புதன், 25 ஏப்ரல், 2012

பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!

பணம் ஒரு பேய்.


பணக்காரனுக்குத் தூக்கம் இல்லை.


பணம் வந்தால் குணம் போய்விடும்.

இப்படிப் பல பழிமொழிகளைக் கேட்டிருப்பீர்கள். அவை அனைத்தும் உண்மைதான்.

கூடவே இந்தக் கதையையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு ராஜாவிடம் ஒரு அதிகாரி வேலை பார்த்து வந்தான். நல்ல வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் ராஜா கொடுத்து வந்தார். அவனும் தன் மனைவி மக்களுடன் நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு வேலையாக வெளியூர் போகவேண்டியிருந்தது. கட்டுச்சாதம் கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டான். போகும் வழியில் ஒரு காடு. அதன் வழியாகப் போகும்போது அவனுக்குச் சிறிது களைப்பாயிருந்ததால் ஒரு மரத்தடியில் இளைப்பாறப் படுத்தவன் அப்படியே தூங்கிப்போனான்.

தூங்கி எழுந்து கட்டுச்சோற்றை சாப்பிடலாமென்று பார்க்கையில் கட்டுச் சோத்தைக் காணவில்லை. இந்தக் காட்டில் என் கட்டுச்சோற்றிற்கு எந்தத் திருடன் வந்தான் என்று சத்தமாகப் புலம்ப ஆரம்பித்தான்.

அப்போது அவன் படுத்திருந்த மரத்தில் இருந்து ஒரு பூதம் இறங்கி வந்தது. அது சொல்லிற்று; நான் இந்த மரத்தில் வசிக்கும் பூதம். நான் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. உன்னுடைய கட்டுச்சாத வாசனை என்னை மயக்கியது. அதனால் அதை எடுத்து சாப்பிட்டு விட்டேன். அதற்குப் பதிலாக நான் உனக்கு ஏழு ஜாடி தங்கக்காசுகள் கொடுக்கிறேன்  நீ அதை வைத்துக்கொள். இப்போது நீ வீட்டுக்குப் போனால் அந்த ஏழு ஜாடிகளும் இருக்கும் என்றது.

இவனும் உடனே ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்து பார்த்தான். பூதம் சொன்ன மாதிரி ஏழு ஜாடிகள் இருந்தன. அவைகளை ஆவலுடன் திறந்து பார்த்தான். எல்லா ஜாடிகளிலும் தங்கக் காசுகள் இருந்தன. அவன் சந்தோஷத்துடன் எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். ஏழாவது ஜாடியைப் பார்த்ததும் அவன் சந்தோஷம் காணாமல் போனது. காரணம் அந்த ஜாடியில் தங்க நாணயங்கள் ஒரு அரைக்கால் ஜாடி அளவு குறைவாய் இருந்தது.

இவனுக்கு ரொம்ப வருத்தமாய்ப் போய்விட்டது. அந்த ஜாடியையும் நிரப்பிப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்து விட்டது. ராஜாவிடம் சம்பளம் அதிகம் வேண்டுமென்று கேட்டுப் பெற்றான். மூன்று வேளைச் சாப்பாட்டை இரண்டு வேளையாக்கி பறகு ஒரு வேளையாக்கினான். வீட்டில் இருக்கும் பண்ட பாத்திரங்களையெல்லாம் விற்றான். என்ன செய்தும் அந்த ஏழாவது ஜாடியை நிரப்பவே முடியவில்லை. இந்த ஏக்கத்திலேயே உடல் மெலிந்து பயித்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டான்.

ராஜா அவனை அழைத்து என்ன காரணத்தினால் இப்படி இளைத்து விட்டாய் என்று கேட்டார். அதற்கு அவன் ஒன்றுமில்லைங்க என்றான். ஆனால் ராஜாவிற்கு காரணம் விளங்கி விட்டது. அந்த ஏழு ஜாடி தங்கக்காசுகள்தானே என்றார். அவனுக்கு ஆச்சரியமாய் போய் விட்டது. நம் வீட்டில் இருக்கும் ஜாடிகள் ரகசியம் ராஜாவிற்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டான்.

இவன் ஆச்சரியப்பட்டதைக் கண்ட ராஜா சொன்னார். அந்த பூதத்தையும் அதன் ஏழு ஜாடி தங்கக் காசுகளையும் எனக்குத் தெரியும். நீ உயிரோடு வாழ விரும்பினால் அந்த ஏழு ஜாடிகளையும் கொண்டுபோய் அந்த பூதத்திடமே கொடுத்து விட்டு வா என்றார். இவனும் அதை மாதிரி செய்து கொஞ்ச நாளில் பழைய மாதிரி ஆனான்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், பணத்தின் மீதுள்ள ஆசையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதுதான். நமக்காகத்தான் பணமே தவிர பணத்துக்காக நாம் இல்லை என்பதை உணரவேண்டும். நம் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கவேண்டும். எதிர்காலத்திற்காக சேமிக்கவும் வேண்டும்.

பணம் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை இல்லை. எதிர்காலத்திற்காக சேமிக்கிறேன் என்று சொல்லி நிகழ்காலத்தை நாம் இழந்து விடக்கூடாது.

17 கருத்துகள்:

  1. //பணத்தின் மீதுள்ள ஆசையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதுதான். நமக்காகத்தான் பணமே தவிர பணத்துக்காக நாம் இல்லை என்பதை உணரவேண்டும். நம் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கவேண்டும். எதிர்காலத்திற்காக சேமிக்கவும் வேண்டும்.

    பணம் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை இல்லை. எதிர்காலத்திற்காக சேமிக்கிறேன் என்று சொல்லி நிகழ்காலத்தை நாம் இழந்து விடக்கூடாது.//

    மிக நல்ல கருத்து பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஐயா முடிந்தால் உங்கள் பணத்தை என்னிடம் கொடுத்து சேமித்து வையுங்கள் இப்படிக்கு சேமித்து வைக்க பணம் இல்லாதவன்

    பதிலளிநீக்கு
  3. பணம் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை இல்லை. எதிர்காலத்திற்காக சேமிக்கிறேன் என்று சொல்லி நிகழ்காலத்தை நாம் இழந்து விடக்கூடாது.

    பெரும்பாலானோர் இப்படித்தான்
    நிகழ்காலத்தை
    இழந்து கொண்டுள்ளோம்
    மனம் கவர்ந்த பதிவு

    பதிலளிநீக்கு
  4. என்னது...பணமா...அப்படின்னா...இருக்கிற கரண்ட் கட் தொல்லையில எப்படிங்க சம்பாதிக்கிறது..?

    பதிலளிநீக்கு
  5. உண்மை சார்..

    ஆமாம்.. அந்த 7 ஜாடிய, எப்ப எனக்கு திருப்பி கொடுக்கப்போறீங்க?..
    ஹிஹி

    பதிலளிநீக்கு
  6. //பணத்தின் மீதுள்ள ஆசையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதுதான். நமக்காகத்தான் பணமே தவிர பணத்துக்காக நாம் இல்லை என்பதை உணரவேண்டும். நம் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கவேண்டும். எதிர்காலத்திற்காக சேமிக்கவும் வேண்டும்.//

    நல்ல பாடம்.

    பதிலளிநீக்கு
  7. //எதிர்காலத்திற்காக சேமிக்கிறேன் என்று சொல்லி நிகழ்காலத்தை நாம் இழந்து விடக்கூடாது.//

    நம்மில் பலர் இவ்வாறுதான் எதிர்காலத்தில் நன்றாக வாழவேண்டுமென நினைத்துக்கொண்டு நிகழ்காலத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  8. நமக்காகத்தான் பணமே தவிர, பணத்துக்காக நாமில்லை. அருமையான கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. நமக்காகத்தான் பணமே தவிர பணத்துக்காக நாம் இல்லை என்பதை உணரவேண்டும். // அற்ப்புதமான உண்மையை சொல்லும் கதை மிகவும் அருமை .

    பதிலளிநீக்கு
  10. பணத்தின் மீதுள்ள ஆசையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  11. அனைவரும் படிக்க வேண்டிய அருமையான கதையுடன் கூடிய பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  12. பணக்கட்டு மீதான் ஆசைக்கு போடு ஒரு கட்டு..
    நல்ல கருத்து ஐயா!

    பதிலளிநீக்கு
  13. இந்த மாதிரிக் கதைகளெல்லாம் சோம்பேறிகளுக்கு உரியவை. நியாயமான வழியில் பணம் சம்பாதிப்பதை போதும் என்ற மனதால் நிறுத்தக் கூடாது. பணம் இருந்தால்தான் இந்த உலகில் எதுவும் நடக்கும். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. பணம் இல்லாதவன் பிணம். காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் சம்பாதிக்கவேண்டியதுதான். ஆனால் வாழ்க்கை அது மட்டும் அல்ல என்பதைப் புரிந்து அந்தப் பணத்தை அனுபவிக்கவும் வேண்டும்.

      நீக்கு