திங்கள், 17 செப்டம்பர், 2012

ஆசிரியர் மாணவனுக்கு புத்தி புகட்டின கதை – பாகம் 1

ஆசிரியராகப் பணிபுரிவது ஒரு கலை. அதுவும் 18 முதல் 22 வயதுள்ள மாணவர்களைக் கையாள்வது ஒரு சிரமமான காரியம். காளைப் பருவம். நல்லது கெட்டது புரியாத வயது. இவர்களை வழி நடத்துவது ஒரு சவால். ஆசிரியரிடத்தில் மாணவர்களுக்கு பக்தியும் மரியாதையும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தில் கவனம் இருக்கும். இந்த பக்தியும் மரியாதையும் முதலிலேயே இருக்காது. நாளாவட்டத்தில்தான் வரும்.

அதற்கு முதல்படியாக ஆசிரியரிடத்தில் பயம் இருக்கவேண்டும். இந்த இரண்டும் கெட்டான் வயதில் அவர்களை அடிக்கவா முடியும்? அப்படியானால் வேறெப்படி பயத்தை உண்டு பண்ண முடியும்? பரீட்சை பயம்தான். அந்த வாத்தியிடம் குறும்பு பண்ணினால் பெயில் பண்ணி விடுவார் என்ற பயம்தான் மாணவர்களை வகுப்பில் ஒழுங்காக இருக்க வைக்கும். நாளாவட்டத்தில் ஆசிரியர் மாணவர்களின் நலத்தில் காட்டும் அக்கறையை வைத்து பக்தியும் மரியாதையும் வரும்.

நான் கடைசி வருட மாணவர்களுக்கு மண்ணியல் பாடம் சொல்லிக்கொடுத்து வந்தேன். அந்தக் காலத்தில் படிப்பு முடித்தவுடன் எல்லோருக்கும் விவசாய இலாக்காவில் வேலை கிடைத்து விடும். ஆதலால் மாணவர்கள் அனைவரும் தகராறு இல்லாமல் பாஸ் பண்ணினால் போதும் என்று அடக்க ஒடுக்கமாக இருப்பார்கள். அதுவும் என் மாதிரி கண்டிப்பான ஆசிரியர் என்றால் இன்னும் கவனமாக இருப்பார்கள்.

முதல் வகுப்பு ஆரம்பிக்கும்போது நான் ஒரு நன்னூல் சூத்திரத்தைச் சொல்லி ஆரம்பிப்பேன்.

அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர்
தலை இடை கடை மாணாக்கரே.

அன்னப் பறவை பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்துண்ணுமாம். அது போல் மாணவர்களும் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதில் வேண்டாததை விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

“ஆ”, அதாவது பசு, மனிதர்கள் சாப்பிட முடியாத புல்லையும் பருத்திக்கொட்டையையும் தின்று, மனிதர்கள் விரும்பும் பாலைக் கொடுக்கிறது. அது போல் மாணவர்களும் வகுப்பில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களின் சாரத்தை எடுத்து மக்களுக்கு கொடுக்கவேண்டும். இப்படி இருப்பவர்களே நல்ல மாணாக்கர்கள்.

மண்ணில் எந்த அளவிற்கு உரம் போடுகிறீர்களோ அந்த அளவிற்குத்தான் பயிர்களின் விளைச்சல் இருக்கும். இந்த இடத்தில் எப்படி அந்தக் காலத்திலேயே மண்ணின் இயல்பு நன்னூலில் விளக்கப்பட்டிருக்கிறது பார்தீர்களா? நாம் படிக்கும் மண்ணியல் பாடத்திற்கும் நன்னூலின் இந்த சூத்திரத்திற்கும் உண்டான பொருத்தத்தை சிந்தியுங்கள் என்று மாணவர்களின் கவனத்திற்ககாக எடுத்துக் கூறுவேன். (மாணவர்கள் ஆசிரியரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியப்பார்கள்?!).

கிளி சொல்லிக்கொடுத்ததை மட்டுமே திருப்பிச் சொல்லும். சுயமாகப் பேசத்தெரியாது. இப்படி மண் போலவும் கிளி போலவும் இருப்பவர்கள் நடுத்தர மாணாக்கர்கள்.

ஆடு கண்ட தழைகளையெல்லாம் தின்னும். எருமை சேற்றை விரும்பி அதிலேயே உழலும். இல்லிக்குடம் (ஓட்டைக்குடம்) எதையும் தன்னிடம் வைத்துக் கொள்ளாது. நெய்யரி (பன்னாடை) கசடை வைத்துக்கொண்டு சாரத்தை (நெய்யை) விட்டுவிடும். அப்படி இருப்பவர்கள் கடை மாணாக்கராவர்.

இப்படி விளக்கம் கொடுத்துவிட்டுத்தான் முதல் வகுப்பை ஆரம்பிப்பேன்.
அடுத்து மாணவர்களின் மனதில் திகிலூட்டும் ஒரு எச்சரிக்கை சொல்லுவேன்.


நான் முதல் வகுப்பில் மாணவர்களுக்குக் கொடுக்கும் எச்சரிக்கை:

அன்புள்ள மாணவர்களே, நீங்கள் இப்போது உங்கள் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கிறீர்கள். இந்த வருடம் நன்றாகப் படித்து பாஸ் செய்து விட்டீர்களானால் அடுத்த வருடம் வேலையில் இருப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் அந்த நிலை மிக்க மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் என்னுடைய பாடத்தில் பாஸ் செய்ய ஒரு சுலபமான வழியைச் சொல்லிக்கொடுக்கிறேன். கேட்டுக்கொள்ளுங்கள்.

என்னுடைய வகுப்புக்கு 95 சதம் நீங்கள் வந்திருக்கவேண்டும். தியரி பரீட்சைக்கும் பிராக்டிகல் பரீட்சைக்கும் வந்தால் போதும். அவ்வளவுதான். பரீட்சையில் நீங்கள் எப்படி எழுதியிருந்தாலும் நீங்கள் பாஸாவதற்கு நான் கேரன்டி. நீங்கள் அதிக மார்க் வாங்க பிரியப்பட்டால் அது உங்கள் சாமர்த்தியம். அதற்கு உங்களை நீங்களே தயார் செய்து கொள்ளவேண்டும்.

அப்படியில்லாமல் என் வகுப்பிற்கு 50 சத வகுப்புகளுக்கு குறைவாக வந்திருந்தாலோ அல்லது வகுப்பிலோ, மாணவர் விடுதியிலோ அல்லது வெளியிலோ ஏதாவது வம்பு வழக்கு செய்தாலோ, நீங்கள் என் பாடத்தில் பாஸ் செய்ய மாட்டீர்கள்.

இது கொஞ்சம் கொடுங்கோல் ஆட்சி மாதிரி தெரிந்தாலும் மாணவர்களை நேர் வழியில் கொண்டு செல்ல இம்மாதிரி எச்சரிக்கைகள் மிகவும் உதவியாக இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த எச்சரிக்கையையும் மீறி ஒரு மாணவன், தான் மாணவர் மன்றத்தின் செயலர் என்கிற எண்ணத்தில் ஒரு முறை என்னிடம் முறை தவறி நடந்து கொண்டான். அப்புறம் என்ன? அவன் கதி என்ன ஆயிற்று என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்.

10 கருத்துகள்:

  1. கொங்கு நாட்டு தங்கங்களுக்கு தமிழ் அறிவு அதிகம் என்று எனக்கு நிரூபிக்கும் இரண்டாவது மனிதர் நீங்கள்...

    முதல் கொங்கு நாட்டு தங்கம் யார்?

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பதிவைப் படிக்கும்போது இறுதியாண்டில் வேளாண்மை விரிவாக்கம் பாடம் நடத்திய எங்களது பேராசிரியர் நினைவுக்கு வந்தார். தாங்களும் கண்டிப்பான பேராசிரியராக இருந்தீர்கள் என் அறியும்போது மகிழ்ச்சியே. அந்த மாணவனுக்கு எவ்வாறு புத்தி புகட்டினீர்கள் அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மாணவர்கள் ஆசிரியரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியப்பார்கள்?!).

    நாங்களும்தான் வியப்படைகிறோம் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. இதைப் படிக்கும் போது என்னையும் அறியாமல் பெஞ்ச் மேல ஏறி

    நின்னுட்டேன் !!

    ஆசிரியர்களுக்கு நினைவாற்றல் அதிகம் ! ஒரு முறை எங்கள்

    தமிழாசிரியரைப் பார்த்தோம்! அவர் என்னைப் பார்த்து ' என்ன தட்சிணா

    மூர்த்தி எப்டி இருக்கே ?' என்று சொல்ல, 'ஐயா நான் ராமமுர்த்தி தட்சிணா

    மூர்த்தி அல்ல ' என்று சொல்ல, சொல்ல ' என்னை பொறுத்த வரை நீ தட்சிணாமூர்த்தி' தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.வருடங்கள்

    அதிகமாக ஆகி விட்டதால் ஐயா மறந்திருப்பார் என நானும் விட்டு விட்டேன் .

    பிறகு தான் தெரிந்தது அவர் எதற்கு அப்படி சொன்னாரென்று !

    தமிழ் பீரியட் எப்பவும் காலை நான்காவது பீரியட் ! நான் மணி பன்னிரெண்டு ஆகி விட்டால், தெற்கில் உள்ள தலைகீழாய்

    கட்டி வைத்த தண்டவாளத் துண்டை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பேனாம்

    எப்போது மணி அடிப்பார்கள் என்று !

    அதனால் எனக்கு அவர் வைத்த காரணப் பெயர் அது !

    நான் மறந்து விட்டேன்.

    நாற்பது வருடமாகியும் அவர் மறக்கவில்லை !!

    பதிலளிநீக்கு
  5. மாணவர்களை எப்படி எல்லாம் வகைப்படுத்தி உள்ளீர்கள்... அந்தக் காலத்திற்கும் இன்றைக்கும் நிறைய வித்தியாசம்... ...ம்...

    பதிலளிநீக்கு
  6. \\ஆசிரியராகப் பணிபுரிவது ஒரு கலை. \\ எனக்கும் ஆசிரியரா வரணும்கிற ஆசை இருந்துச்சு சார், கொடுப்பினை இல்லை. நீங்கள் பதிவுகளை கொண்டு செல்லும் விதமே, நீங்க மாணவர்களுக்கு எப்படிச் சொன்னா புரியும் என்ற வித்தையைக் கற்ற நல்ல ஆசிரியராக என்பதைக் காட்டுகிறது சார்!! கலக்குங்க.

    பதிலளிநீக்கு
  7. மண்ணியல் எனும் புதுச்சொல் இன்று படித்தேன். இது விவசாயத்திற்கு கூறியுள்ளீர்கள்.
    நான் முதலில் புவியியல் என்று எண்ணிவிட்டேன். மிக சுவையாக இருந்தது. தங்கள் பதிவு. மகிழ்ந்தேன்.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு