வியாழன், 8 ஏப்ரல், 2010

யாருடைய சபதம் நிறைவேறிற்று?

 
தாசியும் கிளியும் தனித்தனியாக சபதம் போட்டதை போன பதிவில் பார்த்தோம். இப்போது யாருடைய சபதம் நிறைவேறியது என்று பார்ப்போம்.

தாசி அபரஞ்சியிடம் மாமூலாகப் போய் வருபவர்கள் ஏழு பேர்களுண்டு. அவர்கள், அந்த ஊர் ராஜா, முக்கிய மந்திரி, சேனாதிபதி, ஒற்றர் படைத்தலைவன், கோவில் தர்மகர்த்தா, மாணிக்கஞ்செட்டியார் ஆகியோர். இவர்கள் வாரத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொருத்தராக முறை வைத்துக்கொண்டு, வாரந்தோறும் அவள் வீட்டுக்கு, இரவு மூன்றாம் ஜாமத்தில் போயிருந்து, விடிவதற்கு ஒரு ஜாமம் முன்பாகவே தங்கள் வீட்டுக்குத்திரும்பி விடுவார்கள். தாசியின் வழக்கு நடந்த அன்று மாணிக்கஞ்செட்டியாரின் முறை. தாசி வழக்கு முடிந்து வீட்டுக்குப்போனதும் வேலைக்காரிகளைக் கூப்பிட்டு, இன்று பொழுது சாய்ந்ததும் வாசற்கதவைச் சாத்தி தாள்போட்டு பந்தனம் பண்ணிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு படுக்கப்போய் விட்டாள்.

அன்று இரவு வழக்கம்போல் மாணிக்கஞ்செட்டியார் தாசி வளவுக்குப்போக, என்றுமில்லாதபடி வாசற்கதவு பந்தனம் பண்ணியிருந்தது. செட்டியார் கதவைத்தட்ட, யாரது என்ற குரல் கேட்டது. செட்டியார், நான்தான் மாணிக்கஞ்செட்டியார் என்று சொல்ல, தாசி கதவுக்குப்பின்னால் இருந்துகொண்டு, நீர் உமது கடையில் இருக்கும் கிளியைக்கொண்டுவந்து கொடுத்தால் கதவு திறக்கப்படும், இல்லையேல், நீர் அப்படியே உமது வீட்டுக்குப் போய்க் கொள்ளலாம் என்று சொன்னாள். செட்டியாருக்கு மோகம் தலைக்கேறி- யிருந்தபடியால், யாதொன்றும் ஆலோசிக்காமல் நேரே கடைக்குப்போய் கடையைத் திறந்து கிளிக்கூண்டை எடுத்துக்கொண்டு தாசி வீட்டுக்கு நடக்கலானான்.

செட்டியார் அர்த்தராத்திரியில் கடையைத்திறந்து கூண்டை எடுத்துப்போவதைக்கண்ட கிளி யோசனை செய்தது. ஆஹா, இன்று இந்தச்செட்டி தாசி வீட்டுக்குப்போயிருக்காற்போல் தெரிகிறது. தாசியானவள் நம்மை எடுத்துக்கொண்டு வரும்படி சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் இந்தச்செட்டி இந்நேரத்தில் நம்மை எடுத்துக்கொண்டு போகிறான். இப்போது இவனுக்கு மோகம் தலைக்கேறி இருப்பதால் நாம் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான், விதிப்படி நடக்கட்டும் என்று ஒன்றும் பேசாமலிருந்தது.

செட்டியார் தாசி வீட்டுக்குப் போய் கதவைத்தட்டினவுடன் தாசி கிளி கொண்டுவந்தீரோ என்றாள். இவன் ஆம் என்று சொல்ல, தாசியானவள் உடனே கதவைத்திறந்து கிளிக்கூண்டை வாங்கி தாதியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்லிவிட்டு, செட்டிக்கு கைலாகு கொடுத்து அழைத்துப்போய், கைகால் கழுவ நீர் மொண்டு ஊற்றி, பின்பு அம்சதூளிகா மஞ்சத்திற்கு கூட்டிக்கொண்டு போய் அமர வைத்து, குடிப்பதற்கு ஏலம், பனங்கற்கண்டு, குங்குமப்பூ போட்டுக்காய்ச்சிய பால் கொடுத்து, வெற்றிலை, பாக்கு மடித்து, அத்துடன் வாசனைத் திரவியங்களும் சேர்த்து வாயில் ஊட்டி, விடியும்வரை சரச சல்லாபமாக இருந்தாள்.

விடிவதற்கு ஒரு நாழிகை இருக்கும்போது செட்டி எழுந்திருந்து அவன் வீட்டிற்குப்போனான். தாசியும் எழுந்திருந்து போய் கிளியைப்பார்த்தாள். “ஏ கிளியே, உன்னுடைய நிலையைப் பார்த்தாயா? இன்று மதியம் நீ என்னுடைய வயிற்றுக்குள் போகப்போகிறாய், அதற்குள் எத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணினாய் என்று பலவிதமாக ஏசினாள். கிளி இவளுடன் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? என்று வாளாவிருந்தது. பிறகு தாசியானவள் வழக்கமான காலைக்கடன்களை முடித்து, குளித்து, ஆடை அலங்காரங்கள் செய்து கோவிலுக்குப் புறப்பட ஆயத்தமானாள். போகுமுன் வீட்டு வெள்ளாட்டியைக் கூப்பிட்டு இதோ பார், இன்று மதியத்திற்கு இந்தக்கிளியைக்கொன்று தலையை ரசமாகவும், உடலைக்கறியாகவும் சமைத்து வை, ஜாக்கிரதையாக செய், என்று திட்டப்படுத்திவிட்டு கோவிலுக்குப் போனாள். தாசி அன்றாடம் அந்த ஊர் பெருமாள் கோவிலுக்குப் போகும் வழக்கமுண்டு.

தாசி கோவிலுக்குப் போனவுடன் வெள்ளாட்டி கிளியைச் சமைக்கத் தேவையான மசாலெல்லாம் அரைத்து வைத்துவிட்டு, கூண்டைத் திறந்து கிளியைப்பிடிக்கப்போனாள். கிளி இந்த சமயத்தை விட்டால் தமக்கு வேறு சமயம் கிடைக்காது என்று யோசித்து வெள்ளாட்டி தன்னைப்பிடிக்க வரும்போது படபடவென்று இறகுகளைப்பலமாக அடித்து, மூக்காலும், கால் நகங்களாலும் கை, முகம் ஆகியவைகளில் பிராண்ட, வெள்ளாட்டி பயந்துபோய் கிளியைப்பிடித்த பிடியை விட்டுவிட்டாள். உடனே கிளி பறந்து போய் வெளியில் சென்று பெருமாள் கோவிலில் வாழும் பல கிளிகளுடனே ஒன்றாய்ச் சேர்ந்துவிட்டது. வெள்ளாட்டி பதறிப்போனாள். அய்யோ. எஜமானிக்குத் தெரிந்தால் நம் உயிர் உடலில் தங்காதே, என்ன செயவேன் என்று கொஞ்ச நேரம் பிரலாபித்துவிட்டு, மனம் தேறி, உடனே கடைத்தெருவுக்கு ஓடிப்போய் இரண்டு காசு கொடுத்து ஒரு கவுதாரியை வாங்கி வந்து, கொன்று, தலையை ரசமாகவும், உடலைக் கறியாகவும் சமைத்து வைத்துவிட்டு, அந்தக் கவுதாரியின் சமைக்காத பாகங்களனைத்தையும் கண்காணாத இடத்தில் புதைத்து விட்டு, வீட்டுக்கு வந்து எப்போதும் போல இருந்தாள்.

தாசி கோயில் வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பியவுடன் வெள்ளாட்டியைக்கூப்பிட்டு, கிளியை சமைத்தாயிற்றா? என்று விசாரித்தாள். வெள்ளாட்டி ஆம் என்று சொல்ல அப்படியானால் நான் சாப்பிடுகிறேன் என்று சொல்லி, கைகால் முகம் கழுவி, சாப்பிட உட்கார்ந்தாள். வெள்ளாட்டி, உடனே தலைவாழை இலை போட்டு சோறு வைத்து, பண்ணின கறியையும் இலையில் வைத்து, ரசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பக்கத்தில் வைத்தாள்.

தாசியானவள், ரசத்தை சோற்றில் ஊற்றிப்பிசைந்து, ஒரு வாய் சோற்றை வாயில் போட்டு, கறியில் ஒரு துண்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, “ஏ கிளியே, நீயா என் தலையை மொட்டை அடிப்பேனென்றாய் என்று சொல்லி அந்தக்கறியை ஒரு கடி கடிப்பாள். அதை சோற்றுடன் விழுங்கிவிட்டு, பின்னும் ஒரு வாய் சோற்றை வாயில் போட்டு, ஒரு கறியைக்கையில் எடுத்துக்கொண்டு, “ஏ கிளியே, நீயா என் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்துகிறேனென்றாய் என்று சொல்லி அந்தக்கறியைக்கடித்து, அந்த வாய்சோற்றை முழுங்குவாள். இப்படியாக அந்தச்சோறு, கறி, ரசம் முழுவதையும் சாப்பிட்டு முடித்து கை கழுவி, தாம்பூலம் போட்டுவிட்டு திருப்தியாக, தன் சபதம் நிறைவேறியது என்ற எண்ணத்துடன் படுத்து தூங்கினாள்.

கோயிலில் கிளிக்கூட்டத்துடன் இருந்த விக்கிரமாதித்தன் இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான. இப்படி இருக்கையில் தாசி அபரஞ்சிக்கு நெடுநாளாய் ஒரு அபிலாக்ஷை உண்டு. அது என்னவென்றால், தான் எப்படியாவது கூண்டோடே வைகுந்தம் போகவேண்டும் என்கிற ஆசைதான். இதற்காகத்தான் அவள் அனுதினமும் பெருமாள் கோயில் சென்று வேண்டிக்கொள்வது. இதைப்பார்த்த விக்கிரமாதித்தன் ஒரு நாள் கோவிலுக்குள் சென்று பெருமாள் சிலைக்குப்பின்னால் மறைந்து கொண்டான். அன்று கோவிலில் யாரும் இல்லை. தாசி வந்து பெருமாளைக் கும்பிட்டுவிட்டு தன் வேண்டுதலைச்சொன்னாள். “பெருமாளே, நான் எத்தனை நாளாக கூண்டோடு வைகுந்தம் போகவேண்டுமென்று வேண்டிக் கொண்டிருக்கிறேன், இதற்காக எத்தனை தானதருமம் செய்திருக்கிறேன், நீ மனமிரங்க மாட்டாயா என்று உருக்கமாக வேண்டிக்கொண்டாள். அப்போது பெருமாள் சிலைக்குப்பின்னால் இருந்த விக்கிரமாதித்தன், பெருமாள் பேசுவதுபோல் பேசினான்.



“அகோ வாரும் அபரஞ்சியே, உன் பக்திக்கு மெச்சினோம், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்என்றது. அபரஞ்சி மெய் சிலிர்த்து, வாய் குழறி, “நாராயணா, கோவிந்தா, மதுசூதனா, உன் திருவடியை அடைவதைத்தவிர வேறென்ன வேண்டும், என்னை இந்தக்கூண்டோடே உன் வைகுண்டத்திற்கு அழைத்துக்கொள், அதைத்தவிர வேறொன்றும் வேண்டேன் என்று பெருமாளைப் பலவாறாகத் துதித்து நின்றாள். அப்போது கிளியாகிய விக்கிரமாதித்தன் கூறலுற்றான். “ஆஹா, உன் ஆசையை நிறைவேற்றுகிறோம். இன்று முதல் உன் சொத்துக்களை முழுவதும் தானதருமம் செய்துவிட்டு, இன்றைக்கு எட்டாம் நாள் உச்சிப்பொழுதில் நீ உன் தலைமுடியை முழுதுமாக நீக்கிவிட்டு, முகம் முழுவதும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இங்கு வரவேண்டும். அது ஏனென்றால் நீ இந்த ரூபத்திலேயே தேவலோகம் வந்தாயென்றால் உன்னைப்பார்க்கும் தேவர்களெல்லாம் உன் அழகில் மயங்கி உன் பின்னாலேயே வர ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான். நீ தேவலோகம் வந்து அங்குள்ள ஆகாய கங்கையில் மூழ்கி எழுந்தாயானால் உன் கேசம் இன்னும் பன்மடங்காக வளர்ந்து, உன் தேக காந்தியும் இன்னும் அதிகமாக ஜொலிக்கும்.

பிறகு இங்கு நீ இந்தக்கோலத்தில் வந்த பிறகு, ஒரு கழுதை மேல் ஏறி இந்தக்கோவிலை நாராயணா, கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு மூன்று முறை வலம் வந்து கொடிமரத்தின் கீழ் நிற்பாயாகில் நாம் உனக்கு தேவலோகத்திலிருந்து புஷ்பகவிமானம் அனுப்பிவைக்கிறோம். நீ அதில் ஏறி நம் லோகத்திற்கு வந்து சேர்வாயாக என்று சொல்லி முடித்தது.

தாசியும் நம் நெடுநாள் வேண்டுதலுக்கு பெருமாள் இன்றுதான் செவி சாய்த்தார் என்று சந்தோஷப்பட்டு, நேராக அரச சபைக்கு சென்று, ராஜாவிடம் கோவிலில் நடந்த விசேஷங்களையெல்லாம் சொல்லி, “இன்றைக்கு எட்டாம் நாள் பெருமாள் என்னைக்கூண்டோடே வைகுண்டத்திற்கு அழைத்துக்கொள்வதாக அருள் புரிந்திருக்கிறார். ராஜா அவர்கள் 56 தேசத்து அரசர்களுக்கும் ஓலை அனுப்பி இந்த வைபவத்தைக்காண வருமாறு கேட்டுக்கொள்ளவேண்டும் என்று சொன்னாள். ராஜாவும் சரியென்று ஒத்துக்கொண்டு எல்லா தேசத்திற்கும் ஓலை அனுப்ப ஏற்பாடு செய்தார்.

பிறகு தாசியானவள் வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்திலுள்ளோருக்கு சேதி சொல்லிவிட்டு, மறுநாளிலிருந்து தன் சொத்துக்களையெல்லாம் தானதருமம் பண்ண ஆரம்பித்தாள். ஏழு நாட்கள்களில் இவ்வாறு தன் சொத்துக்களைப்பூராவும் தானம் செய்து முடித்துவிட்டாள். இந்த ஏழு நாட்களுக்குள் அபரஞ்சி கூண்டோடு வைகுந்தம் போகப்போகிறாள் என்கிற செய்தி எல்லா ஊர்களுக்கும் காட்டுத்தீ போல பரவி ஜனங்கள் கூட்டம்கூட்டமாக வர ஆரம்பித்தார்கள். ராஜா அனுப்பிய ஓலையும் எல்லா தேசங்களுக்கும் போக, சகல தேசத்து ராஜாக்களும் இந்த அதிசயத்தைப்பார்க்க கூடிவிட்டார்கள். உச்சினிமாகாளிபுரத்திற்கும் இந்த ஓலை போய்ச்சேர்ந்தது. அதைப்பார்த்த பட்டி, இதென்ன நாம் இதுவரை கேளாத அதிசயமாக இருக்கிறது, யாரும் கூண்டாடே வைகுந்தம் போவது கிடையாதே, இதில் நம் ராஜாவின் லீலை ஏதாகிலும் இருந்தாலும் இருக்கலாம் என்று அவனும் இந்த அதிசயத்தைப்பார்க்க வந்து சேர்ந்தான்.



எட்டாம் நாள் பொழுது விடிந்தது. அபரஞ்சி எழுந்திருந்து நாவிதனை வரச்சொல்லி தன் தலைமுடியை நீக்கினாள். வண்ணானிடம் சொல்லி அவன் கழுதையைக் குளிப்பாட்டி பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரச்சொல்லி ஏற்பாடு செய்தாள். பிறகு முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு, கோவிலுக்கு வேலைக்காரிகள் துணைக்கு வர, வந்து சேர்ந்தாள். கோவிலில் எள் போட்டால் எள் கீழே விழமுடியாத அளவிற்கு கூட்டம் ஜேஜேவென்று அலை மோதியது. பட்டியும் வந்து ஒரு ஓரமாக நின்றிருந்தான். வண்ணான் கழுதையைத் தயாராக வைத்திருந்தான். தாசியும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று வணங்கி விடை பெற்றுக்கொண்டு, கழுதை மேல் ஏறி, நாராயணா, கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து, கொடிமரத்தினடியில் வந்து நின்றாள். அப்போது சரியாக உச்சிப்பொழுதாகியது.



எல்லோரும் புஷ்பக விமானம் வருவதை எதிர்பார்த்து வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். (நியாயமாக இங்கு தொடரும் போடவேண்டும். ஆனால் எல்லோருடைய வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து தொடருகிறேன்). அப்போது விக்கிரமாதித்தனாகிய கிளி கொடிமரத்தின் மீது வந்து உட்கார்ந்து பின்வருமாறு சொல்லத்தொடங்கியது.

“அகோ வாரும் சகல தேசத்து ராஜாக்களே, பொதுஜனங்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். இதோ நிற்கிறாளே இந்த தாசிக்கும் எனக்கும், ஒரு விவகாரம் ஏற்பட்டது. அது என்னவென்றால், இவள் கொண்டுவந்த ஒரு வழக்கில் நான் ஆகாயத்திற்கும் பூமாதேவிக்கும் பொதுவாக ஒரு தீர்ப்பு சொன்னேன். அதை இவள் ஒப்புக்கொள்ளாமல் என்னைக்கொன்று கறி சமைத்து தின்கிறேனென்று சபதஞ்செய்தாள். அதற்கு நான் இவளை இந்தக்கோலம் செய்கிறேனென்று சபதம் செய்தேன். யாருடைய சபதம் ஜெயித்தது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியது. கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் கைகொட்டி சிரித்தார்கள். இதைப்பார்த்த தாசிக்கு அவமானம் தாங்கமாட்டாமல் அங்கேயே கீழேவிழுந்து பிராணணை விட்டாள். கிளியும் பட்டியின் தோள்மீது சென்று உட்கார்ந்து கொண்டது. பட்டியும் ஓகோ, இது நம் ராஜனின் லீலைதான் என்று புரிந்துகொண்டு, ராஜனைக்கூட்டிக்கொண்டு தன் ஊருக்குப்போனான்.

ஊருக்குப்போனபின் விக்கிரமாதித்தன் தன் உடம்பிற்குள் எவ்வாறு பிரவேசம் செய்தான் என்பது ஒரு தனிக்கதை.

முற்றும்.


புதன், 7 ஏப்ரல், 2010

கிளி வியாபாரம் செய்ததும் சபதம் செய்ததும்.




அப்போது அந்தக்கிளி வேடனைப்பார்த்து சொல்லிற்று. இதோ பார் வேடா, அவசரப்படாதே, இந்த ஆயிரம் கிளிகளையும் நீ விற்றிருந்தால் அதிகபட்சமாக ஆயிரம் காசு கிடைத்திருக்கும். நீ என்னை உயிருடன் விட்டால் உனக்கு ஆயிரம் பொன் கிடைக்க வழி செய்கிறேன், என்றது. வேடன் எப்படி என்று கேட்டான். அதற்கு கிளி சொல்லிற்று. பக்கத்து ஊர் கடைவீதியில் என்னைக்கொண்டுபோய் விற்பனை செய். யாரும் விலை என்னவென்று கேட்டால் ஆயிரம் பொன் என்று சொல், மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிற்று.

அப்படியே வேடனும் பக்கத்து ஊர் கடைவீதிக்கு போய் அதிசயக்கிளி வாங்கலியோ என்று கூவினான். விலை என்ன என்று கேட்டவர்களுக்கு ஆயிரம் பொன் என்று சொன்னான். கேட்டவர்களெல்லாம் சிரித்துவிட்டுப்போனார்கள். இப்படியே வேடன் நகைக்கடைவீதியில் மாணிக்கம் செட்டியார் என்பவரின் கடைக்கு முன்னால் போகும்போதும் கூவினான். செட்டியார் கூப்பிட்டு விலையைக்கேட்டபோது வேடன் ஆயிரம் பொன் என்று சொன்னான். செட்டியார் சிரிப்புடன், ஏனப்பா, கிளி என்றுக்கு ஒரு காசு விலை. இந்தக்கிளி கொஞ்சம் அழகாக இருப்பதால் இரண்டு காசு கொடுக்கலாம், நீ ஆயிரம் பொன் கேட்கிறாயே, இதென்ன உலக அதிசயமாக இருக்கிறதே, என்று சொன்னார்.


அப்போது அந்தக்கிளி செட்டியாரைப்பார்த்து, “வாருமையா, செட்டியாரே, நீர் என்னை இந்த வேடனிடமிருந்து ஆயிரம் பொன் கொடுத்து வாங்கி உமது கடையில் வையும், சகல வியாபாரத்தையும் என் வசம் விட்டுவிட்டு நீர் நான் வியாபாரம் செய்யும் நேர்த்தியைப்பாரும். இந்த ஆயிரம் பொன்னைப்போன்று பல ஆயிரம் பொன் உமக்கு சம்பாதித்து தருகிறேன் என்று சொல்லியது. இதைக்கேட்ட செட்டியாரும் கிளியின் மதுரமான வார்த்தைகளில் மயங்கி, வேடன் கேட்ட விலையைக்கொடுத்து கிளியை வாங்கி, அதற்கு ஒரு நவரத்தினகசிதமான ஒரு கூண்டு செய்து அந்தக்கிளியை அந்தக்கூண்டில் விட்டு அதற்கு வேண்டிய ஆகாரமெல்லாம் கொடுத்து வைத்திருந்தான்.

அப்போது அந்தக்கிளி செட்டியாரைப்பார்த்து கூறியது. ஐயா, செட்டியாரே, நாளையிலிருந்து இந்தக்கடையில் இருக்கும் வேலையாட்களெல்லாம் நான் சொல்லும்படியாகவும், இந்தக்கடை வியாபாரத்தை நான் மேற்பார்வை பார்க்கும்படியாகவும் திட்டஞ்செய்து நீர் ஓய்வாக திண்டுவில் சாய்ந்துகொண்டு நான் வியாபாரஞ் செய்யும் சமர்த்தைப்பாரும் என்று சொல்லியது. செட்டியாரும் அவ்வண்ணமே யாவருக்கும் திட்டஞ்செய்துவிட்டு வீட்டுக்குப்போனார்.

மறுநாள் முதல் கிளி வருபவர்களை வரவேற்பதுவும், ஆட்களைக்கூப்பிட்டு அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுக்கச்சொல்வதும், வியாபாரத்திற்கு வந்தவர்களிடம் சாதுர்யமாகப்பேசி வியாபாரத்தை முடிப்பதுவுமாக, கடையில் என்றுமில்லாத அளவிற்கு கூட்டமும் வியாபாரமும் அதிகரித்தது. இந்த மாதிரி ஒரு கிளி வியாபாரம் செய்கின்றது என்கிற சேதி அக்கம்பக்கத்து நாட்டுக்களுக்கெல்லாம் பரவி, அங்கிருந்தெல்லாம் வியாபாரத்திற்கு ஜனங்கள் வர, மாணிக்கம் செட்டியாருக்கு ஏகமாக வியாபாரம் பெருகி, செட்டியார் சந்தோஷத்தில் ஒரு சுற்று பெருத்துவிட்டார்.

இது தவிர, இந்த விக்கிரமாதித்தனாகிய கிளி, அக்கம் பக்கத்திலுள்ள விவகார வில்லங்க வழக்குகளை விசாரித்து எள்ளுக்காய் பிளந்த மாதிரி இரு தரப்பினரும் ஒத்துக்கொள்ளத் தகுந்ததாய் தீர்ப்பும் சொல்லி வந்தது. இப்படி கிளியின் வியாபார சாமர்த்தியமும், நீதி வழங்கும் பாங்கும் தேசதேசாந்திரங்களெல்லாம் பரவி, ஏக கியாதியுடன் விளங்கி வரும் நாளில்...


அந்த ஊர் பிரபல தாசி அபரஞ்சிக்கும் கோயில் குருக்களுக்கும் ஏற்பட்ட வழக்கு கிளியிடம் வந்தது. வழக்கு விவரம் ஏற்கனவே கக்கு-மாணிக்கம் தன்னுடைய பதிவில் போட்டிருந்தது எல்லோருக்கும் தெரியும்.

கிளி தாசியிடமும், குருக்களிடமும் வழக்கின் விபரத்தைக்கேட்டு அதன் சாரத்தைப்புரிந்து கொண்டது. தாசியிடம் கிளி கேட்டது, இந்த கோவில் குருக்கள் உன்னை கனவில் சேர்ந்ததிற்காக உனக்கு ஆயிரம் பொன் கொடுக்கவேண்டும், அதுதானே உன்னுடைய வழக்கு என்று கேட்டது. தாசியும், ஆஹா நமக்கு ஆயிரம் பொன் வரப்போகின்றது என்று சந்தோஷப்பட்டு, ஆமாம், ஆமாம் என்றாள். சரி, சற்றுப்பொறு, தரச்சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, கடை ஆட்களைக்கூப்பிட்டு அங்கே வாசலில் ஒரு கம்பம் நடச்சொல்லியது.   

கம்பம் நட்டானதும் கடையிலிருந்து ஆயிரம் பொன் எடுத்து ஒரு பட்டுத்துணியில் ஒரு முடிப்பாக கட்டச்சொன்னது. அந்த பொன் முடிப்பை அந்த கம்பத்தின் உச்சியில் கட்டச்சொன்னது. ஆட்கள் அவ்வாறே கட்டினார்கள். கட்டின பிறகு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக்கொண்டு வந்து கம்பத்தின் கீழ் வைக்கச்சொன்னது. ஆட்கள் அவ்வாறே வைத்தார்கள். இந்த வழக்கைப்பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் ஜனங்கள் எல்லோரும் கிளி சொல்லும் தீர்ப்பைக்கேட்க ஆவலுற்றவர்களாய் அங்கே குழுமிவிட்டார்கள்.

அப்போது அந்தக்கிளி தாசியைக்கூப்பிட்டு இந்தக்கண்ணாடியில் பொன்முடிப்பு தெரிகிறதா என்று கேட்டது. தாசி ஆம் தெரிகிறது என்றாள். சரி, அதுதான் குருக்கள் உனக்குக் கொடுக்கவேண்டிய ஆயிரம் பொன், எடுத்துக்கொள் என்று கூறியது. கண்ணாடியில் தெரியும் நிழலை எடுக்கக்கூடுமோ என்று தாசி கேட்டாள். கனவில் உன்னைச் சேர்ந்ததிற்கு கண்ணாடியில் தெரியும் பொன்தான் சமானமாகும் என்று கிளி சொல்லியது. கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் கரக்கம்பம், சிரக்கம்பம் செய்து, ஆரவாரித்து கிளியின் தீர்ப்பை ஆமோதித்தனர். தாசியைப்பார்த்து கைகொட்டி சிரித்தனர். தாசி அபரஞ்சிக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது.    

அப்போது அந்த தாசியானவள் கிளியின் அருகில் சென்று, ஏ, கிளியே, நீ ஒரு அற்ப ஜீவனாயிருந்தும் என்னை இவ்வாறு அவமானப்படுத்தினாய். இந்த வழக்கு எனக்கு ஜெயிக்காது என்றிருந்தால், என்னைத்தனியாக கூப்பிட்டு, இந்த வழக்கு உனக்கு ஜெயிக்காது, நீ வீட்டுக்குப்போகலாம் என்று சொல்லியிருந்தால் நான் போயிருப்பேனல்லவா? அப்படிக்கில்லாமல் இவ்வளவு பேருக்கு முன்னால் என்னை இவ்வாறு அவமானப்படுத்தலாமா, என்று கேட்டாள். அதற்கு கிளி, நீ அக்கிரமமான வழக்கு கொண்டு வந்தாய், நான் அதற்குத்தகுந்த மாதிரி தீர்ப்பு சொன்னேனேயல்லாமல் வேறொன்றும் தவறாகச்சொல்லவில்லையே என்றது. அப்போது தாசிக்கு ஆங்காரமுண்டாகி, ஓ கிளியே, இவ்வளவு பேர்களுக்கு முன்னால் என்னை அவமானப்படுத்தியதுமல்லாமல் உன்னுடைய செயலுக்கு நியாயமும் கற்பிக்கிறாயா, உன்னை என்ன செய்கிறேன் பார் என்றாள். கிளி உன்னால் என்ன செய்யமுடியுமோ அதைச்செய்துகொள் என்று கூறிவிட்டது.


தாசியின் சபதம்: அப்போது தாசியானவள், “என்னை இப்பேர்க்கொத்த அவமானம் செய்த உன்னை இன்னும் மூன்று நாளைக்குள், உன் உடம்பைக் கறியாகவும், தலையை ரசமாகவும் வைத்து நான் சாப்பிடாமற்போனால் நான் தாசி அபரஞ்சி இல்லைஎன்று சபதம் செய்தாள்.

கிளியின் சபதம்: அப்போது கிளியானது தாசியையும், கூடியிருந்த ஜனங்களையும் பார்த்து சொன்னது. “இந்த தாசியானவள் கொண்டு வந்த வழக்கை நான் ஆகாயத்திற்கும், பூமாதேவிக்கும் பொதுவாக தீர்ப்பு சொன்னேன். அதை இவள் ஒத்துக்கொள்ளாமல் இப்பேர்க்கொத்த சபதம் செய்தாள். இவள் இப்படிப்பட்ட சபதம் செய்தபடியால் நானும் ஒரு சபதம் செய்கிறேன். இன்னும் 15 நாளில் இவளை மொட்டை அடித்து, முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேலேற்றி இந்த ஊர் பெருமாள் கோவிலை, கோவிந்தா, நாராயணா என்று சொல்லிக்கொண்டு மூன்று முறை வலம் வர வைக்காவிட்டால் நானும் மாணிக்கம் செட்டியார் வளர்க்கும் கிளியாவேனோஎன்று சபதமிட்டது.
யார் சபதம் நிறைவேறிற்று? பொறுத்திருந்து பாருங்கள்.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கிளிகளுக்கு வந்த ஆபத்து




காட்டில் விடப்பட்ட விக்கிரமாதித்தனாகிய கிளி, கம்மாளன் போனபிறகு, ஆஹா, மோசம் போனோமே, பட்டி வெகு தூரம் சொல்லியும் கேட்காமல் போனோமே என்று வருத்தப்பட்டு, சரி, போனதைப்பற்றி வருத்தப்பட்டு ஆவதென்ன, நடக்கப் போவதைப் பார்ப்போம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கிளிகளோடு கிளிகளாக இருந்தான்.     

இருந்தாலும் ராஜாவாக இருந்தவனல்லவா? அந்த வீர தீர பராக்கிரமத்தினாலே அந்த மரத்தில் இருந்த ஆயிரம் கிளிகளையும் ஒன்று சேர்த்து, எங்கு போனாலும் ஒன்றாகப் போவதும், ஒன்றாக இரை தேடுவதுமாக, விக்கிரமாதித்தன் தலைமையில் வாழ்ந்து கொண்டிருந்தன.

இப்படி இருக்கையில் ஒரு வேடன் இந்த ஆயிரம் கிளிகள் ஒன்றாகப் போவதையும் வருவதையும் பார்த்து ஆஹா, இந்த ஆயிரம் கிளிகளையும் பிடித்தால், கிளி ஒன்று ஒரு காசு என்று விற்றாலும் நமக்கு ஆயிரம் காசுகள் கிடைக்குமே என்று கணக்குப்போட்டு, ஒரு நாள் அந்தக் கிளிகள் இரை தேடப்போனபின்னர், அந்த மரத்தடியில் வலையை விரித்து வைத்து, கொஞ்சம் தானியங்களை இறைத்துவிட்டு மறைவாகப் போயிருந்தான்.

அன்று மாலை இரை தேடப்போயிருந்த கிளிகள் யாவும் தாங்கள் வசிக்கும் மரத்திற்கு வரும்போது கீழே தானியங்கள் சிதறிக் கிடப்பதைப்பார்த்ததும், எப்போதும் விக்கிரமாதித்தனைக்கேட்டு செயல்படும் கிளிகள் அன்று யாதும் யோசிக்காமல் தானியங்களைப் பொறுக்கப்போய் வலையில் சிக்கிக்கொண்டன. விக்கிரமாதித்தனாகிய கிளியும் எல்லோருக்கும் நேர்ந்த விதி நமக்கும் நேரட்டும் என்று வலையில் விழுந்தது.

எல்லாக்கிளிகளும் விக்கிரமாதித்தனை குறை கூறின. நாங்கள் எல்லோரும் அவரவர்கள் பாட்டில் எங்கள் மனம் போல் வாழ்ந்துகொண்டிருந்தோம். எங்களை எல்லாம் ஒன்று சேர்த்து இப்போது எல்லோரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டோமே! இப்போது என்ன செய்வது என்று ஆளாளுக்கு பிரலாபித்தன. அப்போது விக்கரமாதித்தன் சொல்கிறான்: கூடி வாழ்ந்து கெட்டாரும் இல்லை, பிரிந்து வாழ்ந்து உயர்ந்தாரும் இல்லை. இப்போது நான் சொல்வதை எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். வேடன் வந்து பார்க்கும்போது எல்லோரும் சிறகுகளை விரித்து இறந்தது போல் படுத்துக் கொள்ளுங்கள். வேடன் ஓஹோ, வலையில் விழுந்த வேகத்தில் கிளிகள் செத்துப்போனாற்போல் இருக்கிறது என்று எண்ணி ஒவ்வொரு கிளியாக கீழே போடுவான். முதலில் விழுந்த கிளி பின்னால் விழுகின்ற கிளிகளை எண்ணிக்கொண்டு இருந்து ஆயிரம் எண்ணிக்கை ஆனவுடன் எல்லோரும் பறந்து போய்விடலாம் என்று யோசனை சொல்லியது.

அப்படியே வேடன் வந்து பார்க்கும்போது எல்லாக்கிளிகளும் இறந்தது போல் கிடந்தன. வேடனும் இதைப்பார்த்து அடடா, வலையில் விழுந்த வேகத்தில் எல்லாக்கிளிகளும் செத்துப்போயினவே என்று வருத்தப்பட்டு ஒவ்வொரு கிளியாக எடுத்து கீழே போட்டான். முதலில் விழுந்த கிளி எண்ணிக்கொண்டு இருந்தது. 999 கிளிகள் ஆனவுடன் வேடன் இடுப்பில் இருந்த வெட்டுக்கத்தி தவறி கீழே விழுந்தது. ஆஹா, இத்துடன் ஆயிரம் கிளிகளும் சரியாய்விட்டன என்று முதல் கிளி பறக்க எல்லாக்கிளிகளும் பறந்து போய்விட்டன. வேடன் கையில் இப்போது விக்கிரமாதித்தன் மட்டும் இருந்தான். வேடனுக்கு ஒரே சமயத்தில் ஆச்சரியமும் கோபமும் சேர்ந்து வந்தன. கையில் இருக்கும் கிளியைப்பார்த்தான். அது மற்ற கிளிகளைவிட பெரிதாகவும் வயதானதாகவும் இருந்தது. ஆஹா இந்தக்கிளிதான் மற்ற கிளிகளுக்கு இந்த யோசனையை சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும், இதை என்ன சொய்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு அதன் கழுத்தைத் திருகப் போனான்.








வியாழன், 1 ஏப்ரல், 2010

குருக்கள் அபரஞ்சியிடமிருந்து தப்பித்த கதை-1


 
கக்கு-மாணிக்கம் அவர்கள் ஒரு பதிவில் தாசி அபரஞ்சி கதையை எழுதியிருந்தார்கள். மாணிக்கம், அதில் கோயில் குருக்கள் ஒருவர் ஒரு இக்கட்டில் சிக்கியதோடு கதையை நிறுத்திவிட்டார்கள். கதையை எப்போதும் தொங்கலில் விடப்படாது. அந்தக்கதையை நான் முடிக்கட்டுமா என்று கேட்டதிற்கு “தாராளமா செய்யுங்கோஎன்று பர்மிஷன் கொடுத்துவிட்டார். அதனால்தான் இந்தப்பதிவு.



முன்னொரு காலத்தில் உச்சினி மாகாளிபுரம் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்ட ஒரு ராஜ்ஜியத்தை விக்கிரமாதித்தன் என்ற வீரதீர பராக்கிரமம் பொருந்திய ராஜா ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு மதியூகம் மிகுந்த பட்டி என்ற மகா மந்திரி துணையாக இருந்தான். அவர்கள் இருவரும் நாடாறு மாதம், காடாறு மாதம் என்று தங்கள் ஆட்சிக்காலத்தைப் பிரித்து நாட்டை ஆண்டு வந்தார்கள்.

இப்படி இருக்கையில் அந்த ஊரில் உள்ள ஒரு கம்மாளனுக்கும் ராஜாவிற்கும் நட்பு உண்டாயிற்று. பட்டி, ராஜாவிடம் “கம்மாளன் நட்பு கூடாது, கம்மாளன் காரியத்தின் மேல்தான் கண்ணாயிருப்பான் என்று பலமுறை எடுத்துச்சொல்லியும், ராஜா கேட்கவில்லை. தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் (கூடுவிட்டு கூடு பாயும் வித்தை உட்பட) அந்தக்கம்மாளனுக்கு சொல்லிக்கொடுத்து விட்டான். பட்டிக்கு இது பிடிக்காவிட்டாலும் “ராஜாவிற்கு எதிராக நாம் என்ன செய்யமுடியும், நாம் சொல்லவேண்டியதைச் சொல்லியாகிவிட்டது, வேறு என்ன செய்யமுடியும், நடப்பது நடக்கட்டும், எதற்கும் நாம் ஜாக்கிரதையாகவே இருப்போம் என்று மனதில் எண்ணிக்கொண்டு இருந்தான்.

இப்படியிருக்கையில் ராஜா காடாறு மாதம் போகவேண்டிய நாள் வந்தது. வழக்கமாக பட்டியையும் கூட்டிக்கொண்டு போகும் விக்கிரமாதித்தன் இந்த முறை பட்டியை நாட்டிலேயே இருந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்து கொண்டிருக்கும்படி கூறிவிட்டு, தனியாகவே காட்டுக்குப் போய்விட்டான். சிறிது நாள் கழித்து இதைத் தெரிந்துகொண்ட கம்மாளன் தானும் புறப்பட்டுப் போய் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்துகொண்டான். கம்மாளனுக்கு எப்படியாவது விக்கிரமாதித்தன் உடம்பில் புகுந்து இந்த ராஜ்ஜிய சுகங்களையெல்லாம் அனுபவிக்கவேண்டும் என்கிற ஆசை மனதில் இருந்துகொண்டேயிருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் கபடமாகவே ராஜாவுடன் நட்பாக இருந்தான். இப்போது ராஜா தனியாகக் காட்டுக்குப்போயிருப்பதால், ஆஹா, நம் திட்டத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று சந்தோஷப்பட்டுத்தான் காட்டுக்குப்போய் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்துகொண்டான்.

ஒருநாள் சாப்பாட்டுக்குப்பிறகு விக்கிரமாதித்தன் ஒரு மரத்தடியில் இந்தக்கம்மாளனின் மடியில் தலை வைத்துப்படுத்துக் கொண்டிருந்தான. அப்போது அந்த மரத்தில் பல கிளிகள் வசித்துக்கொண்டிருந்தன. அவற்றில் ஒரு ஆண் கிளி இறந்துபோக அதன் ஜோடி பெண் கிளியானது அந்த ஆண் கிளியின் மேல் விழுந்து பிரலாபிப்பதைப் பார்த்த விக்கிரமாதித்தனுக்கு அந்தப் பெண் கிளியின்பேரில் மிகுந்த கருணை உண்டாயிற்று. உடனே தன்னுடைய கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை உபயோகித்து அந்த ஆண் கிளியின் உடலில் பிரவேசித்து அந்தப்பெண் கிளிக்கு ஆறுதலாயிருந்தான்.

நீண்டநேரமாக விக்கிரமாதித்தன் உடலில் அசைவு எதுவும் இல்லாதிருப்பதைப் பார்த்த கம்மாளன் மேலே கிளிகளைப்பார்த்தவுடன் நடந்தவைகளை யூகித்துவிட்டான். ஆஹா, நாம் வெகுநாளாக எதிர்பார்த்த சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டு உடனே தன்னுயிரை விக்கிரமாதித்தன் உடலில் புகுத்தி, எழுந்து, தன்னுடைய உடலுக்குத் தீ வைத்து எரித்துவிட்டு நேராக உச்சினிமாகாளிபுரம் வந்து சேர்ந்தான்.

இதைப்பார்த்த பட்டிக்கு யோசனை என்ன வந்தது என்றால் “நமது ராஜாவென்றால் காடாறு மாதம் முடிவதற்கு முன்னால் நாட்டுக்கு திரும்பமாட்டாரே, இதில் ஏதோ சூது இருக்கிறது. அதைக்கண்டு பிடிப்போம் என்று அந்தக்கம்மாளன் ஊரில் இருக்கிறானா என்று ஆட்களை விட்டு விசாரித்தான். அந்தக்கம்மாளன் ஊரில் இல்லையென்று தெரியவந்தது. ஆஹா, இது அந்தக்கம்மாளன் வேலையாகத்தான் இருக்கவேண்டும், நம் மன்னர் நாம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் மோசம் போய்விட்டாரே? என்று மனதுக்குள் வியாகூலம் மேலிட்டு, ஆனாலும் இப்போது என்ன செய்யமுடியும், “பதறாத காரியம் சிதறாது என்றபடி பொறுத்திருப்போம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கம்மாளனாகிய ராஜாவை வரவேற்று ஆகவேண்டிய காரியங்களைப்பார்த்திருந்தான்.

ராஜா தன்னுடைய காரியங்களை முடித்துவிட்டு வருவதற்குள் அந்தப்புரத்திற்கு ஆள் அனுப்பி, நம் ராஜா மோசம் போனார் போல் தெரிகிறது. அதனால் நான் மறுபடியும் சொல்லி அனுப்பும் வரையிலும் நீங்கள் எல்லோரும் விரதம் இருப்பதாகவும், விரதம் முடிந்தபிறகுதான் ராஜா அந்தப்புரத்துக்குள் வரலாம் என்பதாகவும் சொல்லிவிடுங்கள் என்று திட்டம் செய்தான். கம்மாளன் வந்தவுடன் அவனிடம் இந்த விபரத்தைச்சொல்லி, அவனுக்கு வேறு விடுதி ஏற்பாடு செய்து ஏராளமான பணிப்பெண்களை ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தான். அவனும் சந்தோஷமாகச்சென்று பலவிதமான லீலாவிநோதங்களில் ஈடுபட்டு ராஜ்ஜியத்தை எள்ளளவும் சட்டை பண்ணாமல் சந்தோஷமாக இருந்தான்.



அவன் சந்தோஷத்தை நாம் இப்போது கெடுக்கவேண்டாம்....மீதி அடுத்த பதிவில்    
    

திங்கள், 29 மார்ச், 2010

ஆளவந்தார் கொலைக்கேஸ் முடிவு.

 

 
டரங்க் பெட்டியும் தலைப்பார்சலும் கிடைத்த பிறகு போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டது. ஆளவந்தார் வீட்டிலிருந்தும் அவர் வேலை பார்த்த கம்பெனி முதலாளியிடமிருந்தும் ஆளைக்காணவில்லை என்ற புகார் போலீஸுக்கு கிடைத்தது. இருவரையும் கூப்பிட்டு தலையைக் காட்டியதில் இறந்தது ஆளவந்தார்தான் எனபது உறுதியாகியது.

பிறகு என்ன, விசாரணையில் எல்லா விவரங்களும் தெரியவந்தன. வில்லனும் கதாநாயகியும் பெங்களூர் புறப்பட்டுச் சென்ற வரையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பத்திரிக்கைகளில் வெளியாகிக்கொண்டு இருந்தன. இந்தச் செய்திகளை -யெல்லாம் படித்தவுடன் வில்லனுக்கும் கதாநாயகிக்கும் இருப்புக்கொள்ளவில்லை. அதிக நாள் தலை மறைவாக இருக்கமுடியாது எனத்தெரிந்தது. இருவரும் மெட்ராஸ் கோர்ட்டில் வந்து  சரண்டர் ஆகிவிட்டார்கள்.

போலீஸ் விசாரணை எவ்வளவு நாள் நடந்தது என்பது சரியாக நினைவில்லை. விசாரணை முடிந்து கேஸ் கோர்ட்டிற்கு வந்த பிறகுதான் வழக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது. 200க்கும் மேற்பட்ட சாக்ஷிகள். 20க்கும் மேற்பட்ட சாதனங்கள். இவைகளையெல்லாம் ஒரு ஆங்கில துப்பறியும் படம் பார்ப்பது போன்று விசாரணை விபரங்கள் பந்திரிக்கைகளில் வெளியாயின. தினத்தந்தியில் வழக்கு விபரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. பத்திரிக்கையின் விற்பனை பல மடங்கு உயர்ந்தது.

மெட்ராஸ்வாசிகள் அநேகம் பேர் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு கேஸ் விசாரணையைப் பார்க்கப் போனார்கள். கேஸ் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேல் நடந்தது. கடைசியாக கேஸ் விசாரணை முடிந்து வக்கீல்கள் வாதம் முடிந்து கேஸ் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

தீர்ப்பு நாள் விடியற்காலையிலிருந்தே ஹைக்கோர்ட்டில் கூட்டம் கூடிவிட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜட்ஜ் உள்ளே போவதற்கே போலீஸ் உதவி தேவைப்பட்டது. ஜட்ஜ் தீர்ப்பு கூறும் நேரம் வந்துவிட்டது. கோர்ட்டில் மயான அமைதி. தீர்ப்பு படிக்கப்பட்டது. வில்லனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கதாநாயகிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தீர்ப்பு வழங்கப்பட்டது.   



இப்படியாக ஓர் ஆண்டுக்கு மேல் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த கேஸ் முடிவிற்கு வந்தது.

பின் குறிப்பு: தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்த இருவரும் மக்கள் சமுத்திரத்தில் மறைந்து போனார்கள்.

ஞாயிறு, 28 மார்ச், 2010

கொலைக்கான காரணமும், கொலை நடந்த விவரங்களும்.

 
(எச்சரிக்கை: 18 வயதுக்கு உட்பட்டவர்களும், பெண்களும், திடமனது இல்லாத ஆண்களும் தயவு செய்து இந்த பதிவைப்படிக்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.)

இன்றைக்கு பேப்பரில் கொலைச்செய்திகள் சர்வ சாதாரணமாயப் போய்விட்டன. குறிப்பாக கள்ளக்காதல் விவகாரத்தினால் நடக்கும் கொலைகள். மூன்று பேர் இருப்பார்கள். இரண்டு ஆண், ஒரு பெண் அல்லது இரண்டு பெண், ஒரு ஆண். இதில் இரண்டு பேர் சேர்ந்து மூன்றாவது ஆளைப்போட்டுத் தள்ளுவார்கள். இந்த மாதிரி செய்திகள் சராசரியாக தினம் இரண்டு வருகின்றன. அதை நாம் கண்டுகொள்வதே இல்லை. அது மாமூல் செய்தியாகப்போய்விட்டது. அப்படிப்பட்ட செய்தி வராவிட்டால்தான் ஏன் வரவில்லை என்று யோசிப்போம்.

ஆளவந்தார் கேஸிலும் இதே கதைதான். என்ன, அன்றைக்கு இப்படிப்பட்ட கேஸ்கள் அபூர்வம். ஒரு அழகான பெண் (30 வயசு) தினமும் ஜெம் அண்ட் கோ வழியாக அங்குள்ள ஏதோ ஒரு ஆபீஸுக்கு வேலைக்கு போய்வந்து கொண்டிருந்தது. நம் கதாநாயகர் பார்த்துக்கொண்டே இருந்தார். எப்படியோ அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டார். இந்த மாதிரி கேஸ்களின் வழக்கம்போல், அறிமுகம் முற்றிப்போய் லாட்ஜில் ரூம் போடுமளவிற்கு வளர்ந்து விட்டது. பிறகு லாட்ஜ் செலவை மிச்சப்படுத்துவதற்காக அந்தப்பெண்ணின் வீட்டையே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அவள் புருஷனுக்கு ( சாரி, முதலிலேயே சொல்ல மறந்துவிட்டேன்-அவளுக்கு கல்யாணமாகிவிட்டது) அடிக்கடி டூர் போகும் வேலை. அதனால் எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஒரே பொறாமை. ஒரு நாள் அந்த ஆள் வீட்டில் தனியாக இருக்கும்போது போட்டுக்கொடுத்து விட்டார்கள்.

அன்று அந்தப்பெண் வேலையிலிருந்து வந்தவுடன், இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் நடக்கும் வழக்கமான வாதப்பிரதிவாதங்கள், அடிதடிகள் எல்லாம் முடிந்து ஒரு அமைதி நிலைமைக்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி அடுத்த நாள் பகலில் நம் கதாநாயகனை வீட்டுக்கு வரச்சொல்லி கதாநாயகி அழைப்பு விடுக்கவேண்டும். அவன் வந்தவுடன் மற்ற விஷயங்களை நம் வில்லன் (வில்லன் யார், அந்தப்பெண்ணின் புருஷன்தான்) கவனித்துக்கொள்வார். இப்படியாக முடிவு ஆகியது.

காலையில் வழக்கம்போல் கதாநாயகி வேலைக்குப்போவது போல் சென்று கதாநாயகனுக்கு அழைப்பு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள். கதாநாயகனும் சொன்ன நேரத்தில் வந்துவிட்டார். கதவு சாத்தப்பட்டது. கதாநாயகனும் குஷியானார். அப்போது வில்லன் சீனில் பிரவேசித்தார். கதாநாயகனுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

பிறகு நடந்ததை அதிகமாக விவரிக்க வேண்டிதில்லை. புருஷனும் மனைவியும் சேர்ந்து ஆளவந்தாரை பரலோகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதுவரை நடந்தது சாதாரணமாக நடப்பதுதான். அதற்கப்புறம் நடந்தவைதான் கிளைமேக்ஸ். அப்போது பகல் 12 மணி. 

 

இனி இந்த பாடியை என்ன செய்வது? வில்லன் திட்டம் தீட்டினார். சைனாபஜாருக்குப்போய் ஒரு பெரிய டிரங்க் பெட்டி வாங்கினார். ஒரு ரிக்சாவில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு வந்தார். அப்போதெல்லாம் ஆள் இழுக்கும் கை ரிக்சாக்கள்தான் இருந்தன. பெட்டியை வீட்டில் இறக்கி வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த ஒரு கடையில் ஒரு பெரிய வெட்டுக்கத்தி இரவல் வாங்கி வந்தார். பிறகு கதவைச்சாத்தி லாக் செய்துவிட்டு, போட்டிருந்த சட்டை பேண்ட் எல்லாம் கழற்றி வைத்துவிட்டு, பாடியை கவனித்தார்(?). முதலில் தலையைத் தனியாக வெட்டி ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்தார். பிறகு கை, கால்களைத் தனித்தனியாக வெட்டி, டிரங்க் பாக்ஸில் சுற்றிலும் கதாநாயகனின் துணிகளைப்போட்டு நடுவில் முண்டத்தையும் கைகால்களையும் பேக் செய்தார். பெட்டியை நன்றாக மூடி பூட்டுப்போட்டார். இரண்டு பேருமாகச் சேர்ந்து பெட்டியை முன் வராந்தாவில் கொண்டுவந்து வைத்தனர். பிறகு தலையை இன்னும் கொஞ்சம் பேப்பரில் சுற்றி தனியாக வைத்தார். மறக்காமல் இரவல் வாங்கிய கத்தியை திருப்பிக்கொடுத்தார்.
 
பிறகு வில்லனும் கதாநாயகியும் சேர்ந்து வீட்டை முழுவதும் கழுவிவிட்டார்கள். பிறகு வில்லன் குளித்தார். இதற்குள் மணி ஆறு ஆகிவிட்டது. வெளியில் போய் எக்மோர் ஸ்டேஷன் போவதற்கு என்று ஒரு ரிக்சா பேசி அழைத்துவந்தார். அந்த ஆளையே பெட்டியை எடுத்து ரிக்சாவில் வைக்கச்சொல்லி, தானும் ஏறிக்கொண்டு எக்மோர் சென்றார்கள். அங்கு ரிக்சாக்காரருக்கு வாடகை கொடுத்துவிட்டு, ஒரு போர்ட்டரைப்பிடித்தார். பெட்டியை கொண்டுபோய்  போட்மெயிலில் ஒரு கம்பார்ட்மென்டில் வைக்கச்சொல்லி, கூலி கொடுத்து போர்ட்டரை அனுப்பி விட்டார். சிறிது நேரம் அங்கே உட்கார்ந்துவிட்டு, பிறகு கிளம்பி வீடுவந்து சேர்ந்தார்.



உடனே அந்த தலைப்பார்சலை எடுத்துக்கொண்டு இன்னொரு ரிக்சா பிடித்து சாந்தோம் பீச்சுக்கு சென்றார். ரிக்சாவை அனுப்பிவிட்டு, கடல் நீருக்குள் சிறிது தூரம் சென்று அந்தப்பார்சலை கடலுக்குள் வீசிவிட்டு வீட்டுக்குத்திரும்பினார். மணி 10. உடனே அவசியமான துணிமணிகளை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, பிராட்வே பஸ் ஸ்டேண்ட் சென்று பெங்களூருக்கு பஸ் ஏறிவிட்டார்கள்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்த பதிவில் முடித்து விடுகிறேன்.....




வெள்ளி, 26 மார்ச், 2010

ஆளவந்தார் கொலைக்கேஸ்




சுதந்திரம் அடைவதற்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒரே நாடாக இருந்தது என்பதை என் போன்ற வயதானவர்கள் நினைவு வைத்திருப்பார்கள். அப்போது மெட்ராஸ்ஸிலிருந்து கொழும்பு வரையிலும் நேர் ரயில் போக்குவரத்து இருந்தது. அந்த ரயிலுக்கு “போட் மெயில் என்று பெயர். அது தனுஷ்கோடி வரையில் தரைத்தண்டவாளத்தில் செல்லும். அங்கு அந்த தண்டவாளத்தை ஒட்டி ஒரு கப்பல் நிற்கும். அந்த கப்பலிலும் ரயில் தண்டவாளம் போடப்பட்டிருக்கும். இரு தண்டவாளங்களையும் இணைக்க வசதி உண்டு. அப்படி தண்டவாளங்களை இணைத்து விட்டால் ரயிலை கப்பலுக்குள் ஓட்டிச்செல்லலாம். பிறகு தண்டவாளங்களின் இணைப்பை எடுத்துவிட்டு கப்பல் கடலில் செல்லும். தலைமன்னார் சேர்ந்தவுடன் மறுபடியும் இணைப்பு கொடுத்து ரயில் தரைக்கு வரும். பிறகு அங்கிருந்து கொழும்பு செல்லும். ரயில் கப்பலில் (போட்) செல்வதால் அதற்கு போட்மெயில் என்று பெயர். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் சுதந்திரம் வந்த பிறகும் அந்த ரயில் போட்மெயில் என்ற பெயரிலேயே தனுஷ்கோடி வரை நிறைய வருடங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.



1952 ல் ஒரு நாள் போட்மெயில் தனுஷ்கோடியில் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கிப்போய்விட்டார்கள். காலியாக இருந்த ரயிலை பரிசோதித்த ஒரு போலீஸ்காரர் ஒரு கம்பார்ட்மென்டில் ஒரு பெரிய டிரங்க் பெட்டி இருப்பதைப்பார்த்தார். யாரோ பயணி மறந்து விட்டுவிட்டுப் போய்விட்டார் போலிருக்கிறது என்று பிளாட்பாரம் முழுவதும் சுற்றிப்பார்த்தார். அப்படி யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. திரும்பவும் வந்து பெட்டியை அருகில் சென்று பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. பெட்டியில் இருந்து ரத்தம் கசிந்து ஓரத்தில் தேங்கி இருந்தது.

உடனே பெரிய போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி எல்லோரும் வந்துவிட்டார்கள். பெட்டி மிகுந்த கனமாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்று யூகிக்க முடியவில்லை. நான்கு பேர் சேர்ந்து பெட்டியை பிளாட்பாரத்தில் இறக்கி பூட்டை உடைத்து பெட்டியைத் திறந்தால் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. உள்ளே ஒரு தலையில்லாத ஒரு ஆணின் உடல். கை, கால்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு பெட்டியில் பேக் செய்யப்பட்டிருந்தது. உடலில் எந்த உடையும் இல்லை. உடனே தனுஷ்கோடியே அல்லோல கல்லோலப் பட்டது.

சென்னைக்கு தந்தி போயிற்று. டிரங்க்பெட்டி எந்த ஸ்டேஷனில் ஏற்றப்பட்டது என்பது உடனே தெரியவில்லை. மெட்ராஸ் போலீஸ் உடனே சுறுசுறுப்பாக எக்மோர் ஸ்டேஷனில் விசாரித்ததில் ஒரு போர்டர் அந்த மாதிரி பெட்டியை ஒருவர் கொண்டு வந்தார். நான்தான் அதை இன்ன கம்பார்ட்மென்டில் ஏற்றினேன். அதற்குப்பிறகு நான் வேறு கூலி பார்க்கப்போய்விட்டேன் என்று சொன்னார். உடனே பெட்டியையும் உடலையும் தகுந்த முறையில் பக்குவப்படுத்தி மெட்ராஸ் கொண்டுவரவும் என்று தனுஷ்கோடிக்கு தந்தி போயிற்று.

அந்தக்காலத்தில் இந்த மாதிரி கொலைகள் நடப்பது மிகவும் அபூர்வம். இந்த செய்தி உடனே காட்டுத்தீ போல தமிழகமெங்கும் பரவிவிட்டது.
இரண்டு நாள் கழித்து ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்ட மனிதத்தலை பேப்பரெல்லாம் கிழிந்து போய் சாந்தோம் பீச்சில் ஒதுங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. அதை வைத்து கொலை செய்யப்பட்டது யார் என்ற துப்பு துலங்கியது. இறந்தவர் “ஆளவந்தார் என்னும் நபர். சைனாபஜாரில் ஜெம் அண்ட் கோ என்னும் பேனாக்கடையில் சேல்ஸ்மேனாகப் பணியாற்றியவர் என்று கண்டுபிடித்துவிட்டார்கள்.







கொலைசெய்யப்பட்ட ஆள் யார் என்பது தெரிந்துவிட்டால் கொலையாளியைக்கண்டு பிடிக்க சிரமப்படவேண்டியதில்லை அல்லவா? இரண்டு நாளில் துப்பு துலங்கிவிட்டது. கொலைக்கான காரணம் இன்றைய சுழ்நிலையில் மிக சாதாரணமானது. இந்தக்காரணத்தினால் இன்று சராசரியாக தமிழ்நாட்டில் தினம் இரண்டு கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால் அன்றைக்கு இது மிகவும் அதிசயமாகப்பேசப்பட்டது. அந்தக்காரணம் என்னவென்று நாளை பார்க்கலாமா?












புதன், 24 மார்ச், 2010

நான் வேலைக்கு சேர்ந்த கதை-பாகம் 2


(சில பேர் தலைப்பு தப்பு, சரியான தலைப்பு “ஆணி புடுங்க சேர்ந்த கதை ன்னு இருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனா நான் கடலை புடுங்கத்தான் போனேன். எது சரின்னு எனக்குத்தெரியலீங்க. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க)


திறந்து பார்த்தால், விவசாய இலாக்கா இயக்குனரிடமிருந்து வேலை நியமன உத்திரவு. இந்த மாதிரி கவர்மெண்ட்டு ஆர்டர்களை நான் முந்தி பிந்தி பாத்ததில்லை. ஒண்ணும் சரியா புரியலே. நாலுபேருகிட்ட காண்பித்த பிறகுதான் முழு விவரமும் புரிஞ்சது. இன்னும் 15 நாட்களுக்குள் ஆனைமலை நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணையில் “நிலக்கடலை ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் சேரவேண்டும் என்று அந்த ஆர்டரில் குறிப்பிட்டிருந்தது.

வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம். எனக்கும் நாமும் சம்பாதிக்கப்போகிறோம் என்ற சந்தோஷம் இருந்தது. என்ன, கோயமுத்தூர் சர்வே வேலை கொஞ்சம் பாக்கி. சரி, வேலையில் சேர்ந்து விடவேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். இதில்தான் ஒரு சிக்கல் வந்தது. ஆனைமலை எங்கு இருக்கிறதென்பதில் குழப்பம். அது மலைமேல் இருக்கிறது என்று சிலரும், இல்லை இல்லை, அது சமவெளியில் உள்ள ஒரு ஊர்தான் என்று சிலரும் குழப்பினார்கள்.


சரி, எதற்கும் விவசாய காலேஜிலேயே விசாரித்து விடுவோம் என்று காலேஜுக்கே போனேன். அன்று பார்த்து, ஆனைமலையில் நான் வேலைக்கு ரிப்போர்ட் பண்ண வேண்டிய ஆபீசரே வந்திருந்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர் ஆனைமலைக்கு வரும் வழியெல்லாம் சொல்லி, சேரவேண்டிய கடைசி நாளன்று வந்தால் போதும் என்று சொன்னார். சரி என்று வீட்டுக்கு வந்தேன். சேரவேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 16 ம் தேதி (1956 ம் வருடம்).

பொள்ளாச்சியில் எனக்கு ஒரு மாமா இருந்தார். அவர் ஏபிடி பஸ் சர்வீசில் கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருந்தார். அதனால் போகும்போது அவரைப்பிடித்துக் கொள்ளலாம் என்று முடிவு ஆகியது. போய் அங்கே தங்குவதற்கு தேவையான தளவாடங்கள் தயார் செய்தேன். ஒரு ஜமக்காளம், ஒரு தலையணை, ஒரு பெட்ஷீட், இருக்கிற சட்டை பேண்ட்டுகள் (போட்டிருந்தது தவிர மூன்று செட்டுகள்), துண்டு, வேட்டி, சோப்பு, சீப்பு, இத்தியாதிகள். இதையெல்லாம் போட்டு எடுத்துக்கொண்டு போக “ஆளவந்தார் பெட்டி சைசில் ஒரு தகரப்பெட்டி. புதுசாய் வாங்கினோம்.





அதென்ன ஆளவந்தார் பெட்டி என்கிறீர்களா? 1940க்கு முன் பிறந்தவர்களுக்கு ஆளவந்தார் கொலைக் கேஸைப்பற்றி நன்கு தெரிந்திருக்கும். அந்தக்காலத்தில் (1952) ல் மிகப்பிரபலமான கேஸ். (இப்போதைய நித்தி கேஸ் மாதிரி). என்ன, நித்தி கேஸ் பத்து நாளில் பிசுபிசுத்துப் போய்விட்டது. ஆளவந்தார் கேஸ் ஏறக்குறைய ஒரு வருடம் நடந்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். கோர்ட்டு விசாரணை விபரங்கள் தினத்தந்தியில் இரண்டு முழு பக்கங்கள் வெளியாகும். கொஞ்சம் நேரங்கழித்து கடைக்குப்போனால் காப்பி தீர்ந்து விடும். சுஜாதாவின் துப்பறியும் நாவலுக்கு சற்றும் குறையாத விறுவிறுப்புடன் செய்திகள் வெளியாயின. அந்தக்காலத்தில் இரண்டு பேர் சந்தித்தால் முதலில் பேசுவது ஆளவந்தார் கொலைக் கேஸைப்பற்றித்தான்.

அந்தக்கேஸில் பிரபலமானது ஒரு டிரங்க் பெட்டி. அது மாதிரி ஒரு பெட்டியைத்தான் நான் வாங்கினேன்.

ஆளவந்தார் கேஸ் என்னவென்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் இருப்பீர்கள். இரண்டு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்.















சனி, 20 மார்ச், 2010

நான் வேலைக்கு சேர்ந்த கதை-பாகம் 1





கடவுளைப்பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை. அதனால் அதைவிட்டுவிட்டு என் சொந்தக்கதையை ஒரு பதிவாக எழுதலாம் என்று இதை எழுதுகிறேன். முதலில் நான் வேலைக்கு சேர்ந்த கதையில் ஆரம்பிப்போம். நண்பர் அரும்பாவூர் அவர்களும் ஆசைப்பட்டார்கள்.

நான் கோயமுத்தூரில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலை பார்த்து, ஓய்வு பெற்று, வாழ்ந்து கொண்டிருப்பவன். நான் பிறந்தது சாதாரண, ஏழ்மைக்கு சற்றே மேம்பட்ட குடும்பம். மூன்று வேளை சாப்பாடு, இரண்டு செட் டிரஸ் உண்டு. அதற்கு மேல் ஒன்றும் கிடைக்காது. ஒன்றாம் கிளாஸ் முதல் பிஎச்டி வரை எல்லாம் உள்ளூரிலேயே படித்து முடித்து விட்டேன். காரணம் வெளியூர் படிப்பு என் வீட்டு நிலைமையில் சாத்தியப்படாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இளநிலை பட்டப்படிப்பு வரை படிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் படிப்பு செலவு அன்று அதிகம் இல்லை. முனிசிபல் ஆரம்ப பள்ளி, முனிசிபல் ஹைஸ்கூல், கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ், கவர்மென்ட் அக்ரி காலேஜ் என்று எல்லாம் சலீசாக இருந்தன. தவிர எல்லாம் வீட்டிலிருந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் தூரத்திலேயே இருந்தன. போக்குவரத்து சுலபம். இதைவிட முக்கியமான காரணம், நான் எந்த வகுப்பிலும் பெயில் ஆகாமல் படித்தேன். ஏதாவது ஒரு வகுப்பில் பெயிலாகி இருந்தால் உடனே என் தந்தையார் என்னை ஒரு வொர்க் ஷாப்பில் சேர்த்துவிட்டிருப்பார். கோயமுத்தூரில் அப்போது புதிது புதிதாக வொர்க் ஷாப்புகள் தொடங்கிக்கொண்டு இருந்தன. (அப்படி நடந்திருந்தால் ஒருக்கால் நான் இன்னும் நன்றாக இருந்திருப்பேனோ என்னவோ? இப்பவும் ஒண்ணும் பெரிசா குறைவில்லை).

மத்த படிப்பையெல்லாம் விவரிக்கவேண்டியதில்லை. கடைசியாகப் படித்த விவசாயப் படிப்புதான் நான் இப்போது ஏதோ ஓரளவுக்கு மானத்துடன் வாழ்வதற்கு உதவியாக இருந்தது.

தொழில் கல்வி என்று சொல்லப்படுபவை, அன்றும் இன்றும், நான்கு. மருத்துவம் (5 வருடம்), கால்நடை மருத்துவம், பொறியியல் (இரண்டும் 4 வருடம்), விவசாயம் (3 வருடங்கள்). எத்தனை வருடப் படிப்பு என்பதை வைத்துத்தான் அந்தப் படிப்புக்கு மதிப்பு. அப்படிப் பார்க்கும்போது மருத்துவம்தான் முதல் ரேங்கில் இருந்தது. மேலும் அது உயிர்காக்கும் பணி என்பதால் அது தனி சிறப்புடன் விளங்கியது. அடுத்து பொறியியலும் கால்நடை மருத்துவமும். நான்காண்டுகள் படிப்பதால் அவை இரண்டும் மருத்துவத்திற்கு ஒரு படி கீழாகவும் ஆனால் விவசாயத்தை விட மேலானதாகவும் கருதப்பட்டன. விவசாயப்படிப்பு நாட்டின் முக்கியமான, எல்லோருக்கும் உணவு வழங்கக்கூடிய துறையைச் சார்ந்திருந்தாலும் தொழில் கல்வியில் கடைநிலையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

விவசாயக்கல்லூரியில் நாங்கள் தோட்டவேலை செய்முறை பயிற்சிக்கு போகும்போது மம்முட்டி (மலையாள நடிகர் மம்முட்டியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) எடுத்துக்கொண்டு போவோம். இதனால் விவசாயக்கல்லூரிக்கு “மம்முட்டி காலேஜ் என்று மற்ற தொழில் கல்லூரி மாணவர்கள் கேலி செய்வதுண்டு. நாங்களும் “மம்முட்டி இல்லைன்னா உங்களுக்கு சோத்துக்கு லாட்டரி என்று பதில் கேலி செய்வோம்.

நான் படித்த கால கட்டம்தான் (1953-56) விவசாயத்தில் பசுமைப்புரட்சியின் ஆரம்ப கட்டநிலை. விவசாயம் நிலைப்பட்டால்தான, நாடு வளமாக இருக்கமுடியும் என்று நேரு தலைமையிலான அரசு, கொள்கை ரீதியில் முடிவு எடுத்து நாடு முழுவதிலும் பல விதமான விவசாய முன்னேற்றத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதனால் விவசாய இலாக்காவிற்கு அதிக அளவில் விவசாயப் பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் நான் விவசாயப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வு எழுதிவிட்டு கோயமுத்தூரை நண்பர்களுடன் சர்வே (J) எடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு மாதத்தில் ரிசல்ட் வந்தது. நான் பாஸ். சரி, அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது தபால் ஒன்று என் பெயருக்கு வந்தது. திறந்து பார்த்தால்.....(கொஞ்சம் பொறுங்க)





என்னுடைய அன்பு மாணவரும், சக ஆராய்ச்சியாளரும் தற்போதைய விவசாயப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான முனைவர் ப.முருகேச பூபதி அவர்கள்















வியாழன், 18 மார்ச், 2010

மனித சிந்தனையும் கடவுள் நம்பிக்கையும்.

நம் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்கிற பிரச்சாரம் பல காலமாக பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களினால் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிகம் படித்தவர்கள் இந்த கொள்கைகளை ஒத்துக்கொண்டு இதைப்பரப்ப வேண்டும் என்று இந்த பகுத்தறிவுவாதிகள் படித்தவர்களை வற்புறுத்துகிறார்கள் அல்லது எதிர்பார்க்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று எனக்குப்புரியவில்லை.

இதில் முதலில் நான் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால் இவர்கள் எதையெதையெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள் என்கிற லிஸட்டைத்தான். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கடவுள் நம்பிக்கை- கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இருக்கிறார் என்றால் பார்த்தவர்கள் யார்? எனக்கு காட்டமுடியுமா? நான் பார்த்தால்தான் நம்புவேன். இப்படிப்பட்ட கேள்விகளை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கேட்கிறார்கள்.

ஆகவே கடவுள் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கைகளின் லிஸ்ட்டில் முதலில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் சொல்வதை திறந்த மனதுடன் பாருங்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்கிற வாதத்துடன் கடவுள் நம்பிக்கையை சம்பந்தப்படுத்தாதீர்கள். கடவுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என்னுடைய சொந்த வாழ்விற்கு கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தேவைப்படுகிறது என்று ஒருவன் சொன்னால், அவனது செயல்களில் அதைக்கடைப்பிடித்தால், என்ன தவறு? அவன் படித்திருந்தால் இதைச்செய்யக்கூடாதா? படித்தவன் என்றால் அவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் நிர்ணயிக்கவேண்டும்?

நமது நாட்டில் வருடந்தோறும் படித்தவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கோயில்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. படித்தவர்களின் கடவுள் நம்பிக்கை அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் ஏன் முடிச்சுப்போடுகிறாய்? என்று கேட்கலாம். இது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சமாச்சாரங்கள் அல்ல. ஆனால் நடைமுறை உண்மையைப்புரிந்து கொள்ள மறுத்து ஒரு மாயைக்கொள்கையை பிடித்துக் கொண்டிருப்பதைத்தான் நான் மூடநம்பிக்கை என்று நம்புகிறேன்.

மனிதனுக்கு சில நேரங்களில் சில ஊன்றுகோல்கள் அவசியம் தேவைப்படுகின்றன. கடவுளை நம்பகிறவனுக்கு அந்த நம்பிக்கை ஊன்றுகோலாக இருக்கிறது. கடவுளை நம்பாதவனுக்கு அந்த நம்பிக்கையே ஊன்றுகோலாக செயல்படுகிறது. எப்படிப் பார்த்தாலும்
மனிதனுக்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. அது கடவுள் நம்பிக்கையாகவோ, அல்லது கடவுள் அவநம்பிக்கையாகவோ இருக்கலாம்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன. அவை சரியா, தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். சமகாலத்தில் வாழும் மனிதர்கள் அல்ல. ஒரு கருத்து பெரும்பான்மையான மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டால் அதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதே கருத்து சரியில்லை என்றால் அது காலப்போக்கில் அழிந்துவிடும்.

செவ்வாய், 16 மார்ச், 2010

கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?






இது காலம் காலமாக விதண்டா வாதக்காரர்களால் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்குப்பதில் கிடையாது. அப்படிச்சொன்னால் “அப்புறம் நீ என்ன பெரிய ஆராய்ச்சி பண்ணறே?” அப்படீன்னு மறு கேள்வி வரும்.

இந்த முன்னுரை எதற்கு என்றால், அடுத்து படிக்கவும்.

என்னுடைய ஒரு பதிவில் கோவி கண்ணன் சொன்னது.

//அடுத்த பதிவு எதை பற்றி கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மழை வராமல் தடுக்குமாமே? எனவே அந்த மரத்தை பற்றி உங்களிடம் பதிவு எதிர்பார்க்கிறேன் //

“இதற்கு ஹாய் அரும்பாவூர் சொன்னது”

//இது என்ன சார் புது கதை? யார் அவிழ்த்து விட்டார்கள்?

இதை விளக்க பல பதிவுகள் போட வேண்டும். இதற்கு நம் டாக்டர் சார் எதற்கு?

நானே சொல்லிவிடுவேனே?

இதற்கு சிறிதளவு இயற்கையியல் அல்லது உயிரியல்/தாவரவியல்(BOTANY) தெரிந்தால் போதுமே!

அதைப்பற்றி பார்க்கும் முன்னர் ஒருவார்த்தை

இயற்கையினால் உண்டான எதுவும் அந்த இயற்கைக்கு எதிரானது அல்ல, மனிதர்களை தவிர!

கருவேல மரம் முள்வேலி மரம் இவைகள் மட்டுமல்ல சப்பாத்தி, கள்ளி மற்று பல பாலை தாவரங்கள் கூட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவது உண்மைதான்.

ஆனால் அவைகள் மழைவராமல் தடுக்கும் காரணிகள் அல்ல.

மீண்டும் சந்திப்போம்.//


அரும்பாவூர் ஏறக்குறைய சரியான பதில் சொல்லிவிட்டார். நானும் கொஞ்சம் சொல்லாவிட்டால் என்னுடைய டாக்டர் பட்டத்துக்கு மதிப்பில்லாமல் போய்விடுமல்லவா? அதற்காக.



கருவேலமரம், சப்பாத்தி கள்ளி முதலானவை இயற்கையாகவே மழை குறைந்த வறண்ட பிரதேசங்களில் வளரக்கூடியவை. அந்த சூழ்நிலையில் அவை தாக்குப்பிடிக்கத் தேவையான குணங்களைப் பெற்றிருக்கின்றன. அந்த குணங்களில் ஒன்று காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை இலைகள் மூலம் உறிஞ்சிக்கொள்வது. பிராணிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் முட்கள். ஆகவே மழை குறைவான பிரதேசங்களில் இத்தகைய மரங்கள் வளருகின்றன.


இப்போது தலைப்பை மீண்டும் படியுங்கள். கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?


இல்லே, கோழி வறுவல்தான் முன்னே வந்ததா?

கருவேல மரம் வளர்ந்ததால் மழை குறைந்ததா? மழை குறைந்ததால் கருவேல மரம் வளர்ந்ததா?

திங்கள், 15 மார்ச், 2010

பதின்ம வயது நினைவுகள்.

இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்து என்னை பிரபல பதிவர் தகுதிக்கு உயர்த்திய பதிவர் தருமிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பதின்ம வயது என்பது 10 லிருந்து 18 வரை என்று வைத்துக் கொள்ளலாம். என்னுடைய பதின்ம வயது ஆரம்பத்தில் இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்தது. எங்கள் நகரத்தைச்சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மிலிடரி கேம்ப்புகள். சிப்பாய்கள் தங்குவதற்காக வரிசை வரிசையாக பாரக்குகள். எங்கு பார்த்தாலும் மிலிடரி லாரிகளும் ஜீப்புகளும் போய்க்கொண்டே இருக்கும். மிலிடரி லாரி அடித்து யாராவது இறந்து விட்டார்களென்றால் கேள்வி முறை கிடையாது.

காலியாக இருக்கும் இடத்திலெல்லாம் பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருந்தார்கள். எதிரி விமானம் வருகிறது என்றால் அபாயச்சங்கு ஊதப்படும், அப்போது ரோட்டில் இருப்பவர்களெல்லாம் இந்த பதுங்கு குழிகளுக்குள் போய் ஒளிந்து கொள்ளவேண்டும். இப்படி நோட்டீஸ் அச்சடித்து வீடுவீடாய் விநியோகித்தார்கள்.

தெரு விளக்குகளுக்கெல்லாம் வெளிச்சம் மேலே செல்லாதபடி கவசம் அணிவித்திருந்தார்கள். எதிரி விமானம் இரவில் வரும்போது கீழே ஊர் இருப்பது தெரியாமல் இருக்க இந்த ஏற்பாடு. மேலும் இரவில் அபாயச்சங்கு ஒலித்தால் வீட்டுக்குள் இருக்கும் விளக்குகளையும் அணைத்துவிடவேண்டும். இவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்க ஏ.ஆர்.பி போலீஸ் (Air Raid Prevention) என்று ஒரு தனி போலீஸ் பிரிவு இருந்தது. அவர்களுக்கு சாம்பல் கலரில் ஒரு யூனிபாரம். இருட்டில் தூரத்திலிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெரியாது. அந்த துணி ஏஆர்பி துணி என்ற பெயரில் இன்றும் துணிக்கடைகளில் விற்கப்படுகிறது.



பெண்டு பிள்ளைகளெல்லாம் எங்கேயும் தனியாகச் சென்றால் மிலிடரிக்காரன் தூக்கிக்கொண்டு போய்விடுவான் என்று ஊர் பூராவும் வதந்தி. நிஜமாகவே எங்கள் வீட்டுக்குப்பக்கத்தில் உள்ள ஒரு டாக்டரின் பெண் ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பட்டப்பகலில் மிலிடரிக்காரர்கள் அவளைக்கடத்த முயற்சித்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த என்னுடைய ஸ்கூல் ட்ரில் மாஸடர் தடுக்கப்போக, அவரை மிலிடரிக்காரர்கள் அடிக்க, அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அந்தப்பெண் தப்பித்து வீட்டுக்கு ஓடிவிட்டது.

இந்தியாவை ஜப்பான்காரன்தான் தாக்குவான் என்று பலமான வதந்தி. அவன் பர்மாவைப்பிடித்து இந்திய எல்லை வரை வந்துவிட்டான். டில்லியிலிருந்த வெள்ளைக்காரர்களில், பெண்கள், குழந்தைகள், ஆண்களில் அதிக முக்கியமில்லாதவர்கள்- இவர்களையெல்லாம் முன்பேயே இங்கிலாந்திற்கு அனுப்பி விட்டார்கள். ஜப்பான்கார ர்கள் எல்லோரும் அந்தக்காலத்தில் குள்ளமாக இருந்தார்களாம். அதனால் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் “குள்ளர்களை நம்பாதீர்கள்” என்று தீப்பெட்டிகளில் அச்சடித்து விற்றார்கள்.

ஜனங்கள் எங்கு சந்தித்தாலும் பேசுவது யுத்தத்தைப்பற்றித்தான். ஆனந்தவிகடனில் ஒருபக்கம் யுத்தச்செய்திகள் வரும். அப்போது எனக்கு அதன் மூலமாகத்தான் யுத்தத்தைப்பற்றி அறிந்துகொள்வேன். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் அவ்வப்போது ஏதாவது அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்கள்.

இரவில் நாங்கள் படுத்தபிறகு சில நாட்களில் அபாயச்சங்கு ஒலிக்கும். ஓ, ஜப்பான்காரன் குண்டுபோட வந்துவிட்டான் என்று நினைத்து பயந்து போர்வையை இளுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிவிடுவோம். விடிந்தபிறகுதான் தெரியும் அது வெறும் ஒத்திகைதான் என்று. நிஜமாகவே 1944 ல் ஜப்பான்காரன் மெட்ராஸுக்கு “எம்டன்” என்கிற கப்பலில் வந்து ஹார்பரின் மேல் குண்டு போட்டான். ஒன்றும் பெரிய சேதமில்லை. ஆனாலும் பாதி மெட்ராஸ் காலி ஆகிவிட்டது.



1945ல் அமெரிக்காக்காரன் ஜப்பான் மேல் அணுகுண்டு போட்டவுடன் யுத்தம் முடிவடைந்து விட்டது. அதைக்கொண்டாடும் விதமாக பள்ளிகளுக்கெல்லாம் மூன்று நாள் விடுமுறை விட்டார்கள். பிறகுதான் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவு செய்து 1947ல் நம் நாடு சுதந்திரம் பெற்றது.

சனி, 13 மார்ச், 2010

ஜோசியம் இருக்கட்டுமா, வேண்டாமா?



எதிர்காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆவல் இருக்கிறது. ஜோசியம் உண்மை என்று வைத்துக்கொள்வோம். இனி நடக்கப்போவதைத்தெரிந்து என்ன பிரயோஜனம்? நல்ல எதிர்காலம் என்றால் சந்தோஷம் ஏற்படும். ஆனால் அந்த சந்தோஷம் மெதுவாக நீர்த்துப்போய், அந்த சம்பவம் உண்மையாக நடக்கும்போது சந்தோஷம் ரொம்பவும் குறைந்து போய்விடும்.


அதேபோல் துக்கமான எதிர்காலம் வரப்போகிறது என்றால் அன்று முதலே துக்கம் ஆரம்பித்துவிடும். ஒருவனுக்கு 6 மாதத்தில் மரணம் சம்பவிக்கும் என்றால் அவன் அதைக்கேட்ட நாள் முதல் கவலையில் மூழ்கி விடுவான். அவன் இறக்கும் நாள்வரை கவலையிலேயே இருந்து பிறகு இறப்பான்.


ஆகவே ஜோசியத்தினால் ஒருவனுடைய சந்தோஷம் குறைந்து விடுகிறது, துக்கம் பன்மடங்கு அதிகரிக்கிறது. இந்த இரண்டு சூழ்நிலைகளுமே தேவையற்றதுதானே.



ஜோசியம் பொய்யென்றால் பிறகு அதைத் தெரிந்து என்ன பலன்?
ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் ஜோசியத்தை நாடிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். எதனால்? ஜோசியர்கள் சிறந்த மனோதத்துவ நிபுணர்கள். வந்தவர்களின் மனோநிலையை அனுசரித்து உண்மையையும் பொய்யையும் கலந்து சொல்வார்கள். ஜாதகப்பிரகாரம் ஒரு கெடுதல் நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை மிக சாமர்த்தியமாக மாற்றி ஒரு குறிப்பாக மட்டும் சொல்லிவிட்டு,எதற்கும் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள் என்று சொல்வார்கள். ஜோசியர்களுடைய கணிப்பு என்னவென்றால் ஜாதகப்பிரகாரம் கெட்ட பலன் வருவதாக இருந்தாலும் அவனுடைய பூர்வ ஜன்ம புண்ணியத்தினால் அந்த கெடுதல் நடக்காமலும் போகலாம்.

ஆனால் ஜோசியம் பார்க்க வந்தவர்களுடைய மனது சந்தோஷப்படும்படியான பலன்களைச்சொல்வதனால் அவர்கள் தன்னம்பிக்கையும் புது ஊக்கமும் பெற்று தங்கள் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள். இது ஒரு பெரிய ஆறுதலல்லவா?

வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதனே உலகில் இல்லை. மனோதைரியம் உள்ளவன் தாழ்வுகளை எதிர்கொண்டு வெற்றி அடைகிறான். மனோபலம் குறைந்தவர்களுக்கு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. அந்த ஊன்றுகோல் வீட்டுப்பெரியவர்களின் ஆறுதலாக இருக்கலாம், கடவுள் பக்தியாக இருக்கலாம், சாமியார்களின் அருளுரைகளாக இருக்கலாம். நித்தியானந்தரும் அதைத்தான் செய்து வந்தார். அவருடைய விதி ரஞ்சிதா ரூபத்தில் வந்து அவரைப் புரட்டிப்போட்டு விட்டது.

அமெரிக்காவில் வீதிதோறும் மனோதத்துவ நிபுணர்கள் கடை விரித்து வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் செய்யும் கவுன்சிலிங்கை நம்மூர் ஜோசியர்கள் செய்கிறார்கள். அவ்வளவுதான். ஆகவே ஜோசியம் நிஜமா, பொய்யா என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு அதனால் மனித சமுதாயத்திற்கு நன்மை இருந்தால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே.

வியாழன், 11 மார்ச், 2010

ஜோசியம் உண்மையா, பொய்யா?



கோள்களின் நிலைக்கும் ஒருவனுடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அந்த தொடர்பை கணித்து தனிமனிதனின் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சொல்ல ஒரு நல்ல ஜோதிடனால் முடியும் என்றும் முந்தைய பதிவில் பார்த்தோம்.


ஜோதிடத்தில் உண்மையாகவே இவ்வாறு சொல்ல முடியுமா, இல்லை இது ஒரு பொய்யான சாஸ்திரமா? இந்த விவாதம் காலங்காலமாக நடக்கிறது. ஜோதிடம் பொய் என்று எந்தவித குழப்பமும் இல்லாமல் நம்புகிறவர்கள் இந்தப்பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டிய அவசியம் இல்லை. சும்மா இந்த ஆள் என்ன சொல்கிறான் என்று பார்ப்பதற்காக படிப்பதைப்பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை.




ஜோதிடம் ஒரு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு சைன்ஸ், அதனால் எனக்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன், நான் அதை முழுவதுமாக நம்புகிறேன், என்பவர்களும் இந்தப்பதிவை படிக்கவேண்டாம். ஏனென்றால் படித்தால், என்னைப்பற்றி தோன்றும் தாறுமாறான எண்ணங்கள், உங்களுக்கோ எனக்கோ நன்மை பயக்காது.


இந்தப்பதிவு, ஜோசியம் உண்மையாக இருக்குமோ, எவ்வளவு தூரம் நம்பலாம், எவ்வளவு பலிக்கும் அல்லது இது முற்றிலும் ஏமாற்றுக்காரர்களின் பணம் பறிக்கும் தந்திரமோ என்ற மனக்குழப்பத்தில் இருப்பவர்களுக்காகவே.


இப்படி மனக்குழப்பத்தில் இருப்பவர்களை நம்பித்தான் எல்லா அரைகுறை ஜோசியர்களும் தொழில் நடத்துகிறார்கள். பூரணமாக ஜோசியத்தில் நம்பிக்கை வைத்திருப்பவன் ஜோசியத்தை பூரணமாகக் கற்றவனைத்தெரிந்து வைத்திருப்பான். அவன் அவர்களிடம் போய்விடுவான். அந்த ஜோசியர்களும் அரைகுறை நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஜோசியம் பார்க்க மாட்டார்கள்.


மனக்குழப்பம் உள்ளவனை இந்த அரைவேக்காட்டு ஜோசியர்கள் பார்த்தவுடனே அடையாளம் கண்டு கொள்வார்கள். அவர்கள் முழிக்கும் முழி, காட்டும் தயக்கம், கூட வந்திருக்கும் ஆட்களின் பேச்சுக்கள் இவைகளை வைத்து, ஆஹா, இன்று நம் வலையில் நல்ல பட்சி மாட்டிட்டதையா என்று சந்தோஷப்பட்டு, தடபுடலாக வரவேற்பு கொடுப்பார்கள்.


முதலில் இவர்களுக்கு ஜோசியத்தில் உண்டான ஐயத்தைப்போக்க வேண்டும். அதில் இந்த ஜோசியர்கள் கை தேர்ந்தவர்கள். என்ன சொல்வார்கள் என்றால் -


"பாருங்க, லோகத்திலே ஜோசியத்தையே படிக்காமல் பொய்யாக ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். என்னைக்கூட நீங்கள் அப்படி நினைத்தால் நான் உங்களைத் தவறாக நினைக்கமாட்டேன், ஏனென்றால் இன்றைக்கு உலக்ம அப்படித்தான் இருக்கிறது. அன்றைக்குப் பாருங்கள் ......... (வந்திருப்பவர்களின் ஊருக்குப்பக்கத்து ஊர் பெரியதனக்காரர் - அவர் இவரிடம் ஜோசியம் பார்க்கவே வந்திருக்க மாட்டார், ஆனால் அவர் பெயரை இந்த ஜோசியர் எப்படியோ தெரிந்து வைத்திருப்பார்) எங்கெங்கேயோ போய் ஜோசியம் பார்த்து, பல்லாயிரம் ரூபாய்கள் செலவு செய்து பரிகாரங்கள், பூஜைகள் செய்து, பல கோயில்கள் போய் சாமி தரிசனம் எல்லாம் செய்தும் பலன் ஒன்றும் தெரியாமல் சோர்ந்து போய்,யாரோ சொல்லி, கடைசியாக என்னிடம் வந்தார்.அவருக்கு நான் சொன்ன ஜோசியத்தினால்தான் அவர் இன்றைக்கு ஓஹோன்னு இருக்கிறார். நீங்கள் அவரிடம் போய் என்னைப்பற்றி கேளுங்கள், அவருக்கு என்னுடைய ஜோசியத்தைப்பற்றி தெரியும்."


இவ்வாறு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவார். வந்தவர்கள் இவருடைய பேச்சில் மயங்கி ஆஹா, நாம் மிகச்சிறந்த ஒரு ஜோசியரிடம் வந்திருக்கிறோம் என்று நம்பி, அவரிடம் தங்கள் பிரச்சினைகள் பற்றி தேவைக்கு மேல் சொல்லி தங்கள் குடுமியை அவரிடம் கொடுத்து விடுவார்கள்.




பிறகு என்ன வழக்கம்போல் ஜாதகத்தைப்பார்த்து, ராகு கேதுவைப்பார்க்கிறான், கேது சனியைப்பார்க்கிறான், சனி உன்னைப்பார்க்கிறான், நீ என்னைப்பார்க்கிறாய், நான் உன் பர்ஸைப்பார்க்கிறேன், என்று அவனை பைத்தியம் பிடிக்குமளவிற்கு குழப்பி, அவன் பர்ஸை கணிசமாக இளைக்க வைத்து அனுப்பிவிடுவான். இவனும் ஆஹா, ஜோசியர் கெட்டிக்காரர் என்று பேசிக்கொண்டு ஊரில் போய் எல்லாரிடமும் தான் ஜோசியம் பார்த்த பிரலாபத்தைப் பீத்திக்கொள்வான்.


இன்னும் ஒரே பதிவு, ஜோசியத்தை முடித்துக் (விடுகிறேன்) கொள்கிறேன்.