செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கொடுப்பினை!இந்த வார்த்தை மனிதனின் வாழ்வோடு ஒன்றிப் பிணைந்தது. மேலோட்டமாக இந்த வார்த்தையின் பொருள் எளிதானதுதான். நமக்கு விதிக்கப்பட்டது என்னவோ அதை கொடுப்பினை என்று சொல்லி விடுகிறோம். ஆழ்ந்து சிந்தித்தால்தான் இந்த வார்த்தையினுடைய முழு அர்த்தமும் விளங்கும்.


கொடுத்துவைத்த வினை அதாவது வினைப்பயன் என்பதுதான் சரியான விளக்கமாக அமையும். நாம் நம் முன் ஜன்மங்களில் செய்த நல்வினை தீவினைகளின் பலன்களை அனுபவிக்கவே இந்த ஜன்மம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது இந்து சமய நம்பிக்கை. இதன் கூட நம் முன்னோர்கள் செய்த வினைப்பயன்களும் நம்மைத் தொடரும் என்றும் இந்து சமயம் நம்புகிறது.


இவைகளை விஞ்ஞானத்திற்கு பொருந்தாத மூட நம்பிக்கைகள் என்று பலர் விவாதிக்கிறார்கள். காரணம் இதுதான், அதாவது வினைப்பயன்களின், செயல்பாடுகள் நமக்குப் புரியும்படியாக நடப்பதில்லை. எந்தக் கோட்பாடும் நாம் அறிந்த விஞ்ஞானத் தத்துவங்களுக்குள் அடங்கவில்லையானால் அது உண்மையல்ல என்று நாம் நமது மனதை எண்ணப் பழக்கிவிட்டோம்.


ஒரு காலத்தில் பூமி உருண்டை என்று சொன்ன விஞ்ஞானிகளை அந்தக் காலத்து மதவாதிகள் என்ன செய்தார்கள் என்று சரித்திரம் படித்தவர்களுக்கு நினைவு இருக்கலாம். பிற்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்று இப்போது நாம் புரிந்துள்ளோம்.


நாம் செய்யும் செயல்கள் யாவும் நம் புத்தியில் உதித்து, மனதில் எண்ணங்களாக உருப்பெற்று, நம் உடலால் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு செயல்களும் காரண-காரியத் தொடர்பு இருக்கிறது. புத்தி காரணமாகவும், உடல் காரியமாகவும் இயங்குகின்றன.


இந்தக் கோட்பாட்டின்படி நாம் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை எதிர்பார்த்து செய்யப்படுகின்றன. ஆனால் எல்லாக் காரியங்களிலும் நாம் எதிர்பார்த்த பலனே விளைகிறதா? இல்லையே? ஏன் அப்படி நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று நாம் நம் புத்தியைக் கொண்டு யோசித்தால் ஒரு விடையும் கிடைப்பதில்லை.


வீட்டைவிட்டு வெளியூர் செல்லும் எவரும் நாம் விபத்தில் மாட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டுப் புறப்படுவதில்லை. வாகனம் ஓட்டுபவரும் விபத்து ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாகனத்தை ஓட்டுவதில்லை. அப்படி இருக்க, தினமும் ஏன் விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர்கள் மடிகின்றன. மனித புத்திக்கு அப்பாற்பட்ட ஒரு செயல் என்றுதானே கருதவேண்டியிருக்கிறது.


அன்றாட வாழ்க்கையில் பல முடிவுகள் எடுக்கிறோம். ஆனால் அதன் விளைவுகள் நாம் எதிர்பார்த்தபடியே அமைவதில்லை. ஏன்? 


இதைத்தான் பூர்வ ஜன்ம பலன் அல்லது வினைப்பயன் என்று ஒரு சமாதானம் சொல்லிக் கொள்ளுகிறோம். இது உண்மையாக இருக்கலாம் அல்லது மனிதனின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் எப்படியோ மனித மனம் இந்த தத்துவத்தை ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைகிறது. இந்த சமாதானம் அடைதல்தான் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது.


மனம் சமாதானமடையாமல் ஒவ்வொரு செயலின் விளைவையும் எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் ஒருவனுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.


உண்மையோ, பொய்யோ, இந்த கொடுப்பினைத் தத்துவம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகிறது.
6 கருத்துகள்:

 1. நாம் செய்யும் செயல்கள் யாவும் நம் புத்தியில் உதித்து, மனதில் எண்ணங்களாக உருப்பெற்று, நம் உடலால் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு செயல்களும் காரண-காரியத் தொடர்பு இருக்கிறது. புத்தி காரணமாகவும், உடல் காரியமாகவும் இயங்குகின்றன...//

  நன்றாக சொல்லி விட்டீர்கள் சார்.
  நம் முன்னோர்கள் இதை தான் காரணம் இல்லாமல் காரியம் இல்லை, செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான். என்று சொல்லி இருக்கிறார்கள்,

  நீங்கள் சொல்வது போல் கொடுப்பினை தத்துவம் வாழ்க்கைக்கு மிக அவசியம் தான் சார்.

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான். கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தால் நடப்பது எதுவுமே நம் கையில் இல்லை! ஊழ்வினை முன்வந்து உறுத்துமாம்!

  அதுக்காகத்தான் இந்த பிறவியில் நல்லதே நினை, நல்லதே செய் என்று முன்னோர் சொல்லி வச்சுருக்காங்க. அட்லீஸ்ட் வரும் பிறவியிலாவது நிம்மதியா இருக்கலாம். அதே சமயம் இப்பிறவியில் நல்லது நினைத்து, நல்லதே செய்வதால் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழலாம்! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்:-)))))

  பதிலளிநீக்கு
 3. சரியா சொன்னீங்க.வினைப்பயன் இல்லாமல் வாழ்வது கடினம்.சமாதானம் ஆவது கடினம்

  பதிலளிநீக்கு
 4. //மனம் சமாதானமடையாமல் ஒவ்வொரு செயலின் விளைவையும் எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் ஒருவனுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.//

  உண்மை சார். உங்கள் அனுபவம் வார்த்தைகளாய் வந்துள்ளது

  பதிலளிநீக்கு
 5. \\\\இந்த சமாதானம் அடைதல்தான் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது.\\\ ஆம் ...

  பதிலளிநீக்கு
 6. //மனம் சமாதானமடையாமல் ஒவ்வொரு செயலின் விளைவையும் எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் ஒருவனுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.


  உண்மையோ, பொய்யோ, இந்த கொடுப்பினைத் தத்துவம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகிறது.//

  ஆம். சிந்திக்க வைக்கும் வரிகள் தான்.

  பதிலளிநீக்கு