சனி, 24 செப்டம்பர், 2011

மங்கல வாழ்த்து பாடல் – வசனமும் பாடலும்



கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் கல்யாண முறைகள்.
மங்கல வாழ்த்து பாடல்  வசனமும் பாடலும்
வெள்ளாளக் கவுண்டர்களின் கல்யாணங்களில் முக்கியமானது மங்கலவாழ்த்து. இதைப்ற்றி போன பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன்.அதற்கு வந்த பின்னூட்டங்களில் தெய்வசுகந்தி அவர்கள் இந்தப்பாடலை திரு.நா.கணேசன் அவர்கள் தொகுத்து அவருடைய பதிவில்போட்டிருப்பதாக சொல்லியிருந்தார்கள்.
அந்தப் பாடலை கல்யாணங்களில் எப்படிப் பாடுவார்களோ, அதேமாதிரியாக ஒரு குடிப்பையனைப் பாட வைத்து அதை சி.டி. யாககோவையில் வெளியிட்டுள்ளார்கள். இந்த பாட்டானது வட்டத்துக்கு வட்டம் சிற்சில மாறுதல்களுடன் பாடப்படுகிறது. ஆதலால் திரு.கணேசன் அவர்களின் தொகுப்புக்கும் பாட்டுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். நான் அதை இன்னும் ஒப்பு நோக்கவில்லை.
இரண்டாவது, அந்தப் பாடல் 19 ½ நிமிடம் பாடப்படுகிறது. அவ்வளவுநீளப் பாட்டை யூட்யூப்பில் ஏற்றமுடியாது என்பதால் அதை இரண்டுபாகமாக ஏற்றியுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் அதைத் தரவிறக்கிஒன்றாக இணைத்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக கல்யாணப்படங்கள் போதிய அளவில் கிடைக்காததால் ஒரே  படத்தைப் போட்டு இருக்கிறேன். படிப்பவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.



இத்துடன் கொங்கு வேளாளர்களின் பழக்கங்கள் பற்றிய தொடர் முடிகிறது. இத்தொடரில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன. அவை தற்கால சமுதாயக் கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவை நடைமுறையில் இருப்பவை. அவைகளை மாற்றினால் இந்தத் தொடர் செயற்கையாக இருக்கும் என்று நான் கருதியதால் அவைகளை அப்படியே பிரசுரித்தேன்.

தவிர இவை மீள் பதிவுகள் ஆனதால் அவைகளை நான் திருத்த விரும்பவில்லை. எந்தக் கருத்துக்கும் மாற்றுக்கருத்துகள் இருந்தே தீரும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று நம்புகிறவன் நான். ஆகவே எப்படிப்பட்ட மாற்றுக் கருத்துகளுடன் பின்னூட்டங்கள் வந்தாலும் அவைகளை பிரசுரிக்கவே விரும்புகிறேன் (அவை ஆபாசமாக இருந்தால் தவிர).










வெள்ளி, 23 செப்டம்பர், 2011

அடுத்தவர்களுக்கு அறிவுரைகள் கூறுவது வீண்



மனிதர்களுடைய குணங்கள் அவர்களுடைய மரபணு தொகுப்பினால் ஆக்கப்பட்டவை என்று பார்த்தோம். இந்த குணங்களினால் சிலர் சமூகத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய செயல்கள் எந்நாளும் தீயவைகளையே கருவாகக் கொண்டிருக்கும். அவர்களுடைய தோழர்களும் இதே மாதிரியான குணங்கள் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக் கிடையேதான் நெருக்கம் ஏற்படும். இது அவர்களின் மரபணுக்கள் ஏற்படுத்தும் குணங்கள்.

அவர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களைத் திருத்தும் நோக்கோடு கற்றவர்கள் கூறும் அறிவுரைகளை எந்நாளும் ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் மரபணுக்களின் குணம் அவர்களை இவ்வாறு ஆக்கியிருக்கிறது. நல்ல பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கும் விதைகள்தான் முளைத்து, வளர்ந்து பலன் கொடுக்கும். கட்டாந்தரையில் விதைக்கும் விதைகள் முளைக்க மாட்டாது.

இவர்கள் கட்டாந்தரையைப் போன்றவர்கள். இவர்களைச் சீர்திருத்தம் செய்ய முயலுவது, கானல் நீரைப் பருக ஆசைப்படுவது போலத்தான் அமையும். சூழ்நிலை மாற்றங்களைச் சந்திக்க இவர்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் எதிர்மறையாகவே இருக்கும். பல குடும்பங்கள் கெட்டுப்போவதற்கு இவர்களின் இந்தக் குணங்களே காரணம்.

விதி அல்லது கர்மவினை என்பதை பலர் இவர்களின் நிலைக்குக் காரணமாகக் காட்டுவார்கள். சோதிடர்கள் அவர்களின் கிரக நிலை அவர்களை இப்படி ஆட்டுவிக்கிறது என்பார்கள். விஞ்ஞானிகள் அவர்களின் மரபணுக்கூறுதான் இதற்கு காரணம் என்பார்கள். எப்படியானாலும் அவர்களின் நிலை மாறப்போவதில்லை.

வியாழன், 22 செப்டம்பர், 2011

ஒரு ஆண்மகன் அடிமையாகும் விதம்




மாப்பிள்ளையைக் கோயல்ல இருந்து கூட்டிக்கொண்டு வந்ததும் மணவறையில் உக்கார வைப்பாங்க. தாய் மாமன் கல்யாண மாலையைப் போடுவார். அய்யர் தயாராக இருப்பாருங்க. ஹோமம் வளர்க்க வேண்டிய சாமான்கள் எல்லாம் ரெடியாக வைத்திருப்பாரு. கொஞ்சம் பெரிய வீட்டுக்கல்யாணம் என்றால் கூட ஒரு அசிஸ்டன்டையும் கூட்டிக்கொண்டு வந்திருப்பார். மாப்பிள்ளை வந்து உக்கார்ந்ததும், சினிமாவுல வர்ற மாதிரி, “பொண்ணக்கூட்டிட்டு வாங்கோஅப்படீன்னு அய்யரு கொரல் கொடுப்பார்.

பொண்ணூட்டுக்காரங்க பொண்ணைக் கூட்டிட்டு வந்து மணவறைய வலமாச்சுத்தி வந்து பொண்ணை மாப்புள்ளக்கி வலது புறமா உக்கார வைப்பாங்க. மாப்பிள்ளைக்கு ஒரு தொணைப்பையன் கூட இருப்பானுங்க. அவன் மாப்பிள்ளைக்கு மச்சான் மொறையில இருக்கோணுமுங்க. அப்படியே பொண்ணுக்கும் ஒருத்தரு தொணையிருக்கோணுமுங்க. அது பொண்ணுக்கு அண்ணி மொறைல இருக்கோணுமுங்க.

மாப்புள்ளயும் பொண்ணும் மணவறைல உக்காந்த பின்னாடி, அய்யரு அவரோட காரியங்கள ஆரம்பிப்பாரு. அவரு அவங்க மொறைப் பிரகாரம்தான் செய்வாரு. சங்கல்பம், விநாயகர் துதி, சிவசக்தி ஆவாஹனம், கலச பூஜை, நவக்ரஹ பூஜை, அக்னி வளர்த்தல், தெய்வங்களுக்கு நைவேத்தியங்கள், பெற்றோர்களுக்கு பாத பூஜை, கன்னிகாதானம், மாங்கல்யதாரணம், அக்னி வலம் வருதல், மங்கல வாழ்த்து, சூரிய நமஸ்காரம், பெரியோர்கள் ஆசீர்வாதம், அருகுமணம் எடுத்தல் ஆகியவைகளை ஒரு ஒழுங்கு முறையோடு செய்வாங்க.
சேலம் பக்கத்தில் வேறு மாதிரியாக செய்வார்கள். அங்கு அருமைக்காரர் என்று ஒருவர் இருக்கிறாரு. அங்க அவர் வச்சதுதான் சட்டம். முந்தியெல்லாம் ஊர்ல பெரியவரு ஒருத்தரு அருமைக்காரரா இருப்பாரு. அவரு இந்த கல்யாணம் காச்சி எல்லாம் செஞ்சு வைப்பாருங்க. காசு பணம் எல்லாம் ஒண்ணும் வாங்க மாட்டாருங்க. இப்ப சில பேரு இத ஒரு வியாபாரமாவே பண்றாங்களாமுங்க. இதுக்கு ஆயிரக்கணக்குல பணமும் வாங்கறாங்கன்னு கேள்விங்க.
இந்த அருமைக்காரருக்கு அய்யரோட மந்த்ரம் மாயம் எல்லாம் ஒண்ணும் தெரியாது. சும்மா ஒரு புள்ளாரப்புடிச்சு வச்சு, தீபம் பத்தவச்சு, ஒரு கற்பூரத்த பத்தி புள்ளாரச் சுத்திக் காட்டுனார்னா பூஜை முடிந்தது. பொறவு மங்கிலியத்த கற்பூரத்த சுத்திக்காட்டி, அங்க இருக்கற பெரியவங்க எல்லார் கிட்டயும் காட்டி அவங்க ஆசீர்வாதம் செஞ்சுட்டாங்கன்னா அவ்வளவுதான். தாலிய எடுத்து மாப்பிள்ள கிட்ட கொடுத்து பொண்ணு கழுத்துல கட்டச் சொல்வாருங்க. அப்றம் நாசிவன் மங்கல வாழ்த்து படிச்சான்னா முகூர்த்தம் முடிஞ்சாச்சுங்க.
அட்சதை போடறது எல்லா இடங்களிலும் இந்துமத சம்ப்ரதாயங்களில் முக்கியமான ஒனண்ணுங்க. அரிசியை மஞ்சப்பொடியுடன் சிறிது தண்ணீர் உட்டுக் கலக்குனா மஞ்சள் அரிசி ரெடி. சிறிது காலத்திற்கு முன்னால் வரை இந்த அரிசியை மட்டும்தான் ஆசீர்வாதத்திற்கு பயன்படுத்தினார்கள். ஆனா இப்ப அரிசிகூட பலவிதமான உதிரிப்பூக்களையும் சேர்த்து அனுப்புகிறார்கள். யாராவது சிறுவர்கள் அல்லது சிறுமிகள் அல்லது பெரியவர்கள் இதை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு மணப்பந்தலுக்கு முன்னால் உக்கார்ந்து கொண்டிருக்கும் அனைவரிடமும் காட்டுவார்கள் அவர்களும் கொஞ்சம் அரிசியை, தற்போது பூவும் அரிசியும் சேர்ந்ததை, எடுத்து கையில் வைத்துக்கொண்டு, மாப்பிள்ளை பொண்ணுக்கு தாலி கட்டும்போது மணமக்கள் தலையில் போடுவதாக நினைத்துக்கொண்டு முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஆட்கள் மேல் போடுவார்கள். எப்படியோ மணமக்களை ஆசீர்வாதம் செய்த திருப்தி எல்லோருக்கும் வந்துவிடும்.
அப்புறம் வாத்தியம். எல்லாக் கல்யாணங்களிலும் நாதஸ்வர வாத்தியம் அவசியமுங்க. இரட்டைத்தவிலும் இரட்டை நாயனமும் இருந்து விட்டால் மண்டபம் ஒரே சந்தை இரைச்சல்தான். மணமகன் தாலி கட்டும்போது சகலவாத்தியம் என்று அய்யர் ஜாடை செய்வாருங்க. உடனே வாத்தியக்காரர்கள் உச்சகட்ட கதியில் மண்டபமே இடிந்து விடுவது போல சப்த ஜாலங்கள் செய்வார்கள். அப்புறம் நாசிவன் மங்கலவாழ்த்து பாடும்போது ஒற்றை தவில் மட்டும், நாசிவன் ஒவ்வொரு அடி பாடி நிறுத்தும்போதும், “டும்என்று ஒரு ஒத்தை அடி அடிக்கவேண்டும். இதுக்கு கொட்டுத்தட்டுதல் என்று பெயர். இது எல்லா வாத்தியக்காரர்களுக்கும் தெரியும். ஆனாலும் தெரியாதமாதிரி பாவனை பண்ணிக்கொண்டு உக்காந்திட்டிருப்பானுங்க. யாராச்சும் போய் ஒரு சவுண்ட் உட்டாத்தான் அப்புறம் வேண்டா வெறுப்பாக இந்தக்காரியத்தைச் செய்வார்கள். நியாயமாக தவில்காரன் எழுந்து வந்து நாசிவன் பக்கத்துல நின்னு இந்த ஒத்தை அடி அடிக்கவேண்டும். கல்யாணக்காரர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ளாவிட்டால் அவன் இருந்த இடத்தில் இருந்துகொண்டே கொட்டுத்தட்டுவான். பெரிய மண்டபமாக இருந்தால் நாசிவன் நிறுத்தும்போது இவன் கொட்டுத்தட்ட மாட்டான். தாளகதி மாத்தி தட்டுவான். இதெல்லாம் அவனுங்க வேணும்னே செய்யற குசும்புங்க. அவனுக கிட்ட மொதல்லயே, ரேட் பேசறப்பவே இதையெல்லாம் கண்டிப்பா சொல்லிப்போடோனுமுங்க.
இப்பிடி ரெண்டு விதமா முகூர்த்தம் நடந்தாலும் நாசிவன் மங்கலவாழ்த்து சொல்றது ரொம்ப முக்கியமுங்க. பொண்ணோட தம்பி இல்லைன்னா தம்பி மொறைல ஒரு பையனைக் கூட்டி வந்து அவனுக்கு தலைப்பா கட்டி, (ஒடனே திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணிக் கடைக்குப் போயிடாதீங்க) மாலை போட்டு மாப்புள்ளைக்கு முன்னாடி ஒரு சேர்ல உக்கார வைப்பாங்க. மாப்பிள்ளைக்கும் இந்தப்பையனுக்கும் நடுவில ஒரு ஸடூல்ல போட்டு அது மேல ஒரு பராத்தட்டத்தில நெறய அரிசி போட்டு வைப்பாங்க. மாப்புள்ளயோட ரெண்டு கையையும் இந்தப் பொண்ணோட தம்பியின் ரெண்டு கையையும் கோத்து அந்த அரிசிக்குள்ள வச்சுடுவாங்க. இப்படி கைகளை வைக்கறதுக்கு முன்னாடி நாசிவன் ரெண்டு பேரோட கைவிரல்களிலும் நெட்டி எடுத்து வுடுவானுங்க.
பொறவு நாசிவனுக்கு அய்யரு நாலு வெத்தல எடுத்து அதுல கொஞ்சம் மஞ்சளரிசியை வச்சு கொடுப்பாருங்க. அதுதான் நாசிவனுக்கு மங்கல வாழ்த்து சொல்றதுக்கு பர்மிசன். இந்த மங்கல வாழ்த்துப்பாட்டு எல்லாத்துக்கும் மனப்பாடமா தெரியாதுங்க. அதனால நாங்க என்ன பண்ணுனோமின்னா, எங்க ஊர்ல மங்கல வாழ்த்த நல்லா சொல்லக்கூடிய ஒரு நாசுவனப்புடிச்சு இந்த மங்கலவாழ்த்தை பாடச்சொல்லி ரெக்கார்டு பண்ணி சி.டியா போட்டுட்டோமுங்க. அத முழுசாக் கேக்கோணுமுங்க. நான் கல்யாணத்தப் பத்தி எழுதறதயெல்லாம் அந்தப் பாட்டுல சொல்லியிருக்குங்க. இந்தப்பாட்டு கம்ப நாட்டாழ்வார் எங்களுக்காகப் பாடிக்கொடுத்ததுன்னு சொல்வாங்க.
இப்படியாக முகூர்த்தம் முடிந்ததும் எல்லாரும் டிபன் சாப்பிடப்போவாங்க. நாமுளும் போய் டிபன் சாப்புட்டுட்டு வந்து மேக்கொண்டு காரியங்களைக் கவனிக்கலாமுங்க.
தொடரும்

புதன், 21 செப்டம்பர், 2011

கெட்ட மனிதர்கள் எப்படி உருவாகிறார்கள்?



ஒரே தாய் தந்தைக்குப் பிறந்து ஒரே சூழ்நிலையில், ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட இரு சகோதரர்கள் ஒரே மாதிரி குணங்கள் உடையவர்களாக இருப்பதில்லை. இது ஏன் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

சோதிடர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒருவன் பிறக்கும்போது இருக்கும் கிரக நிலைகள் அவனுடைய குணங்களையும் அவனுடைய செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது என்கிறார்கள். அதனால்தான் கிரக நிலைகள் மாறும்போது அவனுடைய செயல்பாடுகளும், சுக துக்கங்களும் மாறுகின்றன என்றும் கூறுகிறார்கள். இதை சோதிடத்தின் மூலம் கணித்து எதிர்காலப் பிரச்சினைகளைக் குறைக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இந்த தத்துவம் விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆனால் விண்வெளியிலிருந்து வரும் கதிர் வீச்சுக்கள் மனிதனின் குணங்களை மாற்றுகின்றன என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். இந்த மாற்றம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதையும் விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. ஆகவே சோதிடம் உண்மைதான் என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள்.

மனிதர்களுக்குள் வேறுபாடுகள் ஏற்படுவதற்கு ஒவ்வொருவர் பிறக்கும்போதும் இருந்த கிரக நிலைகள்தான் காரணம் என்று சோதிடர்கள் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள். ஆனால் விஞ்ஞானம் இதை ஒப்புக்கொள்வதில்லை. ஏன் என்று நாம் இப்போது ஆராயவேண்டாம்.

விஞ்ஞானிகள் என்னசொல்கிறார்கள் என்று பார்ப்போம். ஏன் மனிதர்களுக்குள் இந்த மாதிரி வேறுபாடுகள் இருக்கின்றன என்றால் ஒவ்வொருவரின் மரபணுக்களும், அவற்றின் மூலக்கூறுகளும் வேறுபடுகின்றன. இந்த மரபணுக்கள் பல தலைமுறைகளாக வாழையடி வாழையாக வந்தவை என்பதை நினைவு கொள்ளவேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் பல தலைமுறைகளின் மரபணுக்களைக் கொண்டுள்ளார்கள். எப்படி இரு மனிதர்களுக்கு விரல் ரேகைகள் ஒரே மாதிரி இருப்பதில்லையோ, அதே மாதிரி இரண்டு மனிதர்களின் மரபணுக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

மனிதனின் உடல், மன வளர்ச்சியில் இந்த மரபணுக்கள் மிகுந்த பங்கு ஆற்றுகின்றன. ஒரே அனுபவத்திலிருந்து இரு மனிதர்கள் இரு விதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். காரணம் இந்த மரபணுக்களிலுள்ள வித்தியாசங்களே. இப்படி வித்தியாசமான அனுபவங்களைப் பெறுபவர்களின் புத்தியும் குணங்களும் வேறுபட்டுத்தானே இருக்கும். மனிதர்களின் குணங்கள் இவ்வாறுதான் வேறுபடுகின்றன.

பெரும்பாலான மனிதர்களின் குணங்கள் நல்லவையாகவே இருக்கின்றன. ஆனாலும் சிலரின் குணங்கள் மிகவும் மாறுபட்டு குடும்பம், சமூகம், நாடு இவைகளுக்கு கேடு விளைவிக்கும் விதமாக அமைந்து விடுகின்றன.

ஏன் இவர்கள், மற்றவர்களைப் பார்த்து, அல்லது அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு தங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்ற ஐயம் ஏற்படுவது இயற்கையே. ஏன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கல்யாணத்தில் பெண்ணெடுக்கும் சீர்







மாப்பிள்ளை அழைப்பு முடிந்து மாப்பிள்ளை கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது இங்கே பெண் வீட்டில் பெண்ணுக்கு பெண்ணெடுக்கும் சீர் நடக்கும். பெண்ணை மணப்பெண்ணாக சிங்காரித்து மணவறையில் கொண்டு வந்து உட்கார வைப்பார்கள். பொண்ணோட தாய்மாமன், தாய்மாமன் இல்லாவிட்டால் மாமன் மொறையில் உள்ள ஒருவர் பொண்ணுக்கு மணமாலையைப் போடுவார். பிறகு நெருங்கிய சொந்தத்தில் மாமன் மொறையில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு புது வேஷ்டி, துண்டு கொடுத்து உடுத்த வைப்பார்கள். எல்லோருக்கும் நாவிதர் தோளில் ஒரு பூச்சரம் போடுவார். எல்லாரும் போய் பொண்ணோட ரெண்டு கையிலயும் சந்தனம் பூசி ஆசீர்வதித்துவிட்டு (அதாவது மொய்ப்பணம் கொடுத்துட்டு) வந்து நின்று கொள்வார்கள். இதுல என்ன கருத்துன்னா, மொற மாப்பிள்ளைக சம்மதத்தோடதான் இந்தக்கல்யாணம் நடக்குதுங்கறத எல்லாத்துக்கும் காட்டற சீர் இது. மொற மாப்பிள்ளைக்குத்தான் அக்கா புள்ளயக் கட்டறதுக்கு மொத உரிமை உண்டு. அவன் சம்மதிச்சாத்தான் அடுத்தவங்களுக்கு பொண்ணைக் கட்டிக்குடுக்கலாம். இப்பல்லாம் இந்த வழக்கம் மாறிப்போச்சுங்க.
எல்லோரும் ஆசீர்வதித்து முடிந்தவுடன் நாசிவன்இன்னும் பொண்ணெடுக்கிற மாமன்மார் யாராச்சும் இருக்கீங்களா, இருந்தா உடனே வாங்கோஅப்படீன்னு மூணு தடவ கூப்பிடுவான். எல்லாரும் வந்திருப்பாங்க. இருந்தாலும் மொறைக்கு இப்படிச் செய்யோணும். அப்புறம் சீர்க்காரம்மா. சரி இனி நாட்டாங்கல்லுக்குப் போய்ட்டு வந்திடலாம்னு பொறப்படுவாங்க.
இந்த நாட்டாங்கல்லுக்குப் போற சீர் இருக்குதுங்களே, இது ரொம்ப சரித்திர முக்கியத்துவம் உள்ளதுங்க. பழய காலத்துல ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாட்டமைக்காரர் இருப்பாருங்க. ஒரு பகுதியில பல ஊருங்க இருக்கும். ஒவ்வொரு ஊருக்கும் அதன் எல்லையைக் குறிக்க நாலு பக்கமும் கல்லு நட்டிருப்பாங்க. இதை நாட்டுக்கல் என்று சொல்வார்கள். கால ஓட்டத்தில் இது நாட்டாங்கல் என்று ஆகிவிட்டது. ஆட்டுக்கல்லை எங்கூர்ல ஆட்டாங்கல் என்று சொல்லும் வழக்கம் உண்டு. ஒரு ஊருக்கு நாட்டாமைக்காரர் வருகிறார் என்றால், அந்த ஊர்க்கவுண்டர் இந்த நாட்டாங்கல் வரை சென்று அவரை வரவேற்று அழைத்து வரவேண்டும். ஒரு வீட்டில் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் என்றால் நாட்டாமைக்காரருக்கு கண்டிப்பாக அழைப்பு உண்டு. அவர் முகூர்த்த நேரத்திற்கு சற்று முன்பாக வருவார். அவரைப் பெண் வூட்டுக்காரர்கள் அனைவரும், மணப்பெண் உட்பட, சென்று வணங்கி வரவேற்று மேளதாளத்துடன் மணப்பந்தலுக்கு அழைத்து வரவேண்டும். இப்போது அந்த நாட்டாமை வழக்கொழிந்து போனாலும் அந்த வழக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த சீர் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதுதான் மணப்பெண் நாட்டுக்கல்லுக்கு சென்றுவரும் சீர் எனப்படுகிறது. இப்போது ஊர் எல்லையில் கல் நடும் பழக்கம் எல்லாம் மறைந்து விட்டபடியால், மணப்பந்தலுக்குப் பக்கத்திலேயே ஒரு கல்லை நட்டு வைத்து, மணப்பெண் அது வரையில் போய் வருவது என்ற வழக்கம் வைத்திருக்கிறார்கள். பெண்ணை நாட்டுக்கல் வரை மாத்துப்போட்டு அழைத்துப்போய் அங்கு ஒரு போளமுடியில் மாத்துப்போட்டு நிற்க வைப்பார்கள். பிறகு சீர்க்கார அம்மா சோற்றில் உருட்டப்பட்ட உருண்டைகளைக்கொண்டு திருஷ்டி சுற்றிப்போடுவார்கள். பிறகு கற்பூரம் பற்றவைத்து சாமி கும்பிடுவார்கள். இந்த சீர் முடிந்த்தும் பெண்ணைக்கூட்டிக்கொண்டு போய் பெண்ணின் அறையில் விட்டுவிடுவார்கள்.
இதற்குப்பிறகுதான் மாப்பிள்ளையை கோவிலிலிருந்து மணப்பந்தலுக்குக் கூட்டிக்கொண்டு வருவார்கள்.




திங்கள், 19 செப்டம்பர், 2011

மனமென்னும் குரங்கு



எந்த ஒரு சிக்கலான தத்துவத்தையோ பொருளையோ நன்கு புரிந்து கொள்ளவேண்டுமானால், அதை அதன் எளிய பகுப்புகளாகப் பிரித்துத்தான்  புரிந்து கொள்ள இயலும். நான் யார் என்பது ஆன்மீக மார்க்கத்தில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. நான் ஒரு மனிதன் என்று உடனே கூறிவிடலாம். ஆனால் அது சரியல்ல. மனிதன்  என்பவன் உடல், மனம், புத்தி, ஆன்மா என்கிற இவை நான்கும் சேர்ந்த கலவைதான் என்று ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள். இவைகளை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

உடல் எது என்பதில் யாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பில்லை. ஆனால் ஆன்மாவைப் பற்றி எப்பொழுதும் ஒரு குழப்பமான நிலையே நிலவுகிறது. சாதாரண மனிதர்களாகிய நாம் தற்போதைக்கு ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்று என்று வைத்துக்கொள்வோம். அப்போது உடல் என்பது ஜடமாகவும் ஆன்மா என்பது சக்தியாகவும் அமைகிறது. ஆன்மா இல்லையென்றால் உடலை சவம் என்று சொல்லி அதை அடக்கம் செய்கிறோம்.

இப்போது மீதம் இருப்பது மனம், புத்தி, இரண்டும்தான்.
முதலில் மனம் என்றால் என்ன என்று பார்ப்போம். எண்ணங்களின் தொகுப்புதான் மனம் என்று அடையாளம் காணப்படுகின்றது. எண்ணங்கள் மனிதனின் மூளையில்தான் தோன்றுகின்றன. உண்மையில் மனம் என்று ஒரு பகுதி மூளையில் கிடையாது. நாம் நம் புரிதலுக்காக இந்த அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

ஒருவன் பிறந்தவுடன் எண்ணங்கள் தானாகத் தோன்றுவதில்லை. மரபணுக்கள், சுற்றம், சூழ்நிலை, இவைகளின் கூட்டுத் தாக்கத்தினால்தான் ஒருவனின் எண்ணங்கள் உருவாகின்றன. எண்ணங்கள் செயல்களைத் தோற்றுவிக்கின்றன. செயல்களினால் அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஒருவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் மீண்டும் எண்ணங்கள் உருவாக காரணமாய் அமைகின்றன. இப்படி சுழற்சியாக ஏற்படும் அனுபவங்களும் எண்ணங்களும்தான் மூளையில் நினைவுகளாகப் பதிகின்றன.

காலப்போக்கில் இந்த நினைவுகளின் அடிப்படையில் அவனுடைய புத்தி உருவாகிறது. புத்தி என்பது ஒருவனுடைய நினைவுகளின் அடிப்படையில் உண்டாகும் மூளையின் ஒரு நிலை. இதுதான் மனிதனின் எந்தவொரு செயலுக்கும் வழி காட்டுகிறது. இந்தப் புத்திதான் ஒருவனுடைய நடைமுறை வாழ்க்கையை வழி நடத்துகிறது. இந்தப் புத்தி எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கிறதா என்றால் இல்லை. ஏன் என்று யோசிப்போமா?

தொடரும்…

சனி, 17 செப்டம்பர், 2011

கல்யாண சீர்கள் – இணைச்சீர்.


இது ஒரு மீள் பதிவு.


இந்த சீர் சில ஊர்களில் மிக முக்கியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம் இதில் வரவு இருக்கிறது. பொதுவாக எல்லோருடைய வீட்டிலும், பெண் பிள்ளைகள் இருந்தால் செலவுதான். அவர்களுக்கு துணிமணிகள், நகை நட்டுகள், திரட்டிச்சீர், கல்யாணம், வளைகாப்பு, பேருகாலம், குழந்தைக்கு பேர் சூட்டுதல், குழந்தைக்கு காது குத்து, அதுக்கு திரட்டிச்சீர், கல்யாணம், இப்படி செலவுகள் தொடர்கதையாகப் போய்க்கொண்டிருக்கும். இந்த தொடர் கதையில் பெண் பிள்ளைகளிடமிருந்து வரும்படி பெருவதற்கு உண்டானது இந்த இணைச்சீர் ஒன்றுதான். அதுவும் வீட்டில் ஆண் பிள்ளை இருந்தால் மட்டுமே நடக்கக் கூடியது.

இணைச்சீர் செய்வது மாப்பிள்ளையின் சகோதரி. வசதியுள்ளவர்கள் இதற்காக ஒரு தனி மணவறை போடுவார்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை. சீர் செய்யும் இடத்தை சாணிபோட்டு வளிச்சு கோலம் போட்டு புள்ளார் புடிச்சு வச்சு பூசை சாமானெல்லாம் எடுத்து வைக்கோணும். அப்பறம் பொறந்தவ தன்னோட சீர்வரிசைகளை ஒரு போளமூடியில வச்சு அங்க புள்ளாருக்கு முன்னாடி கொண்டுவந்து வச்சுடுவாள். சீர் வரிசை என்னன்னா மாப்பிள்ளைக்கு வேட்டி, துண்டு, சட்டை, அப்பறம் எதாச்சும் நகை இல்லைன்னா பணம், இதெல்லாம் இருக்குமுங்க. அப்புறம் மாப்பிள்ளயக்கூட்டீட்டு வந்து அங்க ஒரு மணையப் போட்டு உக்கார வைப்பாங்க. சீர் பண்ற சகோதரி பண்ணாடி தொணை மாப்பிள்ளையா பக்கத்தில நிப்பாருங்க.

சீர்க்காரம்மா இந்த சீர் சாமான்களுக்கு தண்ணி சுத்திப்போட்டு எடுத்து அந்த சகோதரி கையில குடுப்பாங்க. அந்தப்புள்ள அந்தப்போள மூடிய தலைல வச்சுட்டு மாப்பிள்ளையை மூணு சுத்து வலமாச் சுத்து வந்து அதைய மாப்பிள்ள கிட்ட கொடுக்குமுங்க. மாப்பிள்ள அந்த புதுத்துணிகள ரூம்ப்புக்கு எடுத்துட்டுப் போயி உடுத்திட்டு வந்து மணையில உக்காருவாருங்க. அப்பறம் பொறந்தவ நகையை எடுத்து மாப்பிள்ளைக்கு போடுவாங்க. நகை இல்லேன்னா பணத்தை எடுத்து கையில கொடுப்பாங்க. நகை/பணத்தை வாங்கிட்டு மாப்பிள்ளை சும்மா இருக்கு முடியுமாங்க. அவரும் தன் பங்குக்கு சகோதரிக்கு நகையோ பணமோ குடுப்பாருங்க. அப்பறம் பூசையப் பண்ணி சாமி கும்பிட்டுட்டு ரூம்ப்புக்கு போயிடுவாங்க.

இந்த சீரு நடக்கறப்போ ஒறம்பறைங்க நெறைய பேரு ஊட்டுக்குப்போயிருப்பாங்க. இதைப்பாக்கறதுக்கு கொஞ்சம் பேருதான் இருப்பாங்க. இவ்வளவுதானுங்க இணைச்சீரு.