புதன், 15 பிப்ரவரி, 2012

நான் ஆங்கிலேயன் ஆனேன்!



நான் தமிழ் மீடியத்தில் படித்ததால் என் ஆங்கிலப் புலமையின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. இன்டர்மீடியட் வகுப்பில் எல்லாப் பாடங்களையும் (தமிழ் தவிர) ஆங்கிலத்தில் போதித்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் அப்பாவுக்கு தமிழ்தான் படிக்கத்தெரியும். ஆங்கிலம் தெரிந்தவர்கள் என் சொந்தக்காரர்களிலேயே யாரும் இல்லை.

என்ன செய்வதென்று புரியாமல் என் ஆங்கிலப் பேராசிரியர் திரு.நரசிங்கராவ் அவர்களைப் போய்ப் பார்த்து என் பரிதாப நிலையைச் சொன்னேன். அவரும் இரக்கப்பட்டு சில ஆலோசனைகள் சொன்னார். முதலில் சில ஆங்கில கதைப்புத்தகங்கள் படிக்குமாறு கூறினார். அவர் முதன்முதலில் பரிந்துரைத்த புத்தகம் John Buniyan எழுதிய Pilgrims Progress என்ற புத்தகம். அந்த வார இறுதியில் அந்தப் புத்தகத்தை கல்லூரி லைப்ரரியிலிருந்து எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்தேன்.


புத்தகம் சரியான கனம். சுமார் 800 பக்கங்களுக்கு மேல் இருக்கும். இதை எப்படியும் படித்து விடுவது என்று அடுத்த நாள் சனிக்கிழமை அப்போதைய கோஷன் பார்க்குக்கு (இந்நாளில் அதை பாரதி பார்க் என்று பெயர் மாற்றிவிட்டார்கள்) சென்று அங்குள்ள பெஞ்சில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். காலை பத்து மணிக்கு ஆரம்பித்தவன் மாலை 6 மணிக்கு படித்து முடித்து விட்டேன்.

அத் ஒரு கிறிஸ்தவ வேதமான பைபிளைத் தழுவிய ஒரு கதை. ஒரு கிறிஸ்தவன் இறந்த பிறகு எவ்வாறு அவனுடைய பாவங்களைச் சுமந்து கொண்டு பரலோகம் செல்கிறான் என்பதைப் பற்றிய கதை. ஆங்கிலத்திலே பாண்டித்யம் பெற்றுவிடுவது என்ற வைராக்யத்தில் ஒரே மூச்சில் படித்தேன். இதை ஆங்கில ஆசிரியரிடம் சொல்லியதும் அவர் என்னைப் பாராட்டிவிட்டு இனி பிரெஞ்ச் ஆசிரியர் guy de Maupassant என்பவர் எழுதிய சிறுகதைகளின் ஆங்கில பொழி பெயர்ப்பு பல தொகுப்புகள் லைப்ரரியில் இருக்கின்றன, அவற்றைப் படி என்றார். இந்த ஆசிரியர் எழுதியஇரவல் நெக்லஸ்என்ற சிறுகதை உலகப்பிரசித்தி பெற்றது. அந்த தொகுப்புகள் ஒரு பத்துப் பனிரெண்டு இருந்தன. அவற்றை முழுவதும் படித்தேன்.

பிறகு சார்லஸ் டிக்கன்ஸ், மார்க் ட்வைன், கோனன் டாயில், ஸ்டீவன்சன், எச்.ஜி.வெல்ஸ், இப்படி கிடைத்தவைகளை எல்லாம் படித்து ஓரளவு ஆங்கிலத்தில் சுயமாக புரியும் அளவிற்கு தேர்ச்சி பெற்றேன்.

இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதுவது கடினகாகவே இருந்தது. எந்த மொழியிலும் வினைச் சொற்களின் சரியான பிரயோகம் தெரிந்து கொண்டால் அந்த மொழியில் பிழையில்லாமல் எழுதுவது மிகவும் சுலபம். ஹைஸ்கூலில் என் வாத்தியார் இந்த வித்தையைச் சொல்லிக் கொடுக்கவில்லை. அப்போது ஒரு ஆங்கில இலக்கணப் புத்தகம் வாங்கி வைத்திருந்தேன். அதை இப்போது எடுத்து தூசி தட்டி வினைச்சொற்கள் பகுதியைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது ஆங்கிலத்தில் வினைச்சொற்களில் நான்கு வகை இருக்கிறது என்று.

1.   Present imperfect           I eat
2.   Present perfect            I have eaten
3.   Present continuous          I am eating
4.   Present perfect continuous    I have been eating

இது நிகழ்காலத்துக்கு. இது போல் இறந்த காலம், எதிர் காலத்திற்கும் நாலு நாலு வகைகள் உண்டு. இது தவிர, ஆண்பால், பெண்பால், உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை, செய்வினை, செயப்பாட்டு வினை இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான வினைச்சொல்.
தமிழில் எழுதி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, திரும்பத் திரும்ப பயிற்சி செய்ததில் ஓரளவு ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுதக் கற்றேன். பிற்காலத்தில் மேற்படிப்பு படிக்கும்போதும், ஆசிரியராகப் பணிபுரிந்தபோதும், பல தலைமைப் பொறுப்புகள் வகித்த போதும் இந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது.  

இந்தக் காலத்து இளைஞர்கள் புத்தகம் படிப்பதையே நிறுத்திவிட்டார்கள் என்று தோன்றுகிறது. காலம் மாறுகிறது. என்னை மாதிரி கிழடுகள் புலம்பத்தான் முடியும்.

18 கருத்துகள்:

  1. அப்போதுதான் தெரிந்தது ஆங்கிலத்தில் வினைச்சொற்களில் நான்கு வகை இருக்கிறது என்று.
    //

    இதை ஒரு 7 வருடங்களுக்கு முன்னால் சொல்லியிருந்தால்.. நாங்க எங்கேயோ போயிருப்போம்..

    போங்க சார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படித்தான் பல விஷயங்களில் காலம் கடந்துதான் ஞானம் பிறக்கிறது. என்ன செய்ய. நம் கொடுப்பினை அவ்வளவுதான் என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு
    2. ச்சே... அப்பவே தெரிஞ்சிருந்தா.. இன்னேரம் ஒபாமாவுக்கு செக்ரேட்டரியா ஆகிருப்பேனே வடைப்போச்சே....அவ்வ்வ் :-)))

      நீக்கு
    3. என்ன பண்ணறதுங்க, நாம வாங்கிட்டு வந்த வரம் அம்புட்டுத்தான். ஒடம்பு பூராவும் வெளக்கேண்ணை தடவிட்டு மணல்ல பொரண்டாலும் ஒட்றதுதான் ஒட்டுமுங்க.

      நீக்கு
  2. இப்போதான் தேவையானதை கூகிள் கொடுக்கிறதே? இனி எதற்கு படிக்கவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  3. இப்போதெல்லாம் வீட்டில் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளின் பிள்ளைகள் கூட ஆங்கில வழி பாடம் நடத்துகின்ற பள்ளியில் சேர்க்கப்பட்டு படிக்க வைக்கின்றனர், சுமார் முப்பது வருடத்திற்கு முன்பெல்லாம் இத்தகைய நிலை கிடையவே கிடையாது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் தான் இன்னமும் அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் எதோ ஒரு பள்ளியில் படிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது, இதனால் தானே இன்றைக்கு சமூகத்தில் கல்வி என்பது வியாபாரமாகி போனது, எனது வீட்டைச் சுற்றி மொத்தம் மொத்தமாக 10 பள்ளிக்கூடங்கள் உள்ளன, அதில் 6 பள்ளிகள் ஆங்கில வழி பாடம் கர்ப்பிக்கின்ற பள்ளிகள், காலையில் இப்பகுதியில் தெருவில் நடப்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் கூறியது போன்று மான வருவத்திலேயே புத்தகங்கள் படிப்பதற்கு ஆர்வத்தை உண்டாக்குவது மிகவும் அருமையான பழக்கம், ஆனால் இன்றைக்கு உள்ள மாணவர்களுக்கு அவற்றிற்கெல்லாம் நேரம் கிடைப்பதே கிடையாது அத்தனை பாடச்சுமைகள், போதாகுறைக்கு எக்ஸ்ட்ரா டியூஷன் கிளாஸ், டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ், கராத்தே கிளாஸ் இவையெல்லாம் இல்லையென்றால் தொலைகாட்சி, செல்போன், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் என்று ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டதல்லவா, அவர்களையும் குறை சொல்லி பயனில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான், ரத்னா. ஆனால் நம் குழந்தைகள் எதையெல்லாம் இழக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

      நீக்கு
  4. still on who studied in tamilmediam has to face the same problem.. only way out is reading, reading...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்! எல்லோரும் படித்து பயன் பெற வேண்டிய பதிவு. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதனை செய்து காட்டி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. காலம் மாறுகிறது..இளைஞர்கள் இணையத்தில் கற்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் இல்லாத விஷயமே இல்லை என்று ஆகிவிட்டது. காலத்தை பின்னோக்கி செலுத்த யாராலும் முடியாது என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை.

      நீக்கு
  7. பயனுள்ள பகிர்வு ஐயா.... நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
  8. நானும் தமிழ் மீடியத்தில்தான் அறிவியல் பட்டப்படிப்பும் முடித்தேன், கிளாஸ் வாங்கினேன், நல்லவேளையாக அப்பா பள்ளி ஆசிரியர், எனக்கு முன்பு மூன்று அண்ணன் மார்கள் அனைவரும் காலேஜ் வரை போனவர்கள். அரை ட்ராயர் வயசில் இருந்தே ஹிந்து பேப்பர் அறிமுகமானதால் வசதி. மேலும் பள்ளி,கல்லூரி நாட்களில் நம் நாட்டில் வெளிவரும் அத்தனை வார மாத தமிழ் ஆங்கில சஞ்சிகைகள் எல்லாம் கும்ப கோணத்தில் ,லெண்டிங் லைப்ரரி தயவால் கிடைத்தன. சக்கைபோடு போட்டோம். அண்ணன் மார்கள் ஒளித்து வைத்து படித்த டெபோனியர் இதழ்கள் கூட விட்டதில்லை. திருட்டுத்தனமாக ட்ராயரின் இடுக்கில் வைத்து மேலே சட்டையை போட்டுக்கொண்டு நண்பர்களுடன் ஊரின் தெற்க்கே உள்ள திருமலை ராஜன் ஆற்றுக்கு சென்று பார்த்து படித்து களிப்போம். திருச்சி வானொலியில் தவறாது டெல்லியில் இருந்து ஒலி பரப்பப்படும் ஆங்கில செய்திகளை தவறாமல் கேட்கும் பழக்கமும் வந்துவிட்டது.
    ஆங்கிலம்பேசுவதும், படிப்பதும், எழுதுவதும் பற்றிய கவலையே இல்லாமல் போனதும் உண்மை.

    அது ஒரு கனாக்காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சூழ்நிலைதான் ஒருவனை வளர்க்கிறது என்பது மிகவும் உண்மையான விஷயம்.

      நீக்கு
  9. நல்ல பகிர்வு... நானும் பத்தாவது வரை தமிழ் வழி கல்வி பயின்று பிறகுதான் ஆங்கில வழிக் கல்விக்கு மாறினேன்.... முதல் சில மாதங்களுக்கு பெரும் பிரச்சனைகள் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுதும் நீங்கள் உங்கள் மொழித் திறமையை வளர்த்தால் பயன் இருக்கும்.

      நீக்கு
  10. நானும் தமிழ் வழிக் கல்வியில் தான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன் ஐயா.
    இதனால் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க சற்று சிரமம் இருந்தது.
    ஆனாலும் ஒரு வெறியுடன் படித்து அடுத்த மூன்று வருடங்களில் முதல் மூன்று இடங்களுக்குள்
    வந்தேன் ஐயா.
    மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை எனது அனுவத்தில் கண்டேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  11. இந்தக் காலத்து இளைஞர்கள் புத்தகம் படிப்பதையே நிறுத்திவிட்டார்கள் என்று தோன்றுகிறது. காலம் மாறுகிறது.//
    உண்மைதான் சார்.:(

    பதிலளிநீக்கு