புதன், 19 நவம்பர், 2014

ஆன்மீகத்தில் ஒரு பக்கம்.


இந்தக் கருத்துக்கள் உங்கள் சிந்தனைகளைத் தூண்டுவதற்காக மட்டுமே
.
நாம் பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம்? ஒன்றுமில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தால் பெற்றவர்களுடைய செல்வம் ஒருவருக்கு கிடைக்கிறது. ஏழையின் வீட்டில் பிறந்திருந்தால் அவர்களின் வறுமை அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் எதுவும் அவன் கொண்டு வரவில்லை.

அவன் வளர்ந்து வாழும்போது அவன் சேர்க்கும் செல்வங்களெல்லாம் இந்த உலகில் இறைவன் படைத்த பொருள்களிடமிருந்து கிடைக்கிறது. ஆனால் இதில் அவனுடைய முயற்சியும் சேர்ந்திருக்கிறது. அப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். முயற்சி செய்பவர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி செல்வம் கிடைப்பதில்லை. கைப்பொருளை இழப்பவர்களும் உண்டு. அதிக செல்வம் ஈட்டுபவர்களும் உண்டு.

இங்கு ஒன்றை யோசிக்கவேண்டும். ஒரே வகையான முயற்சியில் இந்த வித்தியாசமான பலன்கள் ஏன் கிடைக்கின்றன? இதற்கு ஆன்மீகத்தில் “வினைப்பயன்” என்று சொல்லி விடுகிறார்கள். அதாவது ஒவ்வொருவரும் அவர்கள் பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின் பயன் இந்த ஜன்மத்தில் பலனளிக்கிறது என்று சொல்கிறார்கள்.

இது உண்மையோ, பொய்யோ, ஆனால் இந்த விளக்கம் மனதிற்கு சாந்தி அளிக்கிறது. இந்த வினைப்பயன் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்தவர் யாரும் இல்லை.

ஒருவன் ஒரு சமயத்தில் வைத்திருக்கும் கைப்பொருள் அவனால் முழுமையாக ஈட்டப்பட்டது என்று சொல்வது சரியல்ல. அவனுடைய வினைப் பயனே அந்த பொருளை அவனுக்கு ஈட்டித் தந்திருக்கிறது. ஆகவே அவன் அந்தப் பொருளின் மீது முழு உரிமை கொண்டாடுவது தவறல்லவா?
மேலும் அவன் இவ்வுலகை விட்டுப் போகும்போது அந்தப் பொருளில் கடுகளவாவது தன்னுடன் எடுத்துச் செல்ல முடிகிறதா? இல்லையே. பின் ஏன் உலகில் மாந்தர்கள் செல்வத்திற்காக இப்படி போராடுகிறார்கள்?

அதே மாதிரிதான் ஒருவன் பெறும் கல்வி அல்லது ஞானம். அதை அவன் பல ஆசிரியர்களிடமிருந்து பெறுகிறான். அது எப்படி அவனுடைய முழு உரிமையாகும்? அவன் அந்த ஞானத்திற்கு காப்பாளன் மட்டுமே. அவனுடைய கடமை அந்த ஞானத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது ஆகும்.

நாம் பதியும் பதிவுகளெல்லாம் நமக்கு தூக்கத்தில் ஞானோதயத்தில் உதித்த கருத்துகளா? நாம் பலரிடமிருந்து கற்றவற்றை நமக்கு தோன்றியவாறு பதிகிறோம். இதற்கு நாம் முழு உரிமை கோண்டாடுவது சரியா?


ஆனால் மனிதர்கள் இந்த உண்மையை உணர்வதில்லை. தான் ஈட்டிய பொருளும் கல்வியும் தன்னுடையது மட்டுமே. அடுத்தவர்களுக்கு அதில் உரிமை இல்லை என்றே நினைக்கிறார்கள். இதுதான் மாயை. இதிலிருந்து விடுபட வேண்டும். அதுவே முதிர்ச்சிக்கு அறிகுறி.

8 கருத்துகள்:

  1. தலைப்பே அடுத்த பக்கமும் இருக்கிறது
    என்பதைச் சொல்லாமல் சொல்லிப்போகிறது
    அடுத்த பக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து..

    பதிலளிநீக்கு
  2. கொண்டு வந்ததும், கொண்டு செல்வதும் ஒன்றுமில்லை என்று தெரிந்தும் இப்போது இருக்கும் வரை அனுபவிக்க சேர்த்து வைத்து சொந்தம் கொண்டாடுகிறோம். போதும் என்ற மனம்தான் இருப்பதில்லை! :)))

    பதிலளிநீக்கு
  3. மாயை என்று தெரிந்து கொள்வதே பெரிய விசயம்...!

    பதிலளிநீக்கு

  4. ‘கடவுளுடன் ஒரு பேட்டி’ பற்றி பதிவை பற்றிய பலரின் கருத்துக்குப் பதில் சொல்லும் விதமாக இருக்கிறது இந்த பதிவு. நீங்கள் சொல்வது சரிதான்.’ நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல.’ என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது இப்போது.

    பதிலளிநீக்கு
  5. வெகுவாக சிந்திக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்களுடையது என்று ஒன்றும் இல்லை ஆதலால் உங்கள் பொருட்களைப் பிறர் உபயோகிப்பதை அனுபவிப்ப்தை அனுமதிப்பீர்களா.? தெரியாத ஒன்றை ஏதாவது சமாதானம் சொல்லி ஏற்றுக் கொள்வதே நம் உடம்பில் ஊறிப் போய் இருக்கிறது.மாற்றி யோசியுங்கள். இது என் கருத்து அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  6. ஆழந்த அமைதியில் விளைந்த சத்திய முத்துக்கள் உங்கள் தகப்பனாருக்கு பிடித்த எழத்துக்கள் ்ரமணர் திருவண்ணாமலையில் புன்னகைகிறார் ்்அறிவியலும் ஆன்மிகமும் மனித மனதை அறிவை விசாலபடுத்துகிறது ்போலிகளும் உண்டு ்எம்மை சந்தோஷபடுத்திய எழத்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு