வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 3


என்ன ஆயிற்று என்றால், அந்த இரண்டு வருடங்களில் மின்சார பம்ப்புகள் அறிமுகமாயிருந்தன. அதனால் பல சௌகரியங்கள். கவலை இறைக்க இரண்டு ஜோடி மாடுகள், இரண்டு ஆட்கள் தேவையில்லை. தண்ணீர், கவலையில் வருவதை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக வாய்க்காலில் வந்தது. அதிக பரப்பு நிலத்தில் நீர் பாய்ச்சி விவசாயம் செய்ய முடிந்தது. அதிக பணம் சேர்ந்தது. அதிகமான கிணறுகளும் வெட்டப்பட்டன. கிணறுகளின் ஆழமும் கூடிப்போய் விட்டது.
இந்த மாற்றம் இந்திய விவசாயத்தின் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனை ஆகும். விவசாயியின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி. விவசாயியின் வருமானம் பன்மடங்கு பெருகியது. ஆள் தேவை, கால்நடைகளின் தேவை குறைந்தது. கடின உழைப்பு குறைந்தது. நேரம் மிச்சமாகியது. இரவிலும் பாசனம் செய்ய முடிந்தது. அவனுடைய வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்தது. விவசாயி சுகவாசி ஆனான். எவ்வளவு சௌகரியங்கள்? பின்னால் ஏற்படப்போகும் ஆபத்துகளை உணராமல் விவசாயி இந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தான்.
இந்த இடத்தில் தமிழ்நாட்டின் விவசாயப் புள்ளி விவரங்களை கொஞ்சமாக தருகிறேன். பயப்படாதீர்கள். ஏறக்குறைய மொத்த இந்தியாவின் பல மாநிலங்களின் நிலையும் இதுதான். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர்கள். இதில் பாதியில் அதாவது ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதில் பாதி மானாவாரி விவசாயம். மிச்சம் பாதி பாசன விவசாயம். பாசனத்திற்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கிறதுஆற்றுப்பாசனம், குளத்துப்பாசனம், கிணற்றுப்பாசனம் ஆகியவையே அந்த மூன்று வகைகள். மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன. இப்படியாக கிணற்றுப்பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம் வழங்குகின்றது. தற்போதைய நிலவரப்படி மொத்த கிணறுகளின் எண்ணிக்கை 18 லட்சம்.
அதாவது ஒரு கிணறு 2/3 ஹெக்டேர் நிலத்தைத்தான் பாசனம் செய்கிறது. ஏறக்குறைய ஒண்ணேமுக்கால் ஏக்கர். இது ஒரு சராசரி கணக்கு. சில கிணறுகள் அதிக நிலத்தைப் பாசனம் செய்யலாம். அதே மாதிரி சில கிணறுகள் குறைவான நிலத்தைப் பாசனம் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் கிணறுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர, அவைகளினால் பாசனம் பெறும் நிலத்தின் அளவு கூடவில்லை.
இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
மின்சார மோட்டார் பம்பு செட்டுகளை உபயோகப்படுத்த ஆரம்பித்த புதிதில் விவசாயியின் வாழ்க்கை எப்படி ஒளிமயமாக மாறியது என்று பார்த்தோம். ஆனால் மனித மனம் விசித்திரமானது. முதலில் ஆசை தோன்றும். அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கடைசியில் பேராசையாக மாறும். பல ஆயிரம் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் கூட, இன்னும் சில ஆயிரம் கோடிகள் கிடைக்காதாவென்று அலைகிறார்கள். விவசாயியும் இதற்கு விலக்கில்லை. தண்ணீர் சௌகரியமாகக் கிடைக்க ஆரம்பித்ததும் தன் விவசாயத்தைப் பெருக்கினான். அதற்கு இன்னும் தண்ணீர் தேவைப்பட்டது. அதற்காக கிணற்றை ஆழப்படுத்தினான். ஒருவனைப்பார்த்து பலரும் இதையே செய்தார்கள். வசதி உள்ளவன் இன்னும் ஆழமாக வெட்டினான். இந்தச் சமயத்தில்தான் ஆழ்குழாய் கிணறுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாதாரண திறந்த வெளிக்கிணறுகளை மேலும் ஆழப்படுத்த முடியாததால் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகளுக்கு மாறினார்கள். முதலில் 500 அடி, பிறகு 600 அடி, இப்படியாக 1000, 1200 அடி ஆழமான ஆழ்குழாய் கிணறுகள் சர்வ சாதாரணமாய் விட்டன. இப்படியே ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கிணறுகளை ஆழப்படுத்தி, ஆழப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு போனார்கள். கிணற்று நீரின் தன்மையும் பல இடங்களில் மாறிப்போனது.
இந்த நீர்த் தேடலில் மக்கள் ஒரு தத்துவத்தை மறந்துவிட்டார்கள். நிலத்தடி நீர் என்பது ஒரு வற்றாத சுரங்கமல்ல. அது ஒரு பேங்க் சேமிப்பு கணக்கு மாதிரி. அந்தக்கணக்கில் எவ்வளவு பணம் போடுகிறோமோ அவ்வளவு பணம்தான் எடுக்கமுடியும். அதில் இருந்த முந்தைய சேமிப்பு முழுவதையும் எடுத்த பிறகு, புதிதாக எவ்வளவு போடுகிறோமோ அவ்வளவைத்தானே எடுக்க முடியும். தமிழ் நாட்டின் நிலத்தடி நீரின் நிலை இப்போது இந்த அளவிற்கு வந்துவிட்டது. விவசாயியின் நீர்ப்பேராசை நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

3 கருத்துகள்:

  1. விவசாயம் மனித இனத்தின் உயிர்நாடி என்பதை மறந்துக் கிடக்கிறது இன்றைய தலைமுறை. சுற்றுச் சூழலைக் காக்க மறந்து கிடக்கிறோம்.இதற்கான பிரதி பலன் நாளைய நாட்களில் தெரியும்.

    சிந்தனைக்குரிய பதிவுங்க ஐயா.

    (உங்களைக் கொஞ்சம் தொந்தரவு செய்ய விருப்பம். தொலைப்பேசி எண்ணை ramheartkannan@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி வையுங்கள்.)

    பதிலளிநீக்கு
  2. விவசாயியின் நீர்ப்பேராசை நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டது.

    ஐயா தங்கள் சொல்வது போல விவசாயி மட்டும், பேராசை படவில்லை எல்லோரும் அப்படித்தான் உள்ளனர். எண்டு அறிவு வரும் இந்த ஆட்களுக்கு,

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு