வியாழன், 12 ஏப்ரல், 2012

வருமான வரி இலாக்கா


இந்திய நாட்டின் கற்பக விருக்ஷமே வருமான வரி என்று சொல்வதுண்டு. என்னைப் போல் ரிடைர்டான அரசு ஊழியர்களுக்கு சிறிது வருமான வரி கட்டவேண்டியுள்ளது. இந்த வயசான கிழடுகளுக்கே உண்டான ஒரு பொது குணம், எந்த வேலையாயிருந்தாலும் அதை உடனே முடித்து விட வேண்டும் என்பதுதான்.

அது ஏன் என்று யோசித்தபோது எனக்குத் தோன்றியது என்னவென்றால், நாளைக்கு என்று ஒரு வேலையைத் தள்ளிப்போட்டால் நாளைக்கு நாம் இருப்போமென்ற உத்திரவாதம் இல்லாததுதான். அதனால்தான் இந்தக்கிழடுகள் ஒவ்வொன்றுக்கும் அப்படிப் பறக்கின்றன.

நானும் இன்னும் இரண்டு நண்பர்களும்தான் வருடாவருடம் வருமான வரி ஆபீசுக்குப் போய் வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்துவிட்டு வருவோம். ஒரு வருடமாவது அந்தந்த வருடத்துக்கான படிவங்கள் கிடைத்தது இல்லை. பழைய படிவங்களிலேயே வருடத்தை மாற்றி எழுதிக் கொடுப்போம். அவர்களும் வாங்கிக்கொள்வார்கள்.

அங்கே படிவங்கள் கொடுக்கும் இடத்தில் போய்ப் பார்த்தால் போன வருடத்திய படிவங்கள் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கும். அங்கிருப்பவரிடம், ஐயா, இந்த வருடத்திய படிவம் எப்போது கிடைக்கும் என்று கேட்டால் அவர் மிகவும் அமைதியாக, "அடுத்த வருடம்" என்று பதில் சொல்லுவார்.

இந்த வருடமும் நாங்கள் மாமூலாக பழைய படிவங்களில் வருடத்தை மாற்றி மற்ற விவரங்களையும் எழுதிக் கொண்டு வருமான வரி அலுவலகத்திற்குப் போனோம். போன வருடம் தாலூக்கா ஆபீஸ் மாதிரி காட்சி தந்த வரிமான வரி அலுவலகம் இந்த வருடம் மேக்கப் போட்ட மணப்பெண் மாதிரி ஜொலித்தது. படிவங்களை வாங்குவதற்கு தனியாக கவுன்டர்கள். அதற்குப் பின்னே 18 லிருந்து 20 வயதிற்குள் இளம் பெண்கள். வருபவர்கள் உட்காருவதற்கு வசதியான சோபாக்கள். குளிரூட்டும் சாதனங்கள். இப்படியாக அலுவலகம் ஜொலித்தது.

நாங்கள் அப்படியே மயங்கிப் போனோம். கொஞ்ச நேரம் இந்த சூழ்நிலையை அனுபவித்தோம். பிறகு அந்த அழகிகளில் ஒருத்தியை அணுகி எங்கள் வருமான வரி படிவத்தைக் கொடுத்தோம். அந்த நாரீமணி அதைக் கையில்கூட வாங்காமல் ஏதோ மலம் துடைத்த குப்பைக் காகிதத்தைப் பார்க்கிற மாதிரி பார்த்துவிட்டு, இந்தப் பழைய படிவத்தில் கொடுத்தால் வாங்க மாட்டோம், இந்த வருடம் வந்துள்ள புதிய படிவத்தில் கொடுத்தால்தான் வாங்கிக்கொள்வோம் என்று திருவாய் மலர்ந்தருளினாள்.

நாங்கள், "சரீங்க, புது படிவம் எங்கு கிடைக்கும்" என்று கேட்டோம். அதற்கு அந்த நாரீமணி சொல்லிற்று, "புது படிவம் இன்னும் அச்சிடப்படவில்லை, எப்படியும் வருவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்" என்றது. நாங்கள் விடாக்கண்டர்களாக, அப்படியானால் "இப்பொழுது என்ன செய்வது"  என்று கேட்டோம்.

உங்களுக்கு அவசரமாக வேண்டுமென்றால் இன்டர்நெட்டிலிருந்து டவுன்லோடு செய்து படிவங்களைத் தயார் செய்து கொள்ளலாம். இதோ இங்கே டவுன்லோடு செய்ய வேண்டிய இன்டர்நெட் அட்ரஸ் எழுதிப்போட்டிருக்கிறோம் என்ற சொன்னார்கள். அப்படியே அங்கு எழுதிப்போட்டிருந்தார்கள்.

இங்க பக்கத்தில் ஏதாவது இன்டர்நெட் சென்டர் இருக்கிறதா என்று கேட்டோம். எங்களுக்குத் தெரியாது என்று பதில் வந்தது. நாங்கள் அக்கம் பக்கத்தில் சுற்றிப் பார்த்தோம். இருந்த ஒன்றிரண்டு சென்டர்களில் கரன்ட் இல்லையென்று பதில் வந்தது. சரி, வீட்டுக்குப்போய் நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு பண்ணிக் கொள்ளலாம் என்று வீட்டுக்கு வந்து (வீட்டில் யூபிஎஸ் இருப்பதால் கரன்ட் பற்றி கவலை இல்லை) டவுன்லோடு பண்ணி படிவங்களில் எல்லாவற்றையும் எழுதி அவசர அவசரமாக வருமான வரி அலுவலகத்திற்குப்போனோம்.

மணி பிற்பகல் 1.10 ஆகிவிட்டது. நாரீமணிகளுக்கு உணவு இடைவேளை 1 லிருந்து 2 வரைக்குமாம். அங்கு எழுதிப் போட்டிருக்கிறார்கள். நாங்கள் இதை முதலில் கவனிக்கவில்லை. என்ன செய்யமுடியும்? நாங்களும் அங்குள்ள கேன்டீனில் சென்று சாப்பிட்டு விட்டுக் காத்திருந்தோம்.

இரண்டு மணி ஆனதும் ஒரு பத்து நிமிடம் கழித்துப் போய் படிவங்களை நீட்டினோம். வாங்கி பரிசோதித்தார்கள். பிறகு பெரிய மனது பண்ணி வாங்கிக்கொண்டு அக்னாலெட்ஜ்மெடன்டும் கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு பெரிய இமாலய சாதனை புரிந்த பெருமிதத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.

எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் இவ்வளவு பணம் வசூலிக்கும் ஒரு அரசுத் துறை இந்த மிக முக்கியமான படிவங்களைக் காலாகாலத்தில் அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்க முடியாதா? ஆனால் எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் நாம் வல்லரசாவது உறுதி.

8 கருத்துகள்:

  1. எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் நாம் வல்லரசாவது உறுதி.

    கனவு நன்வாக வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. இதுவே ஒரு மந்திரி சிபாரிசுடன் போயிருந்தால்.. உங்கள் கால்வலிக்குக்கூட வைத்தியம் செய்திருக்கலாம் அந்த வருமான வரி ஆபீஸில்... ஹிஹி.. போங்க பாஸ்...

    எப்ப பார்த்தாலும் வடைய, மிஸ் பண்றதே உங்க வேலையா போச்சு..!!!
    :-)

    பதிலளிநீக்கு
  3. ”நாளைக்கு என்று ஒரு வேலையைத் தள்ளிப்போட்டால் நாளைக்கு நாம் இருப்போமென்ற உத்திரவாதம் இல்லாததுதான். அதனால்தான் இந்தக்கிழடுகள் ஒவ்வொன்றுக்கும் அப்படிப் பறக்கின்றன...”

    யதார்த்தத்தை அழகாகச் சொல்லிருக்கீங்க...

    நான் அஞ்சல்துறையில் பணிபுரிந்ததால் பொதுமக்களுக்குப் படிவங்கள் வழங்குவதில் உள்ள நடைமுறை சிரமங்களை அறிந்திருக்கிறேன். வேலை கிடைத்தபின் ஆகாயத்தில் பறப்பதாக நினைக்கும் ஒருசில அலுவலர்களாலும், முக்கிய பதவிகளில் பொறுப்பற்றவர்கள் அமர்ந்திருப்பது இம்மாதிரியான பிரச்சினைகளுக்குக் காரணமாய் அமைவது கண்கூடு, படிவங்களை வழங்கும் அலுவலர்கள்தாம் கடைசியில் பொதுமக்களிடம் கெட்டபெயர் வாங்கிக்கொள்கிறார்கள்... பாவம்...

    பொதுமக்களுக்கான இம்மாதிரிப் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவிடவும்.

    நன்றி. வணக்கம்.

    அன்புடன்,

    சிவா
    தெற்கு சூடான்,
    ஆஃப்ரிக்கா.
    nirmalshiva1968@gmail.com

    பதிலளிநீக்கு
  4. கலிபோர்னியா மாகாணத்துல உங்களுக்கு W2 (நம்ம பார்ம்-16 தான்) மட்டுமே இருக்குமானால் அரசே படிவத்தையும் நிரப்பி அனுப்பி வைக்கும். உங்க வேலை கைச்சாத்திட்டு திருப்பி அனுப்புவதே. இத்திட்டம் அங்கு பரவலாக விரிவாக்கப்படுகுறது. ஒபாமா நாடு முழுமைக்கும் கொண்டு செல்ல விழைகிறார். அது நாடு.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கேள்வி.... அரசே இதனை விநியோகம் செய்யலாம்!!

    ஆனால், அதை விட எளிய வழி ஒன்று உள்ளது ஐயா.
    தற்போது இணையத்திலேயே (Online) உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம் ஐயா!

    பதிலளிநீக்கு