போது அவர்களின் பொறுப்புகளும் மாற்றத்திற்கு உட்படுகின்றன. குடும்ப வேலைகளை இருவரும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள் கூட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அப்படி வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்கும் பெண்களின் கடமைகள் என்னென்ன? அந்தப் பெண் நிறையப் படித்திருக்கலாம். ஆனால் அவள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவேண்டும் என்ற சூழ்நிலை அந்தக் குடும்பத்தில் இல்லாமல் இருக்கலாம். அப்போது அந்தப்பெண்ணின் நிலை என்ன?

எந்தக் குடும்பமானாலும் அதில் உள்ளவர்கள் சாப்பிட்டே ஆகவேண்டும். தினசரி வெளியில் ஓட்டல்களிலிருந்து உணவு வாங்கிச் சாப்பிடுவது உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. அப்படியானால் வீட்டில் உணவு தயாரிப்பது யார்? ஒரு ஆள் வைத்து சமைத்தாலும் அந்த ஆளை சரியாக நிர்வகிப்பது யார்? இது ஒரு குடும்பத்தலைவியின் பொறுப்பாகத்தான் இது நாள் வரை இருந்து வருகிறது.

ஏன் குடும்பத்தலைவி மட்டும் உணவு தயாரிக்கவேண்டும்? குடும்பத் தலைவன் தயாரிக்கக் கூடாதா என்று பெண்ணுரிமைக் கழகத்தினர் கேட்கலாம். ஆனால் ஒரு குடும்பத்தில் ஆண் சம்பாதித்துக் கொண்டுவந்தால் பெண் மற்ற குடும்ப வேலைகளைக் கவனிப்பது என்பது வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்வதாகும்.

ஆனால் இந்த நடைமுறை வழக்கத்தை இந்தக் காலத்து நவநாகரிக யுவதிகள் கடைப்பிடிப்பதில்லை. அந்தக்காலத்தில் கல்யாணத்திற்காகப் பெண் பார்க்கப் போனால் "பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா" என்று சம்பிரதாயமான் கேள்வி கேட்பது உண்டு. பெண்ணின் தாயாரும் "பெண்ணை சமையல் செய்யத் தெரியாமலா வளர்ப்போம்" என்று பதில் சொல்வதுவும் வழக்கமே.

ஆனால் இன்று பெண் பார்க்கச்செல்லும்போது இந்தக் கேள்வியை யாரும் கேட்பதில்லை.  அப்படிக்கேட்டால் பெண்ணின் தாயார் "என்ன உங்கள் வீட்டிற்கு நமையல்காரியைத் தேடுகிறீர்களா" என்று பதில் கேள்வி கேட்பார்கள். பெண்ணோ, "அம்மா அவர்கள் ஒரு நல்ல சமையல்காரியைப் பார்த்து அவர்கள் பையனுக்கு கட்டி வைக்கட்டும். எனக்கு இந்தப் பையன் வேண்டாம்" என்பாள்.

இப்படிக்கேள்வி கேட்காமல் கட்டிக்கொண்டு வரும் பெண் என்ன செய்கிறாள் என்றால் மாமியிர் ஆக்கிப்போடும் சோற்றை மூன்று வேளையும் விழுங்கி விட்டு தன்னுடைய ரூமில் டிவி பார்க்கிறாள். காலப்போக்கில் குழந்தையும் பெற்றுக்கொள்கிறாள். குழந்தையை கொஞ்சகாலம் பெண்ணின் தாயார் பார்த்துக்கொள்கிறாள். பிறகு புருஷன் வீட்டிற்கு வந்த பிறகு அந்த வேலையையும் மாமியாரே பார்க்கும்படியாகி விடுகிறது.

நானும் என் மனைவியிடம் இந்த நிலையைப் பற்றி விவாதித்தேன். இப்போது எந்தப் பொண்ணு சமையல் செய்யப் பழகுது? படிக்கப் போகுதுங்க, படிச்சு முடிச்சதும் கல்யாணம் கட்டிக் கொடுத்துடறாங்க. என் பொண்ணுக்கு சமையலறை எங்கே இருக்குன்னே தெரியாதுங்க அப்படீன்னு பெண்ணப் பெத்தவங்க பெருமையாச் சொல்லிக்கிறாங்க.

எனக்கு வருகின்ற சந்தேக்ம் என்னவென்றால், அப்போ கல்யாணக் கட்டிக்கிடறது எதுக்காக? பிள்ள பெறுவதற்காக மட்டுமா? அப்படியானால் வீட்டை யார் நிர்வகிப்பார்கள்? எதிர்காலத்தில் எல்லோரும் சாப்பாட்டிற்கு ஓட்டலையே நம்பிக்கொண்டிருப்பார்களா? எனக்கு வயசாகி விட்டதினால் இப்படி சந்தேகங்கள் வருகின்றனவா? அல்லது இவை நியாயமான சந்தேகங்கள்தானா?

இதைப் படிக்கும் பதிவர்கள் தங்கள் அபிப்பிராயங்களைக் கூறவேண்டுகிறேன்.

                        

வியாழன், 3 டிசம்பர், 2015

சென்னைப் பேரிடர் மேலாண்மை

                                 Image result for சென்னை வெள்ளம்
நான் சமீப காலங்களில் இரண்டு பேரிடர்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். முதலாவது ஒரிசா புயல். இரண்டு தமிழ்நாட்டில் சுனாமி. இந்த இரண்டு பேரிடர்களிலும் நான் கண்ட இரு முக்கியமான அம்சம் என்னவென்றால், பொது ஜனங்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய தயங்கியதே இல்லை. அதுவும் பொருளுதவி செய்ய பெரும் இளவில் முன் வருகிறார்கள்.

ஆனால் இந்த உதவிகளெல்லாம் நலிந்தோரைச் சென்றடைவதே இல்லை என்பதுதான் நிதரிசனம். இப்போது சென்னையில் ஏற்பட்டுள்ள பேரிடர் அது போன்றதே. இதிலிருந்து எவ்வாறு சென்னையை மீட்கலாம் என்பதுதான் இப்போதுள்ள சவால்.

பதிவர்கள் எல்லோரும் இதைப்பற்றி சிந்தித்து தங்கள் கருத்துகளைக் கூறலாம். அவைகளில் ஏதாவது சில வழிகள் சிறந்ததாக இருக்கக் கூடும். அவை அரசு அதிகாரிகளின் பார்வைக்குப் போய் செயல்படக்கூடும்.

எனக்குத் தோன்றிய சில சிந்தனைகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

1. முதலில் வெள்ளம் வடியும் வரையில் இப்போது செயல்படும் வழிகளைத்தவிர வேறு வழிகள் இல்லை. எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டு தீவாக இருக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவும் குடி நீரும் எவ்வழியிலாவது கொண்டு சேர்க்கவேண்டும்.

2. வெள்ளம் வடிந்த பிறகு சாலைகளையும் மற்ற பொது இடங்களையும் துரிதமாக சுத்தம் செய்யவேண்டும். நீர் வழிந்தோடிய பாதைகளில் சேர்ந்திருக்கும் குப்பைகளை நீக்கி அந்த வழிகளை ஒழுங்கு படுத்தவேண்டும். இதற்கு வேண்டிய ஆட்களையும் இயந்திரங்களையும் பக்கத்து மாவட்டங்களிலிருந்து கொண்டு வரவேண்டும்.

3. சாலைகளை போக்குவரத்திற்கு உகந்ததாக விரைவில் சரி செய்யவேண்டும். பொது போக்குவரத்தை உடனடியாக சீர் செய்யவேண்டும்.

4. பொது மக்களுக்கு மின்சாரம், தண்ணீர் விநியோகம் இரண்டையும் ஒழுங்கு படுத்தவேண்டும். வீடுகளில் உள்ள மின் இணைப்புகள், தண்ணீர்க்குழாய்கள் செப்பனிட தேவையான ஆட்களை வெளியூரிலிருந்து சில நாட்களுக்கு வரவழைத்து அவர்களுடைய சேவையை முறைப்படுத்தலாம்.

5. மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களான மளிகைப் பொருட்கள், பால், காய்கறிகள், கேஸ் இவைகளை சீரான வகையில் நியாயமான விலையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

6. வீடுகளை இழந்த மக்களுக்கு அவர்கள் வீடுகளை புனரமைக்க வேண்டிய கட்டுமானப்பொருட்களை அவர்களுக்கு கிடைக்குமாறு செய்யவேண்டும்.

7. சிறிய நாற்சக்கர, இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்க்க அண்டை மாவட்டங்களிலிருந்து மெக்கானிக்குகளை அதிக அளவில் வரவழைத்து ஆங்காங்கே அவர்களைப் பணியில் வைத்தால் மக்ளுக்கு உதவியாக இருக்கும்.

8. மெடிகல் கேம்ப்கள் ஆங்காங்கே நிறுவ வேண்டும். வெளியூரிலிருந்து டாக்டர்களை இதற்கு வரவழைக்கலாம்.

9. இந்த நிவாரணப் பணிகளுக்கான போதுமான நிதி அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதை சரியாக உபயோகப்படுத்தினால் அனைத்து நிவாரணப் பணிகளையும் செவ்வனே செய்து முடிக்கலாம். தனி நபர்கள் நிதி வசூல் செய்வதென்பது பெரும்பாலும் மோசடிகளே.

மற்ற பதிவர்களும் தங்கள் யோசனைகளை அவரவர்கள் தளத்தில் வெளியிடலாம்.இந்தப் பதிவுகள் எதிர்காலத்திலும் உபயோகப்படலாம்.


புதன், 2 டிசம்பர், 2015

சென்னை வெள்ளம்.

                                      Image result for சென்னை வெள்ளம்
சென்னையில் குடியிருப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

சென்னையில் இருக்கும் பதிவர்கள் அங்கு நிலவும் நிலையை முடிந்த அளவு பதிவுகளில் தெரிவித்தால் நாங்கள் நிலைமையைத்தெரிந்து கொள்வோம்.

உணவு, குடி நீர், தங்குமிடம் இந்த மூன்றும்தான் அவசியத்தேவை. ஆனாலும் செய்திகளும் தேவை.

மின்சாரம் இல்லை. தொலைதொடர்பு சாதனங்கள் வேலை செய்யவில்லை. கணினி வேலை செய்யும் இடங்களில் உள்ள பதிவர்கள் சென்னை நிலைமையைத் தெரிவியுங்கள்.

சென்னை இன்று இருக்கும் நிலையில் வெளியூரில் இருக்கும் தனி நபர்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை எனக் கருதுகின்றேன். அரசு மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளுக்கு சேவை மனப்பான்மை கொண்ட குழுக்கள் ஏதாவது உதவி செய்ய முடியும். மக்களின் அனுதாபத்தை சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

வியாழன், 26 நவம்பர், 2015

இது என்னுடைய 900 ஆவது பதிவு

                          Image result for 900
முதலில் ஒரு சந்தேகம். "900 ஆவது" என்ற சொல், அதாவது எண்ணையும் எழுத்தையும் இணைத்து உருவாக்கிய சொல், இலக்கண விதிகளின்படி சரியா? "தொள்ளாயிரமாவது" என்று எழுதியிருக்கவேண்டுமோ? சரி, இதை இலக்கண நிபுணர்களின் விவாதத்திற்கு  விட்டு விட்டு நம்ம சமாச்சாரத்திற்கு வருவோம்.

இதுவரை, இந்தப் பதிவோடு சேர்த்து தொள்ளாயிரம் (எதுக்கு வம்பு, இலக்கணப்பிரகாரமே எழுதி விடுவோம்) பதிவுகள் எழுதியாகி விட்டது. வயதும் 80 ஆகி விட்டது. மூளையின் உயிரணுக்கள் குறைந்து கொண்டே போகின்றன. ஒரு வித சோம்பல் மனதையும் உடலையும் பீடிக்கிறது. பதிவு எழுத ஆர்வம் குறைகிறது.

இந்தப் புலம்பல்களை பதிவில் எழுதி என்ன ஆகப்போகிறது? பதிவுலக நண்பர்கள் சில ஆறுதல் வார்த்தைகள் கூறலாம். ஒரு நண்பர் (எதிரி நண்பர் என்று சொல்லலாம் என்று கருதுகிறேன்) நீங்கள் பதிவு எழுதாவிட்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா என்று கூடக் கேட்டார்.  இன்னொருவர் முனைவர் பட்டம் வாங்கி என்ன பயன்? பகுத்தறிவு இல்லையே என்கிறார்.

ஆகவே இந்த இரண்டு கருத்துக்களுக்கும் ஒரு தீர்வு காணவேண்டும். பத்து நாளாக நான் பதிவு எழுதவில்லை. உலகம் அஸ்தமித்துப் போன மாதிரி தோணவில்லை. ஆகவே நான் பதிவு எழுதுவதற்கும் உலகம் அஸ்தமிப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று நிரூபணம் ஆகி விட்டது.

