செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஸ்டார் ஓட்டல் தில்லுமுல்லுகள்


ஸ்டார் ஓட்டல்கள் ஒரு காலத்தில் சாதாரண நடுத்தர மக்களின் எல்லைக்கு அப்பால் இருந்தன. ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. நடுத்தர வர்க்கத்தின் கல்யாண ரிசப்ஷன் முதலான நிகழ்ச்சிகள் அங்கு நடக்கின்றன. நான்கு பேர் சேர்ந்து ஒரு சிறிய பார்ட்டி வைப்பதானால் கூட அத்தகைய ஓட்டல்களில் வைக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்களிடம் பணம் இருக்கிறது.

ஸ்டார் ஓட்டல்களைப் பற்றி அந்தக் காலத்தில் சொன்னது. அங்கு சாப்பிடப் போவதென்றால் முதலிலேயே வீட்டிலோ அல்லது வேறு ஓட்டல்களிலோ அரை வயிறாவது சாப்பிட்டு விட்டுப் போகவேண்டும் என்பார்கள். காரணம், நீங்கள் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் ஏதாவது ஆர்டர் பண்ணின பிறகுதான் அந்த ஐட்டத்தை தயார் செய்ய ஆரம்பிப்பார்களாம். (அப்போதுதான் அந்த ஐட்டம் தயார் செய்ய சாமான் வாங்க கடைக்குப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு) அந்த ஐட்டம் வருவதற்கு குறைந்தது முக்கால் மணி நேரம் ஆகும். அதாவது அங்கு போவது நேரத்தைக் கழிக்கவே. காதலர்களுக்கு மிகவும் சௌகரியமான நடைமுறை.

சரி, இன்றைய நிலைக்கு வருவோம். உணவு தயாரிக்கத் தேவையான அனைத்து மளிகைப் பொருட்களும் காய்கறிகளும் இன்று தாறுமாறாக விலை உயர்ந்து இருக்கின்றன. வீடுகளிலேயே முன்பு மாதிரி தாராளமாக சமைக்க முடிவதில்லை. மிச்சம் மீதி ஆகாமல் கச்சிதமாக சமைக்க வேண்டிய நிலையில் இல்லத்தரசிகள் இருக்கிறார்கள்.

ஓட்டல்கள் தர்ம சத்திரங்களல்ல. அவர்கள் வியாபாரிகள். உணவு தயாரித்து விற்று லாபம் பார்க்கவேண்டியவர்கள். இன்றைய விலைவாசி நிலவரத்தில் அவர்களின் லாபம் குறைந்து கொண்டு வருகிறது. அதைத் தவிர்க்க அவர்கள் பல விதமான யுக்திகளை கையாளுகிறார்கள். அதில் ஒன்று சமைத்த உணவுகளை வீணாக்கக் கூடாது என்பது. வீட்டிலேயே மதியம் சமைத்த சாதம் மிஞ்சிப் போனால் இரவு அதை தயிர் சாதமாக்கி சாப்பிடுகிறோம்.

ஓட்டல்களில் இதற்காக பெரிய பெரிய ஃப்ரீசர்கள் வாங்கி வைத்துள்ளார்கள். எந்த உணவுப்பொருள் மிஞ்சினாலும் அவை இந்த ஃப்ரீசர்களுக்குள் அடைக்கலம் புகும். அடுத்த நாள் இந்தப் பொருட்களுக்கு ஆர்டர் வரும்போது வெளியில் எடுக்கப்பட்டு, நன்றாகச் சுடவைக்கப்பட்டு அப்போதுதான் தயார் செய்தது போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக பெரிய பார்ட்டிகளுக்கு, இவ்வாறு முன் நடந்த பார்ட்டிகளின் மீதியைத் தள்ளி விடுவது சகஜம். உணவுப்பொருட்களை ஓரிரு முறை இவ்வாறு செய்தால் அதிகத் தீங்கு விளையாது. ஆனால் பல முறை இவ்வாறு மிச்சமாகும் பொருட்களை மறு சுழற்சி செய்யும்போது அவைகள் கெட்டுப்போய், பல நோய்களின் பாக்டீரியாக்கள் அவைகளில் சேர்ந்து விடுகின்றன. முக்கியமாக தயிர் சாதங்களிலும் அசைவ உணவுகளிலும் இவ்வாறு ஏற்படுகின்றன.

ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு பார்ட்டியில் சாப்பிட்டு விட்டு வந்தவர்களில் அநேகம் பேர் வயிற்றுப் போக்கினால் அவதிப்பட்டனர். சமீபத்தில் ஒரு சர்வதேச பிராண்ட் கடையில் வாங்கின அசைவ உணவைச் சாப்பிட்ட எனக்கு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துல் வாந்தி வந்தது.

ஆகையால் மக்களே, பெரிய ஓட்டல் என்றால் உணவு சுகாதாரமாக இருக்கும் என்று நம்பாதீர்கள்.

பின்குறிப்பு. இந்தப் பதிவு கைத்தவறுதலாக நேற்றே குறைப்பிரசவம் ஆகிவிட்டது. அப்புறம் கண்டு பிடித்து இன்குபேட்டரில் வைத்திருந்து இன்று வெளியிடுகிறேன்.


4 கருத்துகள்:

  1. (அப்போதுதான் அந்த ஐட்டம் தயார் செய்ய சாமான் வாங்க கடைக்குப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு)

    எவ்வளவு லேட்டாக உணவு வ்ருகிறதோ அத்தனை ஸ்டார்கள் அந்த ஸ்டார் ஓட்டலுக்குச்சொந்தமோ !

    பதிலளிநீக்கு
  2. \\அப்போதுதான் அந்த ஐட்டம் தயார் செய்ய சாமான் வாங்க கடைக்குப் போவார்கள் என்றும் சொல்வதுண்டு.\\ ஹா....ஹா....ஹா....

    \\அதாவது அங்கு போவது நேரத்தைக் கழிக்கவே. காதலர்களுக்கு மிகவும் சௌகரியமான நடைமுறை.\\ இதுதான் நிஜம். ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி சீக்கிரமா அனுப்பிட்டா குடுத்த காசுக்கு மரியாதையே இருக்காதுன்னு நினைப்பானுங்க போல.

    \\ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு பார்ட்டியில் சாப்பிட்டு விட்டு வந்தவர்களில் அநேகம் பேர் வயிற்றுப் போக்கினால் அவதிப்பட்டனர். \\ அவனுங்க கொஞ்சம் ஸ்டேண்டர்ட் மெயின்டைன் பன்னுவானுங்கன்னு சொல்லுவாங்களே, இப்போ அதுவும் போச்சா?....

    பதிலளிநீக்கு
  3. ///இந்தப் பதிவு கைத்தவறுதலாக நேற்றே குறைப்பிரசவம் ஆகிவிட்டது. அப்புறம் கண்டு பிடித்து இன்குபேட்டரில் வைத்திருந்து இன்று வெளியிடுகிறேன்.//


    இதைத் தான் நான் உங்களின் இடுகை ""சூடாக"" இருக்கிறது; தமிழ்மணம் பாக்கவும் என்று எழுதினேன்.

    பதிலளிநீக்கு