வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 7



இருந்தாலும் என்றாவது ஒரு நாள் திடீரென்று எல்லோருக்கும் ஞானோதயம் வரலாம் இல்லையா? அந்த நாளில் என்னென்ன செய்யலாம் என்று இன்றே திட்டமிடல் அவசியம் அல்லவா? அதற்காகத்தான் கீழே உள்ள உத்திகள்.
நிலத்தடி நீரை சிக்கனமாக எவ்வாறு உபயோகிக்கலாம் என்று பார்க்கலாம்..

1.   கிணறுகள் வெட்டுவதற்குக் கட்டுப்பாடு விதித்தல்.

இது தனி நபர் உரிமையில் தலையிடுவது போல் முதலில் தோன்றும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டுத் தென்னை மரம் ஒன்று அடுத்த வீட்டு ஓரத்தில் இருக்கிறது. சிறிய மரம். காய்கள் நிறைய இருக்கிறது. எட்டிப் பறித்து விடலாம். அந்த மரத்திலிருந்து ஒரு தேங்காயை அடுத்த வீட்டுக்காரர் எட்டிப் பறித்துக் கொள்கிறார். தென்னை மரம் வைத்தவர் சும்மா இருப்பாரா? ஏன் என் மரத்திலிருந்து தேங்காயைப்பறித்தீர்கள் என்று கேட்க மாட்டாரா?
அப்படிக்கேட்டால் அது தனி நபர் சுதந்திரத் தலையீடு என்று சொல்வீர்களா? மாட்டீர்கள். ஏன் என்றால் இந்த இடத்தில் மரத்தின் சொந்தக்காரர் யாரென்ற தெளிவு இருக்கிறது. ஆனால் இதைப்பாருங்கள். நிலத்தடி நீர் எல்லா நிலங்களுக்கு கீழும் பரந்திருக்கிறது. அது யாருக்குச்சொந்தம் என்று வரையறுக்கப் படவில்லை. நியாயமாக அது ஒரு பொதுச்சொத்து. அதைப் பயன்படுத்துவதில் ஒரு பொது நியதி நிர்ணயிக்கப்படவேண்டும். ஒருவருக்கு வசதி இருக்கிறது என்பதால் அவருடைய நிலத்தில் ஆழமாக ஒரு போர் போட்டு, மற்ற எல்லோருடைய நிலத்தின் கீழ் உள்ள நீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்வது எந்த விதத்தில் நியாயமாகும்?
ஆனால் இன்றுள்ள சமுதாயத்தில் இத்தகைய வாதங்களுக்கு இடம் இல்லை என்பது ஒரு வருந்தத்தக்க நிலையாகும்.

2.   கம்யூனிடி கிணறுகள் அதாவது சமுதாயப் பொதுக் கிணறுகள்.

தனி நபர்கள் ஆதிக்கத்தினால் சமுதாய பொதுச்சொத்தான நிலத்தடி நீரின் பயன்கள் சிறு குறு விவசாயிகளுக்குப் போய்ச் சேருவதில்லை என்பதால் அரசே முன் வந்து சில இடங்களில் பரீட்சார்த்தமாக சமுதாயப் பொதுக் கிணறுகள் வெட்டினார்கள். இவை அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான பொதுச்சொத்தாக கருதப்படும். அவைகளிலிருந்து எடுக்கப்படும் நீர் அந்த விவசாயிகளுக்கே சேரும். அந்தக்கிணறுகளைப் பராமரித்து அவைகளிலிருந்து எடுக்கப்படும் நீரைப் பங்கிட்டு உபயோகப்படுத்துவது ஆகிய நடைமுறைப் பொறுப்புகள் அந்த விவசாயிகளையே சேர்ந்தவை. இதற்கு ஆகும் செலவுகளை அரசு பாதி மான்யமாகவும் பாதி கடனாகவும் கொடுத்தது. அந்தப் பகுதி விவசாயிகளுக்கு இந்த கிணறுகளைப் பராமரித்து அவைகளிலிருந்து வரும் நீரை எவ்வாறு உபயோகப்படுத்துவது போன்ற நடைமுறைகளை, நல்ல பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது
இது ஒரு நல்ல சமுதாயத்திட்டம். ஆனால் நம் மக்கள் இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் இது ஒரு பொதுச் சொத்துதானே, நமக்கென்ன ? என்கிற மனப்பான்மைதான். இது நம் அரசியல்வாதிகள் சொல்லிக்கொடுத்த பாடம்தான். எந்தப்போராட்டம் என்றாலும் சேதப்படுத்துவது அரசு பஸ்களைத்தான். அது தேச மக்களின் பொது சொத்தாயிற்றே, நமக்குத்தானே அது பயன்படுகிறது, அதை சேதப்படுத்தலாமா? என்ற உணர்வே மக்களுக்கு அறவே இல்லாமற்போனது. இந்த மனப்பான்மையின் காரணமாகவே ஏறக்குறைய அனைத்து சமுதாயப் பொதுக்கிணறுகளும் சரிவரப் பராமரிக்கப்படாமல் தூர்ந்து போயின.

3.   நீர்த் தேவை குறைவான பயிர்களைப்பயிரிடுதல்.

நெல், வாழை, கரும்பு, மஞ்சள், போன்ற பயிர்களுக்கு நீர்த்தேவை அதிகம். சோளம், கம்பு, போன்ற பயிர்களுக்கு நீர்த்தேவை குறைவு. நிலத்தடி நீரை உபயோகிக்கும்போது நீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடுதல் நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்க முடியும்.

வளர்ந்த நாடுகளில் நாட்டின் மொத்தத் தேவையை கருத்தில் கொண்டு எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன பயிர்கள் பயிரிடலாம் என்று கட்டுப்பாடு செய்கின்றார்கள். அந்த நாடுகளில் விவசாயப் பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயித்து விடுவதாலும், விவசாயிகளுக்கு உழைப்புக்குத் தகுந்த லாபம் கிடைப்பதாலும், இந்தக் கட்டுப்பாட்டுக்கு விவசாயிகளின் மத்தியில் எந்த எதிர்ப்பும் கிளம்புவதில்லை.  


4.   நீர்த் தேவை குறைக்கும் விவசாய உத்திகள்.

விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் பயிர்களின் நீர்த்தேவையைக் குறைக்கும் பல உத்திகளை ஆராய்ந்து கண்டு பிடிக்கிறார்கள். உதாரணமாக, தென்னைக்கு முன்பெல்லாம் வயல் முழுவதும் நீர் பாய்ச்சுவார்கள். அது தேவையில்லை, தென்னை மரத்தின் வேர்ப்பகுதியில் ஒரு வட்டப்பாத்தி அமைத்து அதற்கு மட்டும் தீர் பாய்ச்சினால் போதும் என்று ஆராய்ச்சிகள் கண்டு பிடித்தன. இப்போது ஏறக்குறைய எல்லா விவசாயிகளும் இந்த முறையில்தான் நீர் பாய்ச்சுகிறார்கள்.

இப்படி பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. விவசாயிகளும் அவைகளைக் கடைப்பிடித்து பயன் பெறுகிறார்கள்.

5.   மல்ச்சிங்க் அல்லது மண்ணின் மேற்பரப்பை மூடி வைத்தல்.

நிலத்திற்கு நீர் பாய்ச்சியவுடன் அந்த நீரானது மண்ணில் சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு நனைக்கும். அந்த ஆழத்திற்குள்தான் பெரும்பாலான விவசாயப்பயிர்களின் வேர்கள் இருக்கின்றன. நீர் பாய்ச்சி முடித்தவுடன் மண்ணில் சேர்ந்த நீரானது செடிகளின் வேர்களினால் உறிஞ்சப்படுகின்றது. இது தவிர கணிசமான நீர் ஆவியாகவும் செல்கிறது. இந்த ஆவியாகும் செயல் மேல் மண்ணின் மூலமாகவே நடக்கிறது.
இவ்வாறு நீர் ஆவியாதலைக் குறைத்தால் மண்ணில் ஈரம் இன்னும் சிறிது நாட்களுக்கு இருக்கும். அதனால் பாசனம் செய்யவேண்டிய காலம் நீட்டிக்கும் அதாவது பயிர்களின் நீர்த்தேவை குறையும். இதற்கு மண்ணின் மேற்பரப்பில் பண்ணையில் கழிவாகும் இலைதழைகளை பரப்பி வைத்தால் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் ஆவியாவது குறையும். இந்த உத்தியையும் பெரும்பாலான விவசாயிகள் தென்னை, திராக்ஷை போன்ற பயிர்களுக்கு கடைப்பிடித்து வருகிறார்கள்.

