வியாழன், 9 பிப்ரவரி, 2012

இந்தியா வல்லரசு ஆகப்போகிறது !



ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒவ்வொரு சிறப்பான குணம் உண்டு.
ஜப்பானிய நாட்டின் தேசிய குணம் வேலை, வேலை, வேலை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் பொருட்டல்ல. வேலை நிறுத்தம் செய்வதாயிருந்தால் சாதாரணமாகச் செய்யும் வேலையைவிட அதிகமாகச் செய்வார்கள்.

ஜெர்மானியர்கள் எதைச் செய்தாலும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் செய்வார்கள் என்று பிரசித்தம். ஐரோப்பியர்கள் நேரம் தவறாமைக்குப் பெயர் போனவர்கள். அமெரிக்கர்கள் எதைச் செய்தாலும் பிரம்மாண்டமாகச் செய்வார்கள்.

வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டுப் பாட்டுடன் வாழ்கிறார்கள். எதைச் செய்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இருக்கும். இதை நான் நேரில் கண்டு அனுபவித்திருக்கிறேன்.

ஆனால் இந்திய நாட்டு மக்களின் குணம் என்னவென்று கேட்டால் நாம் தலைகுனிவதை விட வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. இந்தியா பழம்பெரும் நாடு, ஆன்மீகத்தில் எங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை, அந்தக் காலத்திலேயே விவேகானந்தர் அமெரிக்கர்களுக்கு ஆன்மீகம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று பழம் பெருமை பேசுவதைத் தவிர நாம் எதில் வல்லவர்கள் என்று யோசித்தால் வெட்கமாக இருக்கிறது.

அமெரிக்கர்களைப் போல் பெரிதாக செய்வதாயிருந்தால் நம் தலைவர்கள் செய்த ஊழல் தொகையைச் சொல்லலாம். ஐரோப்பியர்களின் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பது என்பது எப்போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என்ற கோட்பாடுதான். கட்டுப்பாடு என்று வந்துவிட்டால் நம்மை அடிக்க வேறு யாரும் இல்லை. வேலை நிறுத்தம் செய்வதிலாகட்டும், பஸ்களை எரிப்பதிலாகட்டும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பதிலாகட்டும், இன்ன பிற காரியங்களில் இந்தியர்களை மிஞ்ச எந்த நாட்டினராலும் முடியாது.

இந்த லட்சணத்தில் 2020 ல் இந்தியா வல்லரசாகப் போகிறது என்று ஒரு தேசத் தலைவர் சொல்லிப் போயிருக்கிறார். சாதாரண அரசாக இருக்கும்போதே இப்படி என்றால் வல்லரசான பிறகு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்!!!!


5 கருத்துகள்:

  1. இந்தியா வல்லரசாக வேண்டாம். நல்லரசானால் சரிதான்.

    பதிலளிநீக்கு
  2. யோசிக்க வேண்டிய விசயம்தான் ஐயா..

    பதிலளிநீக்கு
  3. தமிழன் என்றொரு இனமுண்டு..
    தனியே அவர்க்கொரு குணமுண்டு

    தமிழ் நண்டு கதை கேள்விப்பட்டதில்லையா!!

    பதிலளிநீக்கு
  4. ஸார்..ஒரு சின்ன சந்தேகம்..சாதாரண அரசாக இருக்கும் போது, பஸ்ஸை எரிப்பவன், வல்லரசாகும் போது ஏரோப்ளேனை எரிப்பானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்கலாம். இன்றைய செய்தியைப் பார்த்தீர்களா? சென்னையில் ஒரு 9 ம் வகுப்பு மாணவன் தன் வகுப்பு டீச்சரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறான். கலி முத்துகிறது!

      நீக்கு