செவ்வாய், 17 ஏப்ரல், 2012

தீராத தும்மலைத் தீர்க்க! (பாகம் 2)

1956 ம் வருடம். கோயம்புத்தூர், கோவை ஆகாத சமயம். ஏழைகளின் ஊட்டி என்று சொல்லப்பட்ட ஊர். அப்போது எனக்கு 22 வயது. இப்போது எவ்வளவு என்று கணக்குத் தெரிந்தவர்கள் கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். கணக்கு தெரியாதவர்கள் தெரிந்தவர்களை அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்போது ஒரு கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இங்கிலீஷ் டாக்டர்கள் கோயமுத்தூரில் இருந்தார்கள். ஊரில் ஒரே ஒரு ஆஸ்பத்திரிதான். அதுதான் பெரிய ஆஸ்பத்திரி என்று வழக்கில் கூறப்படும் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி. பெரும்பாலான ஜனங்கள் எந்த சீக்கென்றாலும் வீட்டிலேயே கை வைத்தியம், அதைத்தாண்டி மந்திரம், மாந்தரீகம், நாட்டு வைத்தியம் இதையெல்லாம் பார்த்துவிட்டு நோய் குணமாகாவிட்டால், அப்புறம்தான் பெரியாஸ்பத்திரி கொண்டு செல்வார்கள்.

பெரிய ஆஸ்பத்திரி போகும்போதே கேஸ் ரொம்ப மோசமாக இருக்கும். அங்கு வியாதி குணமாகி திரும்புபவர்கள் பாதி பேர்தான். ஆகவே ஒருவரை பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போயிருக்கிறார்கள் என்று சொன்னாலே சொந்தக்காரர்கள் எல்லாம் கடைசிக் காரியத்திற்கு தயாராகி விடுவார்கள். எல்லா உறவினர்களுக்கும் தகவல் போய்விடும்.

இது தவிர ஊரில் நாட்டு வைத்தியர் என்று அழைக்கப்படும் ஆயுர்வேத டாக்டர்கள் அங்கோன்றும் இங்கொன்றுமாக சிலர் இருந்தார்கள். அதில் எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலேயே மைசூர் வைத்தியர் என்று அழைக்கப்படும் ஒரு நாட்டு வைத்தியர் இருந்தார். நல்ல கைராசிக்காரர் என்று பெயர் பெற்றவர். அவர்கள் குடும்பமே நாட்டு வைத்தியத்தில் பெயர் பெற்றவர்கள். திப்பு சுல்தான் கொங்கு நாட்டிற்கு படையெடுத்து வந்தபோது அந்தப் படையுடன் வந்தவர்கள். இங்கேயே தங்கி விட்டார்கள்.

நிற்க, என்னுடைய வியாதியும் அவ்வளவு சீரியஸ் ஆக இல்லாததினால் பெரிய ஆஸ்பத்திரி போகும் அளவிற்கு ஆகவில்லை. அப்படி ஏதாவது ஆகியிருந்தால் உங்களுக்கு இந்தப் பதிவைப் படிக்கும் பாக்கியம் இருந்திருக்காது.

ஒரு நாள் என் தந்தையார் என்னை இந்த மைசூர் வைத்தியரிடம் அழைத்துச்சென்றார். அவர் என்னுடைய தும்மல் வரலாற்றைக் கேட்டு விட்டு, வைத்தியம் சொன்னார்.

இரண்டு மருந்துகள் கொடுக்கிறேன். ஒன்று உள்ளுக்குச் சாப்பிடவேண்டியது. இன்னொன்று வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளிக்கவேண்டியது. தலைக்கு இந்தத் தைலம் தேய்த்துக் குளிப்பதற்கு சில பத்தியங்கள் உண்டு. தலையைக் கழுவுவதற்கு அரப்பு தேய்க்கக் கூடாது. சீவக்காய்த்தூள் மட்டும்தான் தேய்த்துக் கொள்ளவேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை ஈரம் போக நன்றாக காய வைக்கவேண்டும்.

அன்று முழுவதும் காய்ச்சின நீர்தான் வெதுவெதுப்பாக குடிக்கவேண்டும். தயிர், மோர் சேர்க்கக் கூடாது. வெளியில் அலையக்கூடாது. பகலில் தூங்கக் கூடாது. மதியம் சீரக ரசம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஆறு மாதம் இருந்தால் குணம் தெரியும் என்றார்.

அவர் கொடுத்த மருந்துகள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. உள்ளுக்கு சாப்பிட சியவனப்பிரகாச லேகியம். தலைக்கு குளிக்க சிந்துவாரத்தைலம். இரண்டையும் வாங்கிக்கொண்டோம். முதல் தடவை அந்தத் தைலத்தை தலையில் வைத்தவுடன் சில்லென்று ஒரு உணர்ச்சி. தைலம் தலைக்குள் போவது மாதிரியே இருந்தது. பிறகு எப்போதும் அந்த மாதிரி உணர்ச்சி ஏற்பட்டதே இல்லை.

மூன்று மாதத்தில் ஓரளவு குணம் தெரிந்ததால் மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்தேன். ஆறு மாதத்தில் தும்மல் அடியோடு நின்றுவிட்டது. எப்போதாவது சளி பிடிக்கும். இரண்டு மூன்று நாளில் சரியாகிவிடும். ஒரு வருடத்தில் என்னுடைய தும்மல் அறவே காணவில்லை. வைத்தியர் இந்த மருந்துகளைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும் என்று சொல்லியிருந்ததால் ஏறக்குறைய ஒரு எட்டு வருடம் இந்த மருந்துகளைத் தவறாமல் உபயோகித்தேன்.

பிறகு மனிதனுக்கு வழக்கமாக வரும் வியாதியான "மெத்தனம்" என்னைப் பீடித்தது. மருந்துகளை உபயோகிப்பதை நிறுத்து விட்டேன். இரண்டு வருடங்கள் நன்றாக இருந்தேன். பிறகு பழைய தும்மல் வர ஆரம்பித்தது. ஆஹா, தவறு செய்து விட்டோம் என்று உடனே தைலமும் லேகியமும் வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் உடனே குணம் தெரியவில்லை. தும்மல், சளி, நுரையீரலில் கபம், நடந்தால் மூச்சு இரைத்தல், இப்படி ஏறக்குறைய ஆஸத்மா நிலைக்குப் போய்விட்டேன். இங்கிலீஷ் மருந்துகளும் சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் விடப்பிடியாக இந்த தைலத்தை மட்டும் உபயோகித்து வந்தேன். ஏறக்குறைய ஐந்து வருடம் கழித்து இந்த தொந்திரவுகள் குறைந்தன.

அப்போதிலிருந்து இன்று வரை இந்த தைல வைத்தியத்தைத் தொடர்ந்து வருகிறேன். முதலில் பார்த்த மைசூர் வைத்தியர் (சுப்பாராவ் என்று பெயர்) காலனுக்கு வைத்தியம் பார்க்கச் சென்றுவிட்டார். பிறகு அவருடைய ஒன்று விட்ட சகோதரர் சீனிவாச ராவிடம் இந்தத் தைலம் வாங்கி உபயோகித்தேன். அவர் இந்த தைலத்திற்கு "நிர்குண்டித்தைலம்" என்று பெயர் வைத்திருந்தார். அவர் அமரிக்காவில் இருக்கும் தன் பெண் வீட்டிற்குப் போய்விட்டார்.

பிறகு தற்போது கோவையில் பிரபலமாக இருக்கும் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலையில் இந்தத் தைலம் வாங்கி உபயோகிக்கிறேன். அங்கு இந்தத் தைலத்திற்கு "வாசாதி தைலம்" என்று பெயர். வாரம் ஒரு முறை, சனிக்கிழமை இந்த தைல ஸ்நானம் நடக்கும். தும்மல், சளி என்பவற்றை நான் மறந்து பல வருடங்கள் ஆகி விட்டன.

ஆயுர்வேத முறை நல்ல முறைதான். ஆனால் நாட்பட மருந்துகள் சாப்பிடவேண்டும். தவிர ஒவ்வொருவருக்கும் உடல்வாகு வேறுபடுவதால் ஒருவருக்கு குணம் கொடுக்கும் மருந்துகள் மற்றவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. தவிர இந்த வைத்தியத்தில் நம்பிக்கை, பத்தியம், நீடித்த உபயோகம் ஆகியவை இன்றியமையாதவை.

24 கருத்துகள்:

  1. இப்ப நல்லா இருக்கீங்க. அது போதும். இனி நோ தும்மல்..ஹச்சு...ஹச்சு.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பத்தான் பதிவப் போட்டு முடிச்சேன். அதுக்குள்ள கமென்ட்டா? இப்ப உங்க ஊர்ல என்ன நேரம்? மாலை 7 மணி இருக்குமா?

      மிக்க நன்றி, துளசி கோபால்.

      நீக்கு
  2. உங்களுக்கும் எங்களுக்கும் ஏழரையா இருந்துச்சு:-)))) இப்ப டே லைட் ஸேவிங்ஸ் முடிஞ்சதால் ஆறரை.

    உங்க காலை 5.30 எங்களுக்கு பகல் 12.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழரை எப்போதும் ஆகாதுங்க. நம்ம நல்ல காலம் அதுவா வெலகிடுச்சு பாருங்க.

      நீக்கு
    2. அப்ப நீங்க நியூசில இருக்கீங்கன்னு சொல்லுங்க. எனக்கு ஹைஸ்கூலில் பூகோளப் பாடம்னா சரியான அலர்ஜி. உங்க ஊருக்குப் பக்கத்தில்தானே அதென்னமோ "இன்டர்நேஷனல் டேட் லைன்" அப்படீன்னு ஒரு ஊரு இருக்குதாமே? அதைப் பார்க்கணும்னு ரோம்ப நாளா ஆசைங்க. நீங்கதான் ரொம்ப ஊர்களுக்கெல்லாம் போயிருக்கீங்களே! இந்த ஊரைப் பத்தியும் எழுதுங்களேன்?

      நீக்கு
  3. ஆயுர்வேத முறை நல்ல முறைதான். ஆனால் நாட்பட மருந்துகள் சாப்பிடவேண்டும். தவிர ஒவ்வொருவருக்கும் உடல்வாகு வேறுபடுவதால் ஒருவருக்கு குணம் கொடுக்கும் மருந்துகள் மற்றவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. தவிர இந்த வைத்தியத்தில் நம்பிக்கை, பத்தியம், நீடித்த உபயோகம் ஆகியவை இன்றியமையாதவை.//

    நீங்கள் சொல்வது உண்மை. ஒருவருக்கு ஒத்துக் கொள்வது ஒருவருக்கு ஒத்துக் கொள்ளாது.

    அவரவர் உடம்பு சொல்வதை கேட்க வேண்டும்.

    எனக்கு உறவினர் எளியமுறை உடற்பயிற்சியை அறிமுகப்படுத்தினார்.
    அதில் கபாலபதி என்ற பயிற்சியால் என் தும்மல் முற்றிலும் குணம்.
    94ம் வருடம் கற்றுக் கொண்டேன் இன்று வரை அந்த தும்மல் தொந்திரவு இல்லாமல் இருக்கிறேன்.

    காலை படுக்கை விட்டு எழுந்தவுடன் தொடர் தும்மல் போடுவேன்.
    நல்ல வாசம், கெட்டவாசம் எல்லாவற்றிருக்கும் தும்மல் போடுவேன்.
    கூட்டம் நிறைய உள்ள இடங்கள், தூசி உள்ள இடம் என்று இப்போது அது எல்லாம் இல்லை.
    நாடிசுத்தி என்ற பயிற்சியும் இந்த தும்மலை போக்கும்.

    நீங்கள் சொல்லும் மைசூர் வைத்தியத்தை என் அத்தை எடுத்து இருக்கிறார்கள்.
    என் அத்தை கோவையில் தான் இருக்கிறார்கள்.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. வாசாதி வாட்டகம் என்று ஒரு கச்ப்பு மருந்து கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் குழ்ந்தைகள் சளிக்கு கொடுப்பார்கள்...

    தும்மலற்ற ஆரோக்கியம் நல்கிய வைத்தியம் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  5. இந்த டேட் லைனில் உக்கார்ந்து இருப்பதால்தானே ஊருக்கு முந்தி எல்லா பண்டிகைகளையும் கொண்டாடிடறேன்,இல்லையோ!!!!

    இந்த ஊருக்கு வந்து இது 25 ஆவது ஆண்டு. சில்வர்ஜூப்ளி விழா பாக்கி இருக்கு.

    ரெண்டு வருசம் முன்னே இப்படி ஒன்னு.

    http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_12.html

    நம்ம ஜோதிஜி அக்கக்கா அலசி மூணு பதிவு போட்டுட்டார்.

    இன்னும் சில பதிவர்கள் விமரிசனம் எழுதி இருக்காங்க:-)

    பதிலளிநீக்கு
  6. உங்களை அப்படி சுலபத்தில் விடமுடியாது கேட்டோ:-)))))

    http://ramamoorthygopi.blogspot.co.nz/2011/06/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  7. மிகமிக உபயோகமான பதிவு.

    சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாத எழுத்துநடை.

    உதாரணம்:- முதலில் பார்த்த மைசூர் வைத்தியர் (சுப்பாராவ் என்று பெயர்) காலனுக்கு வைத்தியம் பார்க்கச் சென்றுவிட்டார்.

    நகைச்சுவையுணர்வு மிகுதி ஐயா உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  8. ஆஸ்பத்திரி என்று வழக்கில் கூறப்படும் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி. பெரும்பாலான ஜனங்கள் எந்த சீக்கென்றாலும் வீட்டிலேயே கை வைத்தியம், அதைத்தாண்டி மந்திரம், மாந்தரீகம், நாட்டு வைத்தியம் இதையெல்லாம் பார்த்துவிட்டு நோய் குணமாகாவிட்டால், அப்புறம்தான் பெரியாஸ்பத்திரி கொண்டு செல்வார்கள்.///////

    இது என்னய்யா புது கதையா இருக்கு

    பதிலளிநீக்கு
  9. நல்ல தகவல். இங்கே கோட்டக்கல் ஆர்யவைத்தியசாலை இருக்கிறது. கிடைக்குமா என கேட்டுப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. மொக்கை போடாம சீரியசாவே சொல்லி இருக்கீங்க.

    //முதலில் பார்த்த மைசூர் வைத்தியர் (சுப்பாராவ் என்று பெயர்) காலனுக்கு வைத்தியம் பார்க்கச் சென்றுவிட்டார்.

    எப்படி சார் இப்படிலாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு பொறந்ததிலிருந்து சிறுவாணித்தண்ணி குடிச்சிருக்கணுமுங்க.

      நீக்கு
  11. லையைக் கழுவுவதற்கு அரப்பு தேய்க்கக் கூடாது. சீவக்காய்த்தூள் மட்டும்தான் தேய்த்துக் கொள்ளவேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை ஈரம் போக நன்றாக காய வைக்கவேண்டும்.

    //

    வெயில்-லையா சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேச்சே, கேஸ் அடுப்பிலைங்க, அப்பத்தான் தலை நன்றாகக் காயும்!!!!

      நீக்கு
    2. ஹா.ஹா.. சிறுவாணி தண்ணிய ரொம்பத்தான் குடிச்சிருக்கீங்க சார்..
      :-)))

      நீக்கு
  12. //இது என்னய்யா புது கதையா இருக்கு //

    கதை இல்லை. இது உண்மையே! அம்மா கவர்மெண்ட் ஆஸ்பத்திரி டாக்குட்டர். பல கேஸ்கள் இப்படித்தான் அந்தக்காலத்தில் வந்துக்கிட்டு இருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. துளசி கோபால். எனக்காக நீங்களே விளக்கம் கொடுத்துவிட்டீர்கள்.

      பதிவுகளினுடைய நோக்கமே ஒரு கருத்தை ஒருவர் முன் வைக்க, அதைப் பற்றிய விவாதம் தொடர்ந்து இறுதியில் எல்லோருக்கும் உபயோகமாக அமைய வேண்டும். இந்தக் கொள்கையை தமிழ் பதிவுலகில் யாரும் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை.

      நீக்கு
  13. நல்ல வைத்தியம் தான் ஐயா. இங்கு கிடைத்தால் உபயோகித்து பார்க்கிறேன்.

    கைக்குழந்தைகளுக்கு தொடர் தும்மல் வந்தால் விபூதியை தண்ணீர் விட்டு குழைத்து மூக்கின் மேல் பற்று போட்டால் தும்மல் நின்று விடும் . இது என் மாமியார் சொன்ன வைத்தியம். நானும் என் மகளுக்கு உபயோகித்திருக்கிறேன். பலனும் இருந்தது.

    அரப்பு, சீவக்காய்த்தூள், சிறுவாணித்தண்ணி.......ஆஹா! இந்த வார்த்தைகள் என்னை கோவைக்கே அழைச்சிட்டு போயிடுச்சு சார். ரொம்ப மிஸ் பண்றேன்.

    பதிலளிநீக்கு
  14. உபயோகமுள்ள பதிவுக்கு மிக நன்றி...

    ஆரிய வைத்தியசாலை என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இங்கு (தெற்கு சூடான்) உள்ள ஒரு நண்பர் (குஜராத்காரர்) மாரடைப்பு குறித்த இயற்கை மருத்துவ சிகிச்சை சென்ற ஆண்டில் ஆரிய வைத்தியசாலையில் எடுத்துக்கொண்டார், இப்போது நலமுடன் இருக்கிறார். ஆரியவைத்தியசாலைக்கு மின் அஞ்சல் மூலமாக, நான் என் அம்மாவின் உடல்நலக்குறைவு குறித்து சில சந்தேகங்கள் கேட்டபோது விரிவாக பதில் அனுப்பினார்கள். பாராட்டுதலுக்குரிய மருத்துவமனை...

    http://www.aryavaidyasala.com/%28S%28ghaj4tjckdocqdr2p3oouj45%29%29/Index.aspx

    mail@aryavaidyasala.com

    தேவைப்படுவோரின் பயனுக்காக மேற்கண்ட தகவல்:

    அன்புடன்,

    சிவா,
    தெற்கு சூடான்,
    ஆஃப்ரிக்கா.
    nirmalshiva1968@gmail.com

    பதிலளிநீக்கு
  15. கோமதிக்கா, ப்ளீஸ், அந்த “கபாலபதி”யை எங்களுக்கும் சொல்லிகொடுங்களேன்!! எல்லாரும் செய்யக்கூடிய பயிற்சிதானே? நிறையப் பேருக்குப் பயனளிக்கும்.

    பதிலளிநீக்கு
  16. நல்ல பதிவு அய்யா. ஆனால் இவ்வளவு வருடங்கள் மருந்து எடுக்க வேண்டுமா?

    ஹுஸைனம்மா, யூ ட்யூப்பில் வேதாத்ரி மகரிஷி சிம்பிள் எக்ஸெர்ஸைஸ் என்று தேடுங்கள், செய் முறை விளக்கத்துடன் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இளம் வயதில் வேதாத்ரி மகரிஷி தோன்றவில்லை. அவர் பிறந்திருக்கலாம். ஆனால் ஆன்மீகவாதியாக ஆகவில்லை. அதனால் அவருடைய பயிற்சிகள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்புறம் ஒரு வைத்தியத்தில் குணம் கண்ட பிறகு வேறு வைத்தியத்திற்கு மாறவேண்டிய அவசியம் நேரவில்லை.

      நீக்கு