சனி, 14 ஏப்ரல், 2012

உடுமலையில் வாகன விபத்து


கேரளா மாநிலம் கண்ணனூரிலுருந்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் பழனி, கொடைக்கானல், தேக்கடி ஆகிய ஊர்களுக்குச் சுற்றுலா புறப்பட்டிருக்கிறார்கள். சொந்த வாகனம். குடும்ப அங்கத்தினர் ஒருவர் டிரைவர்.

இரவு சாப்பிட்டுவிட்டு புறப்பட்டிருக்கிறார்கள். சுமார் 10 மணிக்குப் புறப்பட்டிருக்கலாம். வண்டி ஓட்டினவர் அன்று முழுவதும் பகலில் தூங்கியிருக்கமாட்டார் என்று நம்புகிறேன். கண்ணனூரிலிருந்து உடுமலை சுமார் 350 கி. மீ. இருக்கும்.


இரவு தூங்காமல் 7 மணி நேரம் வண்டி ஓட்டுவது தூக்கம் விழித்து நன்கு பழக்கமான டிரைவர்களால் மட்டுமே முடியும். இளமை வேகத்தில் நான் தூக்கம் முழித்து ஓட்டுவேன் என்கிற அகம்பாவத்தினால் பலர் வண்டி ஓட்டுவது உண்டு. இந்த டிரைவரும் அப்படிப்பட்ட ஒரு அகம்பாவத்தினால் வண்டி ஓட்டியிருக்கவேண்டும்.


அதிகாலை 4 மணிக்கு யாருக்கும் தூக்கத்தில் கண் சொருகும். இதை உணர்ந்து வண்டியை நிறுத்தி ஓரிரு மணி நேரம் ஓய்வெடுத்திருக்கவேண்டும். அதை சட்டை செய்யாமல் ஓட்டி தூக்கக் கலக்கத்தில் பாலத்தில் தடுப்புக் கம்பிகளில் மோதி அந்தக் கம்பிகளைத் தாண்டி பாலத்தில் விழுந்து பாதி பேர் மேலுலகம் சென்று விட்டார்கள்.


இதில் குற்றம் புரிந்தவர்கள் ஓட்டுனர் மட்டும் இல்லை. கூட பயணம் செய்த பெரியவர்கள் அனைத்துப் பேர்களும் குற்றவாளிகளே. ஓட்டுனர் சோர்வடையும்போது எச்சரிக்கை செய்து ஓய்வெடுக்கச் செய்திருக்க வேண்டும்.


இந்த சம்பவத்தை விதியின் விளையாட்டு என்பதா அல்லது மக்களின் முட்டாள்தனம் என்பதா?


புது வருடத்திலாவது மக்கள் விவேகத்துடன் செயல்படுவார்கள் என்று நம்புவோமாக!

11 கருத்துகள்:

 1. விழிப்புணர்வுப் பகிர்வு.

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. வேகம் விவேகமல்ல!

  ஓய்வு மிக அவசியம் ஓட்டுனர்களுக்கு....

  எப்போது தான் புரியும்! :(

  பதிலளிநீக்கு
 3. ஓட்டுனர் சோர்வடையும்போது எச்சரிக்கை செய்து ஓய்வெடுக்கச் செய்திருக்க வேண்டும்.

  எத்தனை பட்டாலும் புந்துகொள்ள மறுப்பது வருத்தமளிக்கிறது..

  பதிலளிநீக்கு
 4. உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் கார் பிரயாணம் செய்ய வேண்டி இருக்கிறது..
  இதாவது அசாதரணம்..ஆனால் நாங்கள் டெய்லி ஆஃபீஸ் போகும் போது, அந்த தஞ்சை ரோடு இருக்கிறதே..அப்பப்பா...’டேஞ்சர் ரோடு’ என்று தான் அதற்கு நாமகரணம்! இந்த டவுன் பஸ் காரர்கள் போட்டி இருக்கிறதே..போட்டி, போட்டுக் கொண்டு மந்தையில் ஆடு ஏற்றுவதைப் போல், மக்களை ஏற்றி..ஸ்டாப் வந்தால் இறங்குவதற்குள் அந்த பேசஞ்ஜர் படும் பாடு சொல்லி மாளாது! எல்லாம் அந்த பாழாய்ப் போன கலெக்‌ஷன் பேட்டா படுத்தும் பாடு! ஆட்டோ ஓட்டுவதைப் போல், பஸ்ஸை ஓட்டுகிறார்கள்...சின்னஞ்சிறு பையன்கள் கைகளில் ஸ்டீயரிங்கைக் கொடுத்து, அரபு நாடுகளில் ஒட்டக ரேஸ் நடப்பது போல் கன ஜோராக நடக்கிறது சாரி...பறக்கிறது பஸ்கள்!
  உங்கள் ஊர் போல எங்க ஊர்லேயும் ஒரு ரேஸ் கோர்ஸ் ரோடு உண்டு....
  அட, நம்ம திருச்சி - தஞ்சாவூர் ரோடு தாங்க அது!

  பதிலளிநீக்கு
 5. பரிதாபமாக இருக்கிறது. ஓய்வு எடுத்து விட்டு ஓட்டியிருக்கலாம். எல்லோருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 6. பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி...

  வாகன ஓட்டுனருக்குத் தூங்குவதற்குப் போதிய நேரம் கொடுக்கவேண்டும். வேகமாக ஓட்டுமாறு வாகன ஓட்டுனரை நம் குழந்தைகள் தொல்லை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டுக்கு என்று வாகன ஓட்டுனருக்குப் பணமாகக் கொடுக்காமல், நம்முடன் அல்லது நம் கண்முன்பாக வாகன ஓட்டுனரை உரிய நேரத்தில் சாப்பிடவைக்க வேண்டும். மேலும், அவர் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது நாம் Side Drive செய்யாமல் இருப்பது (அதாங்க, அவருக்கே வண்டி ஓட்டுவதை நாம் சொல்லிக்கொடுப்பது) இவையெல்லாம் வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவும்.

  நான் சென்ற ஆண்டு தமிழகம் வந்திருந்தபோது குடும்பத்துடன் பெங்களூர் மற்றும் மைசூர் போயிருந்தோம். நம் எல்லாருடைய உயிரும் அவர் கையில் அல்லவா இருந்தது... அவரை நன்றாகக் கவனித்துக் கொண்டோம்...

  அன்புடன்,

  சிவா,
  தெற்கு சூடான்,
  Africa

  nirmalshiva1968@gmail.com

  பதிலளிநீக்கு
 7. ஒரு நொடியில் வாழ்க்கையை தொலைக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. ஆம் ஓட்டுனரை சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. நாம் பலரும் அந்த விசயத்தில் தவறுகிறோம்

  பதிலளிநீக்கு
 9. ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை

  வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

  * பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

  * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

  * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

  * ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

  * ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

  * ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

  * கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

  * நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

  * வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்து விடும்.

  * கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

  * நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

  * நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

  For the Information of Friends here

  அன்புடன்,

  சிவா,
  தெற்கு சூடான்,
  Africa
  nirmalshiva1968@gmail.com

  பதிலளிநீக்கு
 10. "மறுமொழிகள்" மொத்தத்தையும் ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்தாமாதிரி, முழுக்க முழுக்க உங்க ஆதிக்கம்! என்ன நடக்குது இங்க! எதாவது அண்டர்கிரௌண்ட் அண்டர்ஸ்டான்டிகா?

  பதிலளிநீக்கு