கடவுள் தத்துவம் எப்படி ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்த விஷயமோ, அதே மாதிரி ஜோசியமும் ஒவ்வொருவருடைய நம்பிக்கையைப் பொருத்த விஷயம்.
ஜோசியம் உண்மையா, பொய்யா என்பதைவிட ஜோசியம் மனித வாழ்வில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது, ஏன் மக்களுக்கு ஜோசியம் அவசியப்படுகின்றது என்பதுதான் சிந்திக்கத் தகுந்த பொருள்.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் அனைத்தும் பலவிதமான கதிர்வீச்சுகளை வெளிப்படுத்துகின்றன. இவை மனிதனை பல வகையில் பாதிக்கின்றன. கண்ணுக்குத் தெரியும் பாதிப்புகள், கண்ணுக்குத் தெரியாத பாதிப்புகள் இரண்டும் இதனுள் அடக்கம். இந்த பாதிப்புகள் ஒவ்வொருவருக்கும், அவரவர்கள் ஜாதகப்பிரகாரம் வேறுபடுகின்றன என்பதுதான் ஜோதிடத்தின் அடிப்படை சித்தாந்தம்.
இந்த வேறுபாடுகளை, ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்தி வைத்திருக்கிறது என்று ஜோசியர்கள் ஆணித்தரமாகக் கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். இந்தக் கருத்தை தீவீரமாக ஆதரிக்கும் சாதாரண மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் ஜோசியத்தை நம்பாதீர்கள் என்று சொன்னால், சொன்னவர்களை அடிக்க வருவார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை இந்த ஜோசியர் அப்படியே புட்டுப்புட்டு வைத்தார் என்று சொல்பவர்கள் அநேகம். ஆனால் எதிர்காலத்தில் நடப்பவைகளைப் பற்றி அவர் சொன்னதெல்லாம் பலித்ததா என்று கேட்டால் மழுப்புவார்கள். நம் வாழ்வில் நடந்தவைகள்தான் நமக்கே தெரியுமே, அதை அந்த ஜோசியன் வாயால் கேட்பதில் என்ன பயன்? ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதுவும், நம்புவதும் என்னவென்றால் – நம் கடந்த காலத்தை இவ்வளவு துல்லியமாக சொல்பவன், எதிர்காலத்தைப் பற்றி சொல்வதில் பாதிக்குப் பாதியாவது பலிக்காதா என்ற நம்பிக்கைதான்.
சரி, அவன் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அதனால் என்ன பயன் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஜோசியத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம்- இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியுமல்லவா? வழியில் உள்ள குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம் அல்லவா? அப்படி எல்லாத் தடங்கல்களையும் ஜோசியம் மூலம் தாண்டி விடலாம் என்று வைத்துக் கொண்டால் ஏன் ஜோசியத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் வருகிறது?
இதற்கு அவர்கள் சொல்லும் பதில் - ஜோசியன் சொன்ன பரிகாரத்தை நான் சரியாகச் செய்யவில்லை என்பதாகும். ஜோசியம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கிவிட முடியும் என்றால் இப்போதுள்ள ஜோசியர்கள் போதுமா? தவிர அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?
இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டேதான் இருக்கும். மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்கள். அவர்களுக்கு ஜோசியம் தேவையில்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்றுகோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்.