புதன், 10 ஆகஸ்ட், 2011

பரளிக்காடு - ஒரு நாள் சுற்றுலா


பரளிக்காடு சுற்றுலாவைப் பற்றி நிறைய பதிவர்கள் தங்கள் பதிவுகளில் எழுதி விட்டார்கள். ஒரிஜினல் கோவைவாசியான நான் அதைப் பற்றி எழுதாவிட்டால் என் தன்மானம் என்ன ஆவது? ஆகவே கடந்த 7-8-2011 ஞாயிற்றுக்கிழமை, நானும் இன்னும் மூன்று நண்பர்களுமாக போய்வந்தோம்.


போவதற்கு முன் அங்குள்ள வன அதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிடவேண்டும்.
தொடர்புக்கு; திரு.ஆண்டவர், போன்- 90470 51011.

சனி, ஞாயிறுகளில் சுமார் 100 பேர் வரைக்கும் வருகிறார்கள். மற்ற நாட்களில் போக வேண்டுமென்றால் குறைந்தது 30 பேராவது போனால்தான் அவர்கள் தேவையான உணவு மற்றும் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யமுடியும்.

அங்குள்ள ஆதிவாசிகளைத் திரட்டி ஒரு சுய உதவிக்குழு அமைத்து அதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வன இலாக்கா அலுவலர்கள் இந்த முயற்சிக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

கோவையிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் பரளிக்காடு இருக்கிறது. பில்லூர் அணைக்கட்டின் நீர்ப்பரப்புப் பகுதியின் ஆரம்பப் பகுதி. இங்கிருந்து பில்லூர் அணை நன்றாகத் தெரிகிறது. காலை 7 மணிக்கு கோவை காந்திபுரம் பஸ் ஸ்டேண்டிலிருந்து பரளிக்காட்டிற்கு அரசு பஸ் இருக்கிறது. சரியாக 10 மணிக்கு பரளிக்காட்டுக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள்.


நாங்கள் எங்கள் காரில் சென்றோம். வழி: காரமடை-வெள்ளியங்காடு-அத்திக்கடவு-முள்ளி-பரளிக்காடு.  வெள்ளியங்காட்டிற்கு அப்புறம் ரோடு கொஞ்சம் சுமார்தான். மலைப்பாதை. சிங்கிள் ரோடு. மலைப்பாதைகளில் வாகனம் ஓட்டி நன்கு அனுபவம் உள்ளவர்களினால்தான் இந்த ரோட்டில் வாகனம் ஓட்ட முடியும். கொண்டை ஊசி வளைவுகள் திடீரென்று முன் அறிவிப்பு இல்லாமல் தோன்றும். போர்டுகள் கிடையாது.

வழியில் இரண்டு செக் போஸ்ட்டுகள் இருக்கின்றன. அங்கு விவரங்கள் சொன்னால் விட்டுவிடுகிறார்கள்.


இப்படிப்பட்ட ரோட்டில் எங்கள் காரை யார் ஓட்டினார்கள் என்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருப்பீர்கள். இதோ அந்த டிரைவர்.


தன்னடக்கம் காரணமாக அது யார் என்று சொல்லாமல் விடுகிறேன்.

காலை 10 மணிக்குள் அங்கு இருக்கவேண்டும். பத்தரை மணிக்கு சூடாக சுக்குக் காப்பி கோடுக்கிறார்கள். அதன் பிறகு பரிசல் சவாரி.

இந்த நீர்ப் பரப்பில் சுற்றுலாப் பயணிகளை பிளாஸ்டிக் பரிசலில் கூட்டிக்கொண்டு ஒன்றரை மணி நேரம் சுற்றிக் காண்பிக்கிறார்கள். ஒரு பரிசலுக்கு நான்கு பேர். பரிசலில் போகும்போது லைஃப் ஜாக்கெட் கண்டிப்பாக அணிந்து கொள்ளவேண்டும்.



பரிசலில் போகும்போது இயற்கையை ஆசை தீர அனுபவிக்கலாம்.


பரிசல் சவாரி முடிந்ததும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுகிறோம். இங்கு உட்காருவதற்கு நாற்காலிகளும் படுத்துக்கொள்வதற்கு கயிற்றுக் கட்டில்களும் ஊஞ்சல்களும் இருக்கின்றன. நான்கு சுவர்களுக்குள்ளேயே வாழ்க்கையைக் கழிக்கும் நகரவாசிகளுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும்.


ஒன்றரை மணிக்கு சாப்பாடு வந்து விடுகிறது. சப்பாத்தி-குருமா, வெஜிடபிள் பிரியாணி-தயிர்ச்சட்னி, ஒரு அசைவ குழம்பு, தயிர் சாதம்-ஊறுகாய், சிப்ஸ், ராகிக் களி-கீரை மசியல், இவ்வளவுதான் மதிய உணவு. கடைசியாக மலையிலேயே விளைந்த கதலி வாழைப் பழம். பரிசலில் போவதற்கும் உணவிற்கும் சேர்த்து 350 ரூபாய் கட்டணம்.

ஒரு வெட்டு வெட்டி விட்டுப் படுத்தால் மாலை எப்படியும் யானை வந்து எழுப்பிவிடுமாம். நாங்கள் யானைகளை ஏற்கனவே பார்த்திருப்பதால், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து புறப்பட்டு விட்டோம். 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.




18 கருத்துகள்:

  1. எப்படியும் யானை வந்து எழுப்பிவிடுமாம்.

    நாங்கள் யானைகளை ஏற்கனவே பார்த்திருப்பதால், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து புறப்பட்டு விட்டோம்
    //

    ஓவர் குசும்புண்ணே உங்களுக்கு..
    படிச்சிட்டு இருக்கும்போது.. இந்த வரிகளைப்பார்த்து.. சிரித்துவிட்டேன்...

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா.
    நல்ல விபரங்கள். உங்கள் மனோதிடத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் மனப்பூர்வ பாராட்டுக்கள்.
    இன்னும் நிறைய எழுதுங்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையாய் பரளிக்காட்டிற்கு அழைத்துச் சென்ற பகிர்வுக்குப் பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
  4. அண்ணா, அடுத்த விசுக்கா ஒரு எட்டுப் போய்ட்டு வாறதுதானுங்...

    பதிலளிநீக்கு
  5. //பழமைபேசி said...
    அண்ணா, அடுத்த விசுக்கா ஒரு எட்டுப் போய்ட்டு வாறதுதானுங்...//

    கண்டிப்பா பார்த்துடோணுகுங்...

    பதிலளிநீக்கு
  6. பட்டாபட்டி.... said...
    எப்படியும் யானை வந்து எழுப்பிவிடுமாம்.

    நாங்கள் யானைகளை ஏற்கனவே பார்த்திருப்பதால், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து புறப்பட்டு விட்டோம்
    //

    ஓவர் குசும்புண்ணே உங்களுக்கு..
    படிச்சிட்டு இருக்கும்போது.. இந்த வரிகளைப்பார்த்து.. சிரித்துவிட்டேன்...//

    ஏந்தம்பி, உண்மையைச் சொன்னா உங்களுக்கு குசும்பா படுதுங்களா? அநியாய உலகமுங்க இது.
    உங்களை உங்க ஊர்ல வந்து கவனிச்சுக்கிறனுங்க.

    பதிலளிநீக்கு
  7. //Rathnavel said...
    அருமை ஐயா.
    நல்ல விபரங்கள். உங்கள் மனோதிடத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் மனப்பூர்வ பாராட்டுக்கள்.
    இன்னும் நிறைய எழுதுங்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. இப்பவே பாக்கணும் போலதான் இருக்கு ...பட் லாங் டிஸ்டன்ஸ் ...சமயம் கிடைக்கும்போது வருகிறேன் ...அந்த டிரைவர் நம்ம கந்தசாமி சார் மாதிரில்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  9. அருமை...
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
  10. //koodal bala said...
    இப்பவே பாக்கணும் போலதான் இருக்கு ...பட் லாங் டிஸ்டன்ஸ் ...சமயம் கிடைக்கும்போது வருகிறேன் ...அந்த டிரைவர் நம்ம கந்தசாமி சார் மாதிரில்லா இருக்கு//

    நீங்க நெஜமாவே கெட்டிக்காரங்கதான் கூடல் பாலா, போட்டோ புதிரை இவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சிட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  11. நாங்க கூட உங்க கூடவே வந்தோமே பாத்தீங்களாசார்
    அவ்வளவு ய்தார்த்த்மான எழுத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பரளி பயணம் பற்றிய அருமையான பதிவு, இது போன்ற பயணங்கள் தான் நமக்கு நகர வாழ்க்கையிலிருந்து சற்று ஆறுதலையும், மனதிற்கு அமைதியையும் தருகிறது,
    பரிசலில் செல்ல எவ்வளவு கட்டணம் என்று எனக்கு தெரிய படுத்தினால் பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
  13. அடுத்த கோவை பயணத்தின் போது நிச்சயம் போக வேண்டும் என்கிற எண்ணத்தை வரவைத்தது உங்கள் பகிர்வு.....

    பதிலளிநீக்கு
  14. பொள்ளாச்சி பக்கமும் பல ஏரியா இருக்கு சுத்தி பாக்க....
    உங்க ஒரு நாள் சுற்றுலா அருமை,,,,
    அதென்ன ராய் களி கேட்கும் போதே அந்த காலம் ஞாபகம் வருது......

    பதிலளிநீக்கு
  15. //Lakshmi said...
    நாங்க கூட உங்க கூடவே வந்தோமே பாத்தீங்களாசார்
    அவ்வளவு ய்தார்த்த்மான எழுத்துக்கள்.//

    நன்றி, லக்ஷ்மி அவர்களே.

    பதிலளிநீக்கு
  16. //! ஸ்பார்க் கார்த்தி @ said...
    பரளி பயணம் பற்றிய அருமையான பதிவு, இது போன்ற பயணங்கள் தான் நமக்கு நகர வாழ்க்கையிலிருந்து சற்று ஆறுதலையும், மனதிற்கு அமைதியையும் தருகிறது,
    பரிசலில் செல்ல எவ்வளவு கட்டணம் என்று எனக்கு தெரிய படுத்தினால் பரவாயில்லை.//

    பதிவில் கட்டணத்தை எழுத மறந்து விட்டது. இப்போது சேர்த்து விட்டேன். பரிசலுக்கும் உணவுக்கும் சேர்த்து மொத்தம் 350 ரூபாய். பரிசலோட்டிக்கும், வன அலுவலருக்கும் மனம் போல் ஏதாவது டிப்ஸ் கொடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  17. //வெங்கட் நாகராஜ் said...
    அடுத்த கோவை பயணத்தின் போது நிச்சயம் போக வேண்டும் என்கிற எண்ணத்தை வரவைத்தது உங்கள் பகிர்வு.....//

    வாங்க நாகராஜ், நானே கூட்டிக்கோண்டு போகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. //!! அய்யம்மாள் !! said...
    பொள்ளாச்சி பக்கமும் பல ஏரியா இருக்கு சுத்தி பாக்க....
    உங்க ஒரு நாள் சுற்றுலா அருமை,,,,
    அதென்ன ராய் களி கேட்கும் போதே அந்த காலம் ஞாபகம் வருது......//

    திருமூர்த்தி மலை, டாப்ஸ்லிப், ஆளியாறு அணை, பாலாஜி கோவில், இப்படி பல இடங்கள் பொள்ளாச்சியைச் சுற்றி இருக்கின்றன. ஆனால் அங்கெல்லாம் ராய்க்களி கிடைப்பதில்லையே?

    பதிலளிநீக்கு