புதன், 12 செப்டம்பர், 2012

ரயில் எப்படி ஓடுகிறது? சில நடைமுறைகள்


ஒரு மாதத்திற்கு முன்னர்தான் எங்கள் கோவை கல்லூரியிலிருந்து இதே மாதிரி டூர், இரண்டு குழுவினர் வந்து சென்றுள்ளனர். அவர்கள் புறப்படும் தினத்தன்று அவர்களின் கோச், அவர்கள் செல்லவேண்டிய ரயிலில் இணைக்கப்படவில்லை. அவர்கள் கோச் இருக்கும் ஸ்பெஷல் லைனுக்குப் பக்கத்து லைனிலேயேதான் அவர்கள் செல்லும் ரயில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கோச்சை அந்த ரயிலில் சேர்க்க முடியவில்லை. மாணவர்கள் ரயிலுக்கு முன்னால் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். போலீஸ்காரர்கள் வந்துவிட்டார்கள். உங்களை எல்லாம் கைது பண்ணப் போகிறோம் என்றதும்தான் அவர்கள் ட்ரேக்கை விட்டு வெளியில் வந்தார்கள்.

என்ன பண்ணியும் அந்த ரயிலில் அவர்கள் கோச்சை இணைக்க முடியவில்லை. அடுத்த ரயிலில்தான் இணைக்க முடிந்தது. இதனால் அவர்கள் பயணத்திட்டம் சரியாக நிறைவேறவில்லை. இந்தச் செய்தியை நான் கேள்விப்பட்டு, நாம் போகும்போது இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும் என்று எல்லோரையும் தீர விசாரித்தேன்.

அப்படி விசாரித்ததில் நான் அறிந்து கொண்டது என்னவென்றால்:

   1.   எங்கள் கோச் டில்லியிலிருந்து ஹௌரா வரைக்கும் வருவதுவடக்கு ரயில்வேயின் எல்லைக்குட்பட்டது. நாங்கள் செல்லவிருப்பது புவனேஸ்வரம். அதுகிழக்கு ரயில்வேயின் எல்லைக்குட்பட்டது. ஹௌரா ஸ்டேஷனில் இந்த இரண்டு ரயில்வே பிரிவுகளும் இருக்கின்றன. பக்கத்துப் பக்கத்து ரூம்கள்தான். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஒரு எல்லைக்கோடு இந்த இரண்டு ரயில் பிரிவுகளுக்கு இடையில் இருக்கிறது. எங்கள் கோச்சை வடக்கு ரயில்வே, அதிகாரபூர்வமாக தெற்கு ரயில்வேக்கு ஒப்படைக்கவேண்டும். அப்போதுதான் எங்கள் கோச் புவனேஸ்வரம் செல்லும் ரயிலில் இணைக்கப்படும். இதற்குத் தேவையான கிரீஸ் போடவேண்டும்

   2.   இரண்டாவது, ஸ்டேஷன் வளாகத்தில் ஷண்டிங்க் வேலைகள் செய்ய முடியாது. ஷண்டிங்க் யார்டு 15 கி.மீ. தள்ளி இருக்கிறது. எங்கள் கோச் அங்கு சென்றால்தான் அதை நாங்கள் போகவிருக்கும் ரயிலில் சேர்த்து, பிறகு சரியான நேரத்திற்கு பிளாட்பாரம் வரும். இதற்கும் கிரீஸ் தேவை.

இந்த நுணுக்கங்களை நான் தெரிந்து வைத்திருந்ததினால், ஹௌராவில் பல சிரமங்களைத் தவிர்த்தேன். அங்கு நாங்கள் மொத்தம் ஐந்து நாட்கள் தங்கினோம். இரண்டாவது நாளே வடக்கு ரயில்வே ஆபீசுக்குச் சென்று நாங்கள் இங்கிருந்து புவனேஸ்வரம் போகவேண்டும், அதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஒன்றும் தெரியாத மாதிரி கேட்டேன். அவர்கள் நாங்கள் ஒரு கோச் டிரான்ஸ்பர் லெட்டர் கொடுக்கிறோம், அதைக் கொண்டுபோய் கிழக்கு ரயில்வே ஆபீசில் கொடுத்தால் மற்ற ஏற்பாடுகள் அவர்கள் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