6.   சொட்டு நீர்ப்பாசன முறைகள்.


இஸ்ரேல் நாட்டில் ஒரு தண்ணீர் விநியோக இஞ்சினீயர் அகஸ்மாத்தாக கண்டு பிடித்த முறைதான் சொட்டு நீர்ப்பாசன முறை. அவருடைய அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு ஆலிவ் மரம் மற்ற மரங்களை விட மிகவும் அதிகமாக வளர்ந்திருந்தது. அது எப்படி என்று அவர் ஆராய்ந்தபோது அந்த மரத்திற்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு தண்ணீர்க் குழாயில் ஒரு லேசான கசிவு இருந்திருக்கிறது. அந்தக்கசிவு நீர் அந்த மரத்தின் வேர்களை எப்போதும் ஈரமாகவே வைத்திருந்திருக்கிறது. இதுதான் அந்த ஆலிவ் மரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அவர் யூகித்தார். இந்த யூகத்தை உறுதிப்படுத்த அவர் இன்னும் சில மரங்களுக்கு இதே மாதிரி குழாய்கள் அமைத்து அந்த மரங்களின் வேர்ப் பகுதியில் நீர் கசியுமாறு ஏற்பாடு செய்தார். சில வருடங்களில் அந்த மரங்களும் மற்ற மரங்களை விட அதீத வளர்ச்சி பெற்றன. இதை அவர் விவசாய விஞ்ஞானிகளுடன் விவாதித்து இந்த சொட்டு நீர்ப்பாசன முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். உலகில் பல கண்டுபிடிப்புகள் இந்த மாதிரி அகஸ்மாத்தாகக் கண்டு பிடிக்கப்பட்டவைகள்தான்.

இந்த சொட்டு நீர்ப்பாசன முறைகள் இஸ்ரேலில் முறைப்படுத்தப்பட்டு, பின் மற்ற நாட்டுகளுக்கும் பரவின. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டுக்குச் சென்ற நம் நாட்டு விஞ்ஞானி டாக்டர் சிவனப்பன் என்பவர் இந்த முறைகளைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டுவந்து தமிழ்நாட்டில் பரப்ப மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டார். மெதுவாக இந்த முறையானது பரவி இப்போது பல பயிர்களுக்கு, குறிப்பாக தென்னை, திராக்ஷை போன்ற பாசனம் செய்ய கடைப்பிடிக்கப் படுகிறது. இதன் நன்மைகளை உணர்ந்து அரசும் இந்த முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு அதற்காகும் செலவில் பாதிக்கு மேல் மான்யம் வழங்குகிறது.

7.   நீர் உபயோகத்திற்கு கட்டுப்பாடுகள்.

இனி சொல்லப்போகும் உத்திகள் கொள்கை ரீதியான முடிவுகள் ஆகும். இதை அமல்படுத்த அரசு தேவையான கொள்கை முடிவுகள் எடுக்கவேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் நிலத்தடி நீரின் அளவைப் பொருத்துத்தான் அந்தப்பகுதியில் பொருத்தமான பயிர்கள் பயிரிடவேண்டும். இதற்கு அந்தப் பகுதி விவசாயிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். ஆனால் இன்று நிலவும் பொருளாதார, சமூக, அரசியல் சூழ்நிலையில் இது சாத்தியமாகுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாய் நிற்கிறது.

8.   தொழில் நுட்ப வழிகாட்டுதல்.

விவசாய நீர்ப்பாசன முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்து விவசாய ஆராய்ச்சி நிலயங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. அவைகளின் பலனாக பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளை முறையாக விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

9.   கட்டண முறை நீர் விநியோகம்.

விவசாயிகளுக்கு நீலத்தடி நீர் என்பது ஒரு வற்றாத சுரங்கமல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தண்ணீர் என்பது ஒரு இலவசமாகவும் அபரிமிதமாகவும் கிடைக்கக் கூடிய பொருள் என்கிற எண்ணத்தை அனைவரும் மறக்கவேண்டும். குடிப்பதற்கான தண்ணீரை விலைக்கு வாங்கப் பழகி விட்டோம். குடியிருப்புப் பகுதிகளில் புழங்குவதற்கான நீருக்கு விலை கொடுக்கிறோம். அது போல விவசாயத்திற்கு வேண்டிய நீரையும் கட்டண முறையில் வாங்க வேண்டிய நிலையை உருவாக்கினால் நீரைக் கட்டுப்பாடாக உபயோகிக்கும் பழக்கம் உருவாகும்.
சொட்டு நீர்ப்பாசனம் பிரபலமாக இருக்கும் இஸ்ரேலில் ஒருவர் புதிதாக விவசாயப் பண்ணை ஆரம்பிக்க வேண்டுமென்றால், அவர் தேவையான நிலம் வைத்திருக்கவேண்டும். அந்த நிலத்தில் சொட்டுநீர்ப் பாசனத்திற்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களும் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்தால், அவர்கள் நிலத்தை ஆய்வு செய்து, அனைத்துப் பணிகளும் முடித்து வைத்திருந்தால் தண்ணீர் கனெக்ஷனுக்கு அனுமதி வழங்குவார்கள். நம் ஊரில் வீட்டு பைப் கனெக்ஷனுக்கு வைப்பது போல் ஒரு மீட்டரும் வைத்து விடுவார்கள். தண்ணீர் இவ்வளவுதான் உபயோகிக்கலாம் என்ற கட்டுப்பாடும் விதித்து விடுவார்கள். அந்த தண்ணீருக்குள் உங்கள் வசதிப்படி விவசாயம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீரை உபயோகித்திருந்தால் தண்ணீர் கனெக்ஷனை ரத்து செய்து விடுவார்கள்.
அங்கு விவசாயிகளுக்குள்ள ஒரு சௌகரியம் என்னவென்றால் அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு ஏற்றுமதி மார்க்கெட் இருக்கிறது. அதனால் நல்ல விலை கிடைத்து விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக இருக்கிறது. நம் ஊரில் தக்காளி ஒரு சமயத்தில் முப்பது ரூபாய்க்கும் பின் ஒரு சமயத்தில் மூன்று ரூபாய்க்கும் விற்கிறது. அதிலும் வியாபாரிகள் எடுத்துக்கொண்டது போக மீதி பாதிதான் விவசாயிக்குப் போய்ச் சேருகிறது.
இந்த நிலை மாறவேண்டும். விவசாயம் ஒரு பெரும்பான்மையான தொழிலாக இருக்கும் ஒரு நாட்டில் இந்த நிலை இருப்பது மிகவும் வேதனையானது.

7 கருத்துகள்:

  1. இங்கே அமீரகத்திலும் விவசாயிகளுக்குப் பல சலுகைகள், வசதிகள்.. முக்கியமாக விளைபொருட்களை அரசே எடுத்துக் கொள்கிறது.

    நிலத்தடி நீர் குறித்த உங்களின் இந்த தொடர் கட்டுரை நிறைந்த செய்திகளுடன், மிகப் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் தேவையான பகிர்வு.... அரசாங்கமும் மக்களும் சேர்ந்து செயல்படுத்த வேண்டிய விஷயங்கள்....

    பதிலளிநீக்கு
  3. பயன்னுள்ள கட்டுரை நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நிலத்தடி நீர் கட்டுரை...அருமை.. தொடருங்கள்...தொடருகிறேன்....

    பதிலளிநீக்கு
  5. நம் ஊரில் தக்காளி ஒரு சமயத்தில் முப்பது ரூபாய்க்கும் பின் ஒரு சமயத்தில் மூன்று ரூபாய்க்கும் விற்கிறது. அதிலும் வியாபாரிகள் எடுத்துக்கொண்டது போக மீதி பாதிதான் விவசாயிக்குப் போய்ச் சேருகிறது.ஃஃ

    இதனால் தான் விவசாயிகள் இருக்கும் நிலங்களை விற்றுவிட்டு போலி பணக்காரவாழ்க்கை வாழ விரும்புகின்றார்கள். அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விளைநிலங்கள் வீடுகளாவதை தடுக்க முடியும்.அருமையான கட்டுரை சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் தேவையான பகிர்வு.... அரசாங்கமும் மக்களும் சேர்ந்து செயல்படுத்த வேண்டிய விஷயங்கள்....

    பதிலளிநீக்கு