சென்னையிலிருந்து முதலில் ஹைதராபாத் போனோம். அங்கு ஹைதராபாத் ஸ்டேஷனில் எங்கள் கோச்சை நிறுத்தினார்கள். அது ஒரு சின்ன ஸ்டேஷன். அங்கு நிறுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அங்கிருந்து மும்பை விக்டோரியா ஸ்டேஷனுக்குப் போகும் ரயிலில் இந்தக் கோச்சைச் சேர்க்கவேண்டும். அதற்கு ஜெனரல் மேனேஜர் ஆபீஸ் ஆர்டர் வேண்டும் என்றார்கள்.
நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டு இருப்பது
என்னவென்றால், இன்ஜினும், டிரைவரும், கோச்சுகளும் இருந்தால் ரயில் ஓடும் என்றுதானே நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அது எவ்வளவு தவறான கருத்து என்பது எனக்கு அங்குதான் தெரிந்தது. ஜெனரல் மேனேஜர் ஆபீஸ் என்பது வழக்கமாக எல்லா ஊர்களிலும், ஸ்டேஷன் சப்தம் கேட்காமல், ஸ்டேஷன் நாற்றங்கள் எட்டாமல், ஐந்து கி.மீ. தூரத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த ஜெனரல் மேனேஜர் ஆபீஸில் ஒரு மூலையில் “அசிஸ்டன்ட் கமெர்ஷியல் கிளார்க்” என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் அனைத்து ரயில்களையும் ஓட்டுபவர். ரயில் இன்ஜினில் அவர் தன் ஆயுளில் ஒரு நாள்கூட ஏறிப் பார்த்திருக்க மாட்டார். ஆனாலும் அவர் ஆர்டர் போடாவிட்டால் ஒரு ரயிலும் ஓடாது. இது நடைமுறை உண்மை. அவர்தான் அந்த ஸ்டேஷனில் இருக்கும் எல்லா கோச்சுகளுக்கும், (எல்லா ரயில் கோச்சுகளுக்கும் நெம்பர் உண்டு, பார்த்திருப்பீர்கள்). இன்ஜின்களுக்கும் கணக்கு வைத்திருக்கிறார். அந்த ஸ்டேஷனிலிருந்து என்னென்ன ரயில்கள், எந்தெந்த ஊர்களுக்கு, எந்தெந்த நேரங்களில் புறப்படுகின்றன என்பது அவருக்கு மனப்பாடம். அந்த ரயில்களுக்கு எந்த கோச்சுகள், எந்த வரிசையில் இணைக்கப்படவேண்டும், எத்தனை மணிக்கு பிளாட்பாரத்திற்கு அனுப்பவேண்டும் என்று ஆர்டர் போட்டு, ஷண்டிங்க் யார்டுக்கு அனுப்பினால்தான் அந்த ரயில் குறித்த நேரத்திற்கு புறப்படும். அவர் ஏதாவது சொதப்பி விட்டால் அவ்வளவுதான், அன்று அந்த ரயில் புறப்படாது. ஜெனரல் மேனேஜர் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
இவரிடம் போய், நாங்கள் இந்த ஊரிலிருந்து, இன்ன ரயிலில், ஸ்பெஷல் கோச்சில், இன்று வந்திருக்கிறோம். இத்தனாம் தேதி, இன்ன ரயிலில் இன்ன ஊருக்குப் போக வேண்டுமென்று சொன்னால், அது பற்றிய ஆர்டர் வந்திருக்கிறதா என்று பார்ப்பார். நாம் டூர் புரொக்ராம் போட்டு, ரயில்வே அப்ரூவல் வாங்கியிருக்கும் ஊரிலுள்ள ரயில்வே ஜெனரல் மேனேஜர் ஆபீசில் இருந்து, நம் டூர் முழுவதற்கும் உள்ள எல்லா விபரங்களையும் சம்பந்தப்பட்ட எல்லா ஸடேஷன்களுக்கும் (அதாவது அந்தந்த ஜெனரல் மேனேஜர் ஆபீசுக்கு) அனுப்பியிருப்பார்கள். இந்த ஆர்டரை அந்த கிளார்க் வைத்திருப்பார்.
அதைப் பார்த்து, நாம் சொலும் விபரங்களும், அந்த ஆர்டரில் இருக்கும் விபரங்களும் ஒத்துப் போனால், சரி அப்ளிகேஷன் எழுதிக் கொடுங்கள் என்பார். நம் கல்லூரி லெட்டர் பேடில் அப்ளிகேஷன் எழுதி, அதற்குண்டான காணிக்கையுடன் கொடுத்து விட்டால் நம் வேலை முடிந்தது. சரி, நீங்கள் போகலாம், நான் ஆர்டர் அனுப்பிவிடுகிறேன், என்பார். நம் கோச், நாம் போகவேண்டிய ரயிலில் சேர்ந்து விடும். இந்த நடைமுறையைச் சரியாக கடைப்பிடிக்காமல், எங்களுக்கு முன் சென்ற இரண்டு குழுக்களும் ஹௌரா ஸ்டேஷனில் பட்ட அனுபவம் ஒரு தனிக்கதை (பின்னால் சொல்லுகிறேன்)
இந்த நடைமுறையைக் கண்டுபிடிக்க, முதல் ஊரில் மிகவும் கஷ்டப்பட்டோம். பிறகு அடுத்த ஊர்களில் சுலபமாக இந்த வேலையைச் செய்து முடித்தோம். இப்படி நாங்கள் ஹைதராபாத்தில் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்து முடித்த பிறகு, பம்பாய் (அந்தக்காலத்தில் அது பம்பாயாகத்தான் இருந்தது. இப்போதுதான் மும்பை) புறப்பட்டோம்.
கடவுளுக்கு பரிகாரம் ----> காணிக்கை ----> லஞ்சம் ---> கட்டப் பஞ்சாயத்து!
பதிலளிநீக்குஆரம்பம் சரியில்லை; முடிவும் அப்படிதான்! வாழ்க கடவுளுக்கு பரிகாரம் aka [also known as] லஞ்சம்!
உலகம் இப்படித்தான்!
நீக்குஓ.... இப்படி ஒரு கிளெர்க் இருக்காரா..... இரண்டு பதிவுகளிலும் இரண்டு விஷயங்கள் பின்னால் சொல்லுகிறேன் என்று நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். விரல் மடக்கிக் காத்திருக்கிறேன்!
பதிலளிநீக்குகாணிக்கை கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை...
பதிலளிநீக்குமெழுகுவர்த்தி போல் வாழ்ந்த / வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
நிறைய நடைமுறைகளை அறியத்தந்தமைக்கு நன்றிகள்..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇப்போதும் அந்த நடைமுறைகளில் மாற்றமில்லையா. ஆண்டுகள் பல ஓடிவிட்டனவே. ஆசிரியருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி.
நீக்குஇப்போதுள்ள நடைமுறை எனக்குத் தெரியவில்லை.
காணிக்கை - இது இல்லாத இடமே இல்லை.... :)
பதிலளிநீக்குநிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. தொடரட்டும் பகிர்வுகள்.