ஆனால் சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி மக்களை மிகவும் வதைத்து விட்டது. நான் பதிவு எழுதாததிற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று ஆராய வேண்டும். என்னமோ "கேயாஸ் தியரி" என்று ஒன்று இருக்கிறதாமே? நம் கமல் கூட தசாவதாரம் படத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அது பிரகாரம் இந்த நிகழ்வுகளுக்குள் என்ன தொடர்பு என்று ஆராயவேண்டும். யாராவது இந்த ஆராய்ச்சிக்கு மான்யம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

                                          Image result for சென்னை வெள்ளம்

அடுத்து பகுத்தறிவுக்கும் முனைவர் பட்டத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆராயவேண்டும். இது இன்றைய வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த ஆராய்ச்சியை எப்படி செய்வது என்று இந்த துறையில் உள்ள நிபுணர்கள் கருத்துகள் சொன்னால் என்றென்றும் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

ஆஹா, எப்படியோ சோம்பிக் கிடந்த நரம்புகளைத் தட்டியெழுப்பி ஒரு பதிவைத் தேத்தியாகி விட்டது. என் பிதற்றல்களைத் தவறாது படித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.

வெள்ளி, 20 நவம்பர், 2015

நாம் எல்லோரும் வள்ளல்களே


                                            Image result for திருடன்
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரிவள்ளல் என்று நம் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. நம்மையும் இப்படி யாராவது வள்ளல் என்று போற்ற மாட்டார்களா என்று ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒரு மூலையில் ஒரு நப்பாசை ஒட்டிக்கொண்டிருக்கும். உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது, ஆனால் என் மனதிற்குள் அப்படி ஒரு ஆசை ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

அந்த ஆசையைத் தீர்க்கவென்றே இப்போது தீவிரவாதிகள் கிளம்பியிருக்கிறார்களாம். அவர்கள் நம்மை வாரிவழங்கும் வள்ளல்கள் என்று போற்றுகிறார்களாம். எப்படி என்று கேட்கிறீர்களா?

தீவிரவாதிகளுக்கு இன்று முக்கியமாகத் தேவைப்படுவது ஒரு பெயர் அதாவது ஒரு Identity. உங்கள் பெயரை வைத்து ஒரு தீவிரவாதி தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். எப்படி?

பேங்க் அல்லது மொபைல் டீலர், கேஸ் கம்பெனி இப்படி பல இடங்களில் உங்களுடைய அடையாளத்தை நிரூபிக்க பல ஆதாரங்களைக் கேட்கிறார்கள். ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு இப்படி பல ஆதாரங்களின் நகல்களை இங்கு நாம் பாரிவள்ளல் ரேஞ்சில் வாரி வழங்குகிறோம். தற்சமயம் மோடியின் தயவால் அவைகளை நாமே சர்டிபை பண்ணிக்கொள்ளலாம்.

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரி ஆதாரம் கேட்கிறார்கள். பேங்கில் ரேஷன் கார்டு செல்லாது. டெலிபோன் ஆபீசில் வாக்காளர் அட்டை செல்லாது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி ரூல்ஸ் வைத்திருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து இந்த நகல்களைக் கேட்பதால் நான் அனைத்து அடையாள ஆதாரங்களையும் பத்துப்பத்து காப்பி எடுத்து அனைத்தையும் ஒரு பையில் வைத்திருக்கிறேன். இம்மாதிரி ஆதாரம் கேட்கும் இடங்களுக்குச் சென்றால் அந்தப் பையை அப்படியே கொண்டு போய்விடுவேன். அவர்கள் அட்ரஸ் புரூப் என்றால் அந்தப் பையில் இருக்கிம் அனைத்துக் காப்பிகளையும் அவர்கள் முன்னால் போட்டு உங்களிக்கு எத் பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவது வழக்கம்.

இந்த ஆதாரங்களைக் கொடுத்து நம் காரியங்களை முடித்தவுடன் இதைப்பற்றி நாம் அறவே மறந்து விடுகிறோம். ஆனால் இவை பின்னால் என்ன ஆகிறது தெரியுமா? எல்லோரும் இவ்வாறு செய்வதில்லை. ஆனாலும் சில இடங்களில் தில்லு முல்லு நடக்கிறது. தீவீரவாதிகள், அல்லது போலி பெயர்களில் உலாவ விரும்புகிறவர்கள் அனைவரும் நாம் இப்படிக்கொடுக்கும் நம் விவரங்கள் அடங்கிய காப்பிகளை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். அதை வைத்து அவர்கள் பாஸ்போர்ட் வாங்குகிறார்கள், ரயில் டிக்கட் வாங்குகிறார்கள், பேங்க் கணக்கு ஆரம்பிக்கிறார்கள், இன்னும் என்னென்னமோ செய்கிறார்கள்.

இதற்கு என்று ஏஜண்டுகள் இருக்கிறார்கள். நீங்கள் வீட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் பெயரில் எவனோ ஒருவன் வெளி நாட்டுக்குப் பறந்து கொண்டிருப்பான். உங்கள் பெயரில் இருக்கும் பேங்க் கணக்கில் பல தில்லு முல்லுகள் நடக்கும். நினைத்தாலே பயமாக இருக்கிறதல்லவா? இது நாம் பாரி வள்ளலாக ஆனதின் விளைவு.

இதற்கு மாற்று என்ன? இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் ஒரு வழி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி ஆதாரங்களின் நகல்களில் சர்டிபை செய்ய கையெழுத்து போடும்போது இன்ன காரியத்திற்காக என்று குறிப்பிடவேண்டும். பேங்க் கணக்கு ஆரம்பிக்க, சிம் கார்டு வாங்க என்று குறிப்பிடவேண்டும். அதன் கீழ் கையெழுத்து போட்டுவிட்டு தேதியை மறக்காமல் எழுத வேண்டும். இந்த இரண்டு குறிப்புகளையும் கடைப்பிடித்தால் ஓரளவு திருட்டுகளைத் தவிர்க்க முடியும் என்று வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

இந்த விபரங்களை எல்லோருக்கும் அறிவியுங்கள்.

செவ்வாய், 17 நவம்பர், 2015

மனிதனும் சம்பிரதாயங்களும்

  

மனிதன் எக்காலத்திலும் சூழ்நிலைக்கு அடிமையே. இயற்கைச் சூழ்நிலை மட்டுமல்ல. சமூகச் சூழ்நிலைக்கும் அவன் அடிமையே. அடிமை என்ற வார்த்தை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அப்படியானால் சூழ்நிலைக்கு அனுசரித்துப் போதல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒவ்வொருவரும் சுகமாகவே வாழ விரும்புகிறான். துக்கத்தை ஒருவரும் விரும்புவதில்லை. இது உலக வழக்கம். இதில் தவறு எதுவுமில்லை. அடுத்தவர்களைக் கெடுக்காமல் சுகமாக வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

ஒருவனுக்கு எது சுகம் என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க முடியாது. அவரவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். அதே மாதிரி ஒருவன் சுகம் என்று அனுபவிப்பதை இன்னொருவன்  அது சுகம் அல்ல என்று சொல்லலாம். அது அவனுடைய கருத்து. எல்லோருடைய கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

பழக்க வழக்கங்களும் அம்மாதிரியேதான். அவரவர்களுக்குப் பிடித்த எண்ணங்களுடன்தான் ஒருவன் தன்னுடைய பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்துவான். இதுதான் சரி, இது தவறு என்ற ஒரு பொது விதி சில செயல்களுக்குத்தான் பொருந்தும். வீதிகளில் வண்டிகள் ஓட்டுவது இப்படித்தான் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அது எல்லோருக்கும் பொது. அதை மீறினால் சிக்கல்கள் வரும்.

ஆனால் கோயிலுக்குப் போவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். நம்பிக்கையிருப்பவர்கள் போகலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் போகாமல் இருக்கலாம். ஆனால் கோயிலுக்குப் போவது தவறு என்று கோவிலுக்குப் போகாதவர்கள்  கோவிலுக்குப் போகிறவர்களைப் பார்த்து சொல்லுவது தேவையில்லை. அதே மாதிரி கோவிலுக்குப் போகாமல் இருப்பது தவறு என்றும் கோவிலுக்குப் போகிறவர்கள் சொல்லக் கூடாது.

எனக்குத் தெரிந்த தத்துவம் இதுதான்.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

பதிவர்களின் ஆயுள்.

                                    Image result for பிளாக்கர்
புதியன புகுதலும் பழையன கழிதலும்
வழுவல கால வகையினானே.  நன்னூல் சூத்திரம்.

இந்த சட்டம் யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ, பதிவரக்ளுக்கு மிகவும் பொருந்தும். நான் ஏறக்குறைய ஆறு வருடங்களாகப் பதிவுலகில் வலம் வருகிறேன். பல பிரபல பதிவர்களைப் பார்த்து விட்டேன்.

எல்லோருக்கும் பொதுவான விதி என்னவென்றால் பதிவர்களுக்குண்டான ஆயுள் முடிந்தவுடன் அவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். நான்காயிரம் பதிவுகளுக்கு மேல் பதிவிட்ட பிரபல பதிவர் சி.பி.செந்தில்குமார். அவர் பதிவுலகில் எழுதுவதை ஏறக்குறைய நிறுத்தி விட்டார்.

தினம் தவறினாலும் தவறும், ஆனால் இவர் பதிவு தினத்திற்கு ஒன்று வந்தே தீரும் என்று பெயர் வாங்கின பதிவர் திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்கள். அவர்கள் பதிவுகள் இப்போது ஆடிக்கு ஒன்று, அமாவாசைக்கு ஒன்று என்று வருகிறது.

துளசி தளம் டீச்சர் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறார். ஆனால் இந்த மாதிரி தொடர்ந்து எழுதுபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள்.

பொதுவாக நான் பார்த்த வரையில் பதிவர்களின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் அல்லது 1000 பதிவுகள். இவைகளைத் தாண்டி பதிவு தொடர்ந்து எழுதிபவர்கள் பதிவுலகில் மிகச்சொற்பமே.

நான் ஏறக்குறைய 900 பதிவுகள் போட்டு விட்டேன். இதை வைத்து என் பதிவுலக ஆயுள் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே தோராயமாகக் கணக்குப் பண்ணிக்கொள்ளலாம். இந்தக் கணக்கு எனக்கு மட்டும் இல்லை. அநேகமாக எல்லாப் பதிவர்களுக்குமே பொருந்தும்.

சனி, 14 நவம்பர், 2015

விதியின் விளையாட்டு-கடவுளைக் கண்டேன்.

                                                   Image result for பரமசிவன் பார்வதி

விதி ஒரு மனிதனை எந்த வகையில் எந்த ரூபத்தில் தாக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சமும் எதிர் பார்க்காத நேரத்தில்தான் அது தன் வேலைகளைக் காட்டும். பாருங்கள் நான் சிவனேயென்று நானுண்டு என் பதிவுகளுண்டு என்று இருந்தேன்.

எனக்கு விதி கில்லர்ஜி ரூபத்தில் அதன் வேலையைக் காட்டிவிட்டது. கீழே கொடுத்துள்ள ஸ்கிரீன் ஷாட்டைப் பாருங்கள்.


இந்த லிஸ்டில் நான்காவது பெயரைப் பாருங்கள். இதில் "அன்பிற்குரிய" என்ற அடைமொழி வேறு. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஆத்திர அவசரத்திற்கு அவரது பதிவைக் "காப்பி பேஸ்ட்" செய்யலாம் என்றால் ஒரு அட்சரத்தைக்கூட காப்பி பண்ண முடியாமல் மந்திரம் போட்டு வைத்திருக்கிறார். இதில் அன்பு எங்கே வந்தது?

அவரைப் பழி தீர்க்க எனக்கு ஒரே வழிதான் இருக்கிறது. அதைத்தான் இப்போது செய்யப்போகிறேன். நான் எப்படியோ கைலாசத்தில் பரமசிவன் முன்னால் நிற்கிறேன்.

அவர் பக்தா என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். நான் பலமுறை அவரைத் தண்டனிட்டு நமஸ்கரித்து வேண்டிய வரம் என்னவென்றால்.

பிரபோ, நான் வசிக்கும் பூவுலகில் எனக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் முன்பே கொடுத்து விட்டீர்கள். அதுவே போதும். ஆனால் இப்போது புதிதாக ஒரு பிரச்சினை கில்லர்ஜி என்றி ஒருவரால் ஏற்பட்டிருக்கிறது. அதை மட்டும் தீர்த்து வைத்தால் போதும் என்றேன்.

அவர் அந்தக் கில்லர்ஜியினால் உனக்கு என்ன பிரச்சினை என்றார். அது வந்து பிரபோ நான் என் பாட்டுக்கு பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தேன். அவர் என்னை உடனடியாக உங்களை பேட்டி கண்டு விட்டு வந்து விபரங்களைச் சொல்லுமாறு என்னை நச்சரிக்கிறார் என்றேன்.

பரமசிவனும் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றார். அதற்கு ஒன்றே ஒன்று செய்தால் போதும் பிரபுவே. அவர் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தால் அந்தக் கம்ப்யூட்டரின் கீபோர்டில் எழுத்துகள் மாயமாய்ப் போகவேண்டும். இது ஒன்றுதான் நான் கேட்கும் வரம் என்றேன்.

சிவனாரும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதித்து என்னைத் திரும்பவும் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார். இனி மேல் கில்லர்ஜி பதிவுகள் எழுதமாட்டார். அப்படி எழுதினால் நான் பரமசிவன் மேல் நம்பிக்கைத் துரோகத்திற்காக கேஸ் போடுவேன்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்து மத சம்பிரதாயங்களும் சங்கடங்களும்.

                                            Image result for திதி கொடுத்தல்

இந்து மதத்தின் பல முகங்கள் வெளியில் தெரிவதில்லை அல்லது அதைப் பற்றி அதிகமாக யாரும் பேசுவதில்லை என்று வைத்துக்கொள்ளலாம். இந்த மாதிரி பல பழக்கவழக்கங்களைப் பற்றி ஏதாவது இந்து மதப் புத்தகங்கள் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எல்லாம் செவி வழி வந்த சம்பிரதாயங்கள்தான்.

அதில் ஒன்று இறப்பு பற்றியது. மனிதனாகப் பிறந்தவன் இறப்பது திண்ணம். ஆனால் அப்படி இறந்த பிறகு அவனுடைய உறவினர்களுக்கு ஏகப்பட்ட நியதிகள் வந்து விடுகின்றன. குறிப்பாக இறப்புத் தீட்டு என்பது ஒன்று. இறந்த வீட்டிற்குப் போய் வந்தால் தலை முழுகவேண்டும். இறந்த வீட்டுக்காரர்கள் யார் வீட்டிற்கும் போகக்கூடாது. இப்படி பல நடைமுறைக் கட்டுப்பாடுகள் வந்து விடுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தக் கட்டுப்பாடுகள் இறந்தவரின் பங்காளிகளுக்கும் வந்து விடுகின்றன. அவர்களும் பதினாறு நாட்கள் தீட்டுக் காக்க வேண்டும் அவர்களும் யார் வீட்டிற்கும் போக க்கூடாது. நல்ல, கெட்ட விசேஷங்களுக்குப் போகக்கூடாது. கோயிலுக்குப் போகக்கூடாது. வீட்டில் உள்ள சாமியையும் கும்பிடக்கூடாது. இப்படியெல்லாம் நடைமுறைச் சட்டங்கள் இருக்கின்றன. இவைகளை யார் இயற்றினார்கள், எந்தப் புத்தகங்களில் இவை தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அவைகளை நாம் கடைப் பிடிக்கிறோம்.

என்ன திடீரென்று இந்த ஆராய்ச்சி என்று யோசிப்பவர்களுக்கு; என் பங்காளியின் மனைவி முந்தாநாள் ஹார்ட் அட்டாக்கில் காலமாகி விட்டார்கள். பங்காளி வீட்டில் எது நடந்தாலும் அனைத்து பங்காளிகளும் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும். நானும் போய்வந்தேன். அனைத்துப் பங்காளிகளும் நடைமுறைப்பிரகாரம் 16 நாள் தீட்டு அனுசரிக்கவேண்டும்.

இதற்கு நடுவில் என் சதாபிஷேகம் இன்னும் நான்கு நாளில் கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தேன். ஆனால் இந்த சம்பவம் நடந்த பிறகு தீட்டு வந்துவிட்டதே. என்ன செய்யலாம் என்று காலகாலேஸ்வரர் கோவில் ஐயரைப் போய் விசாரித்தேன். (அங்குதான் என் சதாபிஷேகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தேன்). கோயிலுக்குள் நான் போகக் கூடாதல்லவா?அதனால் என் மச்சினன் ஒருவனைக் கூடக் கூட்டிக்கொண்டுபோயிருந்தேன்.

அந்த ஐயர் திட்டவட்டமாக 16ம் நாள் காரியம் முடியாமல் எந்தக் காரியமும் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார். பிறகு என்ன செய்ய முடியும்? அடுத்த மாதம் என் ஜன்ம நட்சத்திரம் வரும் வரையில் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஒருவனின் வாழ்வில் விதி எப்படி விளையாடுகிறது பாருங்கள்.