ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
பூனையின் தன்மானம் என்று நான் ஒரு பதிவு போட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அந்தப் பூனை பக்கத்து வீட்டில் குட்டி போட்டுவிட்டு, பின்புதான் எங்கள் வீட்டு வாசலில் நின்று கத்தியது. முதல் நாள் வீட்டுக்கார அம்மா அதை விரட்டி விட்ட செய்தி உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

இரண்டு நாள் கழித்து மறுபடியும் அந்தப் பூனை வாசலில் வந்து கத்தியது. நான் ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் பால் ஊற்றிக் கொண்டுபோய் வைத்தேன். சமர்த்தாக அதைக் குடித்துவிட்டுப் போய்விட்டது. அடுத்த நாள் அது தன் குட்டிகளையெல்லாம் கொண்டு வந்து எங்கள் வீட்டு பாத்ரூம் மொட்டை மாடியில் வைத்துக் கொண்டது. பூனை தான் போட்ட குட்டிகளை அடிக்கடி இடம் மாற்றி வைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டு பாத்ரூம் மொட்டைமாடி வெயில், மழைக்கு பாதுகாப்பாக இருந்ததால் அங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு போகவில்லை.

நான் தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் பால் வாங்கப் போவேன். அன்று அப்படி பால் வாங்கி வந்தவுடன் என்னைப் பார்த்து பரிதாபமாக கத்தியது. அப்புறம் போய் அதற்காக தனியாக கால் லிட்டர் பால் வாங்கி வந்து அதற்கு ஊற்றி வைத்தேன். பாதி குடித்து விட்டுப் போய்விட்டது. அப்புறம் மதியம் வந்து மீதிப் பாலையும் குடித்துவிட்டது.

அடுத்த நாளும் இப்படியே செய்தேன். அப்புறம் என் வீட்டம்மா, தயிர் சாதம் பிசைந்து வைத்தாள். பாலைவிட தயிர் சாதத்தை அந்தப் பூனை விரும்பி சாப்பிட்டது. அந்தப் பூனை இரவு முழுவதும் எங்கோ போய்விட்டு காலையில்தான் குட்டிகளைப் பார்க்கவரும். அப்போது, அந்தக்குட்டிகள் பலவாறாக அந்தப் பூனையின் மேல விழுந்து கொஞ்சி, அப்புறம் பால் குடிக்கும். குட்டிகளுக்கு பால் கொடுத்த பிறகு தாய்ப் பூனை எங்களிடம் வந்து நின்று கொள்ளும். ஏதாவது தின்பதற்கு வைத்தால் ஒழிய இடத்தை விட்டுப் போகாது.

இப்படி ஒரு பத்து நாள் சென்ற பிறகு ஒரு குட்டி மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டது. மொட்டை மாடியின் உயரம் 8 அடி இருக்கும். பூனைக்குட்டிகள் இப்படி விழுந்தாலும் அவைகளுக்கு அடி ஒன்றும் படாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தாய்ப் பூனை அதைக் கவ்விக்கொண்டு போய் திரும்பவும் மொட்டை மாடியிலேயே விட்டு விட்டது. இரண்டு நாள் கழித்து இரண்டு குட்டிகள் கீழே விழுந்து விட்டன. தாய்ப்பூனை அவைகளை அப்படியே விட்டுவிட்டது. மேலே இரண்டு குட்டிகள், கீழே இரண்டு குட்டிகள், ஆக நான்கு குட்டிகளுக்கும் பால் கொடுத்துக்கொண்டு இருந்தது.

அப்புறம் இரண்டு நாள் கழித்து இன்னொரு குட்டியும் கீழே வந்து விட்டது. இப்போது மேலே இருக்கும் ஒரு குட்டி மட்டும் கீழே உள்ள மூன்று குட்டிகளையும் பார்த்துக் கத்திக் கொண்டு இருந்தது. ஒரு நாள் இரவு இந்த மேலே இருக்கும் குட்டிப்பூனை போட்ட சத்தத்தைப் பொறுக்க முடியாமல் என் பேரன் ஏணி வைத்து ஏறி அதையும் கீழே இறக்கி விட்டான். அது கொஞ்சம் நோஞ்சான். தானாக கீழே குதிக்கமுடியவில்லை.

இப்படியாக இந்த நான்கு குட்டிகளும் தாய்ப்பூனையும் என் காருக்கு அடியில் குடித்தனம் நடத்த ஆரம்பித்தன. எப்போது பார்த்தாலும் பூனைகளின் மியா மியா சத்தம் வீட்டைச் சுற்றி கேட்க ஆரம்பித்தது. அதுகள் பண்ணும் சேட்டைகளைப் பார்த்த என் வீட்டுக்காரி, இவைகளைப் பிடித்து எங்காவது கொண்டு போய் விட்டுவிட்டு வாங்களேன் என்று நச்சரிக்க ஆரம்பித்தாள். அவைகளைப் பிடிக்கப்போனால் காருக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டன. பல தடவை முயன்றும் என்னால் அவைகளைப் பிடிக்க முடியவில்லை. தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்.

என் வீட்டுக்கு பக்கத்து தெருவில் மீன் கடைகளும் மட்டன் கடைகளும் நிறைய இருக்கின்றன. தாய்ப்பூனை அங்கு போய், அவர்கள் பரிதாபப்பட்டு போடும் மீன்களையும் மாமிசத் துண்டுகளையும் கொண்டு வந்து குட்டிகளுக்கு கொடுக்க ஆரம்பித்தது. அவை தின்னது போக மிச்சங்கள் நாற்றமடிக்க ஆரம்பித்தன. அவைகளை கிளீன் பண்ணுவது பெரும்பாடாக ஆயிற்று. என் வீட்டுக்கார அம்மாவோ சுத்த சைவம். வீட்டில் ஒரே களேபரம். என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கும் போது ஒரு நாள் மூன்று குட்டிகளைக் காணோம். எங்கு போனது என்று தெரியவில்லை. கடைசியாக கீழே இறக்கிவிட்ட குட்டி மட்டும்தான் இருந்தது.

தாய்ப்பூனை அங்கும் இங்கும் அலைந்து அந்தக் குட்டிகளைத் தேடியது. ஆனால் அந்தக் குட்டிகள் போனவை போனதுதான். என்ன ஆயிற்று என்றே யாருக்கும் தெரியவில்லை. தாய்ப்பூனை அந்த ஒரு குட்டிக்கு மட்டும் பால் கொடுத்துக்கொண்டு இருந்தது.

இன்று காலையிலிருந்து அந்த ஒரு குட்டியையும் காணவில்லை. தாய்ப்பூனை அதைத் தேடி, காலையிலிருந்து பரிதாபமாக கத்திக்கொண்டே வீட்டைச் சுற்றிச்சுற்றி வருகிறது. குட்டி எங்கே போனது என்று தெரியவில்லை. அதன் பரிதாபக் குரலைக் கேட்டால் மனது பிசைகிறது. என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது.

இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால் அந்தக் குட்டிகளின் தந்தைப் பூனையாக இருக்கவேண்டும். அது எப்போதாவது வந்து போய்க்கொண்டு இருந்தது. காலை பத்து மணிக்கு அதுவும் வந்து தாய்ப் பூனையுடன் சேர்ந்து கத்திக்கொண்டு வீட்டைச் சுற்றிச்சுற்றி வருகின்றன.

பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டிக்குள் போடும் மனிதர்கள் எங்கே? குட்டியைத் தேடித் தவிக்கும் பூனை எங்கே?

16 கருத்துகள்:

 1. தெருவில் நாய்கள் உண்டோ? குட்டிப்பூனைகளைக் கண்டால் கபளீகரம் செய்து விடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம். ஆனால் அப்படி நினைக்க மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

   நீக்கு
 2. உண்மையில் விலங்குகளிடம் இருக்கின்ற பண்புகள் கூட மனிதர்களான எம்மிடம் இல்லாதது கவலைக்குறியதே...
  நல்லதொரு உதாரணத்துடம் நல்லதொரு தகவல்

  பதிலளிநீக்கு
 3. :(

  யாராவது மனிதர்களோ இல்லை தெரு நாய்களோ கொண்டு போயிருக்க வாய்ப்பு உண்டு:(

  ஒரு பெரிய அட்டைப்பெட்டியில் கொஞ்சம் கிழிந்த துணிகளும் காகிதங்ஜளும் போட்டு வச்சுருந்தால் அதுலேயே இருந்துருக்குமே,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனிதர்கள் பிடித்துப் போயிருக்கலாம். குட்டிகள் பெரிதாய் விட்டன. அட்டைப் பெட்டிக்குள் இருக்காது.

   நீக்கு
 4. பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டிக்குள் போடும் மனிதர்கள் எங்கே? குட்டியைத் தேடித் தவிக்கும் பூனை எங்கே?

  பாவம் குட்டியைத் தொலைத்த பூனைகள் !

  பதிலளிநீக்கு
 5. மனிதர்களை விட விலங்குகள் காட்டும் பாசம் அதிகம் என சொல்வதுண்டு. அதைத்தான் நீங்கள் நேரடியாகக் கண்டிருக்கிறீர்கள். நல்ல பதிவைத் தந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டிக்குள் போடும் மனிதன் பூனை, நாய்க் குட்டிகளை எடுத்து/திருடிப் போய் வளர்ப்பது முரண்தான்! அவனுக்குப் பிடிக்காத போது அவற்றையும் துரத்தி விடுவான்!

  பதிலளிநீக்கு

 7. ஐயா, DOGS ARE FAITHFUL TO PERSONS, BUT CATS ARE FAITHFUL TO PLACE என்று சொல்வார்கள். வளர்த்த பூனைகள் , எஜமானர்கள் வீட்டை மாற்றினாலும் அவை இடம் விட்டுப் போகா. அதற்காகத்தான் அவற்றைகோணியில் கட்டி எங்காவது கொண்டு விடுவார்கள். உங்கள் வீட்டுப் பூனைக்குட்டிகளை நாய்கள் கொன்றிருக்க வாய்ப்பு அதிகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படித்தான் ஆகியிருக்கவேண்டும். வருத்தமாக இருக்கிறது.

   நீக்கு
 8. குட்டிகள் எங்கேயோ பத்திரமாக இருக்கிறது என்று நம்புகிறேன். தங்களின் இரக்கம் அவற்றைக் காப்பாற்றும். நெகிழ்ச்சியான பதிவு.

  ஸ்ரீ....

  பதிலளிநீக்கு
 9. கேட்டீங்களே ஒரு கேள்வி!!! அவ்வ்வ் - கதை சூப்பர்!

  பதிலளிநீக்கு
 10. முடிவில் நல்லதொரு கேள்வி ஐயா...

  உங்களின் நம்பிக்கை அந்தக் பூனைக் குட்டியைக் காப்பாற்றும்...

  விரைவில் அப்படி ஒரு செய்தியை எதிர்ப்பார்க்கிறேன்...

  பதிலளிநீக்கு
 11. ungaludaya inthanalla ennathirketpa avai kandipaga nallave irukkum, kavalai venam :)

  பதிலளிநீக்கு
 12. எனக்கு இப்போ ஒரு விஷயம் புரிஞ்சு போச்சு சார். ஆள் வச்சு பூனைக் குட்டிகளைக் கடத்திக் கொண்டு போய் அந்த மீன் கடையில் விட்டுவிட்டு வரச் சொன்னது உங்க வீட்டு அம்மாதான். புலன் விசாரணை பண்ணுங்க, உண்மையைக் கக்கிடுவாங்க............

  பதிலளிநீக்கு