புதன், 11 ஏப்ரல், 2012

திருட்டு மாங்காய்க்கு சுவை அதிகம்.



இது மனிதனின் மனப்பாங்கைக் குறிக்கும் ஒரு பழமொழி. எவ்வளவுதான் ஒருவனுக்கு செல்வம் இருந்தாலும் இன்னும் ஏதாவது கிடைத்தால் நன்றாயிருக்குமே என்றுதான் அவன் சிந்தனை போகும். இந்தப் பேராசையைக் குறிக்கும் விதத்தில் சொல்லப்பட்ட பழமொழிதான் இது.

இந்தப் பேராசையை நம் அரசியல்வாதிகள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இலவசங்கள் என்ற திருட்டு மாங்காய்களை அவர்கள் பக்கம் வீசுகிறார்கள். மக்களும் அந்த இலவசங்களுக்கு மயங்கி அவர்களைப் பதவியில் அமர்த்துகிறார்கள்.

இது பல காலமாக நமது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. தமிழன் தன்மானம் மிக்கவன் என்று ஏடுகளில் வேண்டுமானால் மார் தட்டிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் இலவச வேட்டி சீலைகளுக்காக உயிரையும் விடுபவன்தான் தமிழன்.

இந்த இலவசங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அதை அறிந்து அவனை வீழ்த்துவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச யாரும் இல்லை. நம் நாட்டில் லஞ்சம் உருவானது இப்படித்தான்.

சிலருக்கு வேட்டி சீலை கொடுத்தால் போதும். சிலருக்கு பிரியாணியும் குவார்ட்டரும் வேண்டும். ஊட்டுப் பொம்பளைகளுக்கு டி.வி. பொட்டி போதும். சில தொரைகளுக்கு 5 ஸ்டார் ஓட்டலில் ரூம் போடவேண்டியிருக்கும். இப்படி பல வகைகளில் திருட்டு மாங்காய்களை அனுதினமும் ருசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.





3 கருத்துகள்: