சனி, 5 மே, 2012

உணர்ச்சி வசப்படுதலும் அதன் விளைவுகளும்


சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளியான ஒரு செய்தியை அநேகமாக அனைவரும் படித்திருப்பீர்கள்.

கயத்தாற்றில் ஒரு குடும்பம். தாய் தகப்பன், இரண்டு பையன்கள்,பெரியவனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள். வெளியூரில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். மனைவி பெற்றோருடன் இருக்கிறாள். தம்பி ஒரு கழிசடை. குடித்துவிட்டு ஊர்ப்பெண்களை மேய்வதுதான் அவன் வேலை. யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் தம்பி அண்ணியிடமே வம்பு செய்திருக்கிறான். அவள் முடிந்த வரையில் பொறுமையாக இருந்திருக்கிறாள். முடியாமல் போகவே கணவனிடம் புகார் செய்திருக்கிறாள்.

அண்ணன்காரன் அதீத உணர்ச்சி வசப்பட்டு ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்கு இருந்த உணர்ச்சி வெறியில் விவேகம் அவனை விட்டுப் போய்விட்டது. தன் உறவினன் ஒருவனைத் துணைக்கு கூப்பிட்டுக் கொண்டான். தம்பியை நைச்சியமாய் பேசி தங்கள் தோட்டத்து பம்ப் செட் ரூமுக்கு கூட்டிப்போய் குடிக்க வைத்து 70 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டான்.

இதன்பிறகு என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். போலீஸ் கேஸ், சிறை வாசம், கோர்ட்டு விசாரணை, தீர்ப்பு. இந்தக் கூத்து எல்லாம் நடந்து முடிய ஓரிரு ஆண்டுகள் ஆகலாம். இந்த சமயத்தில் கேஸ் நடத்த, குடும்பம் நடத்த ஆகும் செலவுகளை எப்படி செய்வது? இருக்கும் சொத்துகளை விற்று செலவுகள் நடக்கும். முடிவில் அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம்.

இதன் பிறகு அவன் மனைவி குழந்தைகள் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய எதிர்காலம் எப்படி ஆகும்? உணர்ச்சி வசப்பட்டு செய்த காரியத்தினால் என்னென்ன விபரீதங்கள் ஏற்பட்டு விட்டன? இந்த நிகழ்வில் எங்கு தவறு நேர்ந்தது?

அந்தக் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் மூத்த மகனை அவன் மனைவியைத் தன்னோடு அழைத்துப் போகச் சொல்லியிருக்க வேண்டும். அது முதல் தவறு. அந்த மூத்த மகனாவது நிலைமையைப் புரிந்துகொண்டு தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அந்த மனைவியாவது நல்ல யோசனை சொல்லியிருக்கவேண்டும். அல்லது அவளுடைய தாய் தகப்பனாவது ஏதாவது மாற்றுத் திட்டங்கள் சொல்லியிருக்கவேண்டும்.

இவைகளெல்லாம் நடக்கவில்லை. கடைசி காலத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவன் செய்த கொலையினால் ஒரு குடும்பம் சீரழிந்து நடுத்தெருவில் நற்கும் நிலை உருவாகிவிட்டது.

இது மாதிரி சம்பவங்கள் இப்போது அதிகமாக நடக்கின்றன. காரணம் பொறுமையின்மை. ஒரு நிமிடம் விளைவுகளைப் பற்றி யோசித்திருந்தால் இந்த செயல்கள் நடந்திருக்குமா?

இதைப் படிக்கும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்தப் பிரச்சினை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நேரலாம். அப்படி நேரும் பட்சத்தில் உணர்ச்சி வசப்படாமல் அந்தப் பிரச்சினையை கையாள்வது எப்படி என்று இப்போதே யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.

6 கருத்துகள்:

  1. கண்டிப்பாக அய்யா, அப்போதுமே பதறாத காரியம் சிதறாது தான்

    பதிலளிநீக்கு
  2. உணர்ச்சி வசப்பட்டு செய்யும் ஒரு செயல் ஒரு குடும்பத்தையே நடு தெருவில் கொண்டு வந்து விடும் என்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும்.பிற்கால சூழ் நிலைகளை கருத்தில் கொண்டு எந்த ஒரு விசயத்தையும் அணுகும் மனபான்மை நமக்கு தேவை என்பதுதான் இதிலிருந்து நாம் விளங்கும் பாடம். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  3. பலி வாங்க வேண்டும் என்ற சிந்தனை மனதில் தோன்றிவிட்டால் அன்றிலிருந்தே நம்முடைய அழிவுப்பாதையும் துவங்கிவிடுகிறது.

    பதிலளிநீக்கு