திங்கள், 19 அக்டோபர், 2015

பதிவர் திருவிழாவில் நான் சந்தித்த பதிவர்கள்

                                                Image result for brain diagram

மனித மூளையை கணினிக்கு ஒப்பாகச் சொல்வார்கள். அதாவது மூளையும் கணினியும் செய்திகளைச் சேகரித்து தன் நினைவில் வைத்துக்கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது கொடுப்பவை. ஆனால் கணினியை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளலாம். ஆண்டுதோறும் புதுப்புது மாடல் கணினிகள் வந்து கொண்டே இருக்கின்றன.

என்னுடைய மூளையும் அதைத் தயார் செய்து அனுப்பியபோது நன்றாக வேலை செய்தது. நாளாக நாளாக அதன் செயல் திறன் குறைந்து இப்போது ஏறக்குறைய அதல பாதாளத்திற்குப் போய் விட்டது. சில விஷயங்களில் அது முன்பிருந்தே மெத்தனமாகத்தான் வேலை செய்து வந்து கொண்டிருந்தது. நானும் போன இடங்களிளெல்லாம் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்குமா என்று விசாரித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் இதற்கு மட்டும் உதிரி பாகங்கள் கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.

எனக்கு வெகு காலமாகவே மனிதர்களின் முகங்களையும் பெயர்களையும் சேர்த்து நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. பழைய மாணவர்களையோ அல்லது அறிமுகமானவர்களையோ வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தால் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று தோன்றுமே தவிர, அவர் யார் என்று சரியாகப் புரிபடாது. முன்பெல்லாம் ஒரு மாதிரியாகப் பேசி சமாளித்து அவர்களிடமிருந்து விடுதலை பெற்று விடுவேன். இப்போது வயதாகி விட்டபடியால் எனக்கு மனிதர்களை மறப்பதற்கு லைசென்ஸ் வந்து விட்டது.

அதனால் யாரையாவது பார்க்கும்போது அவரைச் சரியாக அடையாளம் தெரியாவிட்டால் தயக்கமில்லாமல் உங்கள் பெயர் மறந்து விட்டதே என்று சொல்லி அவர் பெயரைக் கேட்டு விடுவேன். அவர்கள் பெயரைச் சொல்லும்போதே தாங்கள் இன்னார் என்றும் சொல்லி விடுவார்கள். ஆகவே இப்போது இந்த "பெயர்-முகம்" குழப்பத்தினால் சிக்கல் ஏதும் இல்லை.

ஆனால் இன்னொரு குழப்பம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. யாரையாவது புதிதாகச் சந்தித்தால் அவர்கள் பெயர் மற்றும் அவர்களைப் பற்றிய விவரங்கள் சொல்லுகிறார்கள். நானும் அதை தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் அவர் பெயர் என்ன சொன்னார் என்று யோசித்தால் அவர் பெயர் நினைவிற்கு வருவதில்லை. முன்பெல்லாம் இந்த மாதிரி ஏதாவது நிகழ்வு நடந்தால் அதைப் பற்றி மிகவும் விசனப்படுவேன். இப்போது நான் முதிர்ச்சி அடைந்து விட்டதினால் இந்த மாதிரி நிகழ்வுகளைக் கண்டு கொள்வதில்லை. "போனால் போகட்டும் போடா" என்று விட்டு விடுகிறேன்.

போனால் போகட்டும் போடா பாடலை மறந்து விட்டவர்களுக்காக-


                        

இவைகளை எல்லாம் நான் ஏன் இப்போது விலாவாரியாகச்சொல்லுகிறேன் என்றால் என் புதுக்கோட்டை பதிவர் திருவிழா அனுபவம்தான்.

பதிவுலகத்திற்கு வந்த புதிதில் ஒரு டைரி போட்டு அதில் பதிவர்கள் பெயர், பதிவின் பெயர், இணையவிலாசம் எல்லாம் குறித்து வைத்தேன். பிறகு புரட்டிப்பார்த்தால் எல்லாம் டூப்ளிகேட் பெயர்கள். ஒருவரின் போட்டோவும் உண்மையாக இல்லை. நார் எந்த ஊரில் அல்லது எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனது சிற்றறிவிற்கு எட்டிய வரை முயன்று பார்த்துவிட்டு அந்த டைரியைக் கிழித்துப் போட்டேன்.

பிறகு பதிவர் சந்திப்புகள் வந்தன. நான்கைந்து சந்திப்புகளில் கலந்து கொண்டேன். அப்போது பதிவர்களை நிஜ உருவில் கண்டேன். ஆனாலும் அங்கேயும் இந்த பெயர்-முகம்-தளம் குழப்பம் தொடர்ந்தது. உதாரணத்திற்கு நெல்லைப் பதிவர் சந்திப்பில் ஒருவரைச் சந்தித்தேன். பெயர் என்னவென்று கேட்டேன். பெயர் சொல்ல விருப்பமில்லை என்றார். இது என்னடா வம்பாகிப்போச்சே என்று நகர்ந்து விட்டேன்.

பிறகுதான் தெரிந்தது. அவர் மத்திய அரசில் ஒரு முக்கியமான துறையில் ஒரு பொறுப்பான அதிகாரியாக இருக்கிறார் என்று. அவர் தன் துறைக் கட்டுப்பாட்டுகளுக்குப் பயந்து கொண்டு அந்த மாதிரி பெயர் வைத்திருக்கிறார். ஸ்கூல் பையன், வால் பையன், வெளங்காதவன், காட்டான், இப்படியெல்லாம் பதிவர்களின் பெயர்கள் இருக்கின்றன. என்னால் இவைகளை நினைவில் இருத்திக்கொள்ள முடியவில்லை. ஆகவே இந்தப் பெயர்களை நினைவில் இருத்தி அவைகளை பின் நினைவிற்கு கொண்டுவரும் முயற்சியைக் கைவிட்டேன்.

சில பதிவர்களை நேரில் தனியாக கண்டு பேசியிருக்கிறேன்.  புலவர் திரு. ராமானுசம் ஐயா, தருமி அவர்கள், திரு. சீனா, ஜிஎம்பி, வை.கோபாலகிருஷ்ணன், இப்படி சிலர் மட்டுமே நினைவில் அழியாமலிருக்கிறார்கள்.

புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாவில் நான் அதிகம் புது பதிவர்களைக் கண்டு கொள்வதில் ஆர்வமாக இல்லை. அப்படியும் சில பதிவர்களை புதிதாக அடையாளம் கண்டேன்.

விழா அன்று காலை மூன்று மணிக்கே வழக்கம்போல் எழுந்து விட்டேன். அந்நேரத்தில் மன்றத்திற்குப்போனால் ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பதால் சும்மா வெளியில் வந்தேன். அந்தத் தெரு முனையில் இரண்டு டீக்கடைக்காரர்கள் அப்போதுதான் பாய்லர் அடுப்பைப் பற்ற வைத்து டீ தயார் செய்வதற்கான ஆரம்ப வேலைகளில் இருந்தார்கள். என்னைப்போல் இன்னும் இரண்டு மூன்று பேர் டீ குடிப்பதற்காக அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள். பதினைந்து நிமிடங்களில் டீ தயார் ஆகியது. டீயைக் குடித்து விட்டு ரூமிற்குத் திரும்பி வந்தேன்.

மணி மூன்றரை. அப்படியும் இப்படியும் திரும்பித் திரும்பிப் படுத்து எப்படியோ ஐந்தரை மணி வரை நேரத்தைப் போக்கினேன். பிறகு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளித்தேன். ஆடைகள் அணிந்த பிறகு மணியைப் பார்த்தால் ஆறரைதான் ஆகியிருந்தது. சரி என்ன ஆனாலும் ஆகட்டும் என்று ரூமை விட்டுப் புறப்பட்டு விழா மண்டபத்திற்கு சரியாக ஏழு மணிக்கு வந்து சேர்ந்தேன். மண்டபத்தில் ஈ, காக்கை இல்லை. அதாவது மண்டபம் அவ்வளவு சுத்தமாக இருந்தது. இரண்டு பெண்கள் தரையைக் கூட்டிக் கொண்டிருந்தார்கள்.

மீதி நாளைக்கு.


17 கருத்துகள்:

 1. என்னது உங்களுக்கு ஞாபக சக்திகுறைவா இது தெரியாமல் நான் உங்களை பார்த்து பயந்துபோய்கிடந்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அதிகாலை டீ சுகம். அந்நேரங்களில் உலகைப் பார்ப்பது, அதுவும் புதிய இடங்களில் பார்ப்பது ரொம்பச் சுகம்.

  பதிலளிநீக்கு
 3. தங்களின் பாணியின் அசத்தல் பகிர்வு ஐயா
  தொடருங்கள்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 4. அய்யா இப்போதுதான் , புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய உங்களது அனுபவத் தொடர், ஒரு கப் டீ சூட்டினால் வேகமாகத் தொடங்கி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. கூடவே நம்பள்கியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  கதை இப்படி இருக்கும் போது, எப்படி எங்களை வைத்து பதிவேடு அது இது எல்லாம் போட்டார் நம் தலைவர்- எங்க பவிஷு அவ்வளவு தான்; நாங்க தான் முகமூடி பதிவர் அல்லே; கேட்டோ!!!
  ___________________________
  ஸ்கூல் பையன், வால் பையன், வெளங்காதவன், காட்டான், இப்படியெல்லாம் பதிவர்களின் பெயர்கள் இருக்கின்றன. என்னால் இவைகளை நினைவில் இருத்திக்கொள்ள முடியவில்லை. ஆகவே இந்தப் பெயர்களை நினைவில் இருத்தி அவைகளை பின் நினைவிற்கு கொண்டுவரும் முயற்சியைக் கைவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 6. நான் தங்கள் எந்த லிஸ்டில் இருக்கிறேன்
  எனத் தெரியவில்லையே ?
  சுவாரஸ்யமானத் துவக்கமும்
  மேற்குறித்த கேள்வியும் என்னை
  விடாது உங்கள் பதிவைத் தொடரச் செய்கிறது
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 7. மதியத்திற்கு பிறகு உங்களை காண முடியவில்லையே ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் உங்களிடம் சொல்லி விட்டுத்தானே போனேன். எனக்கு காலை 3 மணியிலிருந்து விழித்திருந்ததால் மதிய உணவிற்குப் பிறகு ஓய்வு தேவைப்பட்டது. அதனால் லாட்ஜ் அறைக்குப் போய் ரெஸ்ட் எடுத்து விட்டு ஊருக்குத் திரும்பி விட்டேன்.

   நீக்கு
 8. வயது ஆக ஆக இப்படியாகக் கொஞ்சம் நம் நினைவாற்றல் குறைவதும் மறதி வருவதும் மிகவும் இயற்கையே. உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொண்டு வெளிப்படையாகச் சொல்வதே தங்களின் தனிச்சிறப்பாக நான் உணர்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
 9. நினைவில் நிறுத்தி வைப்பதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 10. எங்கள் பெயர் வருமா என்று ஒவ்வொருவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். தொடரும் என்று போட்டுவிட்டீர்களே?

  பதிலளிநீக்கு
 11. ஐயா எனது பெயர் கில்லர்ஜி மூஞ்சியிலே மீசை வச்சுருப்பேன் மறந்துடாதீங்க....
  தமிழ் மணம் 7

  பதிலளிநீக்கு
 12. வாசித்தோம் ஐயா...
  ஞாபகத்தில் நிற்பதில்லை என்று சொல்லி பதிவர் விழாவை நியாபகமாய் எழுதுறீங்க...
  அடுத்த பகிர்வுக்கு வெயிட்டிங்க்...

  பதிலளிநீக்கு
 13. சுவாரசியத்துடன் பதிவர் விழாவை பகிர்கின்றீர்கள் ஐயா.அதிகாலையில் 3 மணிக்கு எழும்புவது எனக்கு எல்லாம் முடியாத விடயம் உங்களை நினைச்சால் பிரமிப்பாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 14. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு (+3) சேர்க்கப்பட்டு விட்டது...

  இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

  நன்றி...

  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு