திங்கள், 13 பிப்ரவரி, 2012

புத்தகங்கள் ஒருவனின் நண்பர்கள் - பாகம் 2



என் வீட்டுக்குப் பக்கத்திலேயே என்னுடைய தமிழ் ஆசிரியரும் குடியிருந்தார். அவரிடம் என்னுடைய தேவையைச் சொன்னவுடன் லைப்ரரியில் சேர்வது நல்ல விஷயம்தானே, நானே ஹெட்மாஸ்டரிடம் சொல்லி கடிதம் வாங்கித்தருகிறேன் என்று சொல்லி அப்படியே செய்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு லைப்ரரியில் சேர்ந்தேன்.

தினமும் ஸ்கூல் விட்டவுடன் லைப்ரரிக்குச் சென்று ஒரு நாவலை எடுத்து வருவேன். அங்குதான் எனக்கு ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், வி..காண்டேகர் ஆகியோர் பரிச்சயமானார்கள். ஏறக்குறைய அவர்கள் எழுதிய அனைத்து நாவல்களையும் படித்துவிட்டேன்.

படிப்பது என்றால் எப்படி தெரியுமா? புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 500-600 பக்கங்கள் இருக்கும். லைப்ரரியிலிருந்து எடுத்து வீட்டுக்கு வந்தவுடன் படிக்க உட்கார்ந்தால் நாவலை முடித்துவிட்டுத்தான் தூங்கச் செல்வேன். தமிழ் நாவல்களை மணிக்கு சுமார் 130 பக்கங்கள் படிப்பேன். பிற்காலத்தில் ஆங்கில நாவல்கள் படிக்கும்போது இந்த வேகம் மணிக்கு 100 பக்கங்கள் ஆகக் குறைந்துவிட்டது. காரணம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மனதிற்குள்ளேயே மொழிபெயர்த்து மூளைக்குள் செலுத்தவேண்டும்.

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார் இருவரும் எழுதியவை அனைத்தும் துப்பறியும் கதைகள். கொலை, கொள்ளை ஆகியவை நிறைய இருக்கும். அவைகளைப் படித்துவிட்டு பல நாட்கள் கனா கண்டு உளறியிருக்கிறேன். பிற்காலத்தில்தான் அவை அனைத்தும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளின் மொழிபெயர்ப்பு என்று தெரிய வந்தது.

வை.மு.கோதைநாயகி அம்மாளின் கதைகள் ஏறக்குறைய ஒரே வார்ப்பில் உருவானவை. அந்தப் புத்தகங்கள் ஒரு தனி சைசில் அதாவது புல்ஸ்கேப் மாதிரி, சுமார் 200 பக்கங்கள் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் குடும்பக் கதைகள்தான். கதாநாயகி குடும்பத்தில் படும் கஷ்டங்களை படிப்பவர் மனது உருகும்படி எழுதியிருப்பார்கள். கதையின் 190 வது பக்கம் வரை கதாநாயகியின் கண்ணீர்தான். கடைசி 10 பக்கத்தில் நிலைமை தலைகீழாக மாறி நாயகியும் நாயகனும் இன்பமாக வாழ்ந்தார்கள் என்று கதை முடியும்.

அந்தக்காலத்தில் பிரபலமாக இருந்த மாத, வாரப் பத்திரிக்கைகள்கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தினமணி கதிர், மஞ்சரி, கல்கண்டு முதலானவை. எல்லாப் பத்திரிக்கைகளிலும் தரமான சிறுகதைகளும், பிரபல ஆசிரியர்கள் எழுதும் தொடர்கதைகளும் மிகவும் சுவாரஸ்யமானவை. இதுதான் கல்கி, தேவன், லக்ஷ்மி, நாடோடி, கி.வா.., அகிலன், எஸ்..பி., சுஜாதா, சாண்டில்யன் ஆகியோரின் கதைகளைப் படித்த காலம். அந்த மாதிரி சிறுகதைகளும் தொடர்கதைகளும் மறைந்து போனதை நினைத்தால் ஏக்கமாக இருக்கிறது.


கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் நாகநந்தி அடிகளையும் வந்தியத்தேவனையும் எப்படி மறக்கமுடியும்? தேவனின் துப்பறியும் சாம்பு காலத்தால் அழிக்கமுடியாத பாத்திரம். ஆனால் இன்று அழிந்துதான் போய்விட்டது.

பத்திரிக்கைகள் அல்லாமல் தனி நாவல்களாக மு.வரதராசனார் (கரித்துண்டு), புதுமைப்பித்தன் கதைகள் (கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்) ஆகியவைகள் இளைஞர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்ட கதைகளாகும்.

இப்படி தமிழ் கதைகள் மட்டுமே படித்துக் கொண்டிருந்ததால் என் ஆங்கில அறிவு மிகவும் கேவலமான நிலையில் இருந்தது. நான் தமிழ் மீடியம் ஸ்கூலில் படித்தேன். போதாக்குறைக்கு என் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆங்கில இலக்கணம் முழுவதுமாக சொல்லிக் கொடுக்கவேயில்லை. எஸ்.எஸ்.எல்.சி அதாவது ஸ்கூல் பைனல் பரீட்சையில் திரு. நரசிம்மய்யர் எழுதிய நோட்ஸை வைத்து, சரியாக மினிமம் பாஸ் மார்க் (40/100) வாங்கி பாஸ் பண்ணினேன். மற்ற பாடங்களில் நல்ல மார்க் வாங்கியிருந்ததால் காலேஜ் அட்மிஷன் சுலபமாக கிடைத்து விட்டது.

அந்தக் காலத்தில் இன்டர்மீடியட் என்பது கல்லூரிகளில் ஆரம்ப கட்ட வகுப்பின் பெயர். இரண்டு வருடம் படிக்கவேண்டும். முதல் நாள் வகுப்பில் போய் உட்கார்ந்தால் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் நடத்தினார்கள். நான் தமிழ் மீடியத்தில் படித்தவன். வகுப்பில் என்ன நடக்கிறதென்று தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. வீட்டில் படித்தவர்கள் யாருமில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை.

எப்படி சமாளித்தேன் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. என் பதிவின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா கக்கு-மாணிக்கம்! புத்தகங்களைத்தான் படிக்க ஆளில்லை என்றால் புத்தகத்தைப் பற்றிய பதிவைப் படிக்கவும் ஆள் இல்லாமல் போன கொடுமையை யாரிடம் போய்ச் சொல்லுவது?

      அப்புறம் காமரசத்தைப் பற்றி பதிவு எழுதாமல் என்ன செய்வது? பதிவுன்னா ஏதோ நாலு பேராச்சும் வந்தாத்தானே நல்லா இருக்கும்.

      இந்த மாதிரி பதிவுலகத்துல பதிவு எழுதறத விட கத்தி எடுத்துட்டு சவரம் பண்ணப் போலாம். அதிலயாச்சும் நாலு காசு கிடைக்கும். என்ன சொல்றீங்க?

      நீக்கு
  2. புத்தகங்களை பற்றிய சுவாரசியமான பதிவாக இருக்கிறது ஐயா. நிறைய எழுத்தாளர்களை தெரிந்து கொள்ள முடிகிறது. துப்பறியும் சாம்பு நான் படித்திருக்கிறேன்....
    எப்படி ஆங்கில வழிக் கல்வியை சமாளித்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்...
    தொடருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. அன்று வாரஇதழ்களின் பலமே தொடர் கதைகள்தான். எனது சிறு வயதில் குமுதத்தை மறைத்து வைத்துக் கொண்டு படிப்பேன். படிக்கிற வயதில் இது தேவையா என்று திட்டு விழும். சாண்டியல்யனின் வரலாற்று கதைகள், ரா.கி.ரங்கராஜனின் மொழிபெயர்ப்பு கதைகள் என்று அன்றைய குமுதம் வாரா வாரம் தூள் பரத்தும். இன்று எல்லாமே 'லைட் ரீடிங்' ஆகிவிட்டது

    நல்ல அனுபவப் பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. சுவாரசியமான பகிர்வு ஐயா...

    தில்லி வந்த புதிதில் [21 வருடங்களுக்கு முன்] இப்படித்தான் ஒரு லெண்டிங் லைப்ரரியில் நானும் எனது நண்பரும் உறுப்பினர்களாக ஆனோம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரண்டு புத்தகங்கள் எடுப்போம். இருவரும் நாளுக்கு ஒரு புத்தகமாய் படித்துவிடுவோம். நிறைய புத்தகங்கள் படித்தோம் அப்போது...

    கல்கியின் நாவல்கள் - ஆஹா சுவையான விஷயங்கள். நீங்கள் சொன்னது போல, வந்தியத்தேவனையும், பழுவேட்டரையர்கள், நந்தினி, நாகநந்தி அடிகள் போன்ற கதாபாத்திரங்களை மறக்க முடியுமா?

    நல்ல பகிர்வு ஐயா.. தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  5. தொடர்ந்து எழுத வேண்டும் விமர்சனம் அருமையாக போகிறது.
    தங்களின் எழுத்தை நேசிக்கும் ஒருவன் நான்

    பதிலளிநீக்கு