செவ்வாய், 29 மே, 2012

ஈமு கோழி வாங்கலியோ? ஈமு கோழீஈஈஈஈஈ


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். இந்க் காலத்தில் மக்களின் மனதைக் கரைப்பதற்கு விளம்பரங்கள் உதவுகின்றன. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும். அப்படி ஈமு கோழிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஜே ஜே என்று முட்டையிட ஆரம்பித்து விட்டன. மக்கள் ஈமு கோழிக் கறி சாப்பிட்டு திடகாத்திரமாக ஆகிவிட்டார்கள். தமிழீழம் வாங்கியே தீருவார்கள்.

விளம்பரங்களின் அளவையும், எண்ணிக்கைகளையும் பார்த்தால் தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவாகும்போல் தோன்றுகிறது. இவ்வளவு பணம் செலவு செய்து நியாயமான வழிகளில் லாபம் ஈட்டுவது என்னுடைய மனக்கணக்குப் பிரகாரம் அசாத்தியம் என்று தோன்றுகிறது.

இருபது வருடங்களுக்கு முன் தேக்கு மரம் வளர்ப்பதைப் பற்றி பிரமாதமாக விளம்பரம் செய்தார்கள். உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அதன் பெயரில் ஒரு தேக்கு கன்று நட்டால் அவளுக்கு கல்யாண வயசு வரும்போது அந்த தேக்கு மரத்தை விற்றால், அந்தப் பணம் கல்யாணத்திற்குப் போதுமானதாக இருக்கும் என்று விளம்பரம் செய்தார்கள்.

இதைப் போலவே உங்களுக்கு வருடாந்தரத் தேவைக்கு சர்க்கரை தருகிறோம், அரிசி தருகிறோம், என்றெல்லாம் விளம்பரங்கள் வந்தன. இதை நம்பி பலர் முதலீடு செய்தார்கள். அந்தக் கம்பெனிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.

நம் மக்கள் இருக்கிறார்களே, அவர்கள் கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கூட, உடனே பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால் பாலைத் தூக்கிக்கொண்டு ஓடுவார்களா?

ஈமு கோழி வளர்ப்பில் இவ்வளவு லாபம் வருகிறது, அவ்வளவு லாபம் வருகிறது என்று கம்பெனிகள் கணக்கு காட்டுகின்றன. பார்த்தால் நம்பும்படிதான் இருக்கிறது. ஆனால் நன்கு யோசித்துப் பார்த்தால்தான் அதில் உள்ள ஓட்டைகள் தெரிய வரும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு விளம்பரம் ஒரு தமிழ் தினசரியில் வந்திருக்கிறது. அதன் விபரங்களைப் பாருங்கள்.
1. முதலீடு: ரூ. 1 லட்சம்
2. மாத சம்பளம்: ரூ. 10,000
அதே விளம்பரத்தில் இன்னொரு ஆஃபர்:
திட்டம் 1.
1. முதலீடு: 1,50,000
2. ஒப்பந்த காலம்: இரண்டு வருடம்
3. போனஸ்: 50,000
4. சிறப்பு சலுகை: 1 பவுன்
5. மாத வருமானம்: 10,000
6. இரண்டு வருட முடிவில் முதலீடு தொகை திருப்பி தரப்படும்.
7. பண்ணை அமைத்தல், தீவனம் வழங்குதல், மருத்துவ உதவி அனைத்தும் இலவசம்.
என்ன கணக்குப் போட்டாலும் இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
முதலில் ஈமு கொழியின் கறியை எடுத்துக் கொள்வோம். ஒரு கிலோ கறி 700 ரூபாய்க்கு விற்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு பெரிய ஈமு கோழி 45 கிலோ இருக்கும். அதன் விலை 31500 ஆகிறது. அந்த விலைக்கு ஈமு கோழியை வாங்குவார் யாரும் இல்லை. ஏனென்றால் அந்தக் கறியை சாப்பிடுவதற்கு ஆள் இல்லை. சில கம்பெனிக்காரர்களே சில இடங்களில் ஓட்டல்கள் வைத்து ஈமு கறி கிடைக்கும் என்று விளம்பரங்கள் செய்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டல்கள் ஓட்டிக்கொண்டு இருக்கின்றன என்று பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள். இந்தக் கறியை மக்கள் எந்த அளவிற்கு விரும்புவார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

தவிர, இந்தக் கறி மருத்துவ குணங்கள் மிகுந்தவை என்று விளம்பரம் செய்கிறார்கள். அதை எப்படி கண்டு பிடிப்பது? ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்த ஈமு கோழி ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. அந்த நாட்டிலேயே இப்போது ஈமு கோழி வளர்ப்பதை விட்டு விட்டார்கள்.


இது தவிர, ஈமு கோழியிலிருந்து கொழுப்பு. தோல், இன்னும் என்னென்னமோ தயாரிக்கலாம் என்று சொல்லுகிறார்கள். இவை எல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம் என்பதைக் காலம்தான் சொல்லும்.

தற்சமயம் புதிது புதிதாகப் பண்ணைகள் உருவாவதால் கோழிகளுக்கும், முட்டைகளுக்கும் தேவையும், நல்ல விலையும், இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் தமிழ்நாடு முழுவதும் ஈமு பண்ணைகள் உருவாகும்போது கோழிகளுக்கும் முட்டைகளுக்கும் டிமாண்ட் குறைந்துவிடும். அப்போது இந்தக் கம்பெனிகள் காணாமல் போகும். அதில் பணம் முதலீடு செய்தவர்கள் எல்லாம் ஒரு பெரிய நாமத்தை தங்கள் நெற்றியில் போட்டுக்கொண்டு போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குப் போவார்கள்.

இந்த விவகாரத்தில அதிசயம் என்னவென்றால் விவசாயிகளுக்கு சேவை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள விவசாய இலாக்காவோ அல்லது கால்நடைத்துறையோ இதைப் பற்றி எந்த தகவலும் விவசாயிகளுக்குச் சொல்வதில்லை. இதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். யாராவது ஏன் இப்படி என்று கேட்டால், எங்களிடம் வந்து விசாரித்தால் நாங்கள் விவரங்கள் தருவோம் என்பார்கள். திருடன் திருடிக்கொண்டு போனபின் வீட்டைப் பூட்டுவது போல்தான் இருக்கிறது.

ஞாயிறு, 27 மே, 2012

மொபைல் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.


இன்றைய நாளில் கம்ப்யூட்டரும் மொபைல் போனும் இல்லாதவர்களே இல்லை என்று ஆகிவிட்டது. இவைகளால் செலவு மட்டும்தான் என்று நினைப்பவரா நீங்கள். உங்கள் எண்ணம் தவறு. இவைகளின் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். இதோ அதற்கான உத்தி.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
BT-664120 என்ற விலாசத்திலிருந்து எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்துள்ளது.

வந்த நாள் 18.05.2012 காலை 9.40 மணி.

அதை அப்படியே கீழே எழுதி அனுப்பியுள்ளேன்.

பொதுவாக இதுபோல எனக்கு அடிக்கடி செய்திகள் வருவதும் நான் அவற்றை உடனடியா DELETE செய்வதும் தான் வழக்கம்.

இதைப்பற்றி தங்கள் கருத்தினையும் ஒரு பதிவாக வெளியிட்டால் யாரும் ஏமாறாமல் விழிப்புணர்வு கொள்வார்கள்.

இதை நம்பி செயல்பட்ட என் அலுவலக நண்பர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் முன்பு பலவித தொல்லைகள் எற்பட்டன என்பது எனக்கும் ஓரளவு தெரியும்.

முழுமையாகத் தெரியாததால் நான் அதைப்பற்றி பதிவிடவில்லை.

இதோ அந்த வந்துள்ள குறுஞ்செய்தி:

URGENT-YOUR NUMBER HAS WON 1,000,000.00 IN COCO COLA UK 2012.

TO RECEIVE YOUR AWARD SEND YOUR NAME, ADDRESS, AGE, PHONE NUMBER TO

coladraw2012@gmail.com SENDER BT-664120 SENT 09:40:20 18-05-2012
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலே கொடுத்துள்ளது திரு.வை.கோபாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள பின்னூட்ட செய்தி. இந்த மாதிரியான செய்திகள் உங்கள் பலருக்கும் வந்திருக்கலாம். பெரும்பாலானோர் இந்த மாதிரி செய்தியைப் பார்த்தவுடன் டெலீட் செய்து விடுவார்கள். நானும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தேன். இப்போது வை.கோபாலகிருஷ்ணன் அனுப்பிய செய்தியைப் பார்த்ததும் ஒரு யோசனை உதித்தது.


நம்ம ஜனங்கள் இருக்காங்களே, அவர்களுக்கு எத்தனை முறை பட்டாலும் திரும்பவும் அப்படியேதான் செய்வார்களே அன்றி, திருந்தவே மாட்டார்கள். பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் கோட்டை விடுபவர்களை எவ்வளவு நாட்களாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 


அதாவது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது உலக நியதி. அப்படியானால் நாம் ஏன் எப்போதும் ஏமாந்துகொண்டே இருக்கவேண்டும். அக்கரைக்குச் சென்றால் என்ன என்று தோன்றியது. என் திட்டத்தை இங்கே கொடுத்துள்ளேன். என் அனுமதியின்றி யாரும் இந்தத் திட்டத்தை உபயோகித்தால் நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்று அறியவும்.

தேவையான முதலீடு, ஒரு கம்ப்யூட்டரும் இன்டர்நெட் கனெக்ஷனும். அடுத்ததாக ஒரு நல்ல செல்போனும் அளவற்ற எஸ்.எம்.எஸ் உபயோகிக்கக் கூடிய ஒரு செல் கனெக்ஷனும். பதிவர்கள் அநேகரிடம் இந்த இரண்டு சௌகரியங்களும் ஏற்கனவே இருக்கும். அதற்காக இந்தத் தொழிலில் இறங்க வேண்டாம். ரிஸ்க் அதிகம். ஒரு பத்து வருடம் கம்பி எண்ணவேண்டிவரும். இதில் ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் (கம்பி எண்ணுவதில்) துணிந்து இறங்கலாம்.


ஒரு நல்ல கடிதம் தயார் செய்துகொள்ளவேண்டும். காசைக்கொடுத்தால் அதற்கு ஏகப்பட்ட பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கடிதத்தில் எழுத வேண்டிய கருத்து பல விதமாக இருக்கலாம். சேம்பிளுக்கு ஒன்று இங்கே கொடுத்திருக்கிறேன். உங்களுக்குப் புரிவதற்காக தமிழில் கொடுத்துள்ளேன். ஆனால் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடையீர்,


நான் பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் உயர் அதிகாரியாய்ப் பணிபுரிகிறேன். எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் எங்கள் பேங்க்கில் ஒரு மில்லியன் பவுண்ட் பணம் போட்டிருந்தார். அவர் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு இங்கு யாரும் வாரிசு இல்லை. அவர் தன் உயிலில் தன் பணம் முழுவதையும் ஒரு குணசாலியான தமிழருக்குக் கொடுத்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். எங்கள் விசாரணையில் நீங்கள் அதற்குப் பொருத்தமானவர் என்று கண்டு பிடித்தோம்.


நீங்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தால் உங்கள் முழு விலாசம், பேங்க் பெயர், கணக்கு எண், ஆகிய விபரங்களை உடனடியாக எனக்கு அனுப்பினால், உங்கள் கணக்கிற்கு மொத்தப் பணத்தையும் அனுப்பிவிடுகிறேன்.


அன்புள்ள,


#%$&%*&(*&()  
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கடிதத்தை கிடைக்கும் ஈமெயில் அட்ரசுக்கெல்லாம் அனுப்பவேண்டும். ஈமெயில் அட்ரஸ் விற்பதற்கு பலர் இருக்கிறார்கள். ஒரு பத்தாயிரம் பேருக்கு அனுப்பினால் ஒன்றிரண்டு பேர் பதில் போடுவார்கள். இந்த கடிதத்தையே சுருக்கி எஸ்.எம்.எஸ். ஆக ஒரு பத்தாயிரம் பேருடைய மொபைலுக்கு அனுப்பவேண்டும். மொபைல் நெம்பர்கள் மொபைல் கம்பெனிக்காரர்கள் கொஞ்சம் காசு கொடுத்தால் கொடுப்பார்கள். இதற்கும் சிலர் பதில் அனுப்புவார்கள். தூண்டிலில் மீன் சிக்கிவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்.


இதற்கு மேல்தான் ஜாக்கிரதையாக டீல் செய்யவேண்டும். என்ன சொல்லவேண்டுமென்றால், இந்தப் பணத்தை உங்களுக்கு அனுப்ப பேங்க் கமிஷன் 50000 ரூபாய் ஆகும். அந்தப் பணத்தை இந்தியாவில் உள்ள பேங்கில் இன்ன ஊரிலுள்ள பேங்க்கில் இந்த அக்கவுன்ட் நெம்பரில் போடவும். உங்கள் பணத்தை உடனே உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும் என்று ஒரு மெயில் அனுப்பவும். இந்த மாதிரி ஒரு கணக்கு முன்பே ஆரம்பித்துக்கொள்ளவும்.


அந்த மடையன் பணத்தை நீங்கள் சொன்ன மாதிரி நீங்கள் சொன்ன பேங்க்கில் போட்டானென்றால் நல்ல கொழுத்த மீன் என்று புரிந்து கொள்ளவும். பிறகு, இன்னொரு மெயிலில் இந்திய ரிசர்வ் பேங்க்கிடம் கிளியரன்ஸ் வாங்க 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதையும் இதே கணக்கில் கட்டவும் என்று சொல்லவும். அந்தப் பணமும் கணக்கில் கட்டப்பட்டு விட்டால் உடனே கட்டின பணத்தையெல்லாம் சுருட்டிக்கொள்ளவும். இதற்கு மேலும் ஆசைப்பட்டால் மாட்டிக்கொள்வோம்.


இதுவரை உபயோகித்த ஈமெயில் ஐடி, செல்போன் சிம், பேங்க் அக்கவுன்ட், எல்லாவற்றையும் சுத்தமாக அழிக்கவும். இன்டர்நெட்டை கேன்சல் செய்யவும். கம்ப்யூட்டரை காயலான் கடைக்குப் போடவும். வேறு ஊருக்குப் போய் செட்டில் ஆகி, திரும்பவும் இதே தொழிலை வேறு பெயர்களில் தொடரவும்.


அவ்வளவுதான். இதற்கு மேல் பேராசைப்பட்டீர்களோ, அப்புறம் கம்பிதான். ஜாக்கிரதை.

வெள்ளி, 25 மே, 2012

மில்லியனர் ஆக வேண்டுமா?

இது ஒரு கற்பனை. யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை.

நீங்கள் மில்லியனர் ஆக மிக சுலபமான வழி கண்டுபிடித்திருக்கிறோம். எல்லோரும் வாருங்கள். மில்லியனராகத் திரும்பிச்செல்லுங்கள்.

இப்படி ஒரு விளம்பரம் அன்று எங்கள் ஊரில் எல்லா சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்தது. அன்று மாலை 6 மணிக்கு அந்த ஊரிலுள்ள பெரிய மைதானத்தில் கூடும்படி அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மில்லியனராகும் ஆசை யாரை விடும். நானும் 5 மணிக்கே போய்விட்டேன். எல்லோருக்கும் ஒரு விண்ணப்ப படிவம் கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னார்கள். அந்தப் படிவங்களைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். மேல் விவரங்கள் உங்களுக்கு தபாலில் வரும் என்று சொல்லிவிட்டு ஆளுக்கு ஒரு சுண்டல் பாக்கெட் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

ஒரு வாரம் கழித்து ஒரு தபால் வந்தது. உங்கள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்தோம். மில்லியன் ரூபாய் என்பது உங்கள் தகுதிக்கு மிக அதிகம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனாலும் உங்கள் ஆசையைக் கெடுக்க நாங்கள் விரும்பவில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள யோசனை உங்களுக்குப் பிடித்திருந்தால் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தரணி புகழ் "ஊழல்" டி.வி. ஸ்டேஷனுக்கு நேரில் வரவும். அந்த லெட்டரில் இப்படி எழுதியிருந்தது.


உங்களுக்கு ஒரு நாள் டி.வி.யில் தோன்ற விருப்பமானால் அதில் நாங்கள் வைக்கும் போட்டியில் கலந்து கொள்ளலாம். அந்த நிகழ்ச்சிக்குப் பெயர் "உலகத்தில் பெரிய ஏமாளி யார்" என்பதாகும். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் உங்களை சில கேள்விகள் கேட்போம். உங்களுக்குத் தெரிந்த பதிலைச் சொல்லலாம். பதில் சரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. சில கேள்விகள் கேட்ட பிறகு உங்களுக்கு பத்து லட்சம் அல்லது பதினைந்து லட்சம் பரிசு விழுந்திருக்கிறது என்று சொல்வோம். நீங்கள் மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வந்து விடவேண்டும்.


வெளியில் வரும்போது உங்களுக்கு பிஸ்கெட்டும் டீயும் கொடுப்போம். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கவர் கொடுப்போம். அதை வீட்டுக்குப் போய் பிரித்துப் பார்க்கவும். வீட்டுக்கு வந்தவுடன் அந்தக்கவரில் பத்து லட்சம் செக் இருக்குமென்று நீங்கள் நினைத்தால் நீங்கள்தான் உலக மகா ஏமாளி. கவரில் 500 ரூபாய் நோட்டு ஒன்றும் கடிதம் ஒன்றும் இருக்கும். கடிதத்தில் நீங்கள் டி.வி.யில் அன்று நடித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு விட்டு அதற்கான சன்மானம் 500 ரூபாய் என்று எழுதியிருப்போம். 


சரி, என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடலாம் என்று ஞாயிற்றுக்கிழமை டி.வி.ஸ்டேஷனுக்குப் போனேன். அங்கு என்னைப்போல் பலர் வந்திருந்தார்கள். என்னையும் சேர்த்து ஒரு மூன்று பேரை மட்டும் கூட்டிக்கொண்டு போய் கேட்கப்போகும் கேள்விகளையும் அதற்கான விடைகளையும் கொண்ட பேப்பர் ஒன்றைக் கொடுத்து, நன்றாக மனப்பாடம் செய்யச்சொன்னார்கள். மீதிப்பேர்களைக் கூட்டிக்கொண்டு போய் பார்வையாளர்களாக உட்கார வைத்தார்கள்.

பிறகு எங்களுக்கு ஒருவர் வந்து ரிகர்சல் நடத்தினார். பிறகு படம் பிடிக்கும் தளத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய் படம் பிடித்தார்கள். எனக்கு பத்து லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. பிறகு எங்களை வெளியில் அழைத்து வந்து பிஸ்கட், டீ கொடுக்கப்பட்டது. கூடவே ஒரு கவரும் கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்து பிரித்துப் பார்த்தேன். சரியாக ஒரு 500 ரூபாய்த்தாளும் நன்றிக்கடிதமும் இருந்தது. சரி, ஒரு நாள் பொழுது போயிற்று. டி.வி.யிலும் தோன்றியாயிற்று, ஞாயிற்றுக்கிழமை பொழுதும் போயிற்று என்று திருப்திப் பட்டுக்கொண்டு தூங்கிப்போனேன்.

உங்கள் ஊரிலும் இந்த மாதிரி ஆஃபர் வந்தால் விட்டு விடாதீர்கள்.

டிஸ்கி: இது முற்றிலும் என்னுடைய மூளையில் உதித்த ஒரு கற்பனைக் கதையே. இதைப்படித்து விட்டு எந்த டி.வி.யாவது இந்த மாதிரி புரொக்ராம் நடத்தினால் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன். ஏற்கனவே எந்த டி.வி.யாவது இப்படி ஒரு புரொக்ராம் நடத்திக் கொண்டிருந்தால் அதற்கும் இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சத்தியம் செய்கிறேன்.


வியாழன், 24 மே, 2012

தமிழ் மணம் ரேங்க் எனும் மாயை


                                                                Tamil Blogs Traffic Ranking

மாயை என்றால் ஏதோ மாயாஜாலம் என்றுதான் பலருடைய எண்ணம். தெரிவது போல் இருந்து மறைவது ஒரு விதத்தில் மாயாஜாலம்தான். ஆனால் நாம் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு வினாடிக்கும் மாறுவதை நாம் உணருவதில்லை. அதனால் அது மாயை என்று நமக்குத் தெரிவதில்லை.

உதாரணத்திற்கு நம் தமிழ்மணம் தர வரிசை எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அது தினம் தினம் அல்லது வாரந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. என்னுடைய பதிவின் தமிழ்மணத் தர வரிசை எண்ணை மேலே கொடுத்திருக்கிறேன். போன வருடம் இது 48 ஆக இருந்தது. இன்று அது 23 ஆக மாறியிருக்கிறது. தர வரிசை எண் குறையக் குறைய அதன் மதிப்பு கூடுகிறதென்று சொல்லுகிறார்கள். எனக்கென்னமோ அதனால் என்ன மதிப்பு கூடிவிட்டது என்று உணர முடியவில்லை.

சிலர் இந்த மாயைக்காக அதிக முயற்சி எடுத்துக் கொள்ளுகிறார்கள். நாடும் அந்த மாயைக்கு உட்பட்டவன்தான். ஆனால் இதனால் என்ன பயன் என்று யோசித்தால் ஒன்றும் விளங்க மாட்டேனென்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் பதிவுலகத்தைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. அப்படித் தெரிந்தவர்கள் கூட இந்த தமிழ்மணத் தரவரிசையைப் பற்றி அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.

அப்டிப்பட்ட ஒன்றுக்குமே உதவாத ஒன்றைப் பற்றி நான் எவ்வளவு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. இனி அதைப் பற்றி அதிக சிந்தனையும் அதற்காக அதிக உழைப்பும் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக் கூடாது. அது அர்த்தமற்றது.


திங்கள், 21 மே, 2012

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்


ஒரு நரி ஒரு நாள் ஒரு திராட்சைத்தோட்டம் வழியாகப் போய்ட்டு இருந்ததாம். அந்த திராட்சைத் தோட்டத்தில திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாக் காய்ச்சு தொங்கிட்டு இருந்ததாம். அதைப் பார்த்த நரிக்கு வாயில் எச்சில் ஊறினதாம். தோட்டத்திற்குள் எப்படியோ நுழைஞ்சு, அந்த திராட்சைக் கொலைகளைப் பறிக்க எம்பி, எம்பி (நம்ம எம்.பி. இல்லைங்க) குதிச்சுப் பார்த்ததாம். திராட்சைக் கொலையைப் பறிக்க முடியவில்லையாம். கொஞ்ச நேரம் கழித்து அது தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு போய்விட்டதாம்.

இந்தக் கதையைப் பொதுவாக ஒருவரைக் கேலி செய்வதற்காகச் சொல்வதுதான் வழக்கம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால்தான் இந்தக்கதையின் உள்ளர்த்தம் விளங்கும்.

உதாரணத்திற்கு, நீங்கள் குடும்பத்துடன் ஒரு சினிமா பார்க்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அன்று அந்தப் படத்திற்கு ஏகப்பட்ட கூட்டம். திருட்டு டிக்கெட்தான் கிடைக்கும். உங்கள் நாலு பேருக்கும் டிக்கெட்டுக்கே ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். பிறகு ஓட்டல் செலவு, ஆட்டோ எல்லாம் சேர்த்தால் உங்கள் பர்ஸ் போண்டியாகிவிடும். அந்த மாதம் குடும்ப வண்டியை ஓட்ட கடன் வாங்கவேண்டும். அதை எப்போது கட்ட முடியமோ தெரியாது. இந்த நிலையில் அந்தப் படம் வேண்டாம், பீச்சுக்குப் போய்விட்டு, சுண்டலைச் சாப்பிட்டு விட்டு பஸ்சில் வீட்டுக்குப் போகலாம் என்று முடிவெடுப்பதுதான் சிறந்த முடிவு.

அப்போதுதான் நரி தத்துவம் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த சினிமா புளிக்கும் என்று உங்கள் குடும்பம் ஒத்துக் கொண்டால் அது ஆரோக்கியமான குடும்பம். உங்களுக்கு மன வேதனை வராது. இல்லாமல் ஐயோ, இந்த சினிமா பார்க்க முடியவில்லையே என்று புலம்ப ஆரம்பித்தால் வீண் வருத்தம்தான் மிஞ்சும்.

சினிமா மட்டுமல்ல. வாழ்க்கையில் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரும். வெற்றியைக் கண்டு அதீத மகிழ்ச்சி அடைவதும், தோல்வியைக் கண்டு அதிகம் துவண்டு போவதும் வாழ்க்கைக்கு உகந்ததல்ல. அப்படி இருந்தீர்களென்றால் எப்போதும் நீங்கள் புலம்பிக்கொண்டேதான் இருக்கவேண்டும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைத் தொலைத்தவராகி விடுவீர்கள்.

சர்வ மதப் பிரார்த்தனை ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.

"கடவுளே, இந்த உலகில் மாற்ற வேண்டியவைகளை மாற்றக்கூடிய திறனையும், மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய
மன வலிமையையும், இந்த இரண்டையும் அடையாளம் கண்டு கொள்ளும் விவேகத்தையும் எனக்கு அருள்வாயாக".

இந்த வாழ்க்கை நமக்கு வாய்த்தது இறைவன் அருள். அதை மகிழ்ச்சியாக வாழத் தேவையான புத்தியையும் அவனே கொடுத்திருக்கிறான். அதைவிட்டு நான் புலம்பிக்கொண்டுதான் இருப்பேன் என்றால் அதறகான சுதந்திரத்தையும் அவனே கொடுத்திருக்கிறான். எப்படி வாழப்போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம்.

சனி, 19 மே, 2012

தமிழ்நாட்டில் வரலாறு காணாத களேபரம்



இது
 முற்றிலும் ஒரு கற்பனைப் பதிவுமக்கள் நிஜம் என்று நினைத்து ஏமாற வேண்டாம்.


காலையில் தினசரிகளில் வெளிவந்த செய்தியைப் பார்த்து தமிழ்நாட்டின் முதல் மந்திரி அதிர்ந்து போனார்.




---------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் வரலாறு காணாத களேபரம்
தெருவெங்கிலும் மக்கள் கூட்டம்
தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் மக்கள் தெருக்களில் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இளவஞ்சி ஒழிக, குலசேகரன் ஒழிக, வாசு ஒழிக, நந்தினி ஒழிக என்ற கோஷங்கள் எழும்பிக்கொண்டு இருந்தன. இவர்களின் கொடும்பாவிகளை சில இடங்களில் எரித்துக்கொண்டு இருந்தார்கள்.
போலீஸ் படையினரினால் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

முதல் மந்திரி, மந்திரி சபையின் அவசரக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். அனைத்து அரசு இலாக்காக்களின் செயலாளர்களும் உயர் போலீஸ் அதிகாரிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப் பட்டிருந்தார்கள்.


கூட்டம் ஆரம்பிக்கிறது.


முதல் மந்திரி: சட்டம் ஒழுங்கு மந்திரியேஇது என்ன நாடு முழுவதும் குழப்பம்?
சட்டம்-ஒழுங்கு மந்திரிமுதல் மந்திரி அவர்களுக்கு வணக்கம்இது எதிர்க்கட்சி செய்த சூழ்ச்சிநமது தலைமை போலீஸ் அதிகாரி விசாரித்து வருவதற்கு சென்றுள்ளார்இதோஅவரே வந்து விட்டார்உங்கள் விசாரணையில் நீங்கள் அறிந்து வந்ததை விரிவாக எடுத்துச் சொல்லும்.
தலைமை போலீஸ் அதிகாரி: இந்த விவகாரத்தை எனது துறை அதிகாரிகள் முழுவதுமாக விசாரித்ததில் இது முழுவதும் எதிர்க்ட்சியினர் செய்த சூழ்ச்சியே என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளதுஇதோ முழு அறிக்கை.
------------------------------------------------------------------------------------------------------------------------------

இது பல காலத்திற்கு முன்பே எதிர்க்கட்சியினரால் திட்டமிடப்பட்டு இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்களை எவ்வாறு மூளைச்சலவை செய்வது என்பதை நிபுணர்கள் உதவியுடன் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின்படி தினமும் இரவு 8 மணியிலிருந்து 9 மணிவரை, அவர்கள் வசமிருக்கும் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து இரண்டு மெகா சீரியல்கள் ஒளி பரப்பப்படும். இந்த சீரியல்களை எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காக இலவச டிவிக்கள் எல்லோருக்கும் கொடுத்துள்ளார்கள்.
அந்த சீரியல்களில் கதையே ஒன்றும் இருக்காது. மக்களின் அறிவை மழுங்க வைக்கக் கூடிய காட்சிகள் மட்டுமே இருக்கும். எந்த லாஜிக்கும் இந்த சீரியல்களில் இருக்காது. அதைத் தொடர்ந்து பார்க்கும் மக்கள்சீரியலைட்டிஸ்என்னும் வைரஸ் நோயினால் தாக்கப் படுவார்கள். இந்த நோயினால் தாக்குண்டவர்கள் இவ்வாறுதான் வீதிகளுக்கு வந்து தனக்குத்தானே பேசிக்கொண்டும், துணிகளைக் கிழித்துக் கொண்டும் மன நோய் வந்தவர்கள் போல் நடந்து கொள்வார்கள். இந்த இரண்டு வாரமாக மின்வெட்டு இல்லாத காரணத்தால் அநேகம் பேர் இந்த சிரியல்களைப் பார்த்து இந்த நிலைக்கு வந்து விட்டார்கள்.



----------------------------------------------------------------------------------------------------------------------------


முதல் மந்திரி: சுகாதார அமைச்சர் இந்த நோயைக் கட்டுப் படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
சுகாதார அமைச்சர்: இதோசுகாதார டைரக்டர் இது பற்றி விவரமாகக் கூறுவார்.
சுகாதார டைரக்டர்: இந்த வியாதியைப் பற்றிய முழு விவரமும் இப்போதுதான் கிடைத்துள்ளதுஇந்த வைரஸ் இரண்டு வகைப்படும்ஒன்று “செல்வமைடிஸ்”. இரண்டாவது “தங்கமைடிஸ்”. மாலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு குறிப்பிட்ட டிவி சேனல்களை பார்ப்பவர்களை மட்டுமே இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இந்த இரண்டு வைரஸ்களும் ஒன்றாகவோதனித்தனியாகவோ தாக்கலாம்இந்த நோய்க்கான வைத்தியம் எல்லா அரசு மருத்துவ மனைகளிலும் மனோதத்துவப் பிரிவில் போர்க்கால அடிப்டையில் செய்வதற்கான உத்திரவு மதிப்புற்குரிய மந்திரியின் ஒப்புதலுக்காக வைக்கப் பட்டுள்ளது.
இது தவிர அரசு செய்யவேண்டிய இன்னொரு செயலையும் இங்கே பரிந்துரைக்கிறேன்தமிழ்நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கட்டாய மின்வெட்டை அமுல் படுத்தினால் இந்த நோய் விரைவில் கட்டுக்குள் வந்து விடும்.


முதல் மந்திரி: மின் வெட்டு உடனடியாக அமுலுக்கு வருகிறதுசுகாதார மந்திரி நோய்த்தடுப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செயல்படுத்த ஆணையிடுகிறேன்.

இத்துடன் கூட்டம் முடிவுற்றது