வெள்ளி, 8 மார்ச், 2013

4. புரட்சிகரமான மாற்றங்கள்


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

இளைப்பாறிவிட்டு எல்லோரும் ஆபீசில் கூடினோம். சித்திரகுப்தன் எல்லா தேவர்களையும் குடியிருப்பில் இருத்திவிட்டு எல்லோருக்கும் அடையாள அட்டை கொடுத்தாயிற்று என்றான். நல்லது உட்கார் என்று சொல்லிவிட்டு மந்திராலோசனையை ஆரம்பித்தேன்.

பகல்-இரவு தோற்றுவித்தல் - நாரதரிடம் கேட்டேன். இங்கு ஏன் எப்பொழுதும் பகலாகவே இருக்கிறது. இரவு ஏன் இல்லை?

அவர் சொன்னார், பல கோடி காலமாக இப்படியேதான் இருக்கிறது. யாரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.

நான் இதை எப்படி மாற்றுவது? பூலோகம் மாதிரி 12 மணி நேரம் பகலாகவும் 12 மணி நேரம் இரவாகவும் மாற்றவேண்டுமே என்றேன்.

நாரதர் அதற்கென்ன, அப்படியே செய்து விடலாம். நான் சூரியனைக் கூப்பிடுகிறேன். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என்றார்.

சூரியன் வந்தார். நாரதர் அவரிடம் விஷயத்தைச் சொன்னார். சூரியன் இந்திரனிடம் கேட்கவேண்டுமே என்றார். நாரதர் சொன்னார், சூரியரே, இப்போது இங்கு இவர்தான் சகல காரிய அதிகாரஸ்தர். இந்திரன் வேலைகளையெல்லாம் இவர்தான் பார்க்கிறார், ஆகையால் நீ இவருடைய ஆணையை ஏற்றுக்கொள்ளலாம் என்றார். சூரியனும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தேவர்களை தூங்குவித்தல் - நாரதரே, இந்தத் தேவர்களை இரவில் தூங்க வைக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன். பிரபோ, அவர்கள் கண் இமைப்பதில்லையாதலால் அவர்கள் தூங்க முடியவில்லை என்றார்.

அப்படியா, சங்கதி, இந்த நொடி முதல் எல்லாத் தேவர்களுக்கும் இமைகள் இமைக்கட்டும். அப்படியே அவர்கள் பேய் மாதிரி மிதக்காமல் அவரவர்கள் கால்களினால் நடக்கட்டும் என்றேன். இந்த விஷயங்களை விவரமாக தேவதந்தியில் போட்டு விடுங்கள் என்றேன்.

தேவலோகத்தில் நடைமுறை பாஷை - இனிமேல் தேவலோகத்தில் தமிழ்தான் நடைமுறை பாஷையாக இருக்கும். அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் தமிழிலேயே நடக்கும். திருவள்ளுவர், தொல்காப்பியர், பரிமேலழகர் ஆகியோர் உடனடியாக அனைத்து தேவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கவேண்டும்.

தேவர்களுக்கு பசி தாகம் உண்டாக்குதல் - நாரதரே, நீங்கள் எல்லாம் உணவின் ருசியை அறியாமலிருப்பதால்தான் உங்களுக்கு வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை. ஆகையால் நாளை காலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பசி, தாகம் உண்டாகட்டும். அவர்கள் தாங்களாகவே சமையல் செய்யக் கற்றுக்கொள்ளும் வரை காமதேனு அவர்களுக்கு உணவு சப்ளை செய்யட்டும்.

நளன், பீமன் இருவரும் இங்குதானே இருக்கிறார்கள் என்றேன். நாரதர் அவர்களை உடனே வரவழைத்தார். என்ன, நள பீமர்களே, நலமா? என்றேன். அவர்கள் என்ன ஊருங்க இது, ஒரு வேலை வெட்டி இல்லை, சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை, மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார்கள்.

உங்கள் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு தீர்ந்து விட்டன. இனி தேவர்களுக்கு பசி, தாகம் உண்டாகும். அவர்களுக்கு சமையல் கலையை நீங்கள் இருவரும் கற்றுக்கொடுக்கவேண்டும். உடனே ஆரம்பியுங்கள் என்றேன். அவர்களை மிகுந்த சந்தோஷத்துடன் போய்விட்டார்கள்.

கற்பகதருவைக் கூப்பிட்டு அனைத்து தேவர்களுக்கும் ஒரு வருடத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணை வகையறாக்களை உடனே சப்ளை செய்யவும் என்றேன். அதுவும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது.

நாரதரே, ஒரு வருடத்திற்கான உணவு ஏற்பாடுகளைச் செய்தாய் விட்டது. அடுத்த வருடத்திலிருந்து தேவர்கள் அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். அதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன்.

இது கொஞ்சம் கடினமான வேலை, பிரபோ. தேவர்கள் இதுநாள் வரை உடம்பை வருத்தி எந்த வேலையையும் செய்து பழகியவர்களல்ல. தவிர, அவர்கள் ஆளும் வர்க்கமாகவே இருந்து விட்டதால் அவர்கள் விவசாய வேலை செய்ய பிரயோஜனப்பட மாட்டார்கள். நமது சித்திரகுப்தனைக் கேட்டால் இந்த வேலைக்குத் தகுந்த ஆட்களை அடையாளம் காட்டுவார் என்றார்.

சித்திரகுப்தா, இதற்கு என்ன வழி என்றேன். பிரபோ, இதற்கு நல்ல வழி இருக்கிறது. யமலோகத்தில் பலர் அவர்கள் தண்டனை காலம் முடிந்து சும்மா இருக்கிறார்கள். அவர்கள் எந்த கடின வேலையையும் செய்து பழகியவர்கள். அவர்களை தேவலோகத்தில் விவசாயம் செய்ய கூப்பிட்டுக்கொள்ளலாம் என்றான். அப்படியே ஆகட்டும் என்றேன்.

இப்டியாக தேவர்களின் இருப்பிடம், உணவு ஏற்பாடுகள் முடிந்தன.

தேவலோகத்தில் மின்சாரம், சமையல் எரிவாயு, குடிதண்ணீர் ஆகி வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி மயனுக்கு உத்திரவு போட்டேன். அவனும் அதை செய்து முடித்தான்.

எல்லோரையும் அவரவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் மூவரும் விடுதிக்குத் திரும்பினோம். அப்போது பொது, தலைவா, நாம் இப்படித் தேவர்களுக்கே பாடுபட்டுக் கொண்டிருந்தால், நம் பிள்ளை குட்டிகளின் கதி என்ன ஆவது? என்றான். நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினாய், நானும் இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு யோசனை இருக்கிறது.

அதாவது இங்கு ஏகப்பட்ட இடம் காலியாக இருக்கிறது. இந்தத் தேவர்களோ ஒரே எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதனால் இந்த உபரியாக இருக்கும் இடத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கலாமா என்று ஒரு ஐடியா மனதில் இருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் இரவு யோசித்து காலையில் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனேன்.

23 கருத்துகள்:

  1. தேவாதிதேவர்களுக்கும் ஆட்சி மொழியாக அறிவிக்க செய்தமைக்கு பாராட்டுக்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  2. ஆட்சி பாஷை தமிழானால் அந்நிய பாஷைக்காரர்கள் என்ன செய்வார்கள்?! மும்மூர்த்திகள் 'செவ்வாயில் குடியேறுவது போல இங்கு நீங்கள் குடியே(ற்)றி விட்டீர்கள். நாங்கள் புதிதாக இன்னொரு மேலுலகம் அமைக்கிறோம்' என்று போய் விடுவார்களோ?! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் ஆட்சி மொழியைக் கற்றுக்கொண்டு கோலோச்சுவார்கள்.

      நீக்கு
  3. //நாளை காலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பசி, தாகம் உண்டாகட்டும்.//

    எப்போது பசி தாகம் எடுக்க ஆரம்பித்துவிட்டதோ அப்போதே பாதி சண்டை ஆரம்பமாகிவிடும். மேலும் நீங்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் வேறு ஆரம்பிக்கப் போகிறீர்கள் அல்லவா? இனி மேலோகத்தில் ஆள் கடத்தல், ஆள் மாறாட்டம், வெட்டு குத்து போன்ற காட்சிகள் அரங்கேற ஆரம்பித்துவிடும். ம்..ம் நடக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  4. அவர்களை தூங்க விடாமல் செய்து விட்டு, நீங்கள் மட்டும் கொர்ர்.....

    பதிலளிநீக்கு
  5. - இனிமேல் தேவலோகத்தில் தமிழ்தான் நடைமுறை பாஷையாக இருக்கும். /

    கற்பனையிலாவது தமிழ் ஆட்சிமொழியாக தேவலோகத்தில் இருப்பது மகிழ்ச்சிதருகிறது ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. சென்ற மூவரும் அரசு அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள்தானா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது
    தேவ லோகம் சென்ற உடன் இவ்வளவு வேகமாக வேலை நடக்கிறதே என்ற சந்தேகம்தான்
    இங்கு பூலோகத்தில் இருக்கும் போது இதில் பாதி அளவு சுறுசுறுப்பு இருந்திருந்தால் எவ்வளவு ஜனங்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.
    புரிகிறது இங்கே தொந்திரவு செய்ய வட்டத்திலிருந்து அமைச்சர் வரை 1008 அரசியல் இடையூறுகள்.
    அடுத்து என்ன முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு உணவு கொடுத்து காமதேனுவையே வற்றி போக வைத்து விடாதீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, உணவு உற்பத்திக்கு ஏற்பாடுகள் செய்தாயிற்று.

      நீக்கு
  7. //அதனால் இந்த உபரியாக இருக்கும் இடத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கலாமா என்று ஒரு ஐடியா மனதில் இருக்கிறது//
    பார்த்து செய்யுங்கள்.
    பிளாட் கிளாட் என்று இறங்குகிறீர்கள்
    அடுத்து இந்திரன் ஆட்சி வந்து விட்டால் ஜெயில் களிதான்
    நல்ல சாப்பாடு தரும் காமதேனுவையும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு சாப்பாடு கொடுத்து கொடுத்து வற்ற வைத்து விட்டீர்கள்
    ஜாக்கிரதையாக இருங்கள்
    முடிந்தால் காதோடு காது வைத்த மாதிரி எனக்கும் ஒரு பாத்து பிளாட்டுகள் அலாட் செய்து வையுங்கள். நாளைக்கு மாட்டிக்கொண்டாலும் ஜெயிலில் பேச்சு துணையாக இருக்கும்.
    ஆமாம் மயனை வைத்து ஜெயில் கியில் எதுவும் இப்போதே கட்டி வைத்து விடாதீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு கட்டுபடியாகுமா என்று யோசித்துக்கொள்ளுங்கள். ஒரு பிளாட் விலை ஆயிரம் கோடி மட்டுமே.எத்தனை பிளாட் வேண்டும்?

      நீக்கு
    2. ஹி... ஹி... ஹி... ஒரு பத்து பிளாட்களுக்கு ஆள் பிடித்து கொடுத்தால் ஒரு பிளாட் இலவசமாக தர மாட்டீர்களா என்ன
      அந்த ஒரு பிளாட்டை நான் வைத்து கொள்கிறேன்
      நல்ல ஒரு இன்வெஸ்ட்மென்ட் ஆச்சு
      என்ன நான் சொல்றது

      நீக்கு
  8. கதை நல்லாயிருக்கு.

    ஆனா சுட்டெரிக்கும் சூரியனை அருகில் அழைத்து பேசுவது, கற்பனையென்றாலும் கொஞ்சம் ஒவர்.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகவதத்தில் கிருஷ்ணபகவான் ஒரு சமயம் சூரிய சந்திரர் இருவரையும் ஒரு சேரப் பார்த்து பேசுவதாக உள்ளது. தவிர, மும்மூர்த்திகள் எனக்கு சர்வ வல்லமை கொடுத்திருப்பதால் என்னை சந்திக்க வரும்போது சூரியன் தன் முழு உக்கிரத்துடன் வரமாட்டான்.

      எல்லாம் மாயை.

      நீக்கு

  9. பூலோகத்துக்கும் தேவ லோகத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது என்றுதானே பாடுபடுகிறீர்கள்,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை இல்லை, பூலோகத்தை தேவலோகமாக்குவதுதான் என்நோக்கம்.

      நீக்கு
  10. தமிழ்வாழ்க!

    ரசனையாக செல்கின்றது.

    பதிலளிநீக்கு
  11. சார்! தேவலோகத்தில், நீங்கள் இன்னும் இந்திராணியை சந்திக்கவே இல்லை போலிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நமக்குத் தேவையில்லாத வேலை.

      நீக்கு
    2. ஆமாம் ஆமாம் இந்திரனே, இந்திராணியை அந்தபுரத்தில் விட்டுவிட்டு ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற மனதை மயக்கும் மங்கையரின் நடனத்தில் மூழ்கியிருக்கும்போது நாமும் அதை பின்பற்றுவதுதானே முறை. மேலும் தற்போது அய்யா அவர்கள் தேவலோகத்தை ஆட்சி புரிய ஆரம்பித்த பிறகு இந்திரனுக்கு இந்திராணியை விட்டால் பேச்சுதுணைக்கு கூட ஆள் இருக்க மாட்டார்கள். எனவே சிறிது காலம் செல்லட்டும். பிறகு இந்திராணியை சந்தித்துக்கொள்ளலாம்.

      நீக்கு