அதற்கு உரிய தட்சிணை செலுத்திவிட்டு அந்த லெட்டரை கிழக்கு ரயில்வே ஆபீசுக்கு எடுத்துச் சென்றேன். அங்கு வாசலில் நிற்கும் பியூனிடம் விஷயத்தைச் சொன்னேன். அவன் 25 ரூபாய் கொடுங்கள் என்று வாங்கிக்கொண்டு, ஒரு கிளார்க்குடம் கூட்டிக்கொண்டு போய் விட்டான். அந்தக் கிளார்க்கிடம் இந்த பியூன் விபரங்களைச் சொல்லி நாங்கள் கொடுத்த பணத்தைக் கொடுத்தான். கிளார்க்குக்கு திருப்தியாகிவிட்டபடியால், சரி சார் நீங்கள் எப்போது எந்த ரயிலில் புவனேஸ்வரம் போகவேண்டும் என்று எழுதிக்கொடுங்கள். நான் மற்றவைகளைப் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போய்விட்டு புறப்படும் நாளைக்கு முதல் நாள் வந்து என்னைப் பாருங்கள் என்று சொன்னான்.
வெளியில் வந்து லெட்டரை எழுதி பியூன் கையில் கொடுத்துவிட்டு,  அவனுக்கு இரண்டு ரூபாயைக் கையில் திணித்துவிட்டு, எங்கள் வேலைகளைக் கவனிக்க சென்று விட்டோம்

இரண்டு ரூபாய் அந்தக் காலத்தில் ஒரு கணிசமான தொகை. இன்று இரண்டு ரூபாயை பிச்சைக்காரன்கூட வாங்கமாட்டான். இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் எந்த கவர்மென்ட ஆபீசிலும் இந்த பியூன்களுக்கு இருக்கும் இன்புளூயென்ஸ் அந்த ஆபீசின் ஜெனரல் மேனேஜருக்குக் கூட இருக்காது. அந்த ஆபீசில் என்ன காரியம் ஆகவேண்டுமென்றாலும் இந்தப் பியூன்கள் அதைச் சாதித்துக் கொடுத்து விடுவார்கள்.  

அந்தக் கிளார்க் சொல்லியபடி நாங்கள் புறப்படவேண்டிய நாளைக்கு முன்தினம் அவரைப்போய் பார்த்தோம். அவர் சொன்னார். சார் உங்கள் கோச் இங்கு நின்றுகொண்டிருந்தால் எக்காலத்திற்கும் புவனேஸ்வரம் போகாது. இது இங்கிருந்து 15 கி.மீ. தூரத்திலிருக்கும் ஷண்டிங்க் யார்டு போனால்தான் இன்று இரவு நீங்கள் போகவேண்டிய ரயிலில் இணைத்து, நாளைக்கு பிளாட்பாத்திற்கு வரும். ஆகவே இன்று இரவு இந்தக் கோச்சை ஷண்டிங்க் யார்டு கொண்டு போவதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டேன். நீங்கள் உங்கள் மாணவர்களை இரவு எட்டு மணிக்குள் கோச்சுக்கு வந்து விடச்சொல்லுங்கள் என்றார். அது போல மாணவர்களுக்குச் சொல்லிவிட்டோம்.

மறுநாள் எங்கள் கோச் நாங்கள் செல்லவேண்டிய ரயிலில் இணைக்கப்பட்டு பிளாட்பாரத்திற்கு வந்து விட்டது. மாணவர்களும் நாங்கள் சொன்ன மாதிரியே இரவு எட்டு மணிக்குள் கோச்சுக்குப் போய்விட்டார்கள். இப்படியாக எங்கள் ஹௌரா புரொக்ராம் எந்தவித வில்லங்கங்களும் இல்லாமல் திருப்தியாக முடிந்தது. ஆனால் இதற்கு தண்டனை போல் புவனேஸ்வரத்தில் வில்லங்கம் வந்தது.

18 கருத்துகள்:

  1. When others do it is pribing. When I do the same it is smartness. Good on you.

    பதிலளிநீக்கு
  2. //அதற்கு உரிய தட்சிணை செலுத்திவிட்டு//

    அதைச் சொல்லுங்க...
    எவ்வளவு முன்னேற்பாடுகள்? நீங்கள் இவை பற்றி மட்டும் சொல்கிறீர்கள்.. பயணத்தில் ஏற்பட்ட மற்ற அனுபவங்கள்? எங்கெங்கு சென்றீகள் என்ற விவரங்கள்?

    பதிலளிநீக்கு
  3. எனக்கு இந்த வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. கூட வந்த மற்ற இரண்டு ஆசிரியர்கள்தான் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு போய் பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்தார்கள். மேலும் இந்த ஊர்களில் உள்ள விசேஷங்களைப் பற்றி எல்லோரும் அறிந்திருப்பார்களே? தவிர, இந்த டூர் போனது 1978 ல், அதாவது 34 வருடங்களுக்கு முன்பு. இப்போது எழுதும் சம்பவங்கள் எல்லாம் சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சந்திக்காதவை. ஆகவே அவை மனதில் நீங்காமல் நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. கில்லி சார் நீங்க! பிரமாதமா பிளான் பண்ணி இருக்கீங்க. ரயில்வேல இவ்வளோ இருக்குன்னு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன். உங்கள அனுபவப் பகிர்வு அசத்தல்

    பதிலளிநீக்கு
  5. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    சுவரசியமாக இருக்குதுங்க அய்யா

    பதிலளிநீக்கு
  6. எந்த கவர்மென்ட ஆபீசிலும் இந்த பியூன்களுக்கு இருக்கும் இன்புளூயென்ஸ் அந்த ஆபீசின் ஜெனரல் மேனேஜருக்குக் கூட இருக்காது. அந்த ஆபீசில் என்ன காரியம் ஆகவேண்டுமென்றாலும் இந்தப் பியூன்கள் அதைச் சாதித்துக் கொடுத்து விடுவார்கள்.

    ந்டைமுறை உண்மைகளை அறியவைத்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. \\எந்த கவர்மென்ட ஆபீசிலும் இந்த பியூன்களுக்கு இருக்கும் இன்புளூயென்ஸ் அந்த ஆபீசின் ஜெனரல் மேனேஜருக்குக் கூட இருக்காது. அந்த ஆபீசில் என்ன காரியம் ஆகவேண்டுமென்றாலும் இந்தப் பியூன்கள் அதைச் சாதித்துக் கொடுத்து விடுவார்கள். \\ ஆன்மீகத்தில் பெரிய சூட்சுமம் நீங்கள் எழுதிய இதில் ஒளிந்து கொண்டிருக்கிறது சார்..........!! கடவுளை நாம் நேரிடையா அணுகுவதை விட அவரோட வேலைக்காரர்கள் மூலமா அணுகினால் இறைவன் எளிதாக சிக்கி விடுவான்............... கலக்கிட்டீங்க சார்............ தேங்க்ஸ் சார்..........

    பதிலளிநீக்கு
  8. அது சரி......க்ரிசுக்கு எவ்ளாவ் ஆச்சு ?





    அன்புடன்



    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாஸ்தி ஒண்ணும் ஆகல்லீங்க. மொத்தமா 27 ரூபாய்தான் ஆச்சுங்க. ரொம்ப சலீசா முடிஞ்சு போச்சுங்க. இப்பன்னா ஏகப் பட்டது ஆகியிருக்கும்.

      நீக்கு
  9. அப்போதே என்னமா யோசித்துள்ளீர்கள் சார்... அடுத்து ஒரு வில்லங்கமா...

    பதிலளிநீக்கு
  10. நாட்டு நடப்பை சரியாக எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். நம் நாட்டில் நாம் வேண்டுமானால் ‘வாங்காமல் இருக்கலாம்’ஆனால் அரசு அலுவலகங்களில் கொடுக்கவேண்டியதை கொடுக்காமல் எந்த காரியத்தையும் சாதிக்கமுடியாது.இதுதான் உண்மை நிலை. கடவுள் இந்த நாட்டை காப்பாற்றட்டும்!

    பதிலளிநீக்கு
  11. தட்சணை இல்லாமல் எப்போதுமே வேலை நடக்காது போலிருக்கு! நான் தட்சினை கொடுத்து சாதித்த நிகழ்வு இங்கே!இன்று என் தளத்தில்
    ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html



    பதிலளிநீக்கு
  12. ம்ம்ம்.. க்ரீஸ் போடலைன்னா வண்டி ஓடாதுன்னு நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  13. //இதற்குத் தேவையான கிரீஸ் போடவேண்டும். //
    நான் நிஜமாவே ரயில் வண்டிக்கு கிரீஸ் போடனும்னு நினச்சுகிட்டே படிச்சேனா, என்னடா கிரீஸ் போட்ட கதியே காணோமேன்னு தோணுச்சு. பின்னூட்டங்களைப் பாத்துத்தான் கிரீஸ்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன்!! அப்பவே இப்படித்தானா அரசு ஊழியர்கள்!! :-)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் அநியாயத்திற்கு இப்படி வெள்ளந்தியா இருக்கீங்களே? இரக்கப்படுகிறேன்.

      நீக்கு