திங்கள், 8 ஆகஸ்ட், 2011

அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பாகம் 2



இந்த கால கட்டத்தில்தான் நாணயங்கள் அதிகமாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்தன். அதுவரை இருந்த பண்டமாற்று முறைகள் குறைந்து நாணயங்களை மனிதன் பொருட்கள் வாங்குவதற்கு உபயோகப்படுத்த ஆரம்பித்தான். மனிதனின் சேமிப்பு, தானியமாகவோ, உண்ணும் பண்டங்களாகவோ இருந்தவரை, அவைகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாதாகையால், அவைகளை மக்கள் தாராளமாக உபயோகப்படுத்தி வந்தார்கள். தங்களுக்குப் போக மிஞ்சியதை தேவையானவர்களுக்கும் கொடுத்தார்கள். மனிதனுக்கு அப்போது பரந்த மனப்பான்மை இருந்தது. நாணயப் புழக்கம் வந்த பிறகுதான், மனிதன் சேமிப்புப் பழக்கத்தை ஆரம்பித்தான். விவசாயம் பொய்க்கும்போது வேண்டிய தேவைக்காகவும் மற்ற பலவித தேவைகளுக்காவும் சேமித்தான். பெண்கள் தங்க நகைகள் போட ஆரம்பித்ததும் இதே காரியத்திற்காகத்தான்.
சேமிப்பு அதிகமாக அதிகமாக, மனிதனுக்கு ஆசை வளர்ந்ததே தவிர குறையவில்லை. இன்னும், இன்னும், இன்னும், இன்னும் என்று சேர்த்தானே தவிர நிறுத்தவேயில்லை. தனக்கு, தன் பிள்ளைக்கு, தன் பேரனுக்கு, இப்படியாகவே போய், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகி விட்டது. விவசாயத்தையும் இந்த மனப்பான்மை மாற்றியது. இந்த மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நிலத்தடி நீரின் நிலைதான்.
என் முன்னோர்கள் விவசாயிகளாக இருந்தார்கள். ஆனால் தாக்குப்பிடிக்க முடியாமல் நகரத்திற்கு வந்துவிட்டார்கள். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் கிராமத்திலேயே விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய சிறு வயதில் (சுமார் பத்து பனிரெண்டு வயது இருக்கும்) விடுமுறை நாட்களில் ஊருக்குப்போவேன். என் மாமா தோட்டத்தில் சில நாட்களும், பெரியம்மா தோட்டத்தில் சில நாட்களும் கழிப்பேன்.
அந்தத் தோட்டங்கள் எல்லாம் கிணற்றுப்பாசனம் மூலம் பயிர் செய்யப்பட்டவை. தண்ணீர் இறைக்க கவலை”, (சில ஊர்களில் கமலை என்பார்கள்) உபயோகப்படுத்துவார்கள். ஒரு கிணற்றுக்கு இரண்டு முதல் நான்கு கவலைகள் இருக்கும். சாதாரணமாக இரண்டு கவலைகள்தான் பெரும்பாலான கிணறுகளில் இருக்கும்.  ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். தோலினால் ஆனபறிஎன்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள். வடக்கயிறும் வார் கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும். அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும்.
ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் மூன்று அல்லது மூன்றரை ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.
அப்போது கிணறுகளில் நீர் மட்டம் தரை மட்டத்தில் இருந்து கீழே இருபது அடிக்குள் இருந்தது. அப்படி ஒரு கிணற்றில்தான் நான் நீச்சல் கற்றுக் கொண்டேன். கிணற்றின் மேலிருந்து குதிக்கப் பழகவில்லை. ஏனெனில் அதற்குள் விடுமுறை முடிந்து விட்டது. சரி அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அடுத்த வருடம் ஏதோ காரணத்தினால் மாமா தோட்டத்திற்கு போக முடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் போனால் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாற்பது அடிக்கு கீழே போய்விட்டது. தண்ணீருக்குள் ஜம்ப் பண்ணி நீரின் அடிமட்டத்திற்குப்போய் மேலே வரும் வித்தையை கற்க முடியாமலேயே போய் விட்டது.
                   

7 கருத்துகள்:

  1. நிதர்சனப் பகிர்வு...
    எல்லாரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  2. எல்லா கிணறுகளின் நீர்மட்டமும் கீழே போயி விட்டதென்னவோ உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  3. எல்லோரும் சொல்கிறார்கள். இதற்க்கு தீர்வு தான் என்ன சார். இப்படியே போய்கிட்டிருந்த நமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கை எப்படி இருக்கும், நினைக்கவே பயமாருக்கு

    பதிலளிநீக்கு
  4. //! ஸ்பார்க் கார்த்தி @ said...

    எல்லோரும் சொல்கிறார்கள். இதற்க்கு தீர்வு தான் என்ன சார். இப்படியே போய்கிட்டிருந்த நமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கை எப்படி இருக்கும், நினைக்கவே பயமாருக்கு//

    எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது. ஏதாவது வழி கண்டுபிடிக்கப்படும் அல்லது மனித இனம் அழியும்.

    பதிலளிநீக்கு
  5. நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு ஆயிரம் வழியிருக்கு.. அதை செயல்வடுத்துவதற்குதான் நல்ல மனங்கள் இல்லை...

    ஐயா நீங்க கிணத்துக்குள் இனிமேல் குதிக்க முயற்சி செயாதீர்கள்..இன்னும் கொஞ்ச நாள்ள வெறும் பாறைதான்யா இருக்க போகுது....!!!!!!!!???????

    காட்டான் குழ போட்டான்...

    பதிலளிநீக்கு
  6. இயற்கையின் நியதிகளை மாற்றமுடியாது .மனிதன்
    பொறுப்புணர்வுடன் சிந்தித்து நடந்தால் கொஞ்சமாவது
    நலன்பெற நிறைய வழிபிறக்கும்.அருமையான ஒரு
    தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு