சனி, 13 ஆகஸ்ட், 2011

கல்யாண நிச்சயம் செய்தல்நிச்சியத்துக்கு முக்கியமான சொந்தபந்தங்களெயெல்லாம் உடாமெகூப்டோணுமுங்க. யாராச்சையும் உட்டுப்போட்டோமுன்னுவச்சுக்கோங்க, பெரிய வெவகாரம் ஆய்ப்போய்டுமுங்க.

நிச்சியம் எப்பவும் பொண்ணு ஊட்லதான் நடக்குமுங்கோ.அந்தக்காலத்துல நிச்சியம் சாயந்தரம்தான் நடக்குமுங்கோ.பொண்ணூட்டுக்காரங்களெல்லாம் நேரத்தோட வந்துருவாங்க.மாப்பிள்ள ஊட்டுக்காரங்களெல்லாம் ஒண்ணா சேந்து சொன்ன நேரத்துக்கு அரை மணி களிச்சு வந்து சேருவாங்க. ஏனுங்க லேட்டுன்னா, ஆமாங்க லேட்டாகிடுச்சுங்க அப்பிடீப்பாங்க.மாப்பிள்ள ஊட்டுக்காரங்கன்னாலே அப்படி கொஞ்சம் வெறப்பாத்தான் இருப்பாங்க. அவங்களயெல்லாம் வாங்கன்னு கேட்டு, வந்தவங்களுக்கெல்லாம் மொதல்லே குடிக்க தண்ணி கொடுத்து, அப்பறமா எல்லாரும் கைகால் களுவிட்டு ஊட்டுக்குள்ளாற போயி உக்காறதுக்கே அரை மணி நேரம் ஆகிப்போகுமுங்க.
ஆஜாரத்துல எல்லாரும் உக்காந்துக்குவாங்க. வண்ணானும் நாசிவப்பையனும் தவறாம இருக்கோணுங்க. வண்ணான் ஒரு தீப்பந்தம் புடிச்சுட்டு ஒரு ஓரமா நிப்பானுங்க. அது பகலாயிருந்தலும் சாங்கியத்துக்கு பந்தம் கட்டாயமா இருக்கோணுமுங்க. ஒரு ஓரமா கெளக்கெ பாத்து ஒரு சேரப்போட்டு அதுமேல ஒரு மாத்து விரிச்சிருப்பாங்க. பொண்ணுப்புள்ளய சீர்க்காரம்மா கூட்டிட்டு வந்து அந்தச்சேர்ல உக்கார வைக்குமுங்க.அந்தச் சேர்ருக்கு முன்னாடி ஒரு மாத்த விரிச்சு, அது மேல மாப்பிள்ள ஊட்டுக்காரங்க கொண்டு வந்த சீர் சாமான்களையெல்லாம் தட்டத்துல வச்சு வச்சிருப்பாங்க.என்னென்ன சீர் சாமானங்கன்னு சொல்றேன் கேட்டுக்குங்க.பொண்ணுக்கு ஒரு பட்டுச்சீலை, ஏதாச்சும் ஒரு நகை, வெத்திலை,பாக்கு, பூவு, பளம், ஏதாச்சும் பலகாரங்க ஒண்ணு இல்லேன்னா மூணு தட்டு, இவ்வளவுதானுங்க. அப்பறம் ஒரு புள்ளாரு புடிச்சு அது மேல ஒரு அருகம்பில்ல சொருகி வச்சிருப்பாங்க. ரெண்டு குத்து வெளக்கு வச்சு எண்ணை ஊத்தி பத்திவச்சி வச்சிருப்பாங்க.திண்ணீரு, சந்தனம், செகப்பு எல்லாமும் வச்சாருப்பாங்க.சீர்க்காரம்மா அந்த பட்டுச்சீல இருக்கிற தட்டத்தெ எடுத்து அந்தச்சீல மேல நாலு வெத்தலபாக்கு, கொஞ்சம் பூவு வச்சி ஓங்கிக்கொடுக்குமுங்க.
ஓங்கிக்கொடுக்கறதுன்னா என்னான்னா, அந்த தட்டத்தெ சீர்க்காரம்மா பொண்ணுப்புள்ள உக்காந்திருக்கிற சேருக்கு முன்னாலெ கெளக்குமானா நின்னு மூணு தடவை மேலும் கீளுமா ஆட்டுவாங்க. அதாவது அந்தச்சீலய சூரிய பகவானுக்கு அர்ப்பணிப்பதாக ஐதீகம். பொறவு திரும்பி பொண்ணப்புள்ளயப்பாத்து நின்னு அதேமாதிரி மூணு தடவை அந்த தட்ட மேலும் கீளும் ஆட்டி அதைப்பொண்ணு கையிலெ பொடுப்பாங்க. பொண்ணுப்புள்ள, சீர்க்காரம்மா கால்ல உளுந்து கும்புட்டு, அந்த தட்ட கைல வாங்கி பொண்ணுத்தொணைக்காரிகிட்ட குடுத்திடுமுங்க. அப்பறம் பொண்ணைக்கூப்பிட்டுட்டுப்போயி அந்தச்சீலயக்கட்டி கூட்டிட்டு வந்து திருப்பியும் அந்தச்சேர்ல உக்கார வைப்பாங்க.இதுக்கெல்லாம் நாசிவப்பையன் இப்படி இப்படி செய்யோணும்னு சொல்லிக்குடுப்பானுங்க.
அப்பறம் மாப்பிள்ள ஊட்டச்சேந்த ஒரு ஆம்பிள பூச பண்ணுவாரு.ஒரு தட்டத்துல கொஞ்சம் திண்ணீரப்போட்டு அதும்பேர்லகப்பூரத்தை வச்சு, அதப்பத்தி வச்சு புள்ளாருக்கு காட்டிட்டுபொண்ணுப்புள்ளக்கி காட்டுவாருங்க. பொண்ணும் ரொம்பபயபக்தியா கும்பிட்டுக்குமுங்க. அப்பறம் எல்லாரும் சாமிகும்பிட்டுட்டு திண்ணீர எடுத்து நெத்தியில வச்சுக்குவாங்க.அப்பறம் கல்யாணத்துக்கு குறிச்சு வச்ச தேதியகல்யாணப்பத்திரிக்கையாட்டம் வாசகம் எளுதி அதஎல்லோருக்கும் கேக்கறமாதிரி படிப்பாங்க.
பொண்ணு கையில ஒரு தேங்காய், நாலு வெத்தல, நாலு பாக்குகொடுத்து ரெண்டு கைலயும் சேத்து வச்சிக்க பண்ணுவாங்க.அப்பறம்தான் முக்கியமான சீருங்க, அதாவது வெத்தலபாக்குமாத்தறது. பொண்ணு ஊட்டு தாயாதி ஒருத்தரு, மாப்பிள்ள ஊட்டுதாயாதி ஒருத்தரு பொண்ணுக்கு முன்னாடி நின்னுக்குவாங்க.ரெண்டு பேர் கையிலும் வெத்தல பாக்கு வச்சிருப்பாங்க. பொண்ணுஊட்டுக்காரரும் மாப்பிள்ள ஊட்டுக்காரரும் அவங்கவங்க கொலத்தமொதல்லெ சொல்லுவாங்க. பொறவு பொண்ணு ஊட்டுக்காரருகொடுத்தோம் அப்படீன்னு சொல்லி வெத்தலபாக்க மாப்பிள்ளஊட்டுக்காரங்க கிட்ட கொடுப்பாருங்க. அவரு கொண்டோம்அப்படீன்னு சொல்லி அந்த வெத்தலபாக்கெ வாங்கிட்டு தன்கையில இருக்குற வெத்தலபாக்கெ அவரு கையிலெகொடுப்பாருங்க. இப்படி மூணு தடவெ கொண்டோம்,கொடுத்தோம்னு சொல்லி, வெத்தலபாக்கு மாத்திப்பாங்க.இப்பத்தான் நிச்சியம்பண்ணி முடிச்சதா கணக்குங்க. இப்படிசபையில வெத்தல பாக்கு மாத்தியாச்சுன்னா அப்பறம் ரெண்டுஊட்டுக்காரங்களும் பேச்சு மாறமாட்டாங்க, மாறக்கூடாதுங்க.அதுதான் நடமொறைங்க.
அப்பறமா பொண்ணுப்புள்ளய உள்ள கூட்டீட்டு போய்டுவாங்க.அப்பறம் எல்லாருக்கும் விருந்து சாப்பாடு நடக்கும். நிச்சியம்முடிஞ்ச பொறகுதான் மாப்பிள்ள ஊட்டுக்காரங்க பொண்ணு ஊட்லசாப்பிடுவாங்க. நிச்சியம் நடக்கற அன்னிக்கு மாப்பிள்ள பையன்பொண்ணு ஊட்டுக்கு வர வழக்கம் அப்பல்லாம் இல்லீங்க.
இப்படி நிச்சயம் முடிஞ்ச நாள்ல இருந்து ரெண்டுஊட்டுக்காரங்களும் தீட்டு ஊட்டுகளுக்கெல்லாம் போகாமஇருப்பாங்க.
அடுத்து உப்பு, ஜவுளி வாங்கறது எப்படீன்னு பாக்கலாங்க.
2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா உங்களால் புதிய புதிய நடைமுறைகளை தெரிந்து கொண்டேன்..எம்மிடம்தான் எவ்வளவு நடைமுறைகள்.. எவ்வளவு பழக்க வழக்கங்கள்.. ஆச்சரியமையா..!!

    பதிலளிநீக்கு