சனி, 3 அக்டோபர், 2015

விழாக்களும் தவறுகளும்





நேற்று (2-10-2015) கிருஷ்ணகிரியில் நான் இணைந்திருக்கும் ஓய்வு பெற்ற விவசாய வல்லுனர்கள் சங்கத்தின் ஆண்டு மகாநாடு நடந்தது. என்னையும் சேர்த்து சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் சங்க உறுப்பினர்கள் மகாநாட்டு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் நன்றாகத் திட்டமிட்டு செயல் புரிந்தனர்.

ஆனாலும் விழா நடக்கும்போது நான் கண்ட சில குறைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன். இந்த தவறுகள் நமது பதிவர் மகாநாட்டிலும் ஏற்படலாம். இவைகளைத் தவிர்க்காவிட்டால் விழாவின் பெருமை கெடும் என்று கருதுகிறேன்.

வருகைப் பதிவு செய்த கல்லூரி மாணவிகள்
1.  ஒலி பெருக்கி ஏற்பாடுகள்

மகாநாடு ஒரு கல்யாண அரங்கில் நடைபெற்றது. அந்த அரங்கில் 1000 பேர் இருக்க முடியும். எங்கள் சங்க உறுப்பினர்கள் 350 பேர்கள் வந்திருந்தார்கள். ஏறக்குறைய அரங்கின் முக்கால் பங்கு நிறைந்திருந்தது. ஒலி பெருக்கி ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் அதன் தரம் மிகவும் மோசமாக இருந்தது. மேடையில் பேசுபவர்களின் பேச்சு ஒருவருக்கும் தெளிவாகக் கேட்கவில்லை.

ஒலி பெருக்கிகள் நல்ல தரம் வாய்ந்தவைகளாக இல்லாவிட்டால் விழாவில் கலந்து கொள்பவர்கள் விழா நிகழ்வுகளை சரியாக அனுபவிக்க இயலாமல் போகும்.

                                 

2. மூத்த உறுப்பினர்களைக் கௌரவித்தல்.

இதற்காக மிகவும் பொருட் செலவில் ஒவ்வொருவரின் பெயர் பொரித்த நினைவுப் பொருள் தயார் செய்து அவைகளை மேடையில் அலங்காரமாக வைத்திருந்தார்கள். அவைகளைக் கொடுப்பதற்காக  அந்த பெயர்களைப் படிக்கும்போது அவர்களில் பலர் கூட்டத்திற்கு வரவில்லை என்று தெரிந்தது. வந்திருந்தவர்களும் அரங்கின் பல இடங்களில் உட்கார்ந்திருந்தபடியால் இந்த நிகழ்ச்சியில் குழப்பமும் காலதாமதமும் கணிசமாக ஏற்பட்டது.

பரிசுப்பொருட்களையும் சரியாக அடையாளம் கண்டு காலதாமதமில்லாமல் எடுத்துக்கொடுக்க சுறுசுறுப்பானவர்களாகவும் சமயோசித புத்தி கொண்டவர்களுமான சிலரை மேடையில் இருக்க வைக்கவேண்டும்.


பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி
                                   
பரிசுகள் வாங்குபவர்களை முதலிலேயே கணக்கு எடுத்து அவர்களின் பெயர்களை மட்டும் படித்தால் நல்லது. தவிர அந்த பரிசு வாங்குபவர்களை அடையாளம் கண்டு முதலிலேயே மேடைக்குப் பக்கத்தில் அமர வைத்தால் வரிசையாக அவர்கள் வந்து பரிசு வாங்கிக்கொண்டு போக ஏதுவாக இருக்கும். இதை சரியாக திட்டமிடாவிட்டால் குழப்பமும் நேர விரயமும் மிஞ்சும். பரிசு பெற்ற, விழாவிற்கு வராத பதிவர்களின் பெயர்களை கடைசியில் ஒன்றாக வாசித்து விடலாம்.

3. கூட்டத்தினர் அமைதியாக இருக்கவேண்டியதின் அவசியம்.

எந்த ஒரு விழாவானாலும் சில, பல பிரபலங்களைக் கூப்பிட்டு மேடை ஏற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போதுதான் விழாவிற்கு ஒரு களை கட்டும். அப்படிக் கூப்பிட்டு மேடையில் இருக்கும் பிரபலங்களுக்கு நாம் செய்யும் மரியாதை அவர்கள் பேசும்போது அமைதியாக இருந்து அவர்கள் பேசும் பேச்சைக்கேட்பதே.

எங்கள் விழாவிற்கு வந்திருந்த பலர் தங்கள் நண்பர்களை பல நாட்கள், ஏன் பல வருடங்கள் கழித்து சந்திக்கின்றார்கள். அவர்களுடன் அளவளாவ வேண்டுமென்ற ஆவல் கட்டாயம் இருக்கும். ஆனால் அப்படி அளவளாவ விழா அரங்கு தகுந்த இடமல்ல. கூட்டத்தில் சிறுசிறு குழுக்களாக பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தால் மேடையில் பேசும் பேச்சாளருக்கு எப்படியிருக்கும்?

பதிவர்கள் சந்திப்பு அரசியல் கூட்டம் அல்ல. அரசியல் கூட்டங்களில் என்ன சலசலப்பு இருந்தாலும் பேச்சாளர்கள் அதைக் கண்டுகோள்ளாமல் பேசிக்கொண்டே போவார்கள். ஆனால் ஒரு படித்தவர்கள், பண்பாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் இப்படி சளசளவென்று பேசிக்கொண்டிருந்தால், பேசுபவருக்கு எப்படியிருக்கும்? அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?

நான் கலந்து கொண்ட எங்கள் சங்க மகாநாட்டில் விழா நிகழ்ச்சிகளின்போது ஒரே சந்தை இரைச்சல். மேடையில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்று தெரியாத அளவிற்கு சத்தம். பலமுறை மைக்கில் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது. ஆனால் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள். வயதானால் ஒருவன் மீண்டும் குழந்தையாகிறான் என்று கேட்டிருக்கிறோம். அதை நேற்று நான் கண்ணாரக் கண்டேன். அனவரும் குழந்தைகளை போல் இரைச்சல் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நான் பதிவர்கள் மகாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு விடுக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், விழா நிகழ்ச்சிகளின்போது முழு அமைதி காக்கவேண்டும். பல பெரிய அதிகாரிகளையும் பேச்சாளர்களையும் அழைத்து மேடையில் அமர்த்தி விட்டு அவர்கள் பேசும்போது அரங்கில் இரைச்சலாக இருந்தால் பதிவர்களின் பேரில் அவர்களுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்?

அது தவிர விழாக் குழுவினர் இந்த சமயத்தில் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்பதையும் சிறிது கற்பனை செய்து பாருங்கள். நாம் கலந்து கொள்ளப்போவது திருமண விழா அல்ல. சக பதிவர்களைப் பார்த்ததும் மெய் மறந்து அவர்களுடன் அளவளாவ வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அந்த ஆவலை சாப்பிடும்போதோ அல்லது தேநீர் அருந்தும்போதோ நிறைவேற்றிக்கொள்ளலாம்.

அல்லது முதல் நாளே புதுக்கோட்டைக்கு வருபவர்கள் 10 ம் தேதி மாலை விழா அரங்கிற்கு வந்து விட்டால் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டு அளவளாவ சௌகரியமாக இருக்கும்.

4. தேனீர் கொடுத்தல்.

விழா நடக்கும்போது எக்காரணம் கொண்டும் தேனீர் விநியோகிக்கக் கூடாது. இது எப்படியும் சலசலப்பைத் தோற்றுவித்து விழாவின் போக்கை கெடுக்கும். இந்த தேனீர் விநியோகம் அதற்கென்று தனிப்பட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் கொடுப்பதுதான் உசிதம்.

5. பதிவர்களின் கடமை.

இந்த விழா பதிவர்களாகிய நாம் நடத்தும் விழா. திரு. முத்து நிலவன் தனிப்பட்டு நடத்தும் சொந்த விழா அல்ல. அவர் முன்னின்று விழா ஏற்பாடுகளை நமக்காகச் செய்கின்றார். இந்த விழாவில் பதிவர்களின் பெருமை அடங்கியிருக்கிறது. பதிவர்களாகிய நாம் மற்றவர்களைவிட மேம்பட்ட அறிவாளிகள் என்ற இறுமாப்புடன் வலம் வருகிறோம். அப்படி நினைக்கும் நாம் நடந்து கொள்ளும் பாங்கு அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமல்லவா? இதை பதிவர் மகாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

27 கருத்துகள்:

  1. நல்ல ஆலோசனைகள் சொன்ன முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி. நடக்கவிருக்கும் வலைப்பதிவர் மாநாடு என்பது ஒரு பொதுக்கூட்டம் போல ஆகிவிடக் கூடாது என்பதே எனது கவலை.

    பதிலளிநீக்கு
  2. உரிய நேரத்தில் சரியான அறிவுரை. தாங்கள் கூறியதை நாங்கள் கடைபிடிப்போம் என்று என் சார்பாகவும், நண்பர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களது எண்ணங்களையும், ஆதங்கத்தையும் உணர்ந்தோம். அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்போம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. குழு குழுவாக பேசிக்கொண்டே இருப்பவர்களை இடம் மாற்றி விடுவோம் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. // பதிவர்களாகிய நாம் மற்றவர்களைவிட மேம்பட்ட அறிவாளிகள் என்ற இறுமாப்புடன் வலம் வருகிறோம். அப்படி நினைக்கும் நாம் நடந்து கொள்ளும் பாங்கு அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமல்லவா ? //

    ஸூப்பர் வார்த்தை

    தங்களது முன்யோசனை ஏற்றுக் கொள்ளக்கூடியதே ஐயா

    பதிலளிநீக்கு
  5. வலைப் பதிவர் விழா சீராக நடக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் குழுவுக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தேன் அதில் டைம் மானேஜ்மென்ட் டுக்கு உதவும் வகையில் ஒரு நிகழ்ச்சி நிரல் நேரக் கணக்கீட்டுப்படி தயார் செய்தால் உசிதம் என்றிருந்தேன். அழைப்பிதழ் த்யாராகிக் கொண்டிருக்கிறது நிகழ்ச்சி நிரலுடன் என்று பதில் வந்தது. அழைப்பிதழ் வந்தாகி விட்டது. நிகழ்ச்சி நிரல் குறித்த செய்தி விவரமாக ஏதும் இல்லை. மேலும் சுமார் 250 வலைப்பதிவர்கள் கூடும்போது முகம் அறியாதவரை சந்தித்து உரையாட நேரம் இருக்காது என்றும் தோன்றுகிறது பதிவருக்கு ஒரு நிமிடம் என்றாலும் நான்கு மணி நேரம் ஆகும். பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதை தவிர்க்க முடியாது. அதற்கான நேரம் இல்லாதபோது பதிவர்களைக் குற்றம் சொல்லக் கூடாது என்று நினைக்கிறேன் நேரக் கட்டுப்பாட்டின் அவசியம் புரியவில்லை என்றே தோன்று கிறது. எதையாவதுசொல்லப் போனால் பொல்லாப்பு மிஞ்சும்

    பதிலளிநீக்கு
  6. sooper ஆலோசனைகள்!
    ஆனால் பின்பற்றுவதுதான் ஹி......

    பதிலளிநீக்கு
  7. மிகவும் நல்ல ஆலோசனைகள்! பதிவர்கள் அனைவரும் பொறுப்புணர்ந்து கடைபிடித்தால் விழா சிறக்கும் என்பதில் சந்தேகமில்லை!

    பதிலளிநீக்கு
  8. .
    சரியான யோசனை சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயம் தங்களது கருத்துக்கள் விழாக் குழுவினர் கவனத்தில் கொள்வார்கள் என் எண்ணுகிறேன்.

    TANSAF நடத்திய ஆண்டு விழா சிறிய குறைகள் இருந்தாலும் நன்முறையில் நடந்தேறியிருக்கும் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பெயரையும் எதற்காகவோ கூப்பிட்டார்கள். உங்களுக்கு வயது 70 + ஆகிவிட்டதா?

      நீக்கு

    2. ஆமாம் ஐயா! 70 வயது ஆகிவிட்டது. நேற்று இங்கு எனக்கு வேறு வேலை இருந்ததால் வர இயலவில்லை.

      நீக்கு
  9. தாங்கள் சொல்லியிருக்கும் யோசனைகள் அனைத்தும் அருமை...
    இதெல்லாம் நம் விழாவில் கடைபிடிக்கப்படும் என்று நினைக்கிறேன்...
    நல்ல பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
  10. வருகைப் பதிவு செய்த கல்லூரி மாணவிகள் படத்தில் சுறுசுறுப்பானவர்களாகத் தெரிகிறார்கள். அங்கு காட்டப்பட்டிருக்கு கைப்பைகளில் ஒன்று தங்களுக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். அதன் உள்ளே என்ன வைத்துக்கொடுத்தார்கள்?

    ஒருவேளை சந்தனமாலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.

    Please refer your earlier Post: http://swamysmusings.blogspot.com/2015/09/blog-post_28.html :)

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலைகளை கழுத்தில் போட்டால்தான் மரியாதை. கைப்பைக்குள் வைத்துக்கொடுத்தால் அதை அங்கேயே குப்பைக்கூடையில் போட்டு விடலாம்.

      உபயோகமான ஒரு பொருள் கைப்பையில் வைத்துக் கொடுத்தார்கள். சமீப காலமாக புழக்கத்திற்கு வந்திருக்கும் LED டார்ச் லைட் - எவரெடி கம்பெனியுடையது - 100 ரூ. விலை - வைத்துக் கொடுத்தார்கள். அதற்கு முன்பு பதிவுக்கட்டணமாக 200 ரை. வாங்கிக்கொண்டது வேறு விஷயம்.

      பதிவு செய்த மாணவிகளை முதலில் யாரென்று தெரியவில்லை. ஆர்வம் தாங்காமல் அவர்களையே கேட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அவர்கள் உள்ளூர் கல்லூரி மாணவிகள் என்று. அவர்கள் சுறுசுறுப்பாக இருந்தது மட்டுமல்ல, கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தார்கள்.

      நீக்கு
    2. // கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தார்கள்.
      உங்களுக்கு வயசாகிவிட்டதென யாராவது சொன்னால், நான் நம்ப மாட்டேன். பதிவர் விழாவில் நறுக்கென உங்களை அறிமுகப்படுத்தியது எங்களுக்கு பாடம். அடுத்த முறை அந்த தவறை செய்ய மாட்டோம்.

      நீக்கு
  11. மூன்றாவது படத்தில் தாங்கள் படு ஜோராக முன்னணியில் ஒய்யாரமாகக் காலை நன்கு நீட்டியபடி அமர்ந்து இருக்கிறீர்கள். சபாஷ். பாராட்டுகள்.

    மற்ற நபர்களில் யாரையுமே எனக்கு சரியாக அடையாளம் தெரியவில்லை. :)

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அனைவரும் விவசாய இலாக்கா சம்பந்தப்பட்டவர்கள்.

      நீக்கு
  12. //பரிசுப்பொருட்களையும் சரியாக அடையாளம் கண்டு காலதாமதமில்லாமல் எடுத்துக்கொடுக்க சுறுசுறுப்பானவர்களாகவும், சமயோசித புத்தி கொண்டவர்களுமான சிலரை மேடையில் இருக்க வைக்கவேண்டும்.//

    மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். வருகைப் பதிவு செய்த கல்லூரி மாணவிகளைப் போன்ற சுறுசுறுப்பானவர்களையே, இந்தப்பணிக்கும் அவர்கள் நியமித்திருக்கலாம். இதனால் ஒருவேளை கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் எரிச்சல் ஏற்படாமலாவது இருந்திருக்கும். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  13. //இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள். வயாதானால் ஒருவன் மீண்டும் குழந்தையாகிறான் என்று கேட்டிருக்கிறோம். அதை நேற்று நான் கண்ணாரக் கண்டேன். அனவரும் குழந்தைகளை போல் இரைச்சல் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.//

    மூத்த குடிமக்களில் பலருக்கும் காது அவ்வளவாகக் கேட்காது. அதனால் அவர்களுக்குள் சற்றே இரைச்சலுடன் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். மைக் செட் சரியில்லை எனவும் சொல்லியிருக்கிறீர்கள். அதனாலேயே பலமுறை மைக்கில் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் போய் இருக்கக்கூடும்தான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காது கேளாமை ஒரு வரமா இல்லை சாபமா என்று ஒரு கேள்வி என் மனதில் அடிக்கடி எழுகின்றது. சிந்திக்கவேண்டும்.

      நீக்கு
  14. தங்களின் கிருஷ்ணகிரி பயணக்கட்டுரை டக்குன்னு உடனே முடிந்து விட்டது போலத் தோற்றமும் ஏமாற்றமும் அளிக்கிறது.

    மற்ற சுவையான விஷயங்கள் மேலும் தொடரும் தானே? மிகுந்த ஆவலுடன் ..............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கட்டுரை புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கு உதவட்டும் என்று மட்டும் அவசரமாகப் போடப்பட்ட பதிவு. மற்றவை தனியே பதிவிடப்படும்.

      விரிவான பின்னூட்டங்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. எல்லாமே நல்ல யோசனைகளை,
    ஒலிபெருக்கி அமைப்பு முக்கியம். mike tetsing முடிந்தவுடன் மைக்கை off செய்து விடனும். இல்லையென்றால் மேடையில் பேசும் பேச்சு, இரைச்சல் பார்வையாலர்களை எட்டும் நனறாக இருக்காது.

    மூத்த உறுப்பினர்களை நன்றகா கவுரவிக்க் வேண்டும். அதே சமயம் அவர்கள் வயதையோ காரணம் காட்டி உச்ச ஸ்தாயில் கல்யாண வீடு மாதிரி பேசக்கூடாது.

    தேனீர் இடை வேளை விடவேண்டும்.. மேடையில் அமர்பவர்களுக்கு ஒய்வு! மற்றவர்களுடன் பேசலாம்,

    இளைஞர்கள், இளைஞிகள் உள்பட பெரியவர்கள் எல்லோரும் அமைதியாக இருக்கவேணும். இதில் யாரும் விதிவிலக்கு கிடையாது. குடித்து விட்டு வரக்கூடாது. வந்தால் அனுமதி கிடையாது. அங்கு மீட்டிங் நடக்கும் பொது சத்தம் போட்டு பேசினால் மீட்டிங்கிற்கு இடையூறாக இருந்தால் (அவர் யாராக இருந்தாலும் அவரை அமைதி காக்கக் சொல்லவேணும்).
    இதை கவனிக்க அமைதியாய் மீட்டிங் நடக்க இரண்டு மூன்று மானிட்டர்கள் வேண்டும் தெரிந்தவர்கள் மானிட்டர்களா இருந்தால் எல்லை மீறும் பார்வையாளர்களை அன்புடன் கண்டிக்முடியும். ஞாயிறு என்பதால் அங்குள்ள ஆசிரியர்களையே அழைக்கலாம். (போகும் பொது ஒரு நினைவுப் பரிசு கொடுத்து விடலாம்).. அப்படியும் பேசினால், அப்படி ஒரு முறை சொல்லியும் சொல்லியும் பேசும் பார்வையார்களை அவர் யாராக இருந்தாலும் பெஞ்சு மேலே ஏற்றி நிக்க வைக்கலாம். அப்படி நிக்க முடியாதவர்களை முட்டி போட வைக்கலாம். இதை செய்யத்தான் முன்பின் அறிமுகமில்லாவர்கள் (ஆசிரியர்களாக இருந்தால் மேல்) மானிட்டர்களாக சேவை செய்ய தேவை என்று சொன்னேன்! பழைய சந்திப்புகளை பார்த்தபோது தோன்றியவை. சில சந்தைக்கடை மாதிரி இருந்தது; அதை நினைவில் கொண்டு எழுதியவை. தப்புன்னா அப்படியே உட்டுடுங்கோ!

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. நல்ல யோசனைகள்
    விழாக் குழுவினர் கவனத்தில் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு

  18. சரியான யோசனை சொல்லியிருக்கிறீர்கள் ,விழாக் குழுவினர் கவனத்தில் